தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.

 

* சோசலிச தமிழ் ஈழத்தை ஆயுதம் ஏந்திய மக்கள் போராட்டங்கள் மூலம் வெல்வது என்ற திட்டம் தொடக்கம்

 

* இன்று நடைமுறையில் செய்யக் கூடியதாகக் கருதப்படும் - ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து, அவர்களுடன் சேர்ந்து இலங்கை அரச ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார சமத்துவத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் தேசிய அபிலாசையை நிறைவேற்றலாம்.

 

என்பது போன்ற கருத்துக்கள் வரை முன்வைக்கப்படுகிறன. மேற்படி இருதுருவக் கருத்துக்களுக்கும், வேலைத் திட்டங்களுக்குமிடையில் பல நூறு வகையான திட்டங்களும், கருத்துக்களும் அவரவர்களின் அரசியல் இருப்புக்கேற்ப முன்வைக்கப்படுகிறன. உதாரணமாக, இன்று அரசுடன் இயங்கும் முன்னாள் இயக்கங்களை பழையபடி தூசி தட்டி இயங்க வைத்தல் மற்றும் இந்தியாவின் உதவியுடன் மறுபடியும் ஆயுத இயக்கம் கட்டி இலங்கையில் இறக்குதல் போன்ற திட்டங்களைக் கூறலாம்.

 

இத் திட்டங்களும், கருத்துக்களும் பெரும்பாலும் எந்தவித நடைமுறையும் இல்லாத வெறும் கதையாடல்களே. எந்த விதத்திலும் இவர்களில் பெரும்பான்மையானோரால், தாம் சொல்லும் அரசியல் தேர்வுகளை, இலங்கையில் நடைமுறைப்படுத்தி விட முடியாது. உதாரணமாக எந்த ஏகாதிபத்தியத்தையும் சாராமல் எவ்வாறு, மறுபடியும் ஒரு ஆயுதம் தாங்கிய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்க முடியும்? அல்லது புலிகளுடன் சேர்ந்து இயங்கி 2009ற்கு பின்னர், இன்றைய இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் இயக்கங்களை எப்படி நடைமுறையில் மக்கள் சார்ந்து இயங்கும் தமிழ் தேசிய விடுதலை இயக்கமாக உருவாக்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் சில பத்துப் பேரைக் கொண்ட பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் சிறு ஆயுதக் குழுவையோ அல்லது பெயர்பலகைக் கட்சியையோ மட்டும்தான் உருவாக்க முடியும். இலங்கையின் ஆதிக்க அரசக் கட்டுமானத்தை அசைத்து வீழ்த்தும் வலுக்கொண்ட ஒரு மக்கள் ஸ்தாபனத்தை உருவாக்க முடியாது.

 

இதனடிப்படையில் ஒடுக்கப்படும் அனைத்து இன மக்களையும் சார்ந்து - குறிப்பாக சிங்கள மக்களின் பொருளாதார சமவுரிமைகான போராட்டத்தைச் சார்ந்து - தமிழ் தேசிய அபிலாசயை பூர்த்தி செய்வதற்காக போராடுவதே மீதமாக உள்ள இடது சாரியம் சார்ந்த - நடைமுறையில் பரிட்சிக்கப்படாத, சாதகமான திட்டமாக உள்ளது . இக்கருத்தை - திட்டத்தை எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணி (NDPF) சில வருடங்களுக்கு முன் முன்வைத்தபோது ஆரம்பத்தில் எதிர்த்தாலும், தற்போதுள்ள அரசியல் சூழல் சார்ந்து கொள்கை அளவில் இன்று பல குழுக்களும், சமூகநலன் சார்ந்து சிந்திக்கும் தனிமனிதர்களும் தற்போது பரவலாக ஏற்றுக் கொள்கின்றனர்.

 

இதனடிப்படையில் இவர்கள் அமைப்பியல்படுவது பற்றி இன்றுவரை பல நூறு சம்பாசனைகளும், கூட்டங்களும், கருத்தரங்குகளும் புலம்பெயர் நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. இன்றும் நடந்து வருகிறன. ஆனாலும் இன்றுவரை பெரிய அளவில் இம் முன்னெடுப்புகள் எதுவும், எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தி விடவில்லை.

 

மேற்கூறியபடி இன்று ஒடுக்கப்படும் அனைத்து இன மக்களுக்கிடையிலான இனவாதப்போக்கைத் தணித்து, அவர்களை ஒருங்கிணைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க - நடைமுறையில் இயங்க இவர்களை அழைத்தால், இவர்களிடமிருந்து வரும் பதில் "நல்ல அரசியல் வேலைதான், மிக முக்கியமான வேலைதான். ஆனால் ...!" என இழுப்பார்கள். பின்பு மிக மிகச் சிந்தனை செய்பவர்கள் போல பாவ்லா காட்டியபடி சுயநிர்ணயம் பெரிய பிரச்சனையாக உள்ளது என்பார்கள். இனவாதத்துக்கு எதிராகப் போராட முன் எல்லோரும் தமிழ் மக்களின் பிரித்து போகும் சுயநிர்ணய்த்தை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்பே யாருடனாவது இணைந்து செயற்பட முடியுமென்பார்கள். இது மட்டுமல்லாமால் சுயநிர்ணயத்தை முன்வைக்கதாவர்கள், கட்சிகள், முன்னணிகள் எல்லாமே இனவாதிகள் என்பது போல தமது "அரசியற் தர்க்கத்தை" - அதுவும் மார்சிஸ் - லெனினிய கோட்பாடுகளை உச்சாடனம் செய்தபடி முன்வைப்பார்கள். ஆனால், சுயநிர்ணய உரிமையை தமது திட்டத்தில் உள்ளடக்கிய அதேவேளை - மேற்கூறியபடி உழைக்கும் அனைத்து இன மக்களையும் இணைத்துப் போராடும், புதிய ஜனநாயக மார்சிஸ-லெனினிய கட்சி (NDMLP) போன்றவற்றுடன் ஏன் உங்களால் இணைந்து செயற்பட முடியாதுள்ளது எனக் கேள்வி எழுப்பினால் சரியான பதில் எதுவும் நேரடியாகக் கிடைக்காது. முனகி, முனகி இலங்கையில் உள்ள கட்சிகள் எதுவும் மார்க்சிஸ கட்சிகள் இல்லை என்ற பதிலுடன் அக்கட்சிகள் சார்ந்த தனிமனிதர்கள் மீதான அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் வானை முட்டுமளவுக்கு முன்வைக்கப்படும். இனித்தான் - இவர்களின் தலைமையில் தான் - இலங்கையில் இனியொரு புதிய மார்க்ஸ்சிசக் கட்சி கட்டப்படப்போவதாக நீட்டி முழக்குவார்கள்.

 

ஆனால், தாம் கதைக்கும் மார்சிஸ - லெனினியம் சரியானது தானா? அது சரியென்றால், அதன் அடிப்படையில் அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கான உபாயங்கள் என்ன? அவ் உபாயங்கள் சரியானால் - அதன் அடிப்படையிலானா நடைமுறையில் இவர்கள் இயங்குகிறார்களா? என்பது போன்ற அடிப்படைகளில் இவர்கள் விவாதிக்க விரும்பவதுமில்லை, கேள்வி கேட்டால் பதில் சொல்லுவதுமில்லை. அடிபடையில் நடைமுறையை - மக்களுக்கான - மக்கள் விடுதலைக்கான நடைமுறையை மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

 

இவ்வாறு தேசிய விடுதலையும், சுயநிர்ணய உரிமையும், மக்கள் விடுதலையும் வேண்டிய படி மார்சிஸ-லெனினிய உச்சாடனம் செய்பவர்கள், தாங்கள் ஏற்றுக் கொள்ளும் அரசியல் வேலைத்திட்டத்தை நடைமுறையில் முன்னெடுக்க முயலும் போது, இவர்களால் இம்மி அளவும் முன் நகர முடியாமல் உள்ளது .

 

இதற்கான காரணிகளை ஆராய முற்பட்டால் இவர்களிடையே ஆதிக்கம் செலுத்தும் "தமிழ் இனவாதம்", "குறுங்குழுவாதம்", "குழப்பல்வாதம்", "தன்னிலைவாதம்", "சாதிய சிந்தனை", "பிரதேசவாதம்", "பெண்ணுடுக்குமுறை" போன்ற பல படுபிற்போக்கான சிந்தனைகளைக் பதிவு செய்ய முடியும். ஆனாலும் மிகவும் நலிவடைந்துள்ள தமிழ் இடதுசாரிய அரசியற் தளத்தை வலுப்படுத்த வேண்டுமானால், மேற்படி இடதுசாரியக் குழுக்களையும், தனிமனிதர்களையும் சுயவிமர்சன- விமர்சன அடிபடையிலும், நடைமுறை அரசியல் வேலைகள் ஊடாகவும் அவர்களின் மேற்கூறிய சீரழிவுச் சிந்தனைகளைக் களைந்து, அமைப்பியல்படுத்துவதே இன்றுள்ள புலம்பெயர் தமிழ் இடதுசாரியத்தின் முதலாவது தெரிவாக உள்ளது .

 

இந்த தெரிவின் அடிபடையில், மேற்படி அத்தனை குறைபாடுகளையும், தம்மகத்தே கொண்டிருந்த - இன்றும் எச்ச சொச்சங்களை கொண்டிருகின்ற தோழர்களை உறுப்பினராகக் கொண்டது தான் எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் கூட. ஆனால் கூடுமான அளவுக்கு நடைமுறையில் அமைப்பாக இயங்குவதன் மூலம், நாம் எம் குறைபாடுகளை நிவர்த்தி செய்தபடி நாம் முன் வைக்கும் அரசியல் திட்டம் சார்ந்து ஓரளவுக்கேனும் நடைமுறையில் இயங்க முடிகிறது. புலம் பெயர்நாடுகளில் எம்மில் பெரும்பான்மையானோர் இருந்தாலும், இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட அனைத்து இன - வர்க்க மக்களின் போராட்டத்தில் சிறு அளவிலேனும் பங்கெடுக்க முடிகிறது .

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் அரசியலுக்கு வெளியில் இயங்கும் மார்சிஸ- லெனினியம் கதைக்கும் சக்திகள் அனைவரும் தாம் நம்பும் அரசியலுக்காக, தேசிய விடுதலைக்காக, சுயநிர்ணய உரிமைக்காக நடைமுறையில் இயங்க வேண்டிய காலம் இன்று கனிந்துள்ளது. அனைவரும் ஒரே அமைப்பாக ஒன்றிணையா விட்டாலும், கூடுமான அளவுக்கு அனைவரும் சிறு சிறு அளவிலேலும் நடைமுறையில் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைப்பாக அணி திரள வேண்டும். இவ்வாறு அணி திரண்டு சிறு சிறு குழுவாகவேனும் நடைமுறையில் இயங்கும் போது அவ் அனுபவமும், வேலை முறையும் வெகு விரைவாகவே ஒரே புள்ளியில் மக்கள் சக்திகளை சந்திக்க வைக்கும். அதன் பின் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கென்பது போல அனைவரும் உண்மையான மக்கள் சக்தியாக மாற முடியும். இணைந்து போராட முடியும்!

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

27/03/2014