Language Selection

போராட்டம் பத்திரிகை 04
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.

 

 

 

சிலர் இந்தப் பிரச்சினையை வைத்து சதுரங்கம் ஆடிக்கொண்டு இருப்பதும் தெரிகிறது. இந்த துயர்மிகு சந்தர்ப்பத்தில் என்ன நடக்கப் போகிறது? ஒருவேளை நடக்கக் கூடாத ஏதோவொன்று நடந்துவிடும். அல்லது எரிமலை எந்த நிமிடத்திலாவது வெடித்துவிடுடிமோ என்ற அச்ச நிலைமக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. அந்த எரிமலையின் அடிவாரத்திலிருந்து இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

 

பெசன் பக் சம்பவம் மார்ச் 28ம் திகதி முஸ்லிம் வியாபாரியொருவருக்கு சொந்தமாக பெபிலியானவில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றை 100 பேர் கொண்ட கோஷ்டியொன்று தாக்கியது. அந்தத் தாக்குதலின் போது வர்த்தக நிலையத்திற்குச் சொந்தமான வாகனம், சொத்துக்கள் உட்பட நிறுவனமும் பாரிய சேதத்திற்கு உள்ளானது.

 

சம்பவத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் உட்பட நிறுவன ஊழியர்கள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். அரசாங்கமும், பொலிஸிம் சம்பவத்தை மூடி மறைப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்தன. இது மதவாத அல்லது இனவாத செயல் அல்லவென்றும், ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும், சிங்கள யுவதிக்குமிடையிலான தொடர்பு இதன் பின்னணியில் இருப்பதாகவும் பொலிஸாரின் அனுசரணையோடு ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டது. "பொது பல சேனா", "சிங்கள ராவய| போன்ற சிங்கள இனவாத அமைப்புகள் தமக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பில்லையென அறிக்கை விடுவதில் முந்திக் கொண்டன.அரசாங்கமும், எதிர்க்கட்சியும், சில ஊடகங்களும் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்தமையும் நாடறிந்த விடயமாகும்.

 

இவ்வாறான இனவாத சம்பவங்களின் போது , கடைசி நிமிடத்தில் நடந்த சம்பவத்தையோ, அதனை ஏற்பாடு செய்து வழி நடத்தியது யார் என்பதையே முக்கியமாக கவனிக்க வேண்டியதில்லை. ஒரு நாயை அடித்த சம்பவம்தான் இந்தியாவில் "இந்து - முஸ்லிம்" கலவரத்திற்கு காரணமாக இருந்தது. இனவாதத் தீயை எரிய விட்ட பின்பு அது கொழுந்துவிட்டு எரிய ஒருசில நொடிகளே போதும். இந்த சம்பவத்தின்போது அது தூண்டப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் எதுவுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சம்பவமொன்று நடந்துவிட்ட பின்பு மதவாதத்தையும் இனவாதத்தையும் வளர்த்துவிட்ட அமைப்புக்கள் பொறுப்பிலிருந்து ஒதுங்குவது நகைப்புக்குரிய விடயமாகும். இனவாதத்தையும் மதவாதத்தையும் சமூகத்திற்குள் புகுத்திய பின்னர், வெறிபிடித்த நாயொன்றை அவிழ்த்துவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். நாயை அவிழ்த்து விட்டவர்களால் கூட அதை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இனவாத விஷம் செலுத்தப்பட்ட பின்னர் விஷ மேற்றிய இனவாதத் தலைவர்களுக்கு வேண்டியவாறு அவர்கள் நடந்துக கொள்வதில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.

 

பெஷன் பக் தாக்குதல் சம்பவத்தோடு பொது பல சேனாவிற்கோ வேறு அவ்வாறான அமைப்புக்கோ தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, அவ்வாறான மனநிலையை சமூகத்தில் வளர்த்தமைக்கான பொறுப்பு பொது பல சேனாவையே சாரும். மேற்படி சம்பவத்தை வழிநடத்தியது பொது பல சேனாதான் என்ற உண்மை பின்னர் வெளிச்சத்திற் வந்தது. பெபிலியானவில் குறித்த வர்த்தக நிலையத்தை கொளுத்துவது மட்டுமல்ல, அப்பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அடித்து விரட்டுவதற்கே அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். 83 கறுப்பு ஜுலையைப் போன்று நிகழவிருந்த ஒரு சம்பவம் நூலிழையில் தப்பியது ஆச்சரியம்தான்.

 

இந்த இனவாத அமைப்புகளின் பின்புலத்தில் அரசாங்கம் செயற்பட்டதற்கான சான்றுகள் அரசாங்கம் நடந்துக் கொண்ட முறையிலிருந்து தெரிய வந்தது. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் இதனுடன் தொடர்புடைய இரண்டு பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர். இறுதியாக கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்கள், காவி உடை தரித்த மூன்று பேரையும் சேர்த்து 17 நபர்களாகும். இந்த 17 நபர்களுக்கும் எதிரான வழக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஏப்ரல் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே எல்லோரையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் நடந்தது. பொலிஸாரின் அனுமதியோடு இரு சாராரினதும் இணக்கப்பாட்டுடன் வழக்கு சமாதானமாக முடித்து வைக்கப்பட்டது.

 

சந்தேக நபர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 83 கறுப்பு ஜுலையைப் போன்றதொரு சம்பவம் நடக்கக் கூடிய நிலை உருவாகும்போது சொத்துக்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அங்கு குவிந்திருந்த பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கை இணக்கப்பாட்டோடு முடித்துக் கொள்வதற்கு வேண்டிய அனைத்தையும் பொலிஸார் செய்திருந்தனர். மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளரை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அரசாங்க மேலிடத்திலிருந்து வந்த அச்சுறுத்தலுடனான தொலைபேசி அழைப்புதான் இணக்கத்திற்கு வரக் காரணம் என தகவல்கள் கூறின.

 

சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் நபர்களுக்கு காயத்தை உண்டாக்கியமை, இலங்கையில் அமுலில் இருக்கும் சட்டத்திற்கமைய குற்றச் செயலாக இருப்பதோடு, இப்படியான குற்றச் செயல்களை புரிவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இணக்கத்தின் மூலம் வழக்கை சமாதானமாக தீர்த்து வைக்க முடியாது. அமுலிலிருக்கும் சட்டத்தைக்கூட மதிக்காமல், சர்வாதிகார பராக்கிரமத்தின் மகிமையால் சட்டம் எப்படியெல்லாமோ தெசயற்பட்டுக் கொண்டிருப்பது நாடறிந்த உண்மையாகும்.

 

இதற்குப் பிறகு என்ன நடக்கும்? தீ மூட்டப்படும் இனவாதமும் மதவாதமும் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. ஹலால் எதிர்ப்பு பரவலாகி வரும்போது, ஹலால் எதிர்ப்பிற்குள் மறைந்துக் கொண்டு வருவது முஸ்லிம் எதிர்ப்புதான் என்பதையும், முஸ்லிம் எதிர்ப்பின் பின்புலத்தில் இருப்பது வஞ்சகமும் இனவாத சூழ்ச்சியும்தான் என்பதை நாங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தினோம். இப்போது முஸ்லிம் மக்களை மண்டியிட வைத்து ஹலால் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரச்சினை ஹலாலோடு முடிந்துவிடப் போவதில்லை. தமது அடுத்த இலக்கு முஸ்லிம் பெண்களின் பர்தாவை தடை செய்வது தான் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஏப்ரல் 2ம் திகதி காலையில் நெத் எப்.எம் வானொலி செய்திக்கு கூறினார். வானொலியில் ஒலிபரப்பான செய்திக்கு அமைய முட்டாள்களின் தினம் என்று பெரும்பாலானோரால் அறியப்படும் ஏப்ரல் முதலாம் திகதி இரவு பொது பல சேனாவின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டமொன்று நடந்திருக்கின்றது.

 

அதன்போது, முஸ்லிம் பெண்களின் உடையை இலக்காக வைத்து கோபமூட்டக் கூடிய நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமான கருத்துக்களை கண்டறிவதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு 7 நாட்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அமைப்பின் அனைத்து உறுப்பினர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அந்த அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடைகள் ஏற்படாதவாறு பாதுகாப்பதற்குமான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக, கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சந்தர்ப்பத்தில கூறியிருந்தார். இந்த செய்திகளை வைத்துப் பார்க்கும் போது பிரச்சினை இன்னும் முடியவில்லை என்பதும், எதிர்காலத்தில் இதைவிடவும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் விதத்தில் பிரச்சினைகள் வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதும் தெரிகிறது. அது மாத்திரமல்ல, இந்த கோபமூட்டலின் பின்புலத்தில் வங்குரோத்து முதலாளித்துவ ஆட்சியாளர்கள் செயற்படுவதும் தெரிகிறது.

 

தற்போதைய நிலைமையை எடுத்துக் கொண்டால், வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டும், கண்காணித்துக் கொண்டும் இருக்க வேண்டிய நேரம் இதுவல்ல. ஒரு பக்கத்தில், தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கசப்புணர்வுகள் உருவாகியிருக்கின்றன. ஏப்ரல் 2ம் திகதி கமலஹாசன், ரஜனிகாந்த் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய கலைஞர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டமை இந்த கசப்புணர்விற்கு சிறந்த உதாரணமாகும். சிங்கள எதிர்ப்பின் மூலமே தனது பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு தீர்வுகான விளைகிறது. அது, தென்னிந்தியாவில் தங்கியுள்ள சிங்களவர்களையும், பௌத்த தேரர்களையும் தாக்குமளவிற்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. அதற்கு ஒப்பாக, முஸ்லிம் எதிர்ப்பிற்கு மத்தியில் தமிழ் எதிர்ப்பும், இந்திய எதிர்ப்பும் தலை தலையெடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் சிங்கள எதிர்ப்பைப் போன்றே, இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பம் தமிழ் எதிர்ப்பும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

இலங்கை மற்றும் தமிழ் நாட்டுக்கிடையிலும், முஸ்லிம் சிங்கள மக்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வு பேரழிவை நோக்கி இட்டுச் செல்வதை இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களாலும், அவர்களுக்கு ஆலவட்டம் வீசும் அதிகார வர்க்கத்தாலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கண்டு அதனை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தியும் திட்டமும் இடதுசாரிகளிடம் மாத்திரமே உண்டு. இவ்வாறான பேரழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கக் கூடிய தெளிவான கண்ணோட்டம் உண்மையான இடதுசாரிகளிடமே இருக்கிறது.

 

ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் உங்களுக்கும் ஒரு பாத்திரம் இருக்கின்றது. வெறுமனே பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு பொது மக்களோடு கலந்து மனநிலைகளை மாற்றுவதன் மூலமே அந்த பாத்திரத்திற்கு உயிரூட்ட முடியும். ஆகவே இந்த சமூக முறையை மாற்றியமைக்காத வரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே, வெடிக்கப்போகும் எரிமலையின் அடிவாரத்தில் நிலவும் பயங்கர அமைதியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அமைதியாக பார்த்துக் கொண்டிராமல், அதற்காகப் போராட முன்வர வேண்டும்.