அது ஒரு உல்லாசப் பயணிகள் நாடி வரும் அழகிய கடற்கரை. இரு உல்லாசப் பயணிகள் அன்று அங்கே தற்செயலாய் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவர் நோர்வேஜியர் மற்றவர் ஆங்கிலேயர். நோர்வேஜியருக்கு நீண்டகாலமாக இருந்த ஆசைகளிலொன்று, தான் இந்திய பெருநாட்டை ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிடுவதென்ற சிறுவயதிலிருந்தே வளர்ந்து விட்டிருந்த பெருவிருப்பு. நிறையவே இந்தியாவைப் பற்றி தான் கேள்விப்பட்டவற்றை தரிசிக்க வேண்மென்ற ஆவல் அவருக்கிருந்தது. தனது இளவயதில் தனது வருமானத்திற்கு கட்டுப்படியாகாதிருந்தும் தனது இந்தக் கனவை நிறைவேற்றும் எண்ணத்துடன், தான் சிறிதுசிறிதாக சேமித்து வைத்திருந்த பணத்துடன் தனது காதலியுடன் அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கடற்கரைக்கு அன்று அவர் வருகிறார். அங்கே தற்செயலாய் இன்னுமெர்ரு உல்லாசப் பிரயாணியான ஆங்கிலேயரை சந்தித்து அளவளாவி இருவரும் காற்றுவாங்கி விட்டு திரும்பவும் கடற்கரையிலிருந்து திரும்பி அவரவர் விடுதிகளுக்கு செல்வதற்காய் முன்னும் பின்னுமாய் புறப்படுகின்றனர். முன்னதாகப் புறப்பட்ட நோர்வேஜியர் மணற்பரப்பில் கால்கள் புதைய நடந்து கொண்டிருக்கின்ற போது அவரது கவனத்தை ஈர்க்கின்றன ஒரு பெண் சிறுமியும் அதன் மடியில் இருக்கும் இன்னொரு பெண்குழந்தையும். பிச்சையெடுக்கும் அழகான பெண் சிறுமி அதன் மடியில் ஒரு சிறு குழந்தை. சிறுமியின் உடம்பில் கிழிந்துபோன பொத்தல் பொத்தலான அழுக்கேறிய உடை. மடியில் படுத்திருந்த மற்றக் குழந்தையோ பால்குடிக் குழந்தை. அதுவும் கந்தல் உடையுடன் இருந்தது. பிச்சை எடுக்கிறார்கள். பசி அவர்களை இந்தக் கடற்கரையில் தள்ளியிருக்கிறது. தாய் தந்தையின்றி ஆதரவற்று அநாதரவான குழந்தைகள். என்ன கொடூரம்.!
பச்சிளம் குழந்தைகள் போவோர் வருவோர் கண்களின் கவனத்தில் இரக்கத்தையும் ஈர்ப்பையும் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். பசிக் கொடுமையில் குழந்தைகள் கையேந்தி நிற்கின்ற காட்சிகளை இந்தச் சுற்றுலாவில் பல இடங்களில் அந்த நோர்வேஜியர் கண்ணுற்றிருந்தாலும் இந்தக் குழந்தைகளில் வயதான குழந்தையின் வசீகரமான முகம் ஏனோ அவரைச் சுண்டியிழுத்தது. தாண்டிச் சென்றுகொண்டிருந்தவர் திரும்பி அந்தக் குழந்தையிடம் வருகிறார்.
அந்தக் குழந்தையின் முகத்தில் ஒரு மகிழ்வான மலர்ச்சியான புன்னகையொன்றை மட்டும் கண்டுகொண்டால் போதும் என்று நினைத்தவராய் சில்லறைகளை தவிர்த்து தனது பையிலிருந்து பண நோட்டை அந்தப் பெண் குழந்தையிடம் கொடுக்கின்றார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் அந்தப் பெண்குழந்தை நீட்டிய நோட்டை அலட்சியமாய் வாங்க மறுக்கின்றது. அந்தப் பெண்குழந்தையிடம் வேறு சில்லறையோ நோட்டோ எதுவும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. கொடுத்த நோட்டு போதாது போலிருக்கிறது என்று நினைத்து இன்னொரு நோட்டை சேர்த்து நீட்டுகிறார். அந்த நோட்டுக்களையும் அந்தப் பெண் குழந்தை வாங்க மறுக்கிறது. இது என்ன விசித்திரம்.
நோர்வேஜியர் தனது நேரத்தையும் மறந்து தான் கொடுத்த நோட்டுக்களை ஏன் அந்தச் சிறு பெண் வாங்க மறுக்கிறாள் என்பதை மொழித் தடையையும் மீறி துருவித் துருவி விசாரிக்கிறார். தனக்கு சில்லறையோ அல்லது நோட்டோ பணமோ தேவையில்லை. தன்னுடைய மடியில் கிடக்கும் குழந்தையின் பசியை உடனே போக்குவதற்கு பருகுவதற்கு ஒன்றிரண்டு பால் பெட்டி வாங்கித் தந்தால் போதும் என்று புரிய வைக்கின்றாள் அந்தச் சிறுபெண். அப்படியே அருகிலுள்ள ஒரு சிறுகடையொன்றைச் சுட்டி கைகளைக் காட்டுகிறாள்.
இதோ வாங்கி வருகிறேன் என்று அவர் அந்த அருகிலுள்ள கடையை நோக்கிச் சென்று பால் பெட்டி
வாங்கி வருகின்றார். அந்தச் சிறுமியிடம் கொடுத்து பின்னால் "ஏன் உனக்கு எதுவும் தேவையில்லையா" உனக்கு ஒரு நல்ல உடுப்பு வேண்டுமல்லாவா என கேட்கிறார். சிறுமியோ தனக்கு எதுவும் தேவையில்லை என மறுத்துவிடுகிறாள். சரி என்றுவிட்டு அவர் மீண்டும் தனது விடுதிக்குச் செல்வதற்காய் நடை போடுகிறார். அப்போது மீண்டும் அவர் முன்னர் சந்தித்துக் கொண்ட ஆங்கிலேயர் அவரது வழியில் தென்படவே பேச்சை தொடர்கின்றனர். பேச்சுவாக்கில் தான் ஒரு பிச்சையெடுக்கும் ஒரு சிறுமிக்கு உதவி செய்ததைப் பற்றி பெருமிதப்பட்டுப் பேசுகிறார். நடந்தவற்றை விபரிக்கிறார்.
அந்த ஆங்கிலேயரோ ஒன்றுமே கூறாமல் உனக்கு சற்று நேரமிருக்கிறதா அவசரமில்லைத்தானே என்று கூறி தன்னுடன் மீண்டும் அந்தப் பிச்சையெடுக்கும் குழந்தைகள் இருக்குமிடம் வரும்படி திரும்பி விறுவிறென நடக்கிறார். 'நான் பெருமிதப்பட்டுப் பேசியது அவரையும் அக்குழந்தைகளுக்கு உதவவேண்டுமென்று தூண்டியிருக்க வேண்டும்" என நினைத்தவராய் அவரோடு மீண்டும் செல்கிறார் நோர்வேஜியர்.
ஆங்கிலேயர் தற்போது நோர்வேஜியருடன் முன்னர் சொன்ன பால் விற்கும் கடைக்கு நேரேயே செல்கிறார். "பால் பெட்டியை வாங்கிக் கொண்டு செல்லப் போகிறார் போல" பின் தொடர்ந்தார் நோர்வேஜியர். எதற்கெடுத்தாலும் போட்டி, இரக்கப்படுவதிலும் போட்டியோ என எண்ணியவாறு கடைக்குள் மீண்டும் ஆங்கிலேயருடன் நுழைகிறார். ஓதுக்கமாக இருவரும் தள்ளியே நிற்கின்றனர். இப்போது ஆங்கிலேயர் ஒரு பரிதாபப் பார்வையோடு புன்னகை ஒன்றை உதிர்த்தவாறு 'கண்டுகொள் நேரில்" என்கின்றார் நோர்வேஜியரை நோக்கி. நோர்வேஜியர் கண்டார். வியந்தார். அப்படி எதைத்தான் கண்டார் என்கின்றீர்களா? விற்கின்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்வது என்பது தெரிந்தது தான். ஆனால் இப்படி ஒரு "விளம்பரமா" 'திரைமறைவு" நடவடிக்கையின் திரை விலகுகிறது அவர் கண்முன்னால். இன்னொரு மனிதப்பிறப்பின் மனித அவலத்தையே தன்னுடைய சுய இலாப விளைச்சலாக்குவதற்கும் தனக்கு விளம்பரம் ஆக்குவதற்கும் எப்படி மனம் வருகிறது? மற்றவன் அவலத்தில் பிழைப்பு நடாத்தும் மனிதர்கள் எங்கும் உண்டு. என் நாட்டிலும் உண்டு. ஆனாலும் அவலத்தையே இலாபமாக்கும் நேரடியான தந்திரத்தை தன் கண்முன்னே அவர் தரிசித்த போது அவரது பயணம் உண்மையில் பிரயோசனமாக இருந்ததாகவே அவர் உணர்ந்தார்.
அவர் கண்டது எந்தச் சிறுமிக்கு அவர் பாற்பெட்டி வாங்கிக் கொடுத்தாரோ அந்தச் சிறுமி அதே பாற்பெட்டியை கடைக்காரனிடம் திருப்பி வழங்கியதையும் அந்தப் பாற்பெட்டியைக் கடைக்காரன் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் திரும்பவும் வைத்ததையும் தான். முதல் இல்லாத வியாபாரம். இதற்கு யார் யாரோ பிச்சைக்காரர்களின் அவலம் மூலதனமாகின்றது. மனிதவுணர்வும் இரக்கமுடையவர்களும் ஏமாளிகளாகிறார்கள்.
சரி இப்போ இந்தப் பின்னணியில் இன்னுமொரு விடயத்துக்கு வருவோம்.
சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைவர், பேச்சாளர். ஐரோப்பிய நாடெங்கும் தனது இனவாத இனத்துவேச சொற்பொழிவுகளை கடந்த மாதத்தில் பல ஐரோப்பிய நகரங்களில் நிகழ்த்தினார். சிங்களவன் இழியவன் தமிழன் பெரியவன் பெருமைக்குரிய இனம் என்ற இனர்வுணர்ச்சிப் பேச்சுகளைச் செவிமடுத்தால் விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற முற்பட்ட காலத்துக்கு தமிழரசுக் கட்சியின்அந்நாளைய அதே பாராளுமன்ற வாடை அடிக்கும்.
அதே ரெக்கார்ட்டை திருப்பிக் கேட்ட மாதிரியே இருக்கும். புலிகளின் தலைவரையும் அருண்மொழிச் சோழனையும் கங்கை வென்று கடாரம் கொண்ட மன்னர் பரம்பரைகளின் வீரதீரங்களையும் கூறி நாம் ஆண்ட பரம்பரை ஆளப்பிறந்த இனம், ஆனால் நிலம் இல்லை. அதற்கு இலங்கையிலே தமிழீழம் தோண்டியெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் உலகத் தமிழருக்கு ஒரு நாடு உதித்திட வேண்டும் என்பது தமிழரின் தாகம் என்பதே அவரது பேச்சின் சுருக்கம். புலிக் கொடியேற்றி நடாத்தப்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு வந்திருந்த புலம்பெயர் தமிழர்கள் மண்டபம் நிறைந்து திரண்டிருந்தார்கள். சீமான் பிரபாகரனை தமிழ்நில மன்னர்கள் வரிசையில் வைத்து தனது பேச்சில் தூக்கி நிறுத்திக் கொண்டேயிருந்தார். மண்டபத்தில் கரவொலி அவ்வாறு அவர் பேசும் போதெல்லாம் கிளம்பிய வண்ணமேயிருந்தது. இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிராக அதற்கு நிகராகவே தமிழ் இனவாதத்தை அவர் அள்ளி வீசினார். கரகோசம் கிடைத்தது. இன மான உணர்ச்சிகள் மட்டுமே அங்கே தூண்டப்பட்டுக் கொண்டிருந்தன.
இதற்கு மறுபுறத்தில் அதே ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில சீமானின் கூட்டங்கள் நடாத்தப்பட்ட ஒரிரு நாட்கள் இடைவெளியில் சமவுரிமை இயக்கம் தனது அங்குரார்ப்பணக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இத்தாலி, டென்மார்க், நோர்வே நாடுகளில் இந்த அங்குராப்பணக் கூட்டங்களை ஒழுங்கு செய்து நடாத்திய வேளையிலேயே சீமானின் கூட்டங்களும் நடாத்தப்பட்டன.
சீமான் சிந்திய இனவாதப் பேச்சுக்களின் உச்சங்கள்:
'நமக்கு துரோகிகளை எதிரிகளை விட சோம்பேறிகள் மிக ஆபத்தானவர்கள். வியாக்கியானம் பேசுகிறவன் வெட்டிப்பேச்சுப் பேசுகிறவன் விதண்டாவாதம் பேசுகின்றவனை முதலில் ஒழிக்க வேண்டும். இதெல்லாம் ஆகிறதா? இதெல்லாம் நடக்கிறதா நீங்கள் எல்லாம் போராடி விடுதலை வாங்கி விடுவீர்களா இதெல்லாம் ஆகக்கூடியதா இப்படி எவன் பேசுகிறானோ அவனைத் தான் நாம் முதலில் காலி பண்ண வேண்டும். இந்தப் பதர்களை முதலில் நாம் விரட்டியடிக்க வேண்டியிருக்கிறது. அதை நீங்க புரிஞ்சுக்கணும்."
'எத்தனை சிங்களன் இன்று புலம்பெயர்ந்திருக்கின்றான்?"
'இலங்கை ஒரேநாடு அதற்குள்ளே அரசியற்தீர்வு என்பவர்களே எங்களுக்கு முன்னே வாருங்கள்? இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு காரணம் சொல்லுங்கள்.இலங்கை இரண்டு நாடாகப் பிளக்க வேண்டும் என்பதற்கு ஓராயிரம் காரணத்தை நாங்கள் சொல்லுகிறோம்." "ஒரே வழி அரசியற் புரட்சி. என்னைக் கொன்று ஒழித்தாலே ஒழிய, நான் வென்று எடுப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க இயலாது."
'நாங்கள் நாடு கேட்கிறபோது கொடுத்துவிட்டால் எவருக்கும் சிக்கலில்லை. இல்லையென்றால் எங்களுக்கு வேறு வழியில்லை. சிங்களவன் எங்களிடத்தில் நாடு கேட்கிற நிலையை உருவாக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சாகப் பயந்தவன் சிங்களவன். பன்னாட்டுப் படையைத் துணைக்கழைத்துக் கொண்டு பெண்டுகள் போல ஒண்டி வருவான்."
"வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை எமக்கே உண்டு."
"தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஒரு தமிழ் பிள்ளை வரப்போகிறான். ஒரு மானத் தமிழ் பிள்ளை. கட்டாயம் நடக்கப் போகிறது. நாந்தான் என்று நினைக்காதையுங்க. நான் இல்லாவிட்டாலும் என்னையே மாதிரி ஒருத்தன் வருவான். என்னை விட வேகமான ஒருத்தன் வருவான்."
'என்னையெல்லாம் தமிழ்நாட்டிலே ஒரு வேற்றுக்கிரக மனிசர்களை பார்ப்பது போல் பார்க்கிறார்கள்."
"இனத்துரோகம் என்பது இனத்துரோகி என்பது என் அன்பு மக்களே, கருணா மட்டுமல்ல. தாய்மொழி தமிழோடு பிறமொழி கலந்து பேசுபவர் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டாதவர் இவர்கள் எல்லோரும் இனத் துரோகிதான். வரலாற்றுப் பெருந் துரோகி."
"சிங்களவன் முட்டாள்"
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இனப் பாட்டாளி மக்களையும் பிளந்து வைத்திருந்த, வைத்திருக்கும் இனவாதத்தினை எதிர்த்து ஒரு ஒன்றுபட்ட போராட்டம் மூலம் உழைக்கும் மக்களுக்கு சுபீட்சம் தரும் சோசலிசப் பாதையினை தெரிவு செய்து அனைத்து இனவாத இனவொடுக்குமுறைகளையும் தகர்த்தெறிய, அனைத்து இனங்களும் ஒரு சேரப் போராடும் செயற் தளத்திற்கான அடிப்படையினை உருவாக்கும் சமவுரிமை இயக்கத்தின் கிளைகளும் ஐரோப்பிய நகரங்களில் அங்குரார்ப்பணம் செய்து, முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் குமார் குணரத்தினம் அவர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டது.
இலங்கையில் சிங்கள பேரினவாத இன மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இனவாதத்திற்கு எதிராகவும் இலங்கையில் சமவுரிமை இயக்கமானது சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பல்வேறு போராட்டங்களை சிங்கள மக்களைக் கொண்டே நடாத்தி நடைமுறையில் போராடுகின்றபோது, அதற்கு நேரெதிரான திசையில் இனப்பிளவை நிரந்தரமாக்கவும் இனவுணர்வுகளை கிளறிவிட்டு சுயலாபம் பார்க்கும் சீமான் போன்றவர்கள் வரலாற்றில் முதல் தடவையாக ஏற்படக்கூடிய இனக்கூட்டுப் போராட்டங்களை சிங்கள அரசு எப்படி நேரடியாகவும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் மூலமும் பேரினவாதத்தை தூண்டிவிடவும், அதேவேளை இந்தப் பேரினவாதத்திற்கெதிரான முற்போக்கு சக்திகளை நசுக்கவும் ஒடுக்கவும் முனைகின்றதோ அதேபோல் சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தை தூண்டிவிடுகிற அதேபோக்கில் இனப்பிளவை வளர்க்கும் தனது வீராவேசப் பேச்சுக்களை புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழினவாதத்துக்கு ஊட்டம் கொடுத்து ஊக்குவிப்பதன் மூலம் தனது இந்திய அரசியலுக்கு இலாபம் தேடுகின்றார் சீமான்.
தமிழ் சமூகத்தை இனவாதத்தின் பக்கம் தள்ளிவிடுவதும் அதனை பயன்படுத்தி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் இனவாதத்தை விதைப்பதும் பாரிய பயங்கர நிலைமையொன்றை உருவாக்கி தமது கருத்துக்கு மாற்றமான கருத்து சமூகமயமாவதை தடுப்பதுவுமே என்பது தெளிவு.
தென்னிந்திய மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அவர்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளை பற்றிய கருத்துக்கள் ஒருபுறமிருக்க, சீமான் அவர்களே நாங்கள் உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடன் இணைவோம். அதேவழியில் எங்களுக்காக போராட கிளம்பும் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களோடு நாங்கள் கரம் கோர்ப்போம்.
ஆனால் இன மத வேறுபாட்டை இனவுணர்வுகளைக் கிளறி சுய அரசியல் இலாபம் அடைவதற்காய் எங்களது பிரச்சனைகளை கையிலெடுக்கும் உங்களை நாங்கள் பால்பெட்டிக் கடைக்காரனோடு தாம் வைத்துப் பார்ப்போம். நாங்கள் ஒடுக்கப்படுவதும் இனவொடுக்குமுறை எங்களை பலிகொண்டதும் பலிகொள்ள முனைவதும் மறுக்கமுடியாதவை. எங்களை நாங்கள் பசி தீர்க்க முனையும் அந்தப் பெண் குழந்தைகளுடன் வைத்துப் பார்க்கிறோம். எங்களது அவலத்தை உங்களது இலாபத்துக்காக பயன்படுத்தாதீர்கள்.
ஓராயிரம் பேர் மண்டபத்தில் குவிகிறார்களா என்பதல்ல பிரச்சினை. மாற்றங்களை எங்களால் உருவாக்க முடியுமா என்பதே நோக்கு. அனைத்து விதமான இனவாத உணர்வுகளையும் களைந்து மனிதத்தை உருவாக்குவோமாயின் அதுவே எமக்கு கிடைக்கும் வெற்றி.
இலங்கையில், புலம்பெயர் நாடுகளான இத்தாலியில், பிரான்சில், இங்கிலாந்தில், சுவிஸ்நாட்டில், டென்மார்க்கில், நோர்வேயில், சைப்பிரசில் நாங்கள் மனிதர்களை தரிசித்து வருகின்றோம்.
ஓராயிரம் பேர் மண்டபத்தில் குவிகிறார்களா என்பதல்ல பிரச்சனை. மாற்றங்களை எங்களால் உருவாக்க முடியுமா என்பதே நோக்கு. அனைத்து விதமான இனவாத உணர்வுகளையும் களைந்து மனிதத்தை உருவாக்குவோமாயின் அதுவே இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி.