10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்பட கோமாளிக்கு!!!

உதயன் பத்திரிகை ஒரு கோடம்பாக்கத்து கோமாளியின் மூன்றாந்தர தமிழ்ப்படக் குப்பைக்கு விமர்சனம் எழுதியதற்காக பொங்கியெழுந்த கலாரசிக கண்மணிகள் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கத்தலைவனின் தமிழ்ப்படத்தை அவமதித்தவர்களை எதிர்த்து குரல் எழுப்பிய போராளிகளின் பெயர்கள் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மனோகரா தியேட்டரிலோ, ராஜா தியேட்டர் சுவரிலேயோ கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட வேண்டிய செயற்கரிய செயல் இது. தமிழர்களிற்கு எதிரான போரில் ஆயிரம் தலைகளை வீசித்தள்ளியதால் தளபதி பட்டம் பெற்றவரை, ஒற்றைக்கையால் ஒரு நூறு பேரை அடித்து நொருக்கும் மாவீரனை, புவியீர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லாமல் பறந்து, பறந்து காற்றில் சண்டை போடுபவரின் படத்தை ஒரு பத்திரிகை எப்பிடி விமர்சிக்க முடியும் என்ற விசிலடி வித்துவான்களின் கோபம் போற்றுதலிற்குறியது.

மன்னாரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மரணக்குழிகளில் இருந்து அய்ம்பத்தைந்திற்கு மேற்பட்ட உடல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ்மக்களைக் கொல்வது யாரென்று தெரியாத மகிந்த ராஜபக்சவின் அகிம்சை அரசு இதற்காக விசாரணை செய்கிறது. புலிகள் கொன்றிருக்கலாம் அல்லது இது ஒரு இடுகாடு இங்கு புதைக்கப்பட்டவர்கள் இயற்கை மரணம் அடைந்தபின் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பவை போன்ற திடுக்கிடும் உண்மைகள் அந்த விசாரணையின் போது வெளிவரும். உடல்கள் மட்கிப் போய் வெளிவந்தது போல உண்மைகளும் எப்போதும் போல் இந்த நாட்டில் மட்கிப்போய் போய் தான் வெளிவரும்.

 

இலங்கை முழுவதையும் தனது அதிகாரத்திற்காகவும், ஊழலிற்காகவும் புற்றுநோயாய் அரித்தெடுக்கும் மகிந்தா ராஜபக்சா தெல்லிப்பளையில் புற்றுநோய் மருத்துவமனையை திறந்து வைக்கும் போது வடபகுதியில் பன்னிரண்டாயிரம் இராணுவத்தினர் மட்டுமே இருக்கிறார்கள் என்று தனது கொஞ்சம் கூட கூசாத நாவினால் பொய்யுரைத்திருக்கிறார். நீதி, நேர்மை என்பவை தான் இவர்களிற்கு தெரியாமல் போய்விட்டதென்றால் ஒன்று, இரண்டு எண்ணக்கூடவா தெரியாமல் போய்விட்டது.

தமிழர்களின் வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய விக்கினேஸ்வரன் தமிழ் இன அழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம் இன அழிப்பிற்கு ஒப்பானது என்ற சொல்லை பாவியுங்கள், இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே நாற்பத்தெட்டில் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இது தமிழ் இனவழிப்பு இல்லையாம். இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சாவிடமே போர்க்குற்றங்களிற்கு பொறுப்பானவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று மேற்கு நாடுகள் சொன்னதற்கும் விக்கினேஸ்வரனின் ஒப்பியல் சட்டவியாக்கியானத்திற்கும் வேறுபாடுகள் எதுவுமில்லை.

 

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிறீஸ்கந்தராஜா திடீர் மரணம் அடைந்தார். எது விதமான நோய்களும் இன்றி இருந்த அவர் திடீரென மூளை செயலிழந்து மரணம் அடைந்தார். மகிந்த ராஜபக்சாவின் அரசிற்கு எதிரான தீர்ப்பை வழங்கியதால் அவரிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி கொடுக்காமல் பழிவாங்கினார்கள். அஞ்சலிக்கூட்டம் எதுவும் வேண்டாம் என அவரது குடும்பம் முடிவெடுத்ததன் பின்னணியில் உள்ள பயத்திற்கு யார் காரணம் என்பது இலங்கையின் குழந்தைப்பிள்ளைகளிற்கு கூடத் தெரிந்த விடயம். மகிந்தவிற்கு எதிரானவர்கள் கடத்தப்படுகிறார்கள். இனம் தெரியாதவர்களால் கொல்லப்படுகிறார்கள். நோய், நொடியில்லாதவர்கள் கூட திடீரென மரணமடைகிறார்கள்

வன்முறையையும், வறுமையையும் மட்டும் மக்களிற்கு கொடுக்கும் இலங்கை அரசிடமிருந்து தப்பி வேறுநாடுகளிற்கு வயிற்றுப்பசிக்கு வழிதேடி செல்லும் ஏழைகளை அந்த நாடுகளும் கொல்கின்றன. மட்டக்களப்பு, கொம்மாதுறையை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார். ரிசானாவின் முதலாளிகள் சொன்ன கதையை வைத்து அவளை கொன்றது போல கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் முதலாளியின் இச்சைக்கு இணங்காததால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் கூட இலங்கைக்கு அனுப்பாமல் அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள்.

தினமும் மூச்சுத் திணறி வாழும் இலங்கையில் இந்த மாதம் நடந்த நிகழ்வுகள் இவை. இவை எதுவும் இந்த வீணாய்ப்போனவர்களின் கூட்டத்திற்கு தெரியவில்லை. கண்களையும், காதுகளையும் இறுக்க மூடிக்கொண்டு இருந்தார்கள். அரை அடிக்கு பவுடரை பூசிக்கொண்டு அசடு வழிய ஓடித்திரியும் வேதாளங்களின் படங்களிற்கு விமர்சனம் என்றவுடன் கோபம் வந்து விட்டதாம். கொடுக்கு கட்டிக் கொண்டு கோசம் போடுகிறார்கள். சாராயம், போதைப்பொருட்கள், நீலப்படங்கள் போன்றே பொழுதுபோக்கு என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவை இல்லை.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்