இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.
மக்களுக்கு. அரசாங்கம் ஒன்றும் செய்யாமலுமில்லை
இராணுவ முகாம்கள், அதியுயர்பாதுகாப்பு வலயங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் என மக்களின் காணி அபகரிப்பு, ஊடக சுதந்திரத்தையும் சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளையும் முடக்கியமை, தென்னிலங்கை மீனவர்களை பணத்தாசைகாட்டி வடபகுதி கடற்பகுதிகளில் மீன்பிடிக்க அழைத்து வந்தமை, அவர்களை குடியேற்றியமை, சம்பந்தமே இல்லாத கிராமப்புற சிங்களவர்களையும் இராணுவம் வட - கிழக்கில் குடியேற்றியமை, வட -கிழக்குப் பகுதிகளில் புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் அளவு கணக்கின்றி அமைத்தமை, யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் உறைவிடங்களையும் நினைவுச் சின்னங்களையும் அழித்தமை, இராணுவ முகாம்களை அதிகரித்தமை, கடத்தல்களையும் கைதுகளையும் தீவிரப்படுத்தியமை, தமிழ் இளைஞர் யுவதிகளின் மத்தியில் இராணுவத்தை பயன்படுத்தி கலாச்சார பண்பாட்டு சீரழிவை நடத்துகின்றமை, வட - கிழக்கில் இராணுவ ஆட்சியை பலப்படுத்தியமை என அரசாங்கம் இடைவிடாது செயற்படுகிறது.
முரண்பாட்டிற்குள் நகர்த்தப்படும் முறைமாற்றம்
தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக வாழும் நிலையை மாற்றி, கிடைத்ததை அனுபவித்து வாழும் இனமாக அடிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்ட பெரும் இராணுவ மேலாண்மையை கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், தன் தலைவிதியை தானே தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்ற சுதந்திர வேட்கையை கொண்டிருக்கும் இராணுவ அடக்குமுறைக்குள்ளாகி வழிநடத்த சரியான தலைமைத்துவம் இன்றி இருக்கும் தமிழினத்தின் அபிலாசைகளுக்கும் இடையிலான இடைவெளி, முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
இடைவெளியை குறைத்திட அரசாங்கம் அடக்குமுறையை கையாளும் அதேவேளை தழிழர் தரப்பில் தனக்குச் சாதகமான முறையில் இடைவெளியை குறைக்கும் போராட்டம் இல்லாதிருக்கின்றது. இதற்குள் யுத்தம் காரணமாக வட - கிழக்கிலே நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்பட்ட முதலாளித்துவ தராளமய பொருளாதாரம் மிக வேகமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
திடீரென திணிக்கப்பட்ட தராளமய பொருளாதாரமும் நுகர்வுக் கலாச்சாரமும் மக்களின் சமூக வாழ்க்கையில் பெரும் குளறுபடிகளை ஏற்படுத்தி சுயநலத்தை வளர்த்து விட்டிருக்கின்றது. மறுபுறம் இதுவரை வட - கிழக்கிலே சுரண்டலை மேற்கொள்ள வாய்ப்பைப் பெற்றிராத ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டுக்கம்பனிகள் தன் மூலதனத்தை கொட்டி ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுரண்டலைமேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
ஜெனிவா - மூலதனக் கண்ணீர்
தமக்கிடையே குடுமிச்சண்டை போடும் ஏகாதிபத்தியங்கள் சில வருடங்களிற்கு முன் போட்டி போட்டுக்கொண்டு தமிழினப் படுகொலைக்கு உதவி வழங்கின. உதவிகளின் பின்னால் சுரண்டலிற்கான உள்நுழைவு ஒன்றே எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழர்களின் மீதான எதிர்ப்போ, ஐக்கிய இலங்கை மீதான பற்றோ அல்ல. எதிர்பார்ப்பு ஈடேறாத பட்சத்தில் யுத்தக்குற்றம் என்ற கடிவாளத்தை போட்டு தன் வழிக்குக் கொண்டு வர ஏகாதிபத்தியங்கள் முயற்சிக்கின்றன. எதிர்பார்புக்களை நிறைவேற்றிக் கொண்ட சீனாவும் இந்தியாவும் பால் குடித்துக் கொண்டிருக்க, ஏமாற்றப்பட்டவர்கள் அமெரிக்கத் தலைமையில் யுத்தக் குற்றம் தொடர்பாக ஜெனிவாவில் கண்ணீர் வடிக்கின்றனர்.
அமெரிக்க நலனிற்காக பேசுபொருளாய் ஈழத் தமிழர்கள்
விடுதலைப் புலிகள் இருந்தவரை வட- கிழக்கு பிரதேசத்தில் எந்த விதமான ஆதிக்கத்தையும் சீனாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ செலுத்திட முடியவில்லை. யுத்தத்திற்கு போட்டி போட்டு உதவி வழங்கி விடுதலைப் புலிகளை அழித்திட இவர்கள் முன்னின்றதிற்கு இதுவும் ஒரு காரணம். யுத்தத்தின் பின் இந்நாடுகளின் பெரும் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வட - கிழக்கில் தன் மூலதனத்தை கொட்டியமையை யாவரும் அறிவார்கள். இந்தப் போட்டியில் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக நாடுகளின் நலன்கள் ஓரம் கட்டப்பட்டன. தன் நலன்களை ஓரம்கட்டிய இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வர தமிழர் நலன்களும் யுத்தக் குற்றங்களும் ஆயுதமாகப் பாவிக்கப்படுகின்றன. இலங்கை வழிக்கு வந்தால் சலசலப்புகளுடன் ஜெனிவா கூட்டம் முடிந்து விடும். வழிக்கு வராவிட்டால் மீண்டும் இவை தொடர் கதையாகும். இறுதிவரை யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை. அதிகபட்சமாக மகிந்தவை பதவி கவிழ்ப்பதற்காக அவரும், அவரின் சிறு குழுவும் விசாரிக்கப்படலாம். இது அதிகபட்ச சாத்தியமான விடயம். ஆனால், அதற்கான வாயப்யை மகிந்த விட்டு வைக்கப்போவதில்லை. ஆடுற மாட்டை ஆடி கறந்துவிடுவார் அவர்.
மனிதாபிமானமே அற்ற மனிதாபிமான யுத்தம்
மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் மகிந்தவும் அவரின் வட்டாரங்களும் நடத்திய யுத்தத்தில் மனிதாபிமானமே அற்ற முறையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை யாரும் மறுத்திட முடியாது. சகட்டுமேனிக்கு பொதுமக்களைக் கொன்று குவித்தமையும், எண்ணுக் கணக்கற்ற பாலியல் வன்புணர்வுகளும், சொத்தழிப்புகளும், சூறையாடலும் வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாதவை. இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற, இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும். இதனை வேறு யாரும் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட நாம் தான் இதனை செய்திட வேண்டும்.
'சனல் 4" பரபரப்பு
சனல் 4 தொலைக் காட்சி இம்முறையும் 'மோதல் தவிர்ப்பு வலயம்" என்ற பெயரில்தமிழர்கள் மீதான இலங்கையின் யுத்த, மனித உரிமை மீறல்களை ஆவணப் படமாக வெளியிட்டுள்ளது. இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் மகனை இலங்கை இராணுவம் தடுத்து வைத்திருக்கும் மற்றும் கொலை செய்த படங்கள் வெளியாகி பலரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது. சனல் 4வின் ஆவணப் படங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றது.
சனல் 4 வெளியிட்ட காட்சிகள் இதுவரை போலியானவை என நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சனல் 4 வெளியிட்டவை யுத்த காலத்தில் நடந்தவற்றில் துளி அளவுங்கூட இல்லை. உண்மைகள் இதைவிட மோசமானவை என்பதே உண்மை.
சுடுகலன்களை அகற்றிவிட்டு தமிழர்களிடம் கேட்டால் உண்மைகள் வெளிவரும். சனல் 4வின் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம், ஆனால் அதன்பால் இருக்கும் தமிழர்களின் வேதனை உண்மையானதே.
பேரினவாதிகளிற்கு பெரும்யோகம்.
ஜெனிவாவிலே தமிழர்கள் மகிந்தவை தூக்கிலிடப் போகின்றார்கள், நாட்டைப் பிரித்து சிங்களவர்களை அழிக்கப் போகின்றார்கள் என்றெல்லாம் மிகையான போலிப் பிரச்சாரம் செய்து, சிங்கள மக்களிடம் தன் பௌத்த மேலாண்மையை நிலைநாட்டி பொருளாதார சமூக நெருக்கடிகளினால் தனக்கெதிராக சிங்கள மக்கள் திரண்டெழுவதை தடுத்து நிறுத்தி, தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை அவர்களை ஆதரிக்கச் செய்து தன் அதிகாரத்தை நன்கு நிலைநாட்டிக் கொண்டுள்ளது மகிந்த பேரினவாத அரசு.
உள்நாட்டில் ஆதரவு இருக்கும் வரை மகிந்தவை கீழிறங்க வைக்க முடியாது. பலமிழந்து நிற்கும் எதிர்க் கட்சிகள் பெரிதாக வாய் திறக்காது. காரணம் அவர்கள் மனித உரிமை விடயத்தில் மகிந்தவிற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை. இதனை போதுமான அளவு நேர்மையாக அம்பலப்படுத்துவதற்கு பலமான இடதுசாரி இயக்கம் இன்மை என்பது பெரும் குறையாகும்.
ஜெனிவாவில் தமிழ் தலைவர்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் நியாயம் கோரி ஜெனிவா சென்றுள்ளனர். இவர்களின் அரசியல் போராட்டம் என்பது மக்களின் போராட்டமாக இல்லாது சர்வதேச நலன்களுடன் தமிழர் நலன்களை பொருத்திடும் செயற்பாடுகளாகவே நகர்கின்றன. இரண்டும் என்றுமே ஒரே நேர்கோட்டில் சந்திக்க முடியாதவையாகும். தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளின் இந்த வழிமுறை மக்களிடம் அதீதமான கற்பனைகளை வளர்த்து முடக்கும் நிலைக்கே அழைத்துச் செல்லும். தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பை தக்கவைக்க மட்டுமே பயன்படும்.
என்ன செய்திட வேண்டும்?
ஜெனிவா கூட்டத்திற்கு சென்று இலங்கை அரசாங்கத்தின் மீது அடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. மாறாக தொடர்ச்சியான திட்டமிட்ட போராட்டத்தையும் அம்பலப்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும். ஜெனிவா போன்று கிடைக்கும் சில சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தையும் உலக ஏகாதிபத்தியத்தின் போலி கரிசனைகளையும் அம்பலப்படுத்திட வேண்டும். சமாதானமான வழிமுறைகளோ சமரசங்களோ இங்கு வேலைக்காகாது. மக்களை அரசியல் மயப்படுத்தி பொருளாதார, கருத்தியல், அரசியல் போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். குறிப்பாக சகல அட்டூழியங்களையும் செய்து கொண்டு மகிந்த மறைந்து நிற்கும் பேரினவாதத்தை தோலுரித்து தோற்கடிக்க வேண்டும். யுத்த குற்றங்கள் தொடர்பாக சிங்கள மக்களிற்கு தெளிவுபடுத்த புரட்சிகர சக்திகளுடன் இணைந்து செயற்படல் வேண்டும். இதன் அவசியத்தை தமிழர்கள் உணரவில்லையாயினும், இதன் பாரதூர தன்மைகளை சிங்கள பேரினவாதிகள் உணர்ந்துள்ளனர். அதன் காரணமாக தான் இதனை செய்யமுனைபவர்களை பேரினவாதிகள் முண்டியடித்துடிகொண்டு ஒடுக்குகிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு போலவே சிங்கள மக்களிற்கும் தெளிவுபடுத்த வேண்டும். உணமையில் யுத்தக் குற்றவாளிகள்மீதான விசாரணையை மக்கள் மன்றங்கள் முன் விசாரணை செய்திட அழுத்தம் கொடுத்திட வேண்டும்.