கடந்த பத்து வருடகாலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளிலும் நலிந்த நிலையை அடைந்து வருகிறது. உலகம் இரு அரசியற் துருவங்களாகப் பிரிந்திருந்த, சோவியத் வீழ்ச்சியடைந்த 1990கள் வரையான காலகட்டம் வரை, அமெரிக்கப் பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும் மேற்படி "இரு அரசியற் துருவ" அடிப்படையிலேயே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் யுத்தம் சார்ந்த ஆயுத உற்பத்தியும், தொழில் நுட்பமும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்தன. NATO ஒப்பந்தம் ஊடாக மேற்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகள், தென்-அமெரிக்க மற்றும் சில ஆசிய, ஆபிரிக்க அடிவருடி நாடுகள் அமெரிக்காவின் ஆயுத - தளபாட மற்றும் யுத்தம் சார் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதன் மூலம் அதன் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்தன.

 

1990களுக்குப் பின்வந்த காலத்தில் அமெரிக்காவின் ஆயுத - தளபாட  மற்றும் யுத்தம்சார் தொழில் நுட்ப ஏற்றுமதியில் பாரிய வீட்சி ஏற்பட்டது. தனது உற்பத்தியையும், ஏற்றுமதியையும் சிவில் பாவனைப் பொருட்கள் சார்ந்து கட்டமைக்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அத்துடன் இருதுருவ உலக அரசியலில் வீட்சியின் பின்னான உலகப் பொருளாதார மாற்றமும், புதிய சந்தை வாய்ப்பும் புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவையையும் அதற்கு ஏற்படுத்தியது. இந்த தேவைகளின் பின்னணியும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயல்பான மாற்றத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டதே. திறந்த நவதாராளவாத பொருளாதாரக் கொள்கையும், அது சார்ந்த உலக மயமாக்கலும் இவையாகும்.

 


இவ்வாறு உருவாகிய நவதாராளவாத பொருளாதரக் கொள்கையும், உலக மயமாக்கலும் ஒப்பீட்டளவில் அமெரிக்காவிற்கு பாரிய பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக எவரும் எதிர்பாராத விதத்தில் சீனா மிகப்பெரும் பொருளாதாரமாக வளர்ந்தது. அத்துடன் சீனா அமெரிக்காவின் சிவில் பாவனைப் பொருட்களின் இறக்குமதியை தனது கடன் மூலம் தீர்மானிக்கும் நாடக மாறியது. அதேவேளை, அமெரிக்காவின், சீனாவுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. இதனால், மேற்கு ஐரோப்பிய மற்றும்  ஜப்பானையும் மீறி அமெரிக்காவுக்கு கடன் வழங்கும் நாடுகளில் முதல் நிலையை சீனா அடைந்தது.


இந்நிலையில், 11 செப்டெம்பெர் 2001இல் நடந்த நியூயோர்க் தாக்குதலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்கப் பொருளாதார - மற்றும் வெளியுறவு அரசியலானது, தனது வீட்சியடைந்த பொருளாதாரத்தை மறுபடியும் தூக்கி நிறுத்தும் முயற்சியையே குறிக்கோளாகக் கொண்டது. உதாரணமாக, ஆப்கனிஸ்தானின் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கான காரணிகளாக, அங்கு தாலிபான்களை விரட்டி அடித்து, ஜனநாயகத்தை உருவாக்கி, பெண் விடுதலையை முன்னெடுக்கப் போவதாகவே கூறப்பட்டது. அதேபோன்றே, ஈராக் மீதான படையெடுப்பும். சதாமின் அரசை ஒழித்து, ஜனநாயகத்தை ஈராக்கில் உருவாக்கப் போவதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பிரச்சாரம் செய்தனர். ஆனால், இன்று பகிரங்கமாக அனைவருக்கும் தெரியும், அமரிக்காவின் படையெடுப்பானது ஜனநாயகத்தை மேற்படி நாடுகளில் உருவாக்க அல்ல. அல்லது அங்குள்ள பெண்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கவல்ல. மாறாக, தனது புவியியல் மற்றும் பொருளாதார நலன்களை விரிவாக்குவதற்கே. ஆப்கானிஸ்தானை அடிமைகொள்வதன் மூலம் சீனா, ரஷ்யா  மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் எல்லைகளில் தனது படைகளை நிறுத்துவதும், மேற்படி நாடுகளை தனது பூகோள - பொருளாதார நலனுக்கு இசைவாக இயங்கவைக்க முயல்வதுமே அமெரிக்காவின் திட்டம்.


இதன் பின்னணியிலேயே, அதாவது அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் பூகோள நலன்களை முன்னிறுத்தி நடத்தும் ஏகாதிபத்திய அரசியலின் தொடர்ச்சியாகவே, இன்று வட-கொரியா மீதான அமெரிக்க கிழட்டு ஏகாதிபத்தியத்தின் மிரட்டலும், அதற்கு எதிர்வினையாற்ற முயலும் வட-கொரிய மக்கள் குடியரசின், கிம் ஜுங் - உன் அரசின் செயற்பாடும் விளங்கிக் கொள்ளப்படவேண்டும்.


கடந்த 2010 வைகாசி மாதம், Naval Operations Concept 2010: A Cooperative Strategy for 21st Century Seapower என்ற அரசியல் திட்டம், ஒபாமா அரசால் வெளியிடப்பட்டது. இந்தக் கடற்சார் பாதுகாப்பு - மற்றும் பொருளாதாரத் தந்திரோபாயத் திட்டமானது, தற்கால பொருளாதார வளர்ச்சியின் மையமாகவுள்ள பசிபிக் - இந்து சமுத்திரப் பிரதேசத்தை, அமெரிக்காவின் நலனுக்கிசையக் கையாள்வது எப்படி என்பதே உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இத்திட்டமானது குறிப்பாக கிழக்கு ஆசியாவின் மஞ்சள் கடலிலிருந்து, தென்-சீனக் கடல்வரை அமெரிக்காவின் ஆதிக்கத்தை இன்று நடைமுறைப்படுத்தும் வேலைகளின் அடிப்படையாகவுள்ளது.


இத்திட்டத்தின் முதல் வெளிப்பாடாக ஆவணிமாதம் 2010இல், தென் கொரியாவுடன் இணைந்து பாரிய முப்படைப் பயிற்சியை, வட-கொரிய எல்லையிலும், அதன் மஞ்சட் கடற்பிரதேச எல்லையிலும் அமெரிக்கா நடாத்தியது. இது 1953இல் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தபின் முதல் முதலாக நடைபெற்ற பாரிய படைப் பயிற்சி என வர்ணிக்கப்படுகிறது. மேற்படி அமெரிக்க - தென்கொரிய படைப் பயிற்சிக்கும் போர் ஒத்திகைக்கும் பதில் சொல்லும் விதத்தில், வட - கொரியா, தென் கொரியாவுக்கு சொந்தமான லுநழnpரநழபெ தீவு மீது பாரிய பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் பின்வந்த நாளிலிருந்து இன்றுவரை அமெரிக்க - தென் கொரிய இராணுவ - கடல்சார் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லிவந்த வட கொரியா, தை 2013இக்கு பின்வந்த காலத்தில், தனது அணுவாயுதத்தை, நீண்டதூர ஏவுகணையில் இணைத்து அமெரிக்க - மேற்கு கரையோரத்தின் மீதும், அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ள சில பசிபிக் தீவுகள்  மீதும் ஏவப்போவதாக சமிக்ஞை விட்டவண்ணமுள்ளது.


2013, சித்திரை மாத நடுப்பகுதியில் வெளிவந்த தகவலின்படி, மறுபடியும் தென் கொரியா    நிலக்கீழ் அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையானால், 9 ஒக்டோபர் 2006, அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன், ஐந்து நாடுகளின் தலைமையில் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியர்) வட கொரியா கைச்சாத்திட்ட "உணவுக்கும், அத்தியாவசிய தேவையை நிறைவேற்றவும் - அணுவாயுதப் பரிசோதனையை நிறுத்தும் ஒப்பந்தம்"  மீறப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, வட கொரியாவின் எதிர்வினையை முறியடிக்க, அமெரிக்கா தனது பசுபிக் - மற்றும் மேற்குக்கரை படையணியை யுத்தத்துக்கான ஆயத்த நிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தனது கடல்சார் தொலைத் தொடர்புக் கருவிகளையும், கப்பல்களையும் கொரிய கடற்பிரதேசங்களில் நிறுத்தியுள்ளது. சீனாவும், ரஷ்யாவும் இதுவரை  மேற்படி படை நடவடிக்கைகளை கவனித்து வந்தாலும் நேரடியாக இன்னும் தலையிடவில்லை. ஆனால், மானிட விடுதலை வேண்டி நிற்கும் பலரும், மக்கள் நலம் சார் உலகப் புத்திசீவிகளும் அமெரிக்காவின், ஏகாதிபத்திய நலன்சார் யுத்தவெறியை எதிர்ப்பதுடன், வட- கொரியாவின் அணுவாயுதச் சவடால்களையும் கண்டித்துள்ளனர்.

அதில் குறிப்பிடத்தக்கவர் கியுபா நாட்டின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ. "தற்போதுள்ள சூழலில் போர் தவிர்க்கப்படவில்லை என்றால், வடகொரியா - தென் கொரியா என இருபகுதி மக்களும், அல்லது அனைவரும் எவ்விதப் பயனுமின்றி மிக மோசமான முறையில் மடிவார்கள்... தற்போது வடகொரியா பல்வேறு வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு இலக்குகளை அடைந்து, செயல்வடிவமாக்கி நிரூபித்துள்ளது. வடகொரியாவின் மிகச்சிறந்த நண்பன் என்ற முறையில் எனக்கு கடமை இருக்கிறது. அணு ஆயுதப் போர் மூண்டால் இந்தப் பூகோளத்தில் உள்ள 70 சதவிகித மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது நியாயமற்றது. இந்த மோதல் நிகழ்ந்தால், பாரக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக் காலமும் அவரது பிம்பமும் பெரும் வெள்ளத்தில் பேரழிவு ஏற்பட்டது போல் அடியோடு புதைக்கப்படும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடூரமான, மோசமானவராக ஒபாமா பதிவு செய்யப்படுவார். போரைத் தவிர்ப்பது என்பதும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதும் ஒபாமாவின் கடமை!" என பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.


பிடல் காஸ்ட்ரோ கூறுவது போன்று ஒரு அணுவாயுத யுத்தம் எவருக்கும் இலாபம் தரப்போவதில்லை. வெறும் மானிட அழிவிலேதான் போய் முடியும். அதனால் இப்படியான சர்வதேச அரசியல் சூழ்நிலையைத் தவிர்க்க, அமெரிக்காவினதும் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளினதும் பொருளாதரா - யுத்த வெறிக்கு எதிராக, சர்வதேச ரீதியாக பாரிய மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மக்கள் நலம் சார் சக்திகள் முன்னுள்ளது.