09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சிதம்பரம் சொல்வதெல்லாம் பொய்!

பொய் சொல்லக் கூடாது என்று ஒளவைக்கிழவி பாடினாள். குழந்தைகளை பொய் சொல்லக் கூடாது என்று பாடிய அவள் இன்றைக்கு ஏழு கழுதை வயதில் சிதம்பரம் சொல்லும் பொய்களிற்கு கையிலிருக்கும் தடியால் சிதம்பரத்தின் மண்டையைப் பிளந்திருப்பாள். இந்தியாவின் நிதியமைச்சர், இலங்கைத் தமிழ்மக்களின் இனப்படுகொலை நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகுவின் பச்சைப்பொய்யைப் பாருங்கள்.

 

"இறுதிக் கட்டப்போரின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிரோடிருந்திருப்பார் என இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்" என்று சிதம்பரம் கூறினார்.

 

 

 

 

போரை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் இரண்டு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்ததாம். "Be careful" என்று வடிவேலு தனக்கு தானே சொன்ன மாதிரி போரை நிறுத்தச் சொல்லி உங்களிற்கு நீங்களே அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இலங்கையின் கொலைகாரர்கள் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்களே. அவர்கள் சொன்னதை இந்தியா என்றைக்கும் மறுத்ததில்லையே. இன்றைக்கு தேர்தல் வரப்போகுது என்றவுடன் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரசின் இரத்தம் தோய்ந்த கைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். இனப்படுகொலைக்குப் பிறகு அய்க்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதெல்லாம் இலங்கை அரசைக் கண்டித்து பெயரளவிற்கு கூட ஒரு வரி வந்து விடக்கூடாது என்று பின்னங்கால் பிடரியிலே பட சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி என்ன ஓட்டம் ஓடினார்கள்.

 

இவர் சொன்னது போல பிரபாகரனோ, புலிகளோ இவர்களது பேச்சைக் கேட்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வன்னியிலே கொல்லப்பட்ட அத்தனை ஆயிரம் மக்களும் என்ன பாவம் செய்தார்கள். புலிகளை விட்டு விட்டு தமிழ்மக்களை காப்பாற்ற உலகின் மிகப் பெரிய வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவால் ஏன் முடியாமல் போய் விட்டது. பாகிஸ்தானுடன் சண்டை பிடித்து வங்கதேசத்தை பிரிக்க முடிந்தவர்களிற்கு தமிழ்மக்கள் கொல்லப்பட்டதை ஏன் தடுக்க முடியாமல் போய்விட்டது.

 

காஸ்மீர், அசாம், நாகலாந்து, மணிப்பூர் என்று சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குகிறார்கள். தமது வாழ்வாதாரங்களை அழிக்கும் பெருமுதலாளிகளிற்கு எதிராகப் போராடும் ஏழைமக்களை கொன்று குவிக்கிறார்கள். தமது சொந்தநாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இவர்கள் பிரபாகரனிற்காகவும் இலங்கைத்தமிழ் மக்களிற்காகவும் கவலைப்படுகிறார்களாம். ஏற்கனவே ஒருமுறை ராஜீவ்காந்தி இலங்கைத்தமிழ் மக்களிற்காக கவலைப்பட்டதால் மக்கள் பட்டபாடு எத்தனை தலைமுறைக்கும் மறக்காது. இந்திய அமைதிப்படை வந்து விட்டது இனி வாழ்வு போரின்றி அமைதியாக இருக்கும் என்று மாலை போட்டு மகிழ்ந்து வரவேற்ற அப்பாவி மக்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரர்கள் கவலைப்படுகிறார்களாம்.

 

இலங்கைத் தமிழ்மக்களிற்காக கவலைப்பட்டு முடித்து விட்டு தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களிற்காக மனம் உருகி அவர் உதிர்க்கும் அடுத்த முத்தை பாருங்கள். "மீனவர்கள் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசவும் இந்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால், தமிழக அரசு அதற்கு தயாராகவில்லை. அதற்கான திகதியை இன்னமும் குறிப்பிடவில்லை" என்றும் சிதம்பரம் தெரிவித்தார். இலங்கையின் கரைகளிற்கு தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்கள் யுத்தம் செய்யவா போனார்கள். சிலர் எல்லை தெரியாமல் போனார்கள். சிலர் படகுமுதலாளிகளின் பணவெறியினால் போக வைக்கப்பட்டார்கள். காத்திருப்பது மரணம் என்று தெரிந்தும் குடும்பத்தின் பசிக்கு வழி தேடிப்போனார்கள். அவர்கள் கைகளில் வலை தானே இருந்தது. ஆயுதமா இருந்தது. எதற்காக இலங்கை கடற்படை அவர்களைக் கொல்ல வேண்டும். எதற்காக அவர்களை சித்திரவதை செய்ய வேண்டும்.

 

அமெரிக்க தூதரக அதிகாரி தேவாயானி விடயத்தில் மின்னலாக வேலை பார்த்தீர்களே. அதுவும் உங்களது எசமான், காலடி மண்ணெடுத்து தினமும் வணங்கும் அமெரிக்க எசமானையே ஒரு கை பார்க்கப் போவதாக சவுண்டு விட்டீர்களே. தேவயானிக்கும் இந்த கடற்தொழிலாளர்களிற்கும் என்ன வித்தியாசம். அவர் அதிகாரி, இவர்கள் ஏழைத்தொழிலாளர்கள். இவர்களினது உயிர்களிற்கு உங்களது கணக்குப்புத்தகங்களில் எந்த வித மதிப்புமில்லை என்பதுதானே வித்தியாசம். ஏழைகள் கொல்லப்படுவது குறித்து இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள். தமிழக அரசை குறை சொல்கிறார். காங்கிஸ் கள்ளர்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களை எல்லாம் நினைத்தவுடன் கலைக்கும் இவர்கள் கடற்தொழிலாளார்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண தமிழக அரசு திகதி கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பார்களாம். கடலிலே இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தால் கடற்கரையிலே தாதுமணல் கொளையன் வைகுண்டராசன் சூழலை நாசமாக்குகிறான். அவனிற்கு பரிசும் பாதுகாப்பும் கொடுக்கும் இவர்களா இலங்கை அரசை தட்டிக் கேட்க போகிறார்கள்.

 

மிகப் பெரிய வல்லரசின் நிதியமைச்சர் சொல்கிறார். "நாங்கள் சொல்வதை பிரபாகரனும் கேட்கவில்லை. இலங்கையரசும் கேட் கவில்லை. தமிழக அரசும் கேட்குதில்லை". பாவம், எதற்கும் வீட்டுக்குப் போய் உங்க வீட்டு நாயாவது நீங்க சொல்லுறதை கேக்குதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்