சுதந்திரம் அடைந்த காலம் முதல் இலங்கையை ஆண்டு வருகின்ற அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களைச் சாதாரண மக்களிற்கு மறுத்து வந்துள்ளனர். மேலும் மக்களை இனம், மதம், மொழி வாரியாக பிரித்து வைத்து இனக்கலவரங்களைத் தூண்டியும், மனித உரிமைகளை மறுக்கின்ற சட்டங்களை இயற்றியும் மக்கள் ஒன்றிணைந்து தமக்கு எதிராக அணிதிரளா வண்ணம் திட்டமிட்டு இவர்கள் செயற்பட்டு வந்தனர் வருகின்றனர்.

 

இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, சிங்களச் சட்டமூலம் மற்றும் தமிழ்-முஸ்லீம் மக்களின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட பல இனக்கலவரங்கள், தொழிலாளர் போராட்டங்கள் மீதான அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதல்கள் என பலவற்றினைக் கூறலாம்.


பாராளுமன்றத்தில் பரந்துபட்டிருந்த அரசியல் அதிகாரத்திற்கு பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையினை அறிமுகப்படுத்தி அனைத்து அதிகாரங்களையும் ஒரு தனிமனிதனிடம் குவித்த ஜே.ஆரின் புதிய அரசியல் அமைப்பானது மக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் நசுக்க ஆரம்பித்து பல மக்கள்விரோத ஜனநாயகவிரோத சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் சம்பள அதிகரிப்புக்காகவும் வேலைநிறுத்தத்தில் குதித்துப் போராடிய பல ஆயிரக்கணக்கான சகல இனங்களையும் சேர்ந்த அரச ஊழியர்களின் பதவிகளைப் பறித்து வீட்டிற்கு அனுப்பியதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினை அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை நீதி விசாரணை இன்றி வருடக்கணக்கில் சிறைகளில் அடைத்ததுடன் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து மனித உரிமையினை காலில் போட்டு மிதித்தது இலங்கையின் ஜனாதிபதி ஆட்சியமைப்பு.


மக்களின் அடிப்படை உரிமைகளை மறுதலித்த அரசாங்கங்களிற்கு எதிராக ஆயுதமேந்தி பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிய, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் கைது செய்து படுகோரமான சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கி படுகொலை செய்து புதைகுழிகளில் போட்டு மூடியது இந்த அரசினை பாதுகாத்து நிற்கின்ற இராணுவமும் ஏனைய படையணிகளும்.
2009ம் ஆண்டு வன்னியில் ஒரு பெரும் இனப்படுகொலையினை நடாத்தி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை சர்வதேச சட்டவிதிகளிற்கு மாறாக கிளஸ்ரர் குண்டுகளை வீசியும், நச்சுவிசவாயுக்களை பாவித்தும் கொன்று குவித்ததுடன், தப்பி வந்த மக்களை முள்வேலி முகாம்களில் தடுத்து வைத்து விசாரணை என்ற பேரில் சித்திரவதை, பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டு மனித உரிமைகளை மதிக்காது நடந்தது இந்த அரசும் அதன் இராணுவமும். சரணடைந்த போராளிகளை படுகொலை செய்ததுடன், பலரை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்து இன்னமும் சித்திரவதையினை தொடர்கின்றது இந்த அரசு. மேலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது.


சுதந்திர வர்த்தகவலயத்தில் வேலை செய்பவர்கள் தமது சேமலாபநிதி மோசடிக்கு எதிராக போராடியபோதும், புத்தளம் மீனவர்கள பெற்றோல் விலையேற்றத்திற்கு எதிராக போராடியபோதும், அண்மையில் கம்பஹா பிரதேசத்தில் குடிப்பதற்குரிய சுத்தமான நீரினை மாசடையச்செய்யும் இந்திய தொழில் நிறுவனத்திற்கு எதிராக போராடியபோதும் மக்கள் மீது பயங்கரமான வன்முறையினை ஏவியதுடன், துப்பாக்கிப் பிரயோகம் செய்து பலரது உயிர்களையும் பறித்துக் கொண்டது இந்த அரசு. மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டங்களை முன்னெடுக்க முனையும் சமூக நோக்கம் கொண்டவர்களை போலி குற்றச்சாட்டுக்களின் மூலம் கைது செய்து பொய் வழக்குகள் போடுவது முதல், தனியார் பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு எதிராகவும் அனைவருக்கும் இலவசக்கல்வியினை வேண்டியும் போராடும் மாணவர்களின் வீடுகளிற்கு சென்று பெற்றோர்களை மிரட்டுவது வரை இந்த அரசு மக்களின் அடிப்படை மனித உரிமைகனை மறுத்து செயலாற்றுகின்றது.


மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய பல ஊடகவியலாளர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் அடித்து அச்சுறுத்தி வீதியில் வீசப்பட்டுள்ளனர். முஸ்லீம் மக்களிற்கு எதிராக அரச பணத்தில், அரச படைகளின் பாதுகாப்புடன் சிங்கள தீவிரவாத, புத்தமத வெறி கொண்ட அமைப்புக்கள் வளர்க்கப்பட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


வன்னி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் குறித்து உறவினர்கள் எதுவும் செய்ய முடியாது நம்பிக்கை அற்ற நிலையில் இருந்த போது, தோழர் லலித் தெற்கிலிருந்து பல சிரமங்களிற்கு மத்தியில் வடக்கு சென்று தோழர் குகனுடன் இணைந்து காணாமல் போனவர்களின் உறவுகளை கொழும்பிற்கு அழைத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், சர்வதேச மனிதவுரிமை தினமான டிசம்பர் 10ம் திகதி 2011, யாழில் போராட்டம் ஒன்றினை ஒழுங்iமைத்துக் கொண்டிருந்த வேளையில் அரச படைகளினால் கடத்தப்பட்டு அவர்களும் இன்று காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டனர்.


இன்று இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை முனைப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது அபிவிருத்தி படுவேகமாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது போன்ற தோற்றப்பாட்டினை வெளியில் கொடுத்தாலும் உண்மையில் நாட்டின் வளங்கள் வல்லரசுகளின் கைகளிற்கு மாறிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மையில் நடக்கின்றது. இது நேரடியாக சாதாரண பொது மக்களை படுபயங்கரமாக நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் போராட்டங்கள் வெடிக்கின்றன. அரசானது ராணுவ மயப்படுத்தப்பட்ட பாசிச அமைப்பாக மாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவ ஆதிக்கம் சிவில் நிர்வாகத்தில் புகுத்தப்படுகின்றது. மக்களின் எதிர்ப்புக்குரல்களை நசுக்க அனைத்து பாசிச வழிமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மனித உரிமை மற்றும் ஊடக சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு குரல்வளையில் பிடித்து நசுக்கப்படுகின்றன.


இந்த அரசு போய் புதிய அரசு வந்தாலும் நிலைமை ஒன்றும் மாறப்போவதில்லை. இங்கே ஒரு அரச அமைப்பு வடிவம் நிறுவப்பட்டுவிட்டது. அதனை பாதுகாத்து நிற்க ஒரு பாசிச ராணுவக்கட்டமைப்பு எப்போதும் தயாராக உள்ளது. அது அன்று காலனித்துவத்தின் நலன்களை பாதுகாத்து நின்றது. இன்று நவதாராளமயமாக்கலை முன்னெடுத்து நிற்கின்றது. இந்த அரச அமைப்பு எப்போதும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தியது கிடையாது. மக்களின் மனித உரிமைகளை குறித்து அக்கறை கொள்ளாது. எதிர்காலத்திலும் இந்த நிலை தான் இருக்கும்.


மக்களின் பேச்சு கருத்து எழுத்து உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டுமானால் இந்த ஜனநாயகமற்ற பாசிசப் போக்குக்கு எதிராக பரந்துபட்ட அளவில் மக்கள் ஒன்றிணைந்து அணிதிரண்டு போராட வேண்டும். சமஉரிமை இயக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான இப்போராட்டத்தில் மனித உரிமைவாதிகள், ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகள், சமூகவியலாளர்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றது.


1. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!


2. வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவ ஆட்சியை அகற்று!


3. கடத்தப்பட்டோர், காணாமல் போகவைக்கப்பட்ட குகன், லலித்தை விடுதலை செய்!


4. சிவில் சமூக உரிமைகளை அங்கீகரி!


5. மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து!


6. அனைத்து மனிதவுரிமை மீறல்களையும் நிறுத்து!


சம உரிமை இயக்கம்
09/12/2013