கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு...
அணுவுலை வெடிக்காமலே அழிவு...
கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..!
போராடும் மக்களோடு கை கோரு...
இது நமது போர்.


மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.


இது இந்திய தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை மட்டுமல்ல,கண்ணிமைக்கும் நேரத்துக்குள்அதன் எல்லை தாண்டிய கதிர்வீச்சுக்குள் அகப்படுவது இலங்கையின் யாழ் தீபகற்ப மன்னார் வளைகுடா மக்கள் தான். பூகோளரீதியில் இப்பிரதேசங்கள் கூடங்குளத்துக்கு மிகவும் அண்மையானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தும் கூடங்குள அணுமின்னிலையம் பற்றியோ அதனால் ஏற்படப்போகும் அதீத சேதங்கள் பற்றியோ எவ்வித கரிசனையுமின்றி இருக்கின்றோம்.

 


இது இந்திய மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. அதையும் விட கூடங்குள அணுமின்னிலைய நிர்மாணம் இந்திய இறையாண்மையின் எல்லைக்குட்டபட்ட வலயத்துக்குள் இருந்தாலும் அதுஇலங்கை வாழ் வடபகுதி மக்களின் வீட்டு வாசல்படியிலேயே இந்த ஆபத்து விதைக்கப்படுகின்றது என விழிப்புணர்வூட்ட வேண்டிய,தமிழ்மக்கள் மேல் கரிசனை உள்ளதாக பீற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கூடங்குளத்தினைப் பற்றி அலட்டிக்கொள்ளக்கூடவில்லை.


இரவோடு இரவாக தூக்கத்திலிருந்த பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட போபால் விசவாயு விபத்திற்கு இன்றும் கூட எவரும் பொறுப்பாக்கப்படவுமில்லை. இந்த மனிதப்படுகொலைக்கு காரணமான இரசாயன ஆலையின் அதிபதி அமெரிக்க அன்டர்சன் எந்த நீதிமன்றிலும் நிறுத்தப்படவுமில்லை.


அது ஒரு அணுக் கதிரியக்க விபத்து அல்ல. அப்படியில்லாதிருந்த போதும், யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனத்தால் அந்த விசவாயு விபத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 8000 மனித உயிர்களும் அதன் தொடர்ச்சியாய்க் கொடிய நோய்வாய்ப்பட்டு இன்றுவரை மரணித்துப் போன 20000 மக்களும் காலில் மிதிபட்டு மதிப்பற்று இறக்கும் மண்புழுக்களாக மட்டுமே கணிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


கொள்ளை இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டியங்கும் மனிதவிரோத ஏகாதிபத்திய அமெரிக்க நிறுவனங்களின் இந்திய தாதாக்களாக அவர்களின் பாதுகாவலர்களாக இந்திய அரசே இயங்கும் போது மக்கள் மண்புழுக்கள் தான். இலாப வெறிகொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் உள்நாட்டுப் பாதுகாவலர்களாகவே நம்நாட்டு அரசுகள் இருக்கின்ற போது கூடங்குளத்தில் மட்டுமல்ல எங்கள் வீட்டுக் கோடிப்புறங்களிலும் கூட அணுஉலை நிறுவப்படலாம். இதுவேதான் இன்று நடந்துகொண்டிருக்கின்றது.


அத்தியாவசிய தேவைகளுக்கான மின்சாரப் பற்றாக்குறையைப் போக்குதல், மக்களுக்கு மின்வெட்டில்லாத,தடையற்ற மின்சாரம் வழங்குதல் போன்ற மக்களிடத்தில் கவர்ச்சிகரமான காரணங்களாக எடுபடக்கூடிய மயக்கும் திட்டங்களைக் கூறி, மக்களின் எதிர்ப்பைத் தணிக்கும்படியான தந்திரோபாயப் பிரச்சாரங்கள் செய்தபடி, அணுஉலை மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குகிறார்கள்.


ஆனால் மக்களுக்கு மின்சாரம் என்ற பெயரில், பன்னாட்டு பெருத்த இலாப முதலைகளுக்காகவே இந்த அணுமின் உற்பத்திச் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களுடைய பெருத்த இலாபக் கொள்ளைகளுக்காக தங்குதடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவே இந்த அணுவாலைகள் என்பதை மக்கள் உணராதிருப்பதற்காக எல்லாவற்றையும் மூடி மறைப்பார்கள். பன்னாட்டு நரிகளுக்காக உள்நாட்டு நாய்களாக நம்நாட்டு அரசுகள் ஊளையிடுவார்கள்.


இவ்வாறான நிர்மாணங்களுக்கு எதிராக விழிப்புற்ற மக்களின் போராட்டங்களை சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் அடித்து நொருக்குவார்கள். தேவையெனில் கொன்றும் குவிப்பார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. போர்க்குணம் கொண்ட மக்கள் போராட்டத்தின் எதிர்ப்பலை கண்டு அஞ்சி நடுங்கும் அரசு, தன் படைகளை ஏவி, போராடும் மக்களை முற்றுகையிடுகிறது. கைது செய்கிறது. சிறையில் அடைக்கிறது. பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் அடித்து நொருக்கப்படுகிறார்கள். கைது செய்து சிறையிடப்படுகிறார்கள்.


இந்தியக் கடற்படையால் மணற்பாடு எனும் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி ஜான் சுட்டுக் கொல்லப்பட்டார். சகாயம் எனப்படும் ஒரு மீனவர் தாழப்பறந்து தலைக்கு மேல் வட்டமடித்த விமானப்படை விமானத்தின் ஒலி அதிர்ச்சியினால் இரத்த நாளங்கள் வெடித்த காரணத்தால் நாகர் கோவில் மருத்துமனையில் மரணத்தை தழுவினார்.


இத்தனை போராட்டங்களையும் மீறி, போராட்டத்தில் தியாகிகளாகி உயிர்நீத்த சகாயம், அந்தோனி ஜான் உடல்களையும் மிதித்து வெறியோடு நடந்து கொள்ளும் இந்திய அரசு, விமானப்படை தரைப்படை கடற்படை பொலீசு என தனது அனைத்து அடக்குமுறை ஏவற்பட்டாளங்களையும் ஏவிவிட்டு, தனது சொந்த மக்களையே வேற்று நாட்டுப் படை எதிரியாக கணித்துப் போர் தொடுத்து நிற்கின்றது.


இலங்கையில் பெறப்படும் மின்சாரம் இன்றுவரை அணுசக்தி சாராத நீர்மின்சார ஆலைகளிலிருந்து உற்பத்தியாகின்றது. அதனால் கூடங்குளம் அணுமின்னுலை நிலையம் குறித்து நாங்கள் எதுவும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றிருக்க முடியாது.


நாடுகளுக்கிடையில் இருப்பது இன்று வெறும் எல்லைக் கோடுகளே. அந்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் நடக்கும் எவற்றையும் நாங்கள் தீர்மானிக்க முடியாது என்று பேசாதிருக்க முடியாது. இன்று அழிவுகளுக்கும் நாடுகளைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எல்லைகளே கிடையாது. எந்த நாடுகளின் இறையாண்மைகளையும் மிதித்தோ, அல்லது தங்களது அந்தந்த நாட்டு கூட்டாளி அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களின் உள்நாட்டு உளவாளிகள், பங்காளிகள் ஊடாகவோ எல்லைகள் கடந்து எதுவும் நடந்தேறும் என்பது இலங்கையின் வரலாற்றிலேயே நாங்கள் அனுபவித்த ஒன்று. 71ஆம் ஆண்டுக் கிளர்ச்சியும் முள்ளிவாய்க்கால் கொலைக்களமும் இந்திய இலங்கை கூட்டாளிகளின் மனிதப்படுகொலை அரங்கங்களாக நாங்கள் கண்டுகொண்டவை.


இன்று மகிந்தவும் மன்மோகன் சிங்கும் ஏகாதிபத்தியங்களின் இணைபிரியாக் கூட்டாளிகள். ஏவல் நாய்களாக அவர்கள் எவற்றையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மடை விரிப்பவர்கள். மனிதப் பிணங்களை காலில் மிதித்து உழைப்போர் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் தனிநபர் இலாபவெறிகொண்டலையும் பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரத் தேவைகளுக்காக அணுவாயுத ஆய்வுகளுக்காக முழத்துக்கொரு அணுவாலை கூட நிர்மாணிப்பதற்கு நமையாளும் இந்த அரசுகள் தயங்கா. ஏற்படும் விபத்துக்கள் கொழுத்த இலாபங்களைப் பாதிக்காதவரை அவர்கள் மக்கள் குறித்து எதுவும் அக்கறை கொள்ளப் போவதில்லை. ஆனால் மக்கள் மீதே தமக்குக் கரிசனை உண்டு என இவர்கள் காட்டிக் கொள்வார்கள்.


விபத்துகள் ஏற்படாதவகையிலேயே இந்த அணு உலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாமே கனகச்சிதமானவை என்றும் அணுப் பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள், அறிஞர்கள் 'அஞ்ச வேண்டாம்' என அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அணுசக்தி பாதுகாப்பானது என்பதற்கு அறிவியலைத் துணைக்கழைப்பார்கள்.

மேலும் உங்கள்அச்சத்தை தூண்டிவிடுபவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்பார்கள்.வேற்றுநாட்டு கையாட்கள் என்பார்கள். இவ்வாறுதான் பெருத்த முதலீடுகளுக்கு முண்டு கொடுத்து வயிறு வளர்க்கும் "அறிவுசார்" துறையினர் கொழுக்கும் இலாப முதலீட்டிற்கு ஊழியம் செய்வார்கள்.


மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற மற்றைய நாடுகளிலும் ஏற்பட்ட அணுமின்னுலை விபத்துக்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விபத்துக்களின் அழிவுகளிலிருந்து மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும், அந்த விபத்துக்கள் ஏற்படாதவாறு பாதுகாக்க கனகச்சிதமான தொழில்நுட்பம் இருக்கிறது எனவே அணுமின்னுலை பாதுகாப்பானது என்ற உத்தரவாதம் கண் முன்னாலேயே ஏற்பட்ட விபத்துக்களினால் பொய்த்துப் போய்விட்டது என்பதனாலும்,அந்த நாடுகளில் இந்த அழிவோடு கூடிய அணுமின்னுற்பத்திக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பலைகளால் இவ்வாறான நிர்மாணங்களைக் கைவிட்டு சூழலை 'மாசுபடுத்தாத' மாற்று மின்னுற்பத்தி முறைகளை நோக்கித்தள்ளவைத்த மக்கள் அபிப்பிராயங்களால், அந்தந்த நாடுகளில் காலாவதியாகி கைவிடப்பட்ட தொழில்நுட்பங்களையே இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா இலங்கை போன்ற "கேட்பாரற்ற" வேற்று நாடுகளுக்கு நகர்த்துகின்றார்கள். மேற்கு நாடுகளில் "மவுசு" இல்லாத இம் அணுமின்னுலை மின்னுற்பத்தி முறைகளை "ஏற்றுமதி" செய்து இங்கு விற்றுக் காசாக்குகிறார்கள்.


பாதுகாப்பு பற்றிய எந்தக் கரிசனையையும் கைகழுவி விட்டுவிட்டு அதற்கான பொறுப்புகளிலிருந்து தப்பிப்பதற்கு தகுந்த தோதான நாடுகளிவை என்பதும், இந்தக் கொள்ளையர்களுக்கு ஏற்றவாறு மக்களை "பதப்படுத்தி" வைக்கும் ஏகாதிபத்திய அடிமை அரசுகள் இங்கிருக்கின்றன என்பதுவும் இந்த அணுமின்னுலை நிர்மாணங்கள் இன்று நம் நாடுகளை நோக்கி நகர்த்தப்படும் காரணங்களில் உள்ளடங்குகின்றன.
இதில் புதிய அணுமின்னுலைகளை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கு நாடுகள் நிர்மாணிக்கவில்லை என்பது இங்கு ஒரு குறிப்பு. ஆனால் அதே பழைய தொழில் நுட்பத்தைக் கொண்டு இந்தியாவெங்கும் 36 அணு உலைகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்துக்கு இந்திய அரசு மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் வாரியிறைத்திருக்கின்றது.


எங்கேயாவது மக்களுக்கு மலிவு விலையில் தடையின்றிய மின்சாரம் வழங்குவதற்கு அணுமின் உற்பத்தியே பொருத்தமானது என யாராவது கூறினால் அதனை புரிந்து கொள்வது எவ்வாறெனில், மலிவு விலையில் தடையின்றிய மின்சாரம் பன்னாட்டு உள்நாட்டு கொள்ளை முதலாளிகளின் தடையின்றிய கொழுத்த இலாப உற்பத்திக்காக சூழல் மாசடைதல் கதிர்வீச்சு போன்றவற்றுக்கு விலைகொடுக்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கல்லறை என வாசிக்கவும்.


நாளை அணுக்கழிவுகள், விச இரசாயனக் கழிவுகள் மருத்துவக்கழிவுகளை எங்களது முற்றத்திலேயே வெட்டிப் புதைக்கும் ஒப்பந்தங்களில் எங்கள் நாட்டு எடுபிடி அரசுகள் கையொப்பமிடும் காலம் வரும்வரை நாங்கள் கைகட்டி நிற்கப் போகின்றோமா?
இலாபவெறி என்றும் மனிதர்களை பொருட்படுத்துவதேயில்லை.மக்களது உழைப்பை உறிஞ்சுவதற்கு மக்களைத் தயார் படுத்துவதைத் தவிர மனிதர்களுக்கு வேறு மதிப்பு தரப்படுவதில்லை. இவ்வாறானவர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் பயன்பாடாவது, இலாபவெறிக்கும் மூலதனங்களைக் கொள்ளையிடும் போர்களுக்குமே என்பது இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் போடப்பட்ட அணுக்குண்டுகள் விளைத்த அழிவுகள் சாட்சி.


விஞ்ஞானம் போருக்கும் போட்டிக்கும் மூலதனக் கொள்ளைக்கும் இலாபத்துக்கும் என்றில்லாமல், மக்களுக்கு நன்மையளிக்கும் பயன்பாட்டைப் பெற்று உறுதிப்படுத்தப்படும் ஜனநாயக சமூகத்தின் கைகளில் சேரும்வரை, விஞ்ஞானத்தைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் அழிவுச் சக்திகள் நிர்மாணிப்பவை எவையும் மக்களை வஞ்சிப்பவையாகவே இருக்கும்.


சென்னையில் கல்பாக்க அணுமின்னிலையம் மக்கள் வாழும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது மட்டுமல்லாமல் உலகின் மிக ஆபத்தான அணுவுலைகளில் ஒன்றாக இருக்கின்றது. அணுவுலையின் வெப்பவிருத்தியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உபயோகமாகும் குளிர்விக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அற்ற அணுவுலையாக இது இருக்கின்ற வேளையில், இந்த கூடங்குளம் அணு மின்னுலை கூட மக்கள் செறிந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு அந்த அணுவுலையைக் குளிர்விக்கும் தண்ணீரை (கதிர்வீச்சுடைய) நாளாந்தம் வருடம் முழுதும் தொடர்ச்சியாக கடலில் பாய்ச்சுவார்கள். அந்த மாசடைந்த நீர் கடல்வாழ் உயிரினங்களான மீன்களையும் தாவரங்களையும் நேரடியாகப் பாதிக்கும்.
அதேவேளை அந்த உணவுச் சங்கிலியில் இருக்கும்,அவற்றை உட்கொள்கின்ற உயிரிகள் முதல் மனித சந்ததிகளை அதே சம கடற்பரப்பில் அடுத்த கரையில் இருக்கும் இலங்கையினைப் பாதிக்கும் என்பதனை இலங்கை அரசு கவனத்தில் எடுக்கப்போவதில்லை.


இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம் சுனாமி எரிமலைக் குழம்புகள் போன்றவை ஏற்படக் கூடிய புவியியல் சாத்தியம் கொண்ட இடமாக கூடங்குளத்தை பூகோள விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.


இவற்றுக்கெல்லாம் பாதுகாப்பாக கூடங்குளம் இல்லையே!


இந்தக் கூடங்குளம் மட்டுமல்ல இன்னும் பலவித தீங்குகள் பற்றி அக்கறைப்பட எங்கள் சொந்த அரசுகளை நம்பியிருக்க முடியாது.


புறப்படுவோம்! போராட்டம் எமது கைகளில்!


வீதிகளை நாங்கள் அணிவகுத்து நிறைத்தாலொழிய எமது விதிகளை வேறு யாரும் இயக்கும் நிலையிலிருந்து மீள முடியாது.

போராட்டம் இதழ் 01