இசைப்பிரியா பிணம் தின்னும் கழுகளால் சிதைக்கப்பட்டாள். பலநாள் தூக்கமின்றி பசியாலும், பயத்தாலும் பதைதைத்து வந்தவளை இலங்கையின் இனவெறி இராணுவம் இரத்தம் குடித்து கொலை செய்திருக்கிறது. நிற்பதற்கு கூட முடியாமல் நிலைதடுமாறி வந்தவளை கட்டி வைத்து அந்த கயவர்கள் கதை முடித்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என எத்தனையோ ஆயிரம் தமிழ்மக்கள் புதைந்த அந்த கடற்கரை மண்ணில் கானம் பல இசைத்த அந்த பாட்டுக்குயிலின் கடைசிமூச்சை பறித்திருக்கிறார்கள்.
சேனநாயக்கா முதல் ராஜபக்ச வரை அத்தனை ஆட்சியாளர்களும் அகிம்சை, பெளத்தம் என்று சொல்லிக் கொண்டு கொலையாட்சி செய்கின்றனர். இவர்களின் கொலைகளிற்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம்? எப்படி வைக்கப் போகிறோம்? அகிம்சைவழியிலும், ஆயுத வழியிலும் போராடி தோற்றுப்போன தமிழ்மக்கள் எவ்வகையில் தமது மொழி உரிமைகளை, அரசியல் பொருளாதார உரிமைகளை வெல்ல முடியும்? இராணுவபலத்துடன் சர்வாதிகார ஆட்சி செய்யும் இலங்கை அரசை எப்படி எதிர்த்து போராட வேண்டும்.
பொன்னம்பலம் இராமநாதன் முதல் சம்பந்தர், விக்கினேஸ்வரன் வரை மக்களின் பிரச்சனைகளை பாவித்து பதவிகளை பெற்றுக் கொள்கிறார்கள். இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மோசமாகிய போது சிங்கள பேரினவாதிகளால் சிங்கள - தமிழ் உறவுகள் சீர்குலைக்கப்பட்டு சிங்கள பேரினவாதம் பரப்பப்பட்டது. பிரித்தானிய காலனித்துவவாதிகளின் சுரண்டலால் வறுமைக்குள்ளாக்கப்பட்ட சிங்கள மக்களிடம் தமது நியாயங்களை எடுத்து சொல்லாமல் சுரண்டும் பிரித்தானியரிடம் நீதி கேட்டனர் தமிழ்தலைமைகள். சிங்களத்தலைமைகளிற்கு கொம்பு சீவி விடுவதே பிரித்தானியர்கள் தான் என்பது தமிழ்தலைமைகளிற்கு தெரியாத விடயமல்ல. அவர்களது வலதுசாரி வர்க்கச்சார்பு மக்களை புறந்தள்ளி எஜமானர்களின் காலில் விழ வைத்தது.
இதையே தான் இன்றும் தமிழர்களின் தனிப்பெரும்கட்சி என்று சொல்லும் தமிழ்கூட்டமைப்பும் செய்கிறது. வன்னிமக்களை கொலை செய்த, இசைப்பிரியா போன்ற எண்னற்ற பெண்களை பாலியல்வன்முறை செய்த இலங்கை இராணுவத்தின் தலைமைத்தளபதி சரத் பொன்சேகாவுடன் சம்பந்தன் தேர்தல் கூட்டணி அமைத்து கட்டித்தழுவினார். இலங்கையின் இனப்படுகொலைக்கு இந்தியா உதவி செய்தது என்பது எவருக்கும் தெரியாத விடயமல்ல. இலங்கை அரசு தமிழ்மக்களை கொல்ல உதவி செய்ததற்காக இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட மக்களின் குருதி உறையும் முன்னரே கொலைகாரன் மன்மோகன்சிங்கை வடக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார் "தமிழர்களின் முதலமைச்சர் " விக்கினேஸ்வரன்.
இலங்கைத்தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இந்த சர்வதேசத்திற்கு வீடியோ ஆதாரம் தான் வேண்டுமா? ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் எப்படி காணாமல் போயினர்? தறி கெட்டு ஓடும் மாடுகளை வண்டிக்காரர் இடைக்கிடையே நுகத்தடியை இழுத்து பாதைக்கு வரப்பண்ணுவது போல மேற்குநாடுகளிற்கு எதிரான நாடுகளுடன் உறவாடும் இலங்கை அரசை தங்களிடம் பணிய வைப்பதற்காக மேற்குநாடுகள் வைத்திருக்கும் நுகத்தடிகள் தான் இந்த விடீயோக்கள்.
இசைப்பிரியாவின் ஆடையற்ற தோற்றத்தை, எம் சகோதரியின் அவலத்தை, படுகொலை செய்யப்பட்ட நம் பெண்ணின் உடலை பகிரங்கமாக்கியது மனித நாகரிகத்திற்கு ஒவ்வாத செயல். இசைப்பிரியாவின் குடும்பத்தவர்கள் இக்காட்சிகளை காணும் போது எப்படி துடிப்பார்கள்? உடையற்ற அவளின் உடலை காணும் போது எப்படி கலங்குவார்கள். தங்களது லாபங்களிற்காக எம் பெண்களின் உடல்களை காட்சிப்படுத்துவதை கண்டிப்போம்.
எழுபதுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியில் பங்கு கொண்டதால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கதிர்காமம் மன்னம்பெரி முதல் இசைப்பிரியா வரை நம் பெண்களிற்கு இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் இணைந்து போராடும் போதே நீதி கிடைக்கும். இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்த நாடுகளையும் அன்று பகை முடிப்போம்.