உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.
இந்த மார்க்சியம் புதிய கொள்கையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முன், தனக்கு முந்தைய கோட்பாடுகளை விமர்சன ரீதியாக பகுத்தாராய்ந்தது மட்டுமின்றி, சமூகத்தில் இருந்தே தன்னை புதிதாக உருவாக்கிக் கொண்டது. மார்கஸ் கூறிய போல் '....நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத் தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்." என்றார். மனித கற்பனைகளில் இருந்தல்ல, சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளில் இருந்து உருவான தத்துவம் தான் மார்க்சியம்.
இந்த மார்க்சியம் இன்று ஒரு சமூக விஞ்ஞானமாக, அனைத்தும் தளுவிய உண்மையாக இருப்பதால் மட்டும், உலகை மாற்றிவிட முடியாது. மனித வாழ்வின் முரண்களுடன், அதன் நடைமுறை போராட்டத்துடன் பின்னிப் பினைந்ததாக மார்க்சியம் இருப்பதால் மாற்றத்தைக் கோருகின்றது. சமூகம் விரும்பும் அதன் சொந்த மாற்றத்துடன் ஒருங்கினைந்து மார்க்சியம் இயங்குவதால், உலகை மாற்றிவிட போராடுகின்றது.
இந்த வகையில் அதன் சொந்த நடைமுறையுடன் இணைத்து கொள்ளாத மார்க்சியமும் சரி, சமூக இயக்கத்தில் இருந்து விலகி நிற்கும் கோட்பாடுகளும் சரி, வரட்டுத்தனமானதாகவே இருக்கும். மார்க்சியம் தனித்தல்ல, சமூகத்துடன் இணைந்தே பயணிக்க முடியும்.
இந்த மார்க்சியத்தைக் நாம் கற்றுக்கொள்ளும் போது, லெனின் கூறியது போல் 'அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் "கற்கவும், புரிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனின் "இது பொதுவாக மார்க்சியத்தை எளிமைப்படுத்துவதிலும், கொச்சைப்படுத்துவதிலும் முடியும். இது வறட்டுக் கோட்பாட்டுவதிகளை தயாரிக்கின்றது. மறுபக்கத்தில எமாற்றத்தை தோற்றுவிக்கின்றது" என்றார் லெனின். மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்தி விடக் கூடாது.
வாழ்வில் எளிமையான உண்மைகள், எளிமையாக தீர்க்கப்பட முடியாத வண்ணம் சிக்கலானவை. அது முழு மனித குலத்துடன் பின்னிப்பினைந்ததாக காணப்படுகின்றது. சமூக ரீதியான முரண்பாடுகள், முழு மனித வாழ்வை மாற்றாமல் மாற்றிவிட முடியாத வண்ணம் முழுமையுடன் இணைந்து ஒன்றுடன் ஓன்று தொடர்புபட்டு இயங்குகின்றது. இதைத்தான் மார்க்சியம் முழுமையில் பேசுகின்றது. மனித வாழ்வின் சிக்காலனதும், முழுமையானதுமான கூறுகளை, அதன் காரண காரியங்களுடன் முரணற்றவகையில் ஒருங்கினைந்த வண்ணம் விளக்குவது தான் மார்க்சியம்.
இதனால் மார்க்சியத்தை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டு விட முடியாது. ஓரே தரத்தில், ஓரே மூச்சில் மார்க்சியத்தை கற்றுவிட முடியாது. மனித வாழ்வுடன், போராட்டத்துடன் ஒருங்கிணைந்து தான் கற்க முடியும். மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருப்பதால், மார்க்சியம் அதையொட்டி தன்னை மேலும் மேலும் வளர்ந்துக் கொண்டு செல்லுகின்றது. நாம் அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும். எப்போது மாற்றத்துடனும், போராட்டத்துடனும் கற்பதை நிறுத்துகின்றோமோ, அப்போது மார்க்சியம் வரட்டு சூத்திரமாகிவிடும். மார்க்சியத்தை மிக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் போது, அதை புரிந்து கொள்ள முடியாத அவநம்பிக்கையை உருவாக்கின்றது. மார்க்சியம் முழுமை தளுவிய முரணற்ற தத்துவமாக இருப்பதால் தான், அனைவரும் இலகுவாக புரிந்துகொள்வதற்கு நடைமுறையுடன் கூடிய தொடர்ச்சியான கற்றல் அவசியமானது.
மார்க்சியம் உருப்போட்டு ஒப்பிப்பதோ, முன் கூட்டியே தயாரிக்கபட்ட ஒன்றோ அல்ல. மார்க்சியதை சமுதாய வளர்ச்சியில், சமூக இயக்கத்தில் வைத்து ஆராயவும் கற்கவும் வேண்டும். ஆக மார்க்சியத்தை எளிமைப்படுத்தி கற்கவும் கூடாது, விளங்கிக் கொள்ளவும் கூடாது. இந்த எச்சரிக்கையுடன் நாம் மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்சியத்தை மனப்பாடம் செய்வது, புத்தக படிப்பாக மாற்றுவது, வெறும் கற்கையாக நிறுத்திக் கொள்வது, அதை மேலெழுந்தவாரியாக எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது, மார்க்சியத்தை கற்றுவிட்டதாக கருதுவது.... இவை எல்லாம் மார்க்சியத்தை மறுக்கும் எதிர்மறைக் கூறுகளாகவே வளர்ச்சி பெறுகின்றது. இதனால் இவை சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட "மார்க்சியமாக", அதுவே வரட்டுவாதமாகவும், அவநம்பிகைவாதமாகவும் வெளிப்படுகின்றது.
மனிதனின் அன்றாட வாழ்வியல் கூறுகளுடன், போராட்ட கூறுகளுடன் மார்க்சியம் தன்னை ஒரு உட்கூறாக இணைத்துக் கொள்ளாத, வெறும் கோட்பாடாக மார்க்சியத்தை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொள்ளவும் கூடாது.
மார்க்சியத்தின் பணி என்பது மனித வாழ்வியலுக்கு புரட்சிகரமாக வழிகாட்டுவது தான். மக்கள் தான் வரலாற்றை உருவக்குபவர்கள், அதற்கு உதவுவது தான் மார்க்சியம். இதற்கு வெளியில் மார்க்சியத்தை விளங்கிக் கொள்ளவும், விளக்கவும் கூடாது. மார்க்ஸ் "லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்" என்ற நூலில் கூறியது போல் "மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்." என்றார்.
மார்க்ஸ் செய்ய விரும்பியது, அவர்கள் விருப்பப்படி உருவாக்க உதவுவதுதான். இந்த வகையில் மார்க்சியம் மக்களின் விருப்பதிற்கு எற்ப, தாங்கள் தேர்தெடுக்கும் சூழ்நிலைமைக்கு எற்ப, மாற்றி அமைக்கும் வண்ணம் உதவுவதைத் தாண்டி மார்க்சியத்தை புரிந்து கொள்ளக்கூடாது. இதைத்தான் மார்க்சியம் செய்யக் கோருகின்றது. இந்த வகையில் மார்க்சியம் மக்களின் வாழ்வுடன் பின்னிப்பினைந்த ஒன்றாக, சமூக விஞ்ஞானமாக இருப்பதன் மூலம் புரட்சிகரமாக மக்களின் சொந்த வரலாற்றுக்கு வழிகாட்டுகின்றது.
எங்கெல்ஸ் கூறியது போல் "வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ்." ஆக வேறு எந்த தத்துவத்தைக் காட்டினாலும் அதிகமாக மனிதகுலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற மாபெரும் தத்துவமாக மார்க்சியம் திகழ்கின்றது. மார்க்சியத்தைக் கடந்து யாரும் புதிய உலகைப் படைக்க முடியாது. மனித வாழ்வின் எல்லா முரண் கூறுகளும், மார்க்சியத்தின எளிமையான பகுதிகளானவை. மார்க்சியம் மனித வாழ்வில் ஒருங்கினைந்த விதிகளை பற்றிய ஒரு முழுமையான முரணற்ற தத்ததுவமாகும்.
இந்த மார்க்சியம் என்ன சொல்லுகின்றது. "எல்லாவற்றையும் சந்தேகப்படு" என்கின்றது. இது மார்க்ஸ்க்கு பிடித்த வரியும் கூட. சந்தேகப்படுவதன் மூலம் தான், கேள்வியைக் கேட்பதன் மூலம் தான், மனிதன் சுயமாக சிந்திக்கவும், சுதந்திரமாக செயற்படவும் முடியும். அதற்கான மனித ஆற்றலையும் கொடுகின்றது.
மனித எண்ணங்கள், ஆற்றல்களும் உலகம் பற்றியவை. மாhக்ஸ் கூறியது போல் 'உலகாதாயத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்." என்றார். மனித எண்ணம் சிந்தனை உலகம் பற்றியது. இவை எந்த ஒரு தத்துவக் கண்ணோட்டம் இன்றி பிறப்பதில்லை. ஒரு உலகக் கண்ணோட்டமில்லாத ஒரு நபரையும் கூட, சமூகத்தில் காணமுடியாது. இது தான் உண்மை. எண்ணம் என்பது கற்பனையானதல்ல. சமூதாயத்தில் வாழும் ஒருவர் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளைக் காண்கிறார்.
இதன் மூலம் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டி, தனக்கென்று சில கருத்துக்கள் உருவாக்குகின்றார். அது மட்டுமல்ல தன்னை சுற்றிய இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் கூட அவருக்கு கருத்துகள் உருவாகின்றது. இதே போல் உலகம் எங்கிருந்து எப்படி தோன்றியது. மனித இனம் தோன்றியது எப்படி? இறப்பிற்கு பின் என்ன நடக்கும்? மகிழ்ச்சி, துன்பம் என்றால் என்ன? ஏன் தோன்றகின்றது. வாழ்க்கை என்றால் என்ன? இப்படி பற்பல கேள்விகள், சந்தேகங்களுடன் சிந்திக்கும் போதே, அவரை அறியாமலேயே தத்துவம் சார்ந்து தான் சிந்திக்கிறார்.
இப்படி ஒருவரின் சிந்தனை, கருத்து தத்துவயியல் சாhந்தாகவே இருக்கும். ஒருவரின் வாழ்கையை ஒட்டியதாகவே, புரிதலுக்கு உட்பட்டதாக இது வெளிப்படும். அனைவரும் உலகம் பற்றிய ஒரு தத்துவத்தைக் கடந்து வாழ்வதில்லை. தன்னை அறியாமல் தத்துவம் சார்ந்து மனிதன் வாழத்தொடங்கி விடுகின்றான். மார்க்சிய தத்துவம் கூட இதில் இருந்து விதிவிலக்கல்ல. மாறாக மனித வாழ்வுடன் பின்னிப்பினைந்ததுள்ளது. சாதரணமாக எற்படும் சந்தேகங்களும், கேள்விகளும், முரண்பட்ட தத்துவ உலகில் இருந்து தெளிவை உருவாகின்றது. இந்த வகையில் மார்க்சியம் முரணற்ற வகையில், உலகை வியாக்கியானம் செய்வதன் மூலம் மாற்றி அமைக்கவும் கோருகின்றது. மார்க்ஸ் வரியில் சொன்னால் "உன் பணி உலகை வியாக்கியானம் செய்வதன்று - அதனை மாற்றியமைப்பது" தான் என்பதை வலியுறுத்துகின்றார்.
மனித வாழ்வை மாற்றக் கூடிய, அந்த செயலுக்குரிய அனைத்தும் தளுவிய உண்மையை, ஒரு தத்துவமாக மார்க்சியம் எப்படி தன்ளுள் வரிந்து கொண்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.