நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .
அரசியல் தொடர்பாக கதைக்கும் முன் தங்கள் இளமைக்காலம், கல்வி நடவடிக்கை குறித்து சற்று கூறுங்கள்?
ஊர்காவற்துறையில் இருக்கும் மெலிஞ்சிமுனை என்பதே எனது சொந்த இடம். கடற்தொழிலே எமது வாழ்வாதாரம். வெள்ளாளர் சாதியை சேர்ந்தவர்களே தமிழ் சமூகத்தில் ஆதிக்கத்தை கொண்டிருந்தனர். மீன்பிடிச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், நாம் சிறு வயது முதலே ஒடுக்குமுறைகளுக்கு ஆளானோம். அவ் ஒடுக்குமுறை அனுபவம் தான் அரசியலில் என்னை ஈடுபாடு கொள்ள வைத்தது .
இடதுசாரி அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது எவ்வாறு?
எனது தந்தையார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர். 1967ஆம் ஆண்டளவில் தோழர் ரோகன விஐவீர யாழ்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தார். 71 கிளர்ச்சியின் பின் அந்த தோழர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிங்கள தோழர், தோழியர் அவர்களை பார்க்க வந்து சென்றனர். அதன் பின் நான் சிறுவனாக இருந்தாலும் இளைஞராகவிருந்த எனது தந்தையார் ஆயுத போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக எனக்கு நினைவிருக்கின்றது.
அந்த காலபகுதியில் பொலிஸ் உட்பட அரச சேவைகளில் இருந்தவர்கள் எல்லாம் ஆதிக்க சாதியினரான வேளாளர் ஆவார்கள். தமிழ் தலைவர்கள் அரசாங்கத்துடன் ஒத்து போனவர்களாகவே இருந்தனர். அவர்கள் அரசியல் இயக்கங்களை அழித்திட ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதன் காரணமாக ஏனைய சாதியினர் மத்தியில் தமிழ் வெள்ளாள சாதியினருக்கு எதிரான அலை தோன்றியது. அதேவேளை, தமிழ் தேசியவாத போராளிகள் மீதான அடக்குமுறைகள் இடம்பெற்றன.
தமிழ் போராட்ட குழுக்கள் வளர்ந்து வந்த அக்காலத்தில் எனது தந்தையார் மீனவராக இருந்த காரணத்தினால் அவர்கள் இந்தியாவிற்கு சென்று வர உதவினார். அப்போது போது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த சிலர் ஒரு அறையில் சில பொதிகளை வைத்து பூட்டி சென்றனர். அந்த பொதிகளில் என்ன இருக்கின்றது என அறிய எனக்கு ஆவலாய் இருந்தது. யாருக்கும் தெரியாமல் அந்த பொதிகளை திறந்து பார்த்தன். பொதிகள் முழுவதும் புத்தகங்களே இருந்தன. ஒரு பொதி முழுவதும் மார்க்சிம் கோர்க்கியின் மொழி பெயர்ப்பு நூல்கள் இருந்தன. அந்த புத்தக பொதிகள் சில மாதங்கள் எங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்தன. அந்த கால பகுதியில் பெரும்பாலான புத்தகங்களை வாசித்தேன். 'தாய்' புத்தகத்தை பல தடவைகள் வாசித்தேன். இடதுசாரி அரசியல் பண்பாடு எனக்குள் ஊடுறுவியது அவ்வாறு தான்.
ஆயுத போராட்ட குழுக்களில் இவ்வாறு இடதுசாரிய நூல்களை வாசிக்க ஆர்வம் காட்டிய குழுவினர் யாரென்று நினைவிருக்கின்றதா?
அவர்கள் புளோட் இயக்கத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அவர்கள் எனது தந்தையாருடன் எங்கள் வீட்டில் விவாதங்களில் ஈடுபடுவதை கேட்டிருக்கின்றேன். அந்த காலபகுதியில் கியுபா, வியட்னாம் குறித்து கதைப்பதை கேட்டிருக்கின்றேன்.
அப்படியிருந்தும் நீங்கள் ஆயுத போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டது எவ்வாறு?
நான் ஆயுத போராட்ட இயக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் மாணவர் அமைப்பில் சிறு காலம் இயங்கியுள்ளேன். நான் கல்வி கற்ற பாடசாலையான புனித அந்தோனியார் கல்லூரியில் சாதி காரணமாக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டோம். அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் பெரும்பாலும் வேளாள சாதியை சேர்ந்தவர்கள். எம்மை பார்த்து நீங்கள் கீழ் சாதியை சேர்ந்தவர்கள் ஏன் பாடசாலைக்கு வருகின்றீர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டியது தானே என்று கேட்பார். இவை என்னை அதிகம் பாதித்தது. பாடசாலையில் இதற்கு எதிரான மாணவர்கள் பலருடன் ஆசிரியர்களுக்கு எதிராக செயற்பட்டோம்.
இதன் போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மாணவர் அமைப்பான GUESபு உடன் தொடர்பு ஏற்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் ஈழ புரட்சி அமைப்பில் (EROS) இருந்து பிரிந்து உருவான அமைப்பு. அந்த இயக்கத்துடன் இணைந்த செயற்பட்ட எனது பாடசாலை மாணவர்களில் நான் தான் சிறிய வயதுடையவன். அதன் பிறகு ஆசிரியர்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தோம். தற்போது அந்த செயற்பாடுகள் விமர்சிக்கப்பட வேண்டியவையாக தென்படக்கூடும். எனினும் எம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக நாம் ஏதேனும் செய்தாக வேண்டிய நிலையிலிருந்தோம். அதற்கு பின்னர் ஆசிரியர்கள் எம்மை ஒடுக்கு முன் சற்று சிந்திக்க ஆரம்பித்தார்கள். அந்த காலப்பகுதியை என் வாழ்க்கையின் சிறந்த காலப்பகுதி என நினைக்கின்றேன். நான் நிறைய புத்தகங்களை வாசித்தேன். சோவியத் நூல்களுடன் கியூபா குறித்தும் வாசித்தேன். குறிப்பாக கேஸ்ட்ரோவின் நீதிமன்ற பிரகடனம் உள்ளடங்கிய "வரலாறு எம்மை விடுவிக்கும்" என்ற நூல் எனக்கு உத்வேகத்தை அளித்தது.
அந்த காலப்பகுதியில் வடக்கில் இடதுசாரிகளின் அரசியல் செயற்பாடுகள் இருக்கவில்லையா?
அந்த காலப்பகுதயில் யாழ்பாணத்தில் இடதுசாரி அரசியல் தான் முன்னணியில் இருந்தது. பிரதான அரசியல் போக்காகவும் இடதுசாரியமே இருந்தது. ஆனால் அவர்களின் அரசியல் பிழை என்பதுவும், எங்கு பிழை இருந்தது என்பதையும் இன்று பிற்காலத்தில் தான் நான் அறிந்து கொண்டேன். எனினும் அதன் மூலம் இடதுசாரிய கருத்தியல் முன்னெடுக்கப்பட்டு ஓரளவுக்கேனும் முற்போக்கான தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் என் போன்றவர்களுக்கு மார்க்சியம் லெனினியம் குறித்து தெரிய வந்தது.
விடுதலை புலிகள் போன்ற தேசியவாத அமைப்புக்கள் பலமற்ற சிறுபான்மையினராகவே அன்று இருந்தனர். 80களில் இந்நிலைமை காணப்பட்டாலும், 86 கால பகுதியில் இயக்கங்களிடையே மோதல்கள் ஆரம்பித்தன. 86 ஏப்ரல் மாதத்தில் விடுதலை புலிகள், டெலோ அமைப்பின் செயற்பாட்டார்களை கொலை செய்தார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்ததை நான் என் இரு கண்களினாலும் கண்டிருக்கின்றேன். யாழ்ப்பாண தமிழ் சமூகம் இதனை அனுமதிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. வெற்றி பெறும் தரப்பிற்கு ஆதரவை வழங்கிடவே காத்திருந்தார்கள்.
அந்த காலப்பகுதியில் வாசிப்புக்கள் எனக்கு ஓரளவுக்கு அரசியல் அறிவை கொடுத்திருந்தது. நான் என்னை அறிவாளியாகவே நினைத்து கொண்டேன். 'தாய்' நாவலில் வரும் பாவேலாகவே என்னை கற்பனை செய்து கொண்டேன். ஆனால் உண்மையில் நடப்பவற்றை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஆற்றல் இருக்கவில்லை. அந்த காலபகுதியில் நோர்வேயின் உதவி திட்டம் ஒன்றின் மூலம் சீனோர் எனும் அமைப்பு கடற்தொழிலாளர் மத்தியில் செயலாற்றியது. அதன் மூலம் எனது தந்தையின் உறவினார்கள் நோர்வே சென்றார்கள். எனது தந்தையார் அந்த கால பகுதியில் நான் ஆயுத குழுக்களுடன் இணைந்து விடுவேன் என்ற அச்சத்துடனே இருந்தார். அதன் காரணமாக என்னையும் நோர்வே அனுப்பி விட்டார்.
நோர்வே சென்று என்ன செய்தீர்கள்?
அங்கு நான் கல்வி பயின்ற அதேவேளை, இடதுசாரி அரசியலில் இணைந்து செயற்பட்டேன். உண்மையில் நோர்வேக்கு வந்த பின்னரே அரசியல் தொடர்பான அறிவு கிடைத்தது. 1990 களில் யுத்த காலத்தில் தமிழ் டயஸ்போரா அங்கு வளர்ச்சியடைந்தது. நோர்வே உட்பட மேற்கத்தைய நாடுகள் தமிழ் அகதிகள் தொடர்பில் கவனம் செலுத்தின. அதனுடன் விடுதலை புலிகளின் செயற்பாடும் வளர்ச்சியடைந்தன. தமிழ் டயஸ்போரா மத்தியில் நாம் இடதுசாரி அரசியலை முன்னெடுக்கும் குழுவாக இயங்கினோம். அந்த கால பகுதியில் விடுதலை புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து தனியான இயக்கமாக உருவெடுத்தனர். அதே போன்று புலம்பெயர் தமிழ் சமூகத்தயும் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர் .
விடுதலை புலிகள் மற்றய இயக்கங்களுடன் சேர்ந்து இயங்கியிருந்தார்கள் எனின் வலுமிக்க போராட்டத்தின் மூலம் ஈழத்தை அமைத்திருக்கலாம். ஆனால் அந்த கலந்துரையாடலுக்கு தயாரில்லாத அரசியலையே அவர்கள் முன்னெடுத்தார்கள். ஏராளமானோர்கள் அவர்களினால் கொலை செய்யப்பட்டார்கள். கடைசியில் லட்சக்கணக்கானோர் போரில் கொலை செய்யப்பட்டது மட்டுமே எஞ்சியது.
ஜரோப்பாவில் செயற்படும் போது விடுதலை புலிகளுக்கு எதிராக இடதுசாரிய அரசியலை முன்னெடுப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. தமிழ் மக்களின் ஒரே ஒரு மீட்பர்களாகி விட்ட அமைப்புடன் அரசியல் கருத்தியல் போராட்டத்தை நடத்திடவே நாம் முயற்சி செய்தோம். …
சஞ்சிகைகள் மற்றும் இணையம் மூலம் பல்வேறு வழிகளில் தமிழ் மக்களை தெளிவுபடுத்தி வந்தோம். புலம் பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கள் தாய் நாட்டில் நடக்கும் விடயங்களை அவ்வாறே அறிந்து கொண்டார்கள். ஆனாலும் தேசியவாத இணையத்தளங்களிற்கு மத்தியில் இடதுசாரிய போக்குடைய இணையத்தளங்கள் பெரிதாக இல்லை. "தமிழ் அரங்கம்" எனும் இணையத்தளம் எம் தோழர்களால் நடத்தப்பட்டது.
விடுதலை புலிகளுக்கு பதிலாக இடதுசாரி இயக்கம் ஒன்றினை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்டோம். ஜரோப்பியாவில் அல்லாது இலங்கையில் இடதுசாரி இயக்கமொன்றினை கட்டியெழுப்புவதே எமது முக்கிய நோக்கமாகவிருந்தது.
போராட்டம் மூலம் தமிழீழத்தை அமைப்பதே எமது மக்களில் பெரும்பான்மையினரின் எண்ணமாவிருந்தது. எனினும் அதனை சகோதர இன மக்களின் குறிப்பாக, சிங்கள மக்களின் ஆதவின்றி சாத்தியமாக்கிட முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் விடுதலை புலிகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை . தமிழ் மக்கள் மட்டுமே போதும் என்ற நிலைப்பாட்டுடன் தான் செயற்பட்டனர்.
விடுதலை புலிகள் வலதுசாரி அமைப்பாகும். எனது தோழர்கள் பலர் விடுதலை புலிகளை முற்போக்கு தேசிய சக்தியாக- தவறாக விளங்கிக் கொண்டு உதவிகளை செய்தனர். சில சந்தர்பங்களில் இந்திய மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானவர்களாக புலிகள் நடந்து கொண்டதால் புலிகளை பலர் அவ்வாறு விளங்கி கொண்டனர். ஆனால் விடுதலை புலிகள் பிரேமதாசவுடன் சேர்ந்து என்ன செய்தார்கள்? சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த பிரேமதாசவுடன் ஹோட்டல்களில் நடத்திய பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன? அன்று பலர் அரசியல் மாயைக்குள் சிக்கியிருந்தார்கள். தற்போது அவர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கின்றது.
அன்று நாம் வெளிநாடுகளில் இருந்தவாறு பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் மூலம் அரசியல் போராட்டம் ஒன்றினை நடத்தி சென்றோம். ஆனால் விடுதலை புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை அழிவை நோக்கி கொண்டு சென்றனர். ஆனால் தற்போது நிலைமைகள் வேறு என்பதால் தமிழ் மக்களிடம் முற்போக்கு இயக்கமொன்றிற்கான தேவை முன்பை விட அதிகமாக இருக்கின்றது.
நோர்வே பிரசையான நீங்கள் கட்சி அல்லது அமைப்புகளினூடாக அரசியலில் ஈடுபடுகின்றீர்களா?
நான் நோர்வே உள்ள ஒரு சிறிய மார்க்சிச தொழிலாளர் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றேன். அது நோர்வேயின் 4.5 மில்லியன் மக்களில் 1.5% மக்ககளின் வாக்குகளை தேர்தலில் பெறும் மிக சிறிய கட்சியாகும். ஆனால் பாராளுமன்ற ஆரசியலுக்கு வெளியில் பல போராடங்களை நடத்துகிறது .
யுத்தம் முடிந்த பின் நாட்டிற்கு வந்து அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லையா?
எம்மில் பலர் 1987 தொடக்கம் இலங்கையிலிருக்கும் தமிழ் இடதுசாரிகளை ஒன்றினைத்து அரசியல் இயக்கமொன்றினை உருவாக்கிட முயற்சி செய்தோம். ஆனால் அதற்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதனால் ஜரோப்பிய தோழர்களுடன் இணைந்து 2009 இக்கு பின் ஆரம்பித்த "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" ஊடாக இயங்கி வருகின்றோம். இதற்கிடையில் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து மார்க்சிய கோட்பாட்டுப் போராட்டத்துடன் ஒரு பகுதியினர் வெளியேறி செயற்பட ஆரம்பித்தமை எமக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
ஜே.வி.பி மீது வெளியேறியவர்கள் முன்வைத்த விமர்சனத்தினுள் நாம் தமிழ் மக்கள் தொடர்பாக ஜே.வி.பி மீது முன் வைத்த விமர்சனமும் உள்ளடங்கியிருந்தது. அதன் காரணமாக அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள முயற்சித்தோம்.
ஜரோப்பாவில் முன்னிலை சோசலிச கட்சி தோழர்களுடன் இணைந்து செயற்பட்டோம். தற்போது சமவுரிமை இயக்கத்தில் அரசியல் உடன்பாட்டுடன் செயற்படக் கூடியதாயுள்ளது. "சமவுரிமை இயக்கம்" ஜரோப்பிய தமிழ் மக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களிற்கான இடதுசாரி இயக்கம் சிங்கள மக்களிற்கான இடதுசாரி இயக்கம் என்று ஒன்றில்லை. அனைத்து மக்களின் விடுதலைக்கு போராடும் இயக்கமே இன்று தேவையாக இருக்கின்றது. நாட்டில் ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அப்படியான இடதுசாரி இயக்கமொன்றினை கட்டியெழுப்பிட நாம் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையிலேயே இருக்கின்றோம்.
70களில் யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுப்பட்ட ஜேவிபி யினர் அதன் பின் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னே யாழ்பாணம் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை ஒரு நல்ல விடயமாக பார்க்கின்றீர்களா?
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை மூன்று கட்டங்களாக பிரித்து இனங்காண விரும்புகின்றேன். முதலாவது 1965 தொடக்கம் 1971 வரையிலான காலப்பகுதி. இரண்டாவது 1971 தொடக்கம் 1989 வரையிலான காலப்பகுதி. மூன்றாவது 1994 முதல் தற்போது வரையிலான காலப்பகுதி. முதல் இரண்டு கட்டங்களிலும் அதன் கோட்பாடு, நடைமுறை மீது விமர்சனம் இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான வேலைத்திட்டங்களை ஜே.வி.பி முன்னெடுத்தது. எனினும் 1994 ஆம் ஆண்டிற்கு பின் இனவாத அரசியலையே முன்னெடுத்தது. அதனை இன்று இனவாத கட்சியாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் அதன் உறுப்பினர்கள் அனைவரும் இனவாதிகள் அல்ல. சந்தர்ப்பவாத கட்சி தலைமையால் கட்சி இனவாதம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அரசாங்கத்திற்கு தேவையான வகையில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது.
விடுதலை புலிகளை அழித்த பின், நாடு முழுவதிலும் இடதுசாரி அரசியலை கட்டியெழுப்பலாம் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். எனினும் அது தவறான தந்திரோபயமாகும். யுத்தத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துத் தமிழ் மக்களை கொன்று குவித்த பின், அதனை நியாயப்படுத்தியபடி தமிழ் மக்களிடம் சென்று இடதுசாரி அரசியல் கதைக்க முடியுமா? முழு நாட்டையும் உள்ளடக்கிய இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்ப தமிழ் மக்கள் ஜேவிபிக்கு எப்படி உதவுவார்கள்?
ஜேவிபி யினர் யாழ்ப்பாணம் சென்று அரசியல் செய்கின்றார்கள் தான். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு அவர்களுக்கு இல்லை. ஜேவிபி சந்தர்ப்பவாதத்தினுள் அகப்பட்டு எமது மக்களை கொலை செய்ய உதவியாகச் செயற்பட்டவர்கள். அதனை மறப்பது எப்படி? மறப்பது கடினம். அந்த விமர்சனம் இன்னும் அப்படியே இருக்கின்றது. ஆகவே ஜேவிபி யாழ்ப்பாணம் சென்று என்ன செய்தாலும், அவர்களால் வர்க்க கட்சியாக முன்நிற்க முடியாது. தமிழ் உழைக்கும் வர்க்கத்தை வென்றெடுக்க முடியாது.
2009 இல் யுத்தம் முடிந்த பின் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து உங்களது அமைப்பு கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன?
2009இன் பின் அரசாங்கம் மும்முரமாக நவதாரளமய பொருளாதாரத்தை நடைமுறைபடுத்த ஆரம்பித்துள்ளது. பொருளாதாரத்திற்கும் மக்கள் அரசியலிற்கும் இடையிலாக முரண்பாடு தோன்றியுள்ளது. 2009-இற்கு முன் யுத்தமும் இனபிரச்சனையும் சமூகத்தில் நிலவிய பிரதான முரண்பாடாக இருந்தன. அது தற்போது முதலாளித்துவத்தின் தேவைக்கும் ஒடுக்கப்படுபவர்களின் தேவைக்கும் இடையிலான முரண்பாடாக மாறிவருகிறது .
நவ தாராளமயத்தின் இரண்டாவது கட்டம் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலே நடைமுறைபடுத்த ஆரம்பிக்கப்பட்டது. எனினும் யுத்தத்தின்; காரணமாக செய்ய முடியாமல் போனதை தற்போது மஹிந்த அரசு செய்கிறது. இவ்வாரசியலின் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களின் வாழ்வாதரம் கொள்ளை அடிக்கப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி போன்ற பிரதேசங்களில் புதிய வளங்களை தேடி கொள்ளையடிப்பதை மகிந்தவே செய்கிறார். முழு சமுகமும் நுகர்விற்கு அடிமையான சமூகமாக மாறிக் கொண்டு வருகிறது.
அதேவேளை போக்குவரத்து, வைத்திசாலை, பாடசாலை போன்ற நலன்புரி சேவைகளிற்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டு கொண்டிருக்கிறன. மறுபுறத்தில் இயற்கை வளங்கள் விற்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நாலாபக்கமும் நிறைந்திருக்கும் கடல் வளம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பிரித்து கொடுக்கப்படுகின்றன. பெரும் ரோலர்கள் மூலம் கடல் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை இலங்கை மீனவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
பொதுவாக வறுமை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அன்றாட வாழ்க்கை செலவு அதிகரித்து சென்றாலும் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. விவசாயிகள், மீனவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திடம் அவற்றிற்கு விடை இல்லை.
பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் பண்பாட்டு உரிமைகள் சிதைக்கப்படுகின்றன. இதற்கு சமாந்திரமாக தமிழ், முஸ்லிம் மக்களை இனவாத ஒடுக்கு முறைக்கு ஆளாக்கும் அமைப்புக்கள் இயக்கப்படுகின்றன. அரசாங்கம் இனவாத அரசியலை முடுக்கி விட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து வருகின்றது.
தற்போது இலங்கை இராணுவம் சிங்கள இராணுவம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. அது அரச படையாகும். இது வரை வடக்கில் தமிழ் மக்களை கொலை செய்த இராணுவம் தற்போது தெற்கிலும் கொலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த இராணுவம் அதிகார வர்க்கத்தின் இராணுவம் என்பதினை கட்டுநாயக்காவில், சிலாபத்தில் அண்மையில் வெலிவேரியாவில் இராணுவம் நடத்திய கொலைகளுடன் அம்பலமாகியுள்ளது.
மக்களின் பட்டினி பிரச்சினை அதிகரித்து கொண்டு செல்கிறது. சிறுவர்களின் மந்த போசனை கூடிக்கொண்டே செல்கிறது. சிறுவர்களும் பெண்களும் பெரும் சமூக ஒடுக்கு முறைக்கு ஆளாகியுள்ளனர். சிறுவர்கள் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன.
இவற்றை உடனடியாக மாற்றிட வேண்டிய காலம் இது. நல்லதொரு சமூகத்தை உருவாக்கிட நாம் சமூகமாக வெற்றியடைய வேண்டும். அந்த இலக்கை அடைய முதலாளித்துவத்தை தோற்கடித்த- உழைக்கும் வர்க்க அரசு அவசியமாகிறது. அதற்காக செயற்பாட்டு திறனுடைய சமூக இயக்கம் ஒன்று தேவை. சிங்கள இனவாதத்திற்கும் தமிழ் குருந்தேசியவாதத்திற்கு மாற்றீடாக அனைத்து ஒடுக்கப்பட்டவர்களிற்காகவும் போராடும் இடதுசாரி இயக்கம் ஒன்று தேவை!
இந்த எமது இலக்கு நோக்கிய பயணத்தில், முன்னிலை சோசலிச கட்சி போன்ற புதிய இடதுசாரி இயக்கம் செயற்பட ஆரம்பித்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மக்களின் நலன்களிற்குமான போராட்டத்தின் தேவை பற்றி கூறினீர்கள். அதற்கு என்ன மாதிரியான இடதுசாரி கட்சி அவசியமென கருதுகின்றீர்கள்?
இந்நாட்டில் முதலாளிவர்க்க நலன்களிற்காக நிறைய கட்சிகள் இருக்கின்றன. குட்டி முதலாளித்துவ கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்கு கட்சி ஒன்று தேவை. அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி தேவை. உழைக்கும் வர்க்கத்திற்கு அதிக பிரச்சனைகள் இருக்கின்றன. பிரச்சனைகளுக்கு காரணம் முதலாளித்துவம் என்பது எமக்கு தெரியும். ஆகவே முதலாளித்துவத்திற்கு எதிராக போராடும் கட்சியே எமக்கு அவசியமாகின்றது.
அதன் வேலைத்திட்டம் எப்படி இருத்தல் வேண்டும்?
அதன் கொள்கை பைபிளை தளுவியதாகவோ ஆன்மீகமாகவோ, பின் நவீனத்துவமாகவோ அல்லது வேறு கொள்கைகளாகவோ இருக்க முடியாது! அதன் கொள்கை மார்க்சிய லெனினிசமாகத் தான் இருத்தல் வேண்டும்! மார்க்சிய - லெனினியமே முதலாளிதுவத்திலிருந்து ஒடுக்கப்படும் மக்களை விடுதலையாக்கும் வழியை முன்வைத்த மார்க்கமாகும். ஆகவே, எமக்கு அடிப்படை தத்துவம் தொடர்பாக சந்தேகம் எதுவுமில்லை. மார்க்சிய-லெனினிய அடிப்படையில் இருந்து தான் எந்த கலந்துரையாடலையும் நடத்திட வேண்டும்.
முன்னிலை சோசலிச கட்சி தோழர்களிடையே ஏற்பட்டிருக்கும் விவாதங்கள் தொடர்பாக அறிந்ததினாலேயே இதனை கூறுகின்றேன். விவாதங்கள் கட்சிக்கு அத்தியாவசியமானதாகும். ஆனாலும் கட்சி வேலைத்திட்டம், அதன் அடிப்படை தொடர்பாக நடைமுறையில் பரீட்சிக்கப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. இடதுசாரிகளின் போராட்ட வரலாறு உள்ளது. இதன் அடிப்படயில் எம் சமூகத்தின் மாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு அவசியமான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
முன்னிலை சோசலிச கட்சிக்குள் நடக்கும் விவாதம் பற்றி ?
முன்னிலை சோசலிச கட்சி தோழர்களுக்கு, ஜேவிபி யிலிருந்து வெளியேறிய பின் அரசியர்ல் திட்ட மாற்றங்கள் குறித்து சிந்திக்க போதுமன கால அவகாசம் கிடைக்கவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனாலும் கோட்பாடு மற்றும் நடைமுறை தொடர்பாக ஒருவருட காலத்திற்கும் அதிகமான கால அனுபவம் அவர்களிற்கிருக்கிறது. எவ்வாறாயினும் உழைக்கும் வர்க்க கட்சியின் கொள்கையாக மார்க்சியமே இருக்க முடியும். விவாதங்கள் நாடாத்துவது தான் அமைப்பின் செயற்பாடு என்பது தவறு. அது மார்க்சிய வழி முறை அல்ல. வேலைகளை முன்னெடுக்கும் நேரத்திலேயே நடைமுறைகளை பரீட்சித்தலும், சுயவிமர்சனம் மூலம் விவாதிப்பதுவுமே நடைமுறையாக இருத்தல் வேண்டும். அரசியல் வேலைத்திட்டம் குறித்தோ, தத்துவ கோட்பாடு குறித்தோ விவாதம் நடத்துவதாயின் அடிப்படை வேலைகளை முன்னெடுத்தவாறே நடத்திட வேண்டும். கட்சியின் முழு வேலைகளையும் நிறுத்திவிட்டு விவாதம் நடத்துவதை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. அது கற்பனாவாத சிந்தனையாகும். வெறும் அரசியல், கோட்பாடு தத்துவங்கள் மூலம் உலகை மாற்றிட முடியாது.
அதனை நடைமுறைபடுத்திடும் ஒர் அரசியல் நடைமுறை வேலை முறை அவசியமானதாகும். வேலைமுறைகளுடாக முரண்பாடுகள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு மீண்டும் வேலைதிட்டம் முன்கொண்டு செல்லப்படல் வேண்டும். வேலைத்திட்டம், அதன் நடைமுறை- அதனூடாக விவாதம், மீண்டும் மெருகேற்றப்பட்ட வேலைத்திட்டம்- மீண்டும் அதன் நடைமுறை, மீண்டும் விவாதம் என்பதுவே அரசியல் போராட்டமாகும்.
எமக்கு ஒரு கொள்கை இருக்கிறது. கோட்பாட்டு அடிப்படை இருக்கிறது. சமூகம் குறித்த தெளிவு இருக்கின்றது. சமூகத்தின் பிரதான முரண்பாடு எது, பிரதானமற்ற முரண்பாடு எதுவென்ற தெளிவு இருக்கின்றது. அதன் அடிப்படையில் நாம் செய்ய வேண்டிய அரசியலே இடதுசாரி அரசியலாகும்.
அதை விடுத்து தோழர்கள், தத்துவம் தொடர்பான தேடலில் - கற்றலில் ஈடுபட, தத்துவம் தொடர்பாக நம்பிக்கை இன்மையே காரணமாகும்.
இவ்வாறு தான் தென்னிந்திய இடதுசாரிகள் தலித்தியம் கற்கவும், ஜரோப்பிய இடதுசாரிகள் பின்நவீனத்துவத்தை கற்கவும் சென்றார்கள். ஆனால் தற்போது ஜரோப்பிய மார்க்சியம் மறுபடியும் அடிப்படையை தேடி செல்கிறது. எமக்கு மார்க்சியம் தேவைப்படுவது உழைக்கும் வர்க்க கட்சியாக இயங்குவதற்கு ஆகும். அது குறித்து விவாதிக்கலாம். ஆனால் அதற்காக அரசியல் வேலைகளை நிறுத்தும் அதிகாரம் ஒரு வர்க்க கட்சிக்கு இல்லை. காரணம் கட்சி மக்களுக்காகவே.
ஆனால் அரசியல் விவாதம் என்பது இடதுசாரி அரசியலில் கோட்பாட்டு பிரச்சனை மற்றும் நெறிபிறழ்வு தொடர்பாக சுமூகமான தீர்மானத்திற்கு வரும் நோக்கில் நடைமுறைபடுத்தப்படும் விடயம் அல்லவா?
நடைமுயற்ற அரசியல் விவாதம் எங்கோ கொண்டு போய் விடும் என்பது தொடர்பாக எனது நோர்வேகிய தாய் கட்சியின் நல்லதொரு அனுபவத்தை கூற முடியும்.
இரண்டாம் உலகயுத்தத்தின் பின் மார்க்சிய கட்சிகள் மேற்கு ஐரோப்பாவில் சீரழிவிற்குள்ளாகின. அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, கோட்பாட்டு திட்டங்கள் ஜரோப்பவில் எழுச்சியடைந்தன. மார்க்சிய லெனினிய கோட்பாடுகள் தொடர்பான விவாதங்கள் பல்கலைக்கழகங்ளில் மட்டுமே இடம்பெற்றன. இன்னிலயில் 60-களின் இறுதியில், ஜரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வீட்சியுடன் மீண்டும் இடதுசாரி அரசியற் தேவை ஏற்பட்டது.
இந்த காலப்பகுதியில் உலகின் ஏனைய பகுதிகளில் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன. மாவோ சீனாவில் புரட்சியை தலைமை தாங்கிகினார், ஹோசிமின் வியட்நாம் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கஸ்ரோவும் சே குவேராவும் கியுபா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். அணுகுண்டிற்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. உலகை மாற்றிட வேண்டும் என்ற கோசம் முன்னிலை பெற்றது.
மார்க்சியம் குறித்த கலந்துரையடல்கள் மீளவும் ஆரம்பித்தன. 1968 இல் பல்கலைக்கழகங்களை பிரதானமான கொண்டு மாணவர் போராட்டங்கள் நடந்தன. மார்க்சிய கட்சிகள் புது உத்வேகம் பெற்றன. எனினும் மாணவர்கள் பெரியவர்கள் ஆனதும் அரசியல் போராட்டங்கள் மந்தமடைந்தன. காரணம் வர்க்க பேதங்களிலே உலக அரசியல் போக்கின் சுபாவம் அமைந்திருக்கின்றது.
1970 இக்கு பின் கல்வி நடவடிக்கையின் போது பின்நவீனத்துவம், ஆன்மீகம், ஆத்மா தொடர்பான கோட்பாடுகள், பெண்ணியம், சூழலியல், பாலின உரிமை மற்றும் வேறு பண்பாடுகள் தொடர்பான விவாதங்கள் அப்போ மேற்கு பல்கலைக்கலகங்களில் இடம் பெற்றன. அவை கட்சிகளின் கோட்பாட்டு விவாதங்களினுள்ளும் கொண்டு வரப்பட்டன.
உதாரணமாக, 70-80 இல் நான் உறுப்பினராக உள்ள கட்சியில், பெண் ஒடுக்கு முறைதான் அடிப்படை முரண்பாடு எனும் நோக்கில் நின்று விவாதிதார்கள். அதேபோன்று, ஜெர்மனில் சூழல்- மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு மிக முக்கிய விவாத தலைப்பாக மார்க்சீச லெனினிய சக்திகள் விவாதித்தனர். அத்துடன் விவாதிப்பதே மிக முக்கிய வேலையாக வரையறுத்தனர். இந்நிலை அப்போது பரவலாக மேற்கு ஐரோப்பா முழுவதும் காணப்பட்டது .
ஆனால், அவர்கள் விவாதம் முடிந்து வெளியே வரும் போது கட்சிகள் சீரழிந்து போயின. அல்லது ஆதிக்க வர்க்கம் சார்ந்த காட்சிகளாக - குட்டி பூர்சுவ சக்திகளாக மாறி இருந்தன .
ஆனால் தற்போது ஜரோப்பியாவில் என்ன நடக்கிறது? கீரீசில் (Greece), இங்கிலாந்தில், ஜேர்மனியில், ஜரோப்பிய ஒன்றியத்தில் நடப்பது என்ன? மக்கள் போராட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால் போராட்டங்களை ஒன்றினைப்பதற்கு அமைப்பு ரீதியாக மத்தியபடுத்துவதற்கு உழைக்கும் வர்க்க கட்சி ஒன்று இல்லை.
இடதுசாரி கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளில், தான் வாழும் சமூகம், உலகம் குறித்து கோட்பாட்டு ரீதியாக தெளிவுபடுத்தும் கொள்கை குறித்து மட்டும் விவாதம் செய்யும் அறிவுஜிவிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றார்கள். பெண்ணிய சிந்தனையாளர்கள், மார்க்சிய அறிவுஜீவிகள் என எல்லா வகையினரும் அக்கட்சிகளில் இருக்கின்றனர். அவர்கள் உலகில் என்ன நடக்கிறது என நிறைய புத்தகங்கள் எழுதுகின்றார்கள். ஆனால் 70-80 களில் நடந்த பாதிப்புக்கள் அப்படியே இருக்கின்றன. மக்களை அவர்களால் அணி திரட்ட முடியவில்லை .
இலங்கையில் பல்வேறு நிலைமைகள் மாறி மாறி வந்தாலும் மார்க்சிய கோட்பாடு சார்ந்த போராட்டமொன்று தொடர்ந்து இடம்பெற்று வந்தது. கோட்பாட்டு ரீதியான- அரசியல் ரீதியான பிழைகள் இருந்தாலும், ஒரு அரசியல் போராட்ட பண்பாடு நம் நாட்டில் நிலவுகிறது. சரி- பிழைகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் தேசியப் போராட்டம் போலவே இரண்டு முறை சமவுடமையை நோக்காக கொண்ட போராட்டங்கள் நடந்துள்ளன. அந்த போராட்ட பண்பாட்டுடன் கூடிய, ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்ட அனுபவம் இலங்கை மக்கள் அனைவருக்கும் உண்டு.
இதன் அடிப்படையில், போருக்குப் பின் மக்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்! அப்படியானால், விவாதத்தில் மட்டும் திளைத் திருக்கும் தோழர்கள், அந்த மக்களை தனியாக போராட விட்டுவிட்டு, மேற்குலக நாடுகளின் மார்க்சியவாதிகள் செய்தது போல் விவாதம் செய்து கொண்டிருக்க போகின்றோமா? அல்லது நடைமுறை அரசியல் செய்ய போகின்றமா என தீர்மானத்திற்கு வர வேண்டும்.
முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையும் அதன் தோழர்களும் இந்நிலைமையை விளங்கி கொள்வார்கள் என நினைக்கின்றோம். வரலாறு எல்லாவற்றிற்கும் தீர்ப்புக்களை வழங்கும். அதனை கருத்தில் கொள்ளாவிடின் வரலாறு எம்மை குப்பை தொட்டியில் தள்ளி விடும். தற்போது இலங்கை தமிழ், முஸ்லிம், சிங்கள ஒடுக்கப்படும் மக்களுக்கு- உழைக்கும் வர்க்கத்திற்கு கட்சி ஒன்று அவசியமாகின்றது. மார்க்சியத்தை விட்டு விலகிய குட்டி முதலாளித்துவவாதிகள் கட்சியை அழித்திட இடமளித்திட முடியாது. ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்.