05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

முக் குரங்காக வாழென்று..!?

ஈழம் முதற்கொண்டு
பிற தேசம் வரையெங்கும்
முக் குரங்காக வாழென்று...
போலிகள் சொல்வதை - நாம்
நிஜமொடு பார்த்திடும் போதினிலே
எழும் முதற் கேள்விகள் மூன்றினை
வாருங்கள் பாருங்கள் தோழர்களே..!


• மனிதர் தனித்தனியாய் மனமுடைந்தேன் மாள்கின்றார்..?
• குடும்பம் தனித்தனியாய் தாமுடைந்தேன் தொலைகின்றார்..?
• இனம் தனித்தனியாய் வலுப் பிரிந்தேன் உழல்கின்றார்..?
நீ..! - உன்
உரிமைகள் எதனையும் எடுப்பது பிழையென்றும்
இராணுவப் படையரின் வதங்களே சரியென்னும்
மனிதரைக் குழப்பிடும் அதிகாரத் தடைகளைப்போட்டு
குடும்பத்தை உடைத்திடும் சுய உழைப்பினை அறுத்து
இனங்களைப் பிரித்திடும் சதிகளை விதைத்து
படைகளும் மதங்களும் இனங்களும் மோதிட...,
இவையே நாட்டு மக்களின் நல்வழி என்றிடும்
சிறிலங்காத் தேசியம் புரியுதா தோழர்களே..!

இவை நம் நாவினால் நக்கிய நஞ்செனும்
பாசிச சிறிலங்கா அரசியல் இவையினால்
தினந்தினம் வாழ்ந்திடச் சாகின்றோம் தோழர்களே..!

இவற்றை அனைவரும் ஏற்றிடச் சொல்லியே
இத்தனை காலமும் மக்களைத் தொலைக்கிது
சிறிலங்கா அரச இயந்திரக் கடிவாளம்...

மறுபுறம் இந்த நஞ்சினில் ஊறிய
அத்தனை சாதிய மத தேசிய வெறியரும்
திரண்டே மக்களை இரையாக்கி இடுகின்றார்
சிறிலங்காப் பாசிச அரசிற்குத் தினந்தினந் தோழர்களே..!

இதிலே தாம் ஊறிய அத்தனை வெறியரும்
தங்களின் சூழ்ச்சிய அரசியல் வேட்டையில்
வெல்லணும் வெல்லுவோம் என்கின்றார் தோழர்களே..!

இவற்றினை எதிர்த்தே நாம்
எழுப்புவோம் கேள்விகள் தோழர்களே..!
இவற்றினை எதிர்த்தே நாம்
இனபேதம் களைந்த உறவாவோம் தோழர்களே..!
இதனூடு தினந்தினம் புரட்சிகள் பூர்த்திடும் தோழர்களே..!
சிறிலங்காப் பாசிசத் தேசியம் தோற்றிடும் தோழர்களே..!

ஆகவே.., ஆகவே...,
எம் முன்னால் இருக்கின்ற தடைகளாம்
முக் குரங்கரை உடைத்துச் சிந்தித்து
போராடும் மனிதராய் போராட்டத் திறனுக்கு
வாருங்கள் வாருங்கள் தோழர்களே..!

- மாணிக்கம்..
11/09/2013

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்