09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...

இன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்காக தங்களை வெற்றிபெறச்செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பும், பொருளாதாரம் அபிவிருத்தி, வேலை வாய்ப்புக்கள், மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கூறுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்காக யானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. இவைகள் என்னதான் கதையளந்தாலும், இவர்கள் கேட்பது வாக்கு. அவர்கள் வீடுகளுக்கு வருவதும் மக்களை சந்திப்பதும் வாக்கு கேட்பதற்குத்தான்.


முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடவிலலை. ஆகவே இம்முறை நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. மிக முக்கியமான விடயம் சம்பந்தமாக உரையாடவே வருகிறோம். தேர்தலைப் பற்றி எங்களுக்கேயான கருத்தொன்று இருக்கிறது. இந்த முதலாளித்துவ தேர்தல் மக்களின் விருப்பத்தை விரித்துரைப்பதான ஒன்றாக இருக்குமென நாங்கள் நம்பவில்லை. பணபலம், குண்டர் பலம், குலம், ஊடகம் போன்ற பல உபாயங்களை பயன்படுத்தி செயற்கையான மக்கள் விருப்பம் உருவாக்கப்டவிருக்கிறது. வாக்களிப்பது எமது கரங்களாக இருந்தாலும், அதற்காக எமது சிந்தனையை வழி நடத்துவது நாங்களல்ல. இப்படியான தேர்தல்களில் இடதுசாரிய இயக்கங்கள் போட்டியிடுவது மாகாண சபை போன்ற நிறுவனங்களுக்குள் நுழைந்துக் கொள்வதற்கோ, சொத்துக்களை குவிப்பதற்கோ அதிகார பலத்திற்கு ஆசைப்பட்டோ அல்ல. முறைக்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு மேடை என்ற ரீதியிலேயேயாகும். முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை தேர்தல் களத்தில் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் விரயமாக்குவதற்கு முதன்மையளிக்கப்போவதில்லை. இந்த நிலைமை குறித்து - இந்த நிலைமையை மாற்றுவது குறித்து கருத்தாடலுக்கே முதன்மையளிக்கிறது.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தத் தயாராகிக் கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் வடக்கிற்கு தேர்தல் வேண்டாம் என்று கூறி ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுத்தன. முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், வடக்கிற்கு தேர்தல் வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. அரசாங்கத்தோடு உறவாடும் இனவாதக் கட்சிகள் தென் மாகாண சபையில் அமர்ந்து, அதன் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு, வடக்கிற்கு மாகாண சபை வேண்டாமென்று கூறுவது அரசியல் மோசடியாகும். நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு உரிமையான ஒன்றை, இன்னொரு பகுதி மக்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் இனவாதமேயாகும். அதனைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவே, வடக்கில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாங்கள் கூறினோம். இதனால், மாகாண சபைகள் மூலமாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென நாங்கள் கருதுவதாக அர்த்தமாகாது.

இதுவரை வடக்கில் நிலவிய அடக்குமுறை நிலைமையை, இராணுவ ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மாகாண சபை அமைவது ஜனநாயகத்திற்கான ஒரு படி என்று யாரேனும் சொல்லக் கூடும். என்றாலும், அரசாங்கம் செலுத்த வேண்டிய கொடுப்பனவாகவே நாங்கள் அதனை கருதுகிறோம்.. மக்களின் எந்த அடிப்படை பிரச்சினையும் மாகாண சபையின் ஊடாக தீர்க்கப்படப் போவதில்லை. ஜனநாயகம் கிடைக்காது. தெற்கின் ஏனைய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாகாண சபைகளின் மூலம் இதனை அறிந்துக் கொள்ள முடியும். தெற்கில் கடித்துச் சுவைத்த அதே கசப்பான பதார்த்தத்தையே வடக்கிற்கும் தரப்போகிறார்கள். மாகாண சபை தேர்தலின் மூலம் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டாது, இந்த மாகான சபைக்கான பிரச்சாரங்களின் ஊடாக இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைப்பது பாரிய அழிவுக்கான ஆரம்பமேயாகும்.

அரசாங்கமும், தமிழர் விடுதலை கூட்டமைப்பும், எதிர்க் கட்சியைச் சார்ந்த அநேகமான கட்சிகளும் இனவாதத்தையே விதைக்கின்றன. தேர்தல் நடக்கும் பகுதிகளில் 'நாம் சிங்களவர்", 'முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரித்துக் கொள்ளல்", 'தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்காக" போன்ற வாசகங்களுடனான பதாதைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் தங்களது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக நல்லாட்சி, ஜனநாயகம் போன்றவற்றை மட்டுமல்ல சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற தனித்துவங்களையும் சேர்த்து ஏலமிடுகிறார்கள். அதன் மூலம் வரப்பிரசாதங்களை பெறப்பார்க்கிறார்கள். இந்த மோசடியில் தொடர்ந்தும் சிக்கிவிடுவோமா என்பதும் பிரச்சினைதான்.

மாகாண சபைகளின் ஊடாக அதிகாரம் பரவலாக்கப்படும், அதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சிலர கூறுகிறார்கள். நவ தாரளமய முதலாளித்துவம் இங்கே செயல்படுகிறது. அது ஒருபோதும் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப்போவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களிடம் அரச அதிகாரத்தை ஒப்படைக்காது. இதனால் ஆட்சியாளரின் கையில் அதிகாரம் அதிகமதிகமாக குவிக்கப்படுவது மட்டுமே நடக்கும். இலாபத்தையும், அதிகாரத்தையுமே நவ தாராளமய முதலாளித்துவம் கேட்கிறது. இவற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாகாண சபைகளைப் போன்றே நாடாளுமன்றமும் ஏனைய நிறுவனங்களும் கண்கட்டி வித்தை காட்டும் இடமாகும். அது ஒடுக்கப்பட்டவரை ஏமாற்றும் ஒரு கருவி மாத்திரமே. அங்கே வடக்கென்றும் கிழக்கென்றும் பேதம் கிடையாது. தேர்தல்களின் மூலம் ஆட்சியாளரின் அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. எங்களது வாழ்க்கையைப் பற்றி தீர்மானிக்கும் அதிகாரத்தை நாங்கள் கனவான்களிடம் ஒப்படைப்பது மட்டுமே நடக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது தலைவிதியை தங்கள் கையில் எடுப்பது குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். கலீல் ஜிப்ரான் என்ற அரேபிய கவிஞர் ஒரு முறை கூறினார், அடுத்த சில வருடங்களுக்கு நாங்கள் யாரிடமிருந்து அடிவாங்க வேண்டுமென்பதை தீர்மானிப்பதே தேர்தல் என்று. அடுத்த சில வருடங்களுக்கு தம்மை ஆளப்போவது முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பிரிவினர் என்பதை தீர்மானிப்பதே தேர்தல் என கார்ல் மாக்ஸ் கூறுகிறார். ஏன் அப்படி நடக்கிறது?

சிங்கள முதலாளித்துவத்திற்குப் பதிலாக தமிழ் முதலாளித்துவத்தின் கைகளுக்கு மாற்றுவதனால் ஜனநாயகம் கிடைக்க மாட்டாது. இவ்வாறாக தேர்தல் பிரச்சாரத்திற்குள் மறைந்து மூட நம்பிக்கைகளை பரப்புவதோடு, இனவாதத்தை விதைப்பதனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள துன்பியல் மேலும் ஆழமாகும், 30 வருட யுத்தத்திற்கு நாங்கள் பலியாகியிருந்தோம். அந்த யுத்தத்திற்கு இனவாத- யுத்தம் விரும்பி ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, சிங்கள-தமிழ்- முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களை இன அடிப்படையில் பிரித்த வடக்கின் இனவாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தேர்தலில் அதே பழைய நாடகமே அரஙகேறுகிறது. எந்த மொழி பேசினாலும், எவ்வகையான கலாச்சார மாற்றங்கள் இருந்தாலும், எல்லாவிதமான ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஒற்றுமையாலேயே அல்லாது விடுதலைக்கான பாதையை பெற்றுக் கொள்ள முடியாது. முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையிலும் நாம், உண்மையான விடுதலைக்கான பாதைக்காகவே முயற்சி செய்கிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு. எல்லா விதமான இனவாதங்களையும் தோற்கடிப்பதற்கு. அதற்காக இடதுசாரியத்தை கட்டியெழுப்ப வேண்டும். மக்களது செயற்பாட்டை வளர்க்க வேண்டும்.

அதற்காக நாங்கள் கருத்தாடல் செய்வோம். அதற்காக செயற்படுவோம். இம்முறை தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தோடு மட்டும் நின்று விடாது, எமது வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றி, எதிர்கால சமுதாயத்தின் தலைவிதி பற்றி பேசுவோம். முன்னிலை சோஷலிஸக் கட்சி அந்த உரையாடலுக்கு தயாராகவே உள்ளது. அதற்காக நாங்கள் மீண்டும் சந்திப்போம்.

முன்னிலை சோஷலிஸ கட்சி

(12/09/2013)


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்