இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம்.
மறுபக்கத்தில் அரசுக்கு எதிராகத் தேர்தலில் பங்கு கொள்வதை பகிஸ்கரிக்கக் கூடாது என்றும், அரசுக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரவேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இதனால் ஜனநாயகத்தை ஏற்படுத்தவும், தமிழ் மக்கள் தங்கள் உரிமையைப் பெறவும், மக்களுக்கு உள்ள விருப்;பத்தை இத் தேர்தல் முறை மூலமும் அவர்கள் உறுதிசெய்ய உதவவேண்டும் என்கின்றனர். வேறு சிலர் தேர்தல் மீது எந்த நிலைப்பாடும் எடுக்காது தேர்தல் அரசியல் செயற்பாட்டையே பகிஸ்கரிக்க வேண்டும் என்றும், இன்னும் சிலர் இது பற்றி மௌனம் சாதிப்பதன் மூலம் பகிஸ்கரிக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். இப்படி இந்த அரசியல் சூழலில் இருந்து அரசியல் ரீதியாக ஒதுங்கி இருக்கக் கோருவதன் மூலம், மக்களின் அவரவர் போக்கில் அவரவர்களுக்கு விருப்பமான தேர்தல் முடிவுகளுக்கு உதவக் கோருகின்றனர். இதன் மூலம் மறைமுகமாக இந்த அமைப்பு முறையை ஆதரிக்கவும் செய்கின்றனர்.
மறைமுகமாக வடக்கு - கிழக்கில் கூட்டமைப்புக்கும், தெற்கில் யூ.என்;.பிக்கும் வாக்களிக்கக் கோருவதாக உள்ளது. இந்த தேர்தல் முறை மூலம் ஜனநாயகத்தைப் பெறவும், இனவொடுக்குமுறையை ஒழித்துவிடலாம் எனவும் கூறுவது ஒரு உண்மையல்ல. உண்மையற்ற இவ் விடையத்தை விளக்கி மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில், வால்பிடித்தல் என்பதானது முதலாளித்துவச் சிந்தனை முறையாகும்.
தேர்தல் என்பது அவ்வப்போது வரும் போகும், ஆயினும் அதனையும் கடந்து மனித இருப்புக்கானதும், வாழ்வுக்கானதுமான மக்கள் போராட்டம் தோதல் ஜனநாயக வடிவுக்கு வெளியில் தொடருகின்றது. வாழ்வு சார்ந்த மனிதப் போராட்டங்கள் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்கள் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வெல்லமுடியும் என்பதால், மக்கள் விரோத முதலாளித்துவ தேர்தல் முறைமை என்பது முற்றாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றது.
இதை விடுத்து அரசுக்கு எதிராக வாக்களிப்பதை முன்னிறுத்தி மக்களிடம் முன்தள்ளுகின்ற நேரடி மற்றும் மறைமுக அரசியல் என்பது முதலாளித்துவ கோட்பாடாகும். இது ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த அரசியல் வழியல்ல.
தேர்தலை ஆளும் வர்க்கம் நடத்த மறுக்கும் போதும், வாக்களிக்கும் உரிமையை மக்களுக்கு மறுக்கும் போதும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை என்ன? தேர்தல் மக்கள் விரோத முறையாக இருந்த போதும், தேர்தலைக் கோரியும், வாக்களிக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடுவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இது முதலாளித்துவ ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் உருவான முறையாகும். இவ்வுரிமைகள் மறுக்கப்படும் போது, இது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாறிவிடுகின்றது. இதன் அர்த்தம் தேர்தலையும், தேர்தல் முறையையும் ஆதரிக்க வேண்டும் என்றோ, அதில் பங்கேற்;க வேண்டும் என்றோ அர்த்தமல்ல. இந்த சூக்குமத்தை உடைத்துச் சொன்னால், ஜனநாயகக் கோரிக்கை என்பது, முதலாளித்துவக் கோரிக்கையேயாகும். அதனால் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கும் வரைதான், பாட்டாளி வர்க்கம் இதனை ஆதரிக்கும்.
பாட்டாளி வர்க்க நலனுக்குப் பயன்படுத்த முடியாத எந்தத் தேர்தலிலும் பங்கு கொள்வதையும் பங்கெடுப்பதையும் பாட்டாளி வர்க்கம் பகிஸ்கரிக்க வேண்டும். தேர்தலில் பங்குகொள்ளாத பகிஸ்கரிப்புக் கூட, தேர்தலில் பங்குகொள்ளும் குறித்த சூழலைச் சார்ந்த தேர்தல் சம்பந்தமான அரசியல்தான். உண்மையில் தேர்தலுக்கு எதிரான எதிர் நடவடிக்கை தான். இதன் அர்த்தம் தேர்தல் சார்ந்த அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதல்ல, தேர்தலில் பங்குகொள்வதையே பகிஸ்கரிக்கின்றோம்;. அதாவது தேர்தல் சார்ந்த அரசியல் செயற்பாட்டை பகிஸ்கரிக்க முடியாது, அதில் பங்குகொள்வதையே நிராகரிக்கின்றோம்.
தேர்தல் பற்றிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும்?
ஜனநாயகக் கோரிக்கையிலான ஜனநாயகப் புரட்சிதான், முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்தைக் கொண்டு வந்தது. சட்டபூர்வமான ஜனநாயகத்தின் விரிவான அரசியல் தன்மைதான், வர்க்கப் போராட்டத்துக்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதா இல்லையா என்பதை குறிப்பாக தீர்மானிக்கின்றது.
ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சி நடைபெறாத நாடுகளில், நாடாளுமன்றத்தைப் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்துவது என்பது எப்போதும் விதிவிலக்காகத்தான் அதில் பங்குகொண்டு பயன்படுத்த முடியும். இதுதான் பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான அரசியல் செயல் தந்திரம்.
தேர்தல் பற்றிய நிலைப்பாடு என்பது வெளிப்படையானது.
1.தேர்தல் அரசியல் செயற்பாட்டில் இருந்து என்றும் ஒதுங்கி இருக்க முடியாது.
2.தேர்தலில் பங்கெடுக்கவும், பங்குபற்றவும் முடியுமா எனின், ஆம் முடியும். அது வர்க்க அரசியல் நிபந்தனைக்கு உட்பட்டது.
இந்த வகையில் அனைத்துப் போராட்ட வடிவங்கள் போலத்தான், தேர்தல் வடிவமும் கூட. இதில் பாட்டாளி வர்க்க நலன் சார்ந்து நாடாளுமன்றத்தைப் புரட்சிக்கு பயன்படுத்துதல் என்பது, ஆயுதப் போராட்டத்தைப் புரட்சிக்கு பயன்படுத்துவது போன்றதுதான். இதற்கு மாறாக ஆயுதப் புரட்சிதான் புரட்சி என்பது எப்படித் தவறான அரசியலோ, அப்படி பாராளுமன்ற பாதையே வர்க்கப் போராட்டப் பாதையாகும் போது தவறானது. மாறாக மக்கள் திரள் போராட்டமே, வர்க்கப் போராட்டப் பாதையாகும். மக்கள் திரள் பாதைக்கு உட்பட்டதுதான் ஆயுதப் புரட்சி முதல் நாடாளுமன்ற வடிவங்கள்; வரையான அனைத்தும்.
வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் திரள் அமைப்புகளின் அரசியல்ரீதியான தேவைதான், போராட்ட செயல்முறைக்கான வடிவங்களைத் தேர்ந்தெடுக்கின்றது. நடைமுறையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வர்க்கக் கட்சி, நாடாளுமன்றத்தில் பங்குகொள்வதன் மூலம் தன் வர்க்கப் போராட்டத்துக்காக அதைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு அரசியல் முடிவை எடுக்கவும், நிராகரிக்கவும் முடியும். கட்சியின் கருநிலை வடிவமாகட்டும்;, பாரிய மக்கள் திரள் கட்சியாகட்டும், இதுவே பொதுவான அரசியல் அடிப்படையாகும்.
இதனை எப்போது, எங்கு, எந்த நிலையில் பயன்படுத்துவது என்பது பொதுவானதில் குறிப்பானதாகும். அப்படிக் குறிப்பான சூழலைப் பொதுவான வர்க்கப் போராட்டத்தில் இருந்து பிரிக்கின்ற போதுதான், தேர்தல் முறை என்பது சந்தர்ப்பவாதத்தையும் திரிபுவாதத்தையும் அரசியலாக்கி விடுகின்றது. அது வர்க்க விடுதலைக்கு குழிபறிக்கின்ற அரசியல் புரட்டுகளாகி விடுகின்றது.
புரட்சிக்கு மக்களைத் தயாரிப்பதற்கான போராட்ட வடிவமும் - போராட்ட முறையுந்தான் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதைத் தீர்மானிக்கும். அதாவது குறிப்பிட்ட காலகட்டத்தில் வர்க்கக் கடமையை நிறைவேற்ற, தேர்தலில் கலந்துகொள்வதும் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதும் அவசியமாயின், அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதான் இதில் உள்ள விடையம். ஆனால் தேர்தலில் சிலாகிக்கப்படும் அரசியலில் இருந்து என்றும் ஒதுங்கி இருக்க முடியாது.
தேர்தலின் உள்ளடக்கம் என்ன?
சிறப்பாக இன்று தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் சந்திக்கின்ற அரசின் இனவொடுக்குமுறைக்கு எதிராக, அரசுக்கு எதிராக, இனரீதியாக வாக்களிக்க வேண்டும் என்ற பொது உளவியல் கண்ணோட்டமே பொதுவாகக் காணப்படுகின்றது. கடந்த 65 வருடமாக மீண்டும் மீண்டும், இன அரசியலாக இதுவே தொடருகின்றது. இப்படியாக அரசின் இனவொடுக்குமுறைதான் இலங்கையின் முழு மக்களையும் இனரீதியாகப் பிரித்து வாக்களிக்க வைக்கின்றது. இதுதான் இலங்கையின் தேர்தல் உள்ளடக்கமாக அரசியலாக இருக்கின்றது. பெரும்பான்மை சிறுபான்மை இனங்களை, இன அடிப்படையில் வாக்குகளைப் போட வைப்பதன் மூலம் இனவாதிகளின் ஆட்சிமுறைமை தொடருகின்றது. இந்த இன தேர்தல் முறையை ஆதரிப்பதன் மூலமும், மௌனம் காப்பதன் மூலமும், இனவாதத்துக்கும் இதன் மூலமான ஏகாதிபத்திய தனத்துக்கும் துணை போவோராக நாம் இருக்க முடியாது.
இந்தத் தேர்தலில் பாட்டாளி வர்க்கமல்லாத எந்தத் தரப்பாவது குறைந்தபட்சம் மிகத் தெளிவாக இன ஐக்கியத்தை முன்வைத்தும், தமிழ் தேசிய முதலாளித்துவத்தை முன்னிறுத்தியும் தேர்தலில் நின்றிருந்தால், அதற்கு ஆதரவாகச் செயற்;பட்டிருக்க முடியும்;. இதன் மூலம் இனவாதிகளையும், ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகளையும் எதிர்த்து நிற்கின்ற முற்போக்கான, நேர்மையான அரசியலை ஆதரிப்பதன் மூலம், பாட்டாளி வர்க்கம் அரசியல் ரீதியாக அணிதிரட்ட உதவி இருக்கும். இந்த அடிப்படையில் இனவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு மக்களை வாக்குபோடக் கோரி அணிதிரட்டும் தேர்தலை, பகிஸ்கரிக்குமாறு நாம் கோர வேண்டும். இதன் சாரம் என்பது தேர்தல் அரசியலில் நாம் ஒதுங்காது அதை பகிஸ்கரிப்பதன் மூலம் பங்குகொள்வதை ஒரு அரசியல் செயற்பாடாக மக்கள் முன் வைக்க வேண்டும்.
அரசுக்கு எதிரான கூட்டமைப்பு மக்களைச் சார்ந்து நிற்கவில்லை. ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாகவும், யாழ் மேட்டுக்குடி தனத்துடன் இனவாதத்தையே தன் பங்குக்கு கூவி விற்கின்றது. தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இனவாதத்தை முறியடிப்பதற்கு பதில், அரசுக்கு நிகராக இனவாதத்தை விதைத்து மக்களை தொடர்ந்து பிளப்பதன் மூலம் எதிரியாக்குகின்றது
இன்று அரசு தனது இனவாதம் மூலம் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் அரசுக்கு எதிரான தேர்தல் களத்தில் மற்றவர்கள் செய்கின்றனர். அரசு மக்களை இனரீதியாகப் பிளந்து முன்தள்ளுகின்ற முரண்பாடுகளை, தமிழ் இனத்துக்குள் முன்தள்ளி தமிழ் மக்களின் இன ஒற்றுமை பற்றி தேர்தலில் வேஷம் போடுவதே தேர்தலில் எதிர் கூத்தாகின்றது. தேர்தலை வெல்ல இனத்தைப் பிளக்கும் ஆயுதத்தைக் கொண்டு, மக்களை பிளக்கும் மக்கள் விரோத செயலே தொடர்ந்து தேர்தல் முறையில் காணப்படுகின்றது.
இனவாதத் தேர்தல் மூலம் அரசு ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்துகின்றது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனம் முன்னிறுத்தும் இனவாதம், இந்தியா முதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் இனவொடுக்குமுறைக்கு தீர்வுகாண முடியும் என்கின்றது. இதைச் சுற்றி அனைத்து கட்சிகளும் இன்று செயற்படுகின்றது.
இந்த இனவாதம் மற்றும் ஏகாதிபத்தியத் தனத்தில் இருந்து மக்கள் விழிப்படையும் வண்ணம், தேர்தல் பற்றிய எமது முடிவுகள் அமைய வேண்டும். வடக்கு கிழக்கில் அரசும், அரசுக்கு எதிரான கூட்டமைப்பும் என்ற எல்லைக்குள் இனரீதியாக வாக்களிக்கும் அரசியல் பின்புலத்தில், மறைமுகமாகத் தன்னும் அதை ஆதரிக்கவும் அதற்கு உதவவும் கூடாது.
மக்களை வகைதொகையின்றிக் கொன்ற அரச பயங்கரவாதமும், மக்களைக் கொல்ல மறைமுகமாக உதவிய கூட்டமைப்பின் இனவாதமும் ஒரு கோட்டில் காணப்படுகின்றது. அரசு - புலி என்ற கடந்தகால இடத்தில், அரசு - கூட்டமைப்பு இடமாறிக் காணப்படுகின்றது. இவை என்றென்றுமாக அதே அரசியல், அதே மனிதவிரோத கூறுகளுடன் இயங்குகின்றன. இந்த மக்களையிட்டு அக்கறையற்ற தரப்புகள் தான், யார் மக்களை ஒடுக்குவது என்பதை தெரிவு செய்யுமாறு மக்களிடம் கோருகின்றன.
அரசு செய்கின்ற அனைத்து மக்கள்விரோத செயற்பாட்டுக்குமான அரசியல் அடித்தளத்தை பாதுகாக்க, தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளுமாறு கோருகின்றது இத்தேர்தல் முறை. இந்த தேர்தல் முறை ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லீம் மக்கள் என்று, மக்களை இனரீதியாகப் பிரித்து, இனப்பிளவைத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கு, இந்த மக்கள் விரோத தேர்தல் முறை தொடர்ந்து சமூக விரோத அநீதிகளுக்கே உதவுகின்றது. இது சாதியம், பிரதேசவாதம், மதவாதம்.. என அனைத்தையும் மக்களுக்கு எதிராக முன்னிறுத்துகின்றது. இதையே ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்கின்றது. மற்றவரின் உரி;மையை மறுக்கும் சுதந்திரத்தையே, தேர்தலின் ஜனநாயகமாக்குகின்றது.
அரச ஒடுக்குமுறை அந்தஸ்த்தில் இருந்து கட்டமைக்கும் பயங்கரவாதம் மூலம் தமிழ் மக்களை மிரட்டி வெல்ல முனையும் பேரினவாதமும், இதைக் காரணமாகக் காட்டி வெல்ல முனையும் குறுந்தேசிய இனவாதமும், மக்களைப் பிளக்கும் தேர்தலாகி விடுகின்றது. மக்களை பிளந்து மோதவைத்து, மக்களை அடிமை கொள்ளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களுக்குள் தேர்தல் முறை புளுத்துக் கிடக்கின்றது.
சமூகத்தில் அக்கறை கொண்ட, மனச்சாட்சி உள்ளவர்கள் இன்று இதற்குப் பதிலளிக்க வேண்டும். அரசு தனது அதிகாரத்தைக் கொண்டு தேர்தலை நடத்தவில்லையா? இது இனங்களைப் பிளக்கும் இனவாதத்தைக் கொண்ட தேர்தல் இல்லையா? ஊடகங்களை முறைகேடாகவும், மிகையாகவும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றவில்லையா? பணத்தையும், அதிகாரத்தையும் முறைகேடாகக் கொண்ட தேர்தலாக இல்லையா? அச்சுறுத்தி, அடிபணிய வைக்கும் தேர்தலாக இல்லையா? பணமும், அடியாட்களும், குடும்ப வாரிசு முறையும் இதற்குள் புளுத்துக் கிடக்கவில்லையா? இதைவிட சாதியமும், இனவாதமும், மதவாதமும், பிரதேசவாதமும் கொண்டு, மக்களைப் பிளந்து விடவில்லையா? அதிகமதிகமாக பிரச்சாரம் செய்பவர்கள், அதிகமதிகமாகச் செலவு செய்பவர்கள், அதிகமதிகமாகக் குண்டர் பலத்தை பயன்படுத்துவர்கள், அதிகமதிகமான தந்திரசாலிகளாக இருப்பவர்கள் தேர்தலை வெல்லவில்லையா? இப்படியான முறையில் தேர்தலை வெல்வது கூட, தேர்தல் முறையாகி அதுவே ஜனநாயகமாகிவிட்டது அல்லவா!. இதை எப்படி ஆதரிக்கவும், மறைமுகமாக கண்டும் காணாமலும் விடமுடியும்.
இப்படியான தேர்தலை ஜனநாயகம் என்று நம்புகின்ற எல்லைக்குள், இப்படிப் பல கேள்விகள் உண்டு. கேள்விகள் இல்லையென்றால், பாசிசமயமாக்கலுக்குள் வாழத் தொடங்கி அதை நியாயப்படுத்தவும் பழகிவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஒரு முறைக்குப் பழக்கப்பட்டு, அதை பாதுகாப்பவராகியும் விடுகின்றோம் என்றுதான் அர்த்தம்.
ஆகவே தேர்தலை தேர்ந்து எடுப்பது என்பது முதலாளித்துவக் கருத்துக்கு ஏற்ப, மக்கள் வாக்குப் போடும் செயற்பாடாகும். இதை மக்களின் சுய தெரிவாகவும், அவர்களுடைய சொந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதாகவும் கூட கூறுகின்ற புரட்டை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்.
ஆகவே இதை நாம் எந்த வடிவத்தில் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்? மௌனம் சாதிப்பதன் மூலமும், சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வதன் மூலமும் இதைச் செய்ய முடியாது. மாறாக தேர்தல் கள அரசியலில் பங்கு கொண்டு, தேர்தலில் பங்கெடுப்பதை பகிஸ்கரிப்பதன் மூலமே இதை எடுத்துச் செல்ல முடியும். தேர்தல் கள அரசியல் செயற்பாட்டில் இருந்து ஒதுங்க முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் என்ன செய்வது?
தேர்தலை நம்பி, இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிராக அணிதிரண்டு போராடுவதைக் கைவிட முடியுமா? மனித வாழ்வுக்கான போராட்டம் என்பது இனம், மதம், சாதி, பால், நிறம் கடந்து தேர்தல் நடைமுறைக்கு வெளியில் தொடருகின்றது. மனித் தன்மை சார்ந்து வாழ்கின்ற, மனித உணர்வுகள் சார்ந்து எழுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஒன்றிணைந்து தங்கள் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்துவது இன்று அவசியமானது.
இதற்கு மாறாக மக்கள் வாக்குப் போடும் அரசியலைச் சுற்றி, வாக்கு போடுவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகள் காணமுடியும் என்ற தேர்தல் முறையை முன்தள்ளுகின்றனர். இதைத்தான் மக்களைச் சுரண்டி வாழும், ஆளும் வர்க்கங்களும் கூறுகின்றன. பேரினவாத அரச பயங்கரவாதமும், குறுந்தேசிய இனவாதமும், தேர்தல் மூலம் ஜனநாயகத்தையும் தீர்வையும் காணமுடியும் என்கின்றனர். தேர்தல் வழியில் புரட்சி பேசும் இடதுசாரிப் போலிகளும் இதைத்தான் மக்களுக்குக் கூறுகின்றனர். இந்த மோசடியை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காது, தேர்தல் கள அரசியல் செயற்பாட்டில் பங்குகொண்டு அம்பலப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பதை நிராகரிக்குமாறு நாம் முன் நின்று கோர வேண்டும்;.
தேர்தல் முறை மூலம் மேலிருந்து திணிக்கப்படும் இனரீதியான பிளவும், அதை ஜனநாயகமாகக் கொண்ட தேர்தலையும் எதிர்த்து, கீழ் இருந்து கட்டும் வர்க்க ஐக்கியம் மூலம் தான் இந்த நிலைப்பாடுகளை முறியடிக்க முடியும் என்பதை தேர்தல் வழிமுறை எடுத்துக் காட்டுகின்றது. இங்கு மக்களைப் பிளக்கும் தேர்தல் ஜனநாயகம் வேறு, மக்களை ஐக்கியப்படுத்தும் வர்க்க ஜனநாயகம் வேறு என்பதை தேர்தலும், தேர்தல் முறையும் எடுத்துக் காட்டுகின்றது.
இங்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் இதற்கு எதிராக ஒன்றுபடுவதற்கான போராட்டம் தான் அடிப்படையானது, இதுவல்லாத அனைத்து வழியும், கடந்தகாலத்தில் தோல்வி பெற்ற வரலாறுகளின் தொடரே எம்முன் நீண்டு செல்லும்.
மக்கள் தங்களைத் தாங்கள் எதிரியாகப் பார்ப்பதில்லை. மக்களைத் தமக்குள் எதிரியாக மாற்றுவது சுரண்டும் வர்க்க அரசியலும், தேர்தல் ஜனநாயகமும் தான். இதுதான் மக்களை எதிரியாக அணிதிரட்டுகின்றது. இதை முறியடிக்கும் வர்க்க அரசியல் தான் இங்கு தேவை. இதை முன்னோக்காகக் கொண்ட அரசியலை முன் நகர்த்துவதே எம் முன்னுள்ள அரசியல் பணியாகும்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
28.08.2013