09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மனமும், மனம் சார்ந்த பெண்களும்

அறுவைதாசன் அவனிற்கு மிகவும் விருப்பமான ராஜா-ஜானகியின் காலையும் நீயே, மாலையும் நீயே பாட்டைப் போட்டு விட்டு இசைக்கு ஏற்றபடி தலையை ஆட்டிக்கொண்டு சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் கவிதைத்தொகுப்பை எடுத்து ஒரு பிரியாவிடை என்ற கவிதையை வாசிக்கத் தொடங்கினான்.

மாணிக்கங்களை இழந்து போகிறேன்

வளநதிகளை விட்டுச் செல்கிறேன்

அது என்வரையில்தான்

உங்களிற்கு நான்,

சனக்கும்பலில் ஒரு நொடிக்குள்

உங்களைக் கடந்து போய் விட்ட

ஒரு கால் அல்லது ஒரு கை,

ஒரு பிடரி அல்லது முதுகு,

முகமற்ற ஒரு நிழல்

ஆகா, என்ன ஒரு கவிதை என்று கவிதையின்பத்தில் மூழ்கியபடியே யாழினியைக் கூப்பிட்டு நான் பாடையிலே போகையிலே என் பக்கத்திலே இந்த புத்தகத்தையும் வைச்சு விடு. நான் சாகேக்கையும் தமிழ் மணத்து சாக வேண்டும் என்றான். அப்ப மிச்ச புத்தகங்களை என்ன செய்யிறது என்று ஒரு கேள்வி எழுந்தது யாழினியிடமிருந்து. ஆகா, விட்டால் நீ உயிரோடையே எரிச்சுப் போடுவாய் போலே என்று பம்மினான் அறுவை. வயது ஜம்பது ஆகி விட்டதால் சாவைப் பற்றிய சிந்தனை அடிக்கடி அவனிற்கு வந்து கொண்டிருந்தது. மண்டையைப் போட முதல் தனது இலக்கிய, அரசியல் வாழ்வனுபவங்களை தமிழ்கூறும் இணைய உலகிற்கு வாரி வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரலாறு தன்னை மன்னிக்காது என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான்.

அறுவை தனது வாழ்க்கைப்பயணத்தின் பிளாஷ்பக்கில் மூழ்கியிருந்த போது அவனது கூட்டாளி கந்தையா கார்த்திக்கேசுவிடம் இருந்து தொலைபேசி வந்தது. க.கா தன்ரை பள்ளிக்கூட நாட்களில் கலைச்சு திரிஞ்ச பெட்டையை எத்தனையோ காலங்களிற்கு பிறகு ஒரு கலியாண வீட்டிலே கண்டதாகவும், அதிலே இருந்து அவளின் நினைப்பாகவே இருப்பதாகவும் புலம்பினான். தன்னுடைய காதல் கைகூடாமல் விட்டாலும் ஒரு கவிஞனான அறுவை அந்த மலரும் நினைவுகளை எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கையையும் குரல் தளுதளுக்க வைத்தான். அறுவைக்கு கூடை கூடையாக பூக்களை யாரோ மண்டை மேலே தூவுவது போலே இருந்தது. அவன் கவிதை சொல்லத் தொடங்கினாலே அந்த இடத்தை விட்டு ஓட்டம் எடுப்பவர்கள் தான் அதிகம். வாழ்க்கையிலே முதன்முதலாக ஒருத்தன் எழுதச் சொல்லி கேக்கிறானே என்ற சந்தோசத்திலே எழுதத் தொடங்கினான்.

மழை, சொட்டுச்சொட்டாக வாழை இலையின் மேல் வடிவான முத்து மழை, சில்லென்ற காற்றோடு சிறுதூறல் மழை, ஓவென்ற முழக்கத்தோடு ஓங்கி ஒலிக்கும் காற்றுடன் கைகோர்த்த பெருமழை, மாலை மதியும், வீசு தென்றலும் சேர்ந்த மழை, மண் குளிர பெய்யும் மழை, மனம் களி கொண்டு ஆட பெய்யும் மழை. குடை பிடித்தபடி குழல் ஓடும் நீர் துடைத்தபடி வேகநடை போடும் பேரிளம் பெண்கள். அந்த நேரம் போடுவதற்கென்றே கணபதிமாமாவின் தேனீர்க்கடையில் ஒரு பாட்டு இருந்தது. எங்கள் கணபதிமாமாவின் கடையில் மட்டுமில்லை, எல்லா ஊர்கடையிலும் அப்படி பாட்டுக்கள் இருந்திருக்கும். இருளைக் கிழித்து மின்னல் வருவது போல காற்றைக் கிழித்து பாட்டு வரும். அமுத மழை பொழியும் முழுநிலவிலே ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே என்று. இன்னொரு இடத்திலே அந்தி மழை பொழிந்திருக்கும். அங்கேயும் இங்கேயுமாக பார்வைகள் தேடும். சில சந்தித்துக் கொள்ளும், சில சண்டை பிடித்துக் கொள்ளும்.

நவராத்திரிக்கு ஒன்பது நாளும் இசைமழை பெய்யும். எலிவால் முடியுடன் திரிந்த சிறுபெட்டைகள் எல்லாம் திடீரென்று பாவாடை தாவாணியுடன் கனகாம்பரம் சடையில் வைத்து செதுக்கி வைத்த அம்மன் சிலைகளாக மேடைகளில் வந்து பாடுவார்கள். சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி என்று சீர்காழி உருகி உருகி பாடுவது இவர்களைப் பார்த்து தான் என்று தோன்றும். மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி ஒவ்வொரு வருசமும் தவறாமல் பாடப்படும். தேன்தமிழ் சொல்லெடுத்து ஒவ்வொரு வரியாகப் பாடும் போது உயிரையே வீணையாக்கி மீட்டுவார்கள். வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி என்று வரிசையாக பெயர்கள் வரும் போது பாடுபவளில் ஒருத்தியின் பெயரும் அதில் வரும். தன் பெயரை தான் பாடும் போது சின்னவொரு நாணத்துடன் மின்னலாய் சிரிப்பொன்று மின்னி மறையும். உள்ளக்கோவிலில் அது போய் உறைந்து நிற்கும். பனங்கூடலிற்குள்ளே மறைந்த பால்நிலவு போல சனக்கூட்டத்திற்குள்ளே இரண்டு கள்ளமனசு கணப்பொழுதில் சந்தித்து காதலாகி, கசிந்துருகி மறைந்து போகும். அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடவென்று சிறகடித்து பறக்கும்.

ஆவணியில் கந்தசுவாமி கோயிலில் கொடியேறும். வேலைக்காக வெளியூர், வேறுதேசம் போனவர்கள் எல்லாம் வெள்ளி பார்த்து கரையேறும் கப்பலைப் போல நாள் பார்த்து ஊர் வந்து சேருவார்கள். சந்தணமும், சவ்வாதும் காற்றெங்கும் கரைந்து வீசும். இரவுத்திருவிழாக்கள் விடிய விடிய நடக்கும். அரைக்காற்சட்டை போட்டுத் திரிந்த பொடியன்கள் நாலுமுழம் வேட்டி கட்டிக் கொண்டு இல்லாத மார்பை நிமிர்த்துக் கொண்டு திரிவார்கள். மல்லிகை, முல்லை, கனகாம்பரம் சூடிய கூந்தல் காற்றிலே கலந்து ஆட பெண்கள் பாவாடை தாவணியில் பாதிமதி போல பவனி வருவார்கள். பன்னீர் தெளித்தது போல முகங்களில் புன்னகை வாசம் வீசும். சுவாமி உள்வீதி சுற்றி முடித்து வெளிவீதி வரும் போது வடக்கு வீதியில் வைத்து நாதஸ்வரமும், தவிலும் பின்னிப் பிணைந்து காற்றுவெளி எங்கும் கானமழை பொழியும். பின்னிரவின் மெல்லிய குளிரில் வடக்கு வீதியின் கும்பமணலில் கால்கள் புதையப் புதைய ஊரே கண் மூடி காது கொடுத்து கேட்டுக் கொண்டு இருக்கும். பேருக்கு இரண்டு ராகத்தை வாசித்து விட்டு பாட்டுக்களை வாசிக்கும் போது நாதஸ்வரம் செந்தமிழில் கொஞ்சும். முத்தைத் தரு பத்தித் திருநகை, துள்ளு மத வேட்கை கணையாலே என்று திருப்புகழ் பாடிவிட்டு படப்பாடல்கள் வாசிக்கத் தொடங்கும் போது மெல்ல வரும் சோலைக்குயிலின் தமிழோசை.

அந்த மாதிரி மெய்மறந்து இருக்கும் நேரங்களில் தான் அய்யரோ, ஊர்பெரிசுகளோ எதாவது ஒரு வேலை சொல்லுவார்கள். இவனுகளிற்கு இதே பிழைப்பாகி போய் விட்டது என்று மனதிற்குள் திட்டினாலும் மறுக்க முடியாது. அடுத்த நாள் அப்பன்மார்களிடம் அர்ச்சனை கேட்க வேண்டி வரும். அன்றைக்கு கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி. கை, விரல், தொண்டை, கழுத்து என்று உடல் முழுதும் ஆட, ஆட அவர்கள் வாசிக்க, ஆடாமல் அசையாமல் ஊரே இசையில் மூழ்கிப் போனது. பஞ்சாலாத்தி தீபத்தை ஆறுமுகசுவாமி வாசலில் விட்டு விட்டு வந்து விட்டேன் எடுத்துக் கொண்டு வா என்று அய்யர் சொன்ன போது, காதைப் பொத்தி கொடுக்க வேண்டும் போலே கோபம் பொங்கியது. ஓட்டமாக உள்ளே போன போது ஆறுமுகசுவாமி வாசலில் அவள். பள்ளியிலே பக்கம் இருந்து படித்து விட்டு பாதியிலே வேறு ஊர் போனவள். வள்ளியின் ஒடுங்கிய இடை போல வடிவாக இடுப்பை வளைத்துக் கொண்டு நின்றாள். தேங்காய் எண்ணெயில் எரியும் தீபங்களின் பொன்னொளியில் அவளின் முகமும் சுடர் விட்டது. தாமரை, அல்லி, மல்லிகை, முல்லை, செவ்வரத்தை, அலரி, நந்தியாவட்டை என்று படிக்கட்டு முழுக்க பரவியிருந்த பூக்களில் ஒன்றை தனியே எடுத்து தலையில் வைத்துக் கொண்டு நின்றாள். அடையாளம் கண்டு கொண்டது அகன்று விரிந்து புன்னகை சிந்திய இதழ்களின் சிவப்பிலே தெரிந்தது. வசந்தமண்டபத்து வாசலில் நின்ற பவளமல்லிகையின் வாசம், மூச்சை நிறுத்தி விடும் போலே நாடி, நரம்பெங்கும் நிறைந்து வழிந்தது. கோபுரத்து மேலே இரண்டு புறாக்கள் அலகுகளைத் தேய்த்து கொஞ்சிக் கொண்டன. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன். நாதஸ்வரமும், தவிலும் களி கொண்டு கானம் பாடின. கானமூர்த்தி- பஞ்சமூர்த்திக்கு யாரோ காற்றிலே சேதி சொல்லியிருக்க வேண்டும்.

காதல்காவியம் ஒன்றை படைத்திட்ட கவிச்செருக்குடன் அனுப்பி வைத்தான். இது நடந்த உண்மை! இப்பிடித்தான் அது நடந்தது. இப்போ நினைத்தாலும், அடிவயிறில் இருந்து சிறு துடிப்பு, உனது எழுத்து நடை இதில் கவித்துவமாக உள்ளது. இதை எங்கடை இணையத்திற்கு அனுப்பு எல்லாரும் தங்கடை அழியாத கோலங்களிற்கு, பசுமை நிறைந்த நினைவுகளிற்கு போய் வரட்டும் என்று கார்த்திக்கேசுவிடமிருந்து மறுமொழி வந்தது. அறுவை அங்கத்தவனாக இருக்கும் அரசியல் இணையத்தளத்திற்கு அதை அனுப்பி வைத்து விட்டு எப்போ போடுவார்கள் என்று அடை காக்கும் கோழி போல கொம்பியூட்டருக்கு முன்னாலேயே இருந்தான். போடுகிற நோக்கமும் இல்லை, சிந்தனையும் இல்லை என்பது போல இருந்தது. அறுவை தாங்க முடியாமல் இணையத்தள ஆசிரியரிற்கு போன் போட்டு, கட்டுரை ஒன்று அனுப்பினேன் எப்படி இருக்குது என்றான்.

கொன்றூட்டியேடா பாவி என்றார் ஆசிரியர். அவ்வளவு நல்லா இருந்திச்சுதா என்றான் அறுவை விசயம் விளங்காமல். புயல் அடித்தது போல ஆசிரியரிடமிருந்து வார்த்தைகள் சீறி வந்தன. ஏண்டா நாங்கள் அரசியல் இணையத்தளம் நடத்துறோம், நீ காதலும் கத்தரிக்காயும் என்று கவிதை எழுதுறாய். இந்த குட்டிமுதலாளித்துவ சிந்தனைகளை எல்லாம் நாங்கள் எப்பவோ கடந்து வந்து விட்டோம். இதை எல்லாம் எப்பிடி இணையத்திலே போடுறது என்று பொரிந்து தள்ளினார். காதல், அன்பு எல்லாத்தையும் முதலாளித்துவத்திலே எப்ப சேர்த்தானுகள், எனக்கு சொல்லவேயில்லையே என்று யோசித்த அறுவைக்கு சட்டென்று, கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் என்ற பாட்டும் அதிலே நடுநடுவே மானே, தேனே போட்டுக்க என்ற வசனமும் ஞாபகம் வந்தது. வேணுமெண்டால் கட்டுரைக்கு இடையிடையே புரட்சி, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் போட்டுக்கொள்ளுங்கோ என்றான். ஆசிரியர் பல்லை நறும்புவது இடி இடிப்பது போல போனிலே கேட்டது.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்