05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

சென்னை புத்தகக் கண்காட்சி நூல்களும் நுகர்பொருளாகும்!

02_2007_puja.jpg

"திருவண்ணாமலையைச் சுற்றி வந்தவர்களுக்கு முக்தி கிடைப்பது போல, சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒருதரம் சுற்றி வருபவர்கள் வாசகர் ஆகலாம்'', என்கிறார் தினமணி ப.கிருஷ்ணன். ""என்னதான் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வந்தாலும் புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகரித்துள்ளது. இம்முறை 8,000 புதிய புத்தகங்கள், 474 கடைகள், விரிவுபடுத்தப்பட்ட 50,000 சதுர அடி பரப்பு, 5 கோடி புத்தகங்கள்... இவையே இதற்கு சாட்சி'' என்கின்றனர். ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை நடத்திவரும் "தென்னிந்தியப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க' (பபாசி) நிர்வாகிகள்.

 

ஒரு புத்தகக் காட்சியின் தகுதியை பிரம்மாண்ட கூட்டம் என்றும், திருவிழா என்றும் மதிப்பிட முடியுமா? சரி! நாம் தேடிப் பரவசம் அடையும்படி இந்தத் திருவிழாவில் அப்படி என்னதான் இருக்கிறது. பார்த்து விடுவோம்.

 

···

 

வர்த்தகம், தன்னம்பிக்கை, ஆன்மீகம், மார்க்சியம், ஹமாஸ், சதாம், நகைச்சுவை, ஜெமினி கணேசன் சினிமா, சாஃப்ட்வேர் என்று ரிப்பன் கடை போல பல வண்ணங்களில் கடைபரப்பியிருக்கிறார்கள், என்.ஆர்.ஐ டவுன்லோடு ஃபேக்டரி கிழக்கு பதிப்பகத்தினர். ஆன்மீகத்தின் ராசிபலனையும், பெரியாரைப் பற்றிய சின்னக் குத்தூசி கட்டுரைகளையும், இராமானுஜ தாத்தாச்சாரியையும் லாலா மிட்டாய்க் கடை போல அடுத்தடுத்து வைத்து பார்வையாளர்கள் எல்லாவற்றிலும் "கொஞ்சம்' போடச் சொல்லும் சூடு பறக்கும் வியாபாரம் நக்கீரன் கடையில்.

 

சந்தேகமே இல்லாமல் இது அவர்கள் சொல்வதுபோல "அறிவுத் திருவிழா'தான். ஆனால் அந்த அறிவின் நடைமுறைப் பயன் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். அறிவின் மாயவலையால் நடைமுறையில் பரிசோதனை செய்யப்படாத அறிவியல், பொறியியல், மருத்துவம், இலக்கியம், அரசியல்... அவ்வளவு ஏன்? சமையல் குறிப்புகளுக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா? பயன்நோக்கு இல்லாமல் வெறுமனே படிப்பை ஊக்குவிப்பது என்ற கண்காட்சிப் பாணிகளால் விளையும் நிலைமைகளை சற்று யோசித்துப் பாருங்கள்.

 

உதாரணமாக, இக்கண்காட்சியில், இதயநோய் சம்பந்தமாக நிறைய நூல்கள் வந்துள்ளன. சித்த, ஆயுர்வேத, யுனானி, அக்குபங்சர் போன்றவற்றில் இதய சிகிச்சையும் கூறப்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் இவ்வகைப் புத்தகங்களைப் படிக்கும் வாசகர் நெஞ்சுவலி வந்தால் மருத்துவரிடம் அறிகுறிகளைக் கூறி, தெரிந்து கொண்டா மருந்து சாப்பிடப் போகிறார்? சாதாரண வாயுத் தொல்லைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் என எட்டாயிரத்திற்கும் மேல் செலவழிக்காமலா இருக்கிறார்கள் இந்த அறிவாளிகள்? இல்லை. நாலு புத்தகம் படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பணம் பிடுங்கும் மருத்துவரிடம் வாதிக்கத்தான் செய்கிறார்களா? கற்றதனால் ஆன பயன் என்ன?

 

அதிகமாக விற்பனையாகும் நூல்களில் சமையல் புத்தகங்களும் அடங்கும். சமையலே நடக்காமல் நவீன உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்திற்கு சமையல் குறிப்பு எதற்கு உதவும்? எந்த பரிசோதனையும், உத்தரவாதமும், அறிவியல் கண்ணோட்டமும் இல்லாமல் "ஆதித்யன் கிச்சன்' என்று யார் வேண்டுமானாலும் எழுதித் தள்ளும் இந்தப் புத்தகங்கள் ஒருவேளை உதவினாலும் அது மருத்துவச் செலவில்தானே கை வைக்கும்?

 

பொதுவாக புத்தகக் காட்சியை குறை சொல்வது என்பதற்காக அல்ல; திருவிழா களேபரத்தில் கையிலுள்ள கொஞ்ச நஞ்சமும் களவு போய்விடக் கூடாதல்லவா!

இலக்கியம் என்று பார்த்தால் பொன்னியின் செல்வன் பரவலாக இருக்கிறது. இது அறுபதுகளில் தொடராக வந்தபோது வந்தியத் தேவனின் அந்தப்புரப் பராக்கிரமங்களுக்காகத் தினவெடுத்து மேய்ந்த மூளைகள், அதையே இப்போது தொகுப்பாகப் புத்தம் புதிய வடிவில் பார்த்தவுடன் மனதில் "ஆட்டோகிராஃப்' ஓடுகிறது.

 

அற்பத்தனத்தை நினைவு கூர்கிறது. உண்மையில் இலக்கியம் படிக்க விரும்புபவர்களுக்கு "அன்னா கரீனினா'வும் "அதிகாலை அமைதி'யும் தற்போதைய "சோளகர் தொட்டி'யும் "ஆழிசூழ் உலகும்' அல்லவா பயன்படும். இதுபோன்ற நூல்களைப் படிப்பவர்கள் மட்டுமல்ல, இதுபோன்ற கண்ணோட்டமுடைய படிப்பதற்கான வாய்ப்பு இல்லாதவர்களும்தான் சுனாமி வந்தபோது கடற்கரைக்குச் சென்று அம்மக்களுக்கு உதவினார்கள். பொன்னியின் செல்வன் வகையறாக்களோ "தி.ஜா'வின் காவிரிப் படுகையில் அமைந்த அக்கிரகாரங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

"ஈராக்: ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்', "ஹிஸ்புல்லா' போன்ற புத்தகங்களின் மூலம் மத்திய ஆசிய அரசியலைப் புரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அந்த நூல்களுக்கான ஆரவார விற்பனை மற்றும் விளம்பரம் வாசகர்களுக்கான இந்தத் தேவையைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. வரலாறு, அரசியல் கூர்மை மற்றும் படிப்பினை ஆகிய கண்ணோட்டமின்றி வெறுமனே உடனடி நிகழ்ச்சிகளையும், தனிநபர் செய்திகளையும் தொகுத்துத் தருவதையே வரலாறு என்ற தவறான வழிமுறையை புத்தகக் காட்சியின் இந்தப் புழுதிகள் ஏற்படுத்தி விடுகின்றன.

 

""பெயரில் "மூப்பை'க் கொண்ட தமிழகத் தேசியக் கட்சித் தலைவருக்கும் "ரா' என்ற முதலெழுத்தையும் "தா' என்ற கடைசி எழுத்தையும் கொண்ட தங்கை நடிகைக்கும் கள்ளத் தொடர்பு'' போன்ற செய்திகளையும் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் கிசுகிசு வியாபாரம் செய்வதையும் அவற்றையே அரசியல் வரலாறு போல வீரியமாகக் காட்டும் சிட்டுக் குருவி லேகியங்கள் விற்கும் புத்தகத் திருவிழாவின் தகுதியைப் பார்த்து நாம் பூரிக்க முடியுமா?

 

ஆன்மீகப் புத்தகங்களுக்கு அவ்வளவு கடை. அதை மாய்ந்து மாய்ந்து மாசறக் கற்கும் வாசக பக்தர்களுக்கு கேடி சங்கராச்சாரியார் மீது கோபம் வந்து குதிப்பதில்லையே? இது படிப்பா? இல்லை நடிப்பா?

 

நாடு முழுக்க பச்சைப் படுகொலை செய்துவிட்டு "பதவிசாக' விஜயபாரதம் ஸ்டால் போட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். "அருமை' வாசகர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே புத்தகத்திற்குள்ளே பாபிலோனாவுடைய பலான படத்தை வைத்துத் தருவதுபோல லேமினேட் செய்யப்பட்ட பாரதமாதாவின்டத்தை மறைத்து மறைத்து வைத்துத் தருகிறது. இந்தக் கொலைகாரர்களிடம் கேள்வி கேட்கும் அறிவுக்காவது இந்தப் புத்தகக் காட்சி பயன்படுகிறதா?

 

ஈஷா, ரமணாஸ்ரம் முதல் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் லெவல் கேடி சாமியார்கள் வரை புத்தகக் கடை என்ற முக்காட்டுக்குள் வெள்ளைக்கார மாமிகளோடு வீற்றிருந்த ஆன்மீக மோசடிகளை, "அறிவுத் திருவிழா' என்றால் அடித்து விரட்டியிருக்க வேண்டாமா?

 

நாடு முழுக்க ஒரு லட்சம் விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் விதைகளைப் பயிரிட்டு பலனடைய முடியாமல் கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும்போது "நான் மட்டும் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்; அதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும்' என்று ஒரு பறவை அல்லது விலங்கு சொல்லலாம்; பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த மனிதன் சொல்ல முடியுமா? சொல்ல முடியும் என்கின்றன "ஐ.ஏ.எஸ். இறையன்பு' முதல் "அப்துல் கலாம்' வரை எழுதியிருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள்.

 

அல்லையன்ஸ் புத்தகக் கடையில் நாட்டுக்கு தேவையான நடிகர் சூர்யாவின் வாழ்க்கை வரலாறு, கிழக்குப் பதிப்பகத்தில் அம்பானி கஷ்டப்பட்டு உழைத்து (?!) முன்னேறிய கதை, காலச்சுவட்டில் சு.ராவின் ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் போன்ற காலத்தைவென்ற படைப்புகள்!

 

சுஜாதாவின் முதுகில் பூணூலாய் நெளியும் மனுஷ்ய புத்திரனின் உயிர்மைக் கலகங்கள்; எடுபட்ட மதனின் என்சைக்ளோபீடியா முன்பதிவுகள், பகவத்கீதை, சுயமுன்னேற்றம் தலைப்புகளினூடே மார்க்சிய ஆசான்களின் புத்தகங்களையும், அடுக்கி வைத்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையம்; காளான் வளர்ப்பு, நாய் வளர்ப்பு குழந்தை வளர்ப்பு என அறிவை வளர்க்கும் மணிமேகலை; இப்படி புத்தக மேய்ப்பர்கள் போதாதென்று ""கல்யாண மாலை''யின் சுயம்வரக் கூப்பன்களும் திருவிழாவை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. ""புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை மட்டும் தேடாதீர்கள்; உங்கள் வாழ்க்கைத் துணையையும் தேர்ந்தெடுங்கள்'' என்று அந்தக் கடையிலிருந்த வாசகமே அறிவுத் திருவிழாவின் தரத்திற்குச் சான்று.

 

···

அறிவுத் திருவிழாவின் ஒருசில பருக்கைகளே நாம் மேலே சொன்னது. செவிக்கு உணவுதான் இப்படி என்றால் வயிற்றுக்கு ஈயும் கேண்டீனிலோ "இங்கு ஏன் வந்தாய்?' என்று நம் அறிவைப் பழிக்கும் அளவிற்கு விலை. இந்தப் புத்தகக் காட்சியில் ஒரு நல்லது கூட கண்ணில் படவில்லையா என்றால் ஒரு சில உண்டு.
அலைகள், திராவிடன், பாரதி புத்தகாலயம், கீழைக்காற்று, பொன்னி, தமிழ்மண் போன்ற பயனுள்ள பதிப்பகங்களும் அங்கே விடியல், புத்தா, தமிழ் முழக்கம் போன்றோர் வெளியிட்டிருந்த தேவையான நூல்களும் பெரும் வணிகர்கள் ஆதரிக்காத தனிநபர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் வெளியீடுகளை இவ்வகைக் கடைகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

பொதுவில் படிப்பதன் மூலம் தங்களது வேலையில் திருத்தங்களைத் தேடும் இளைஞர்களுக்கு புத்தகங்கள் குறைவாகவே கிடைத்தன. அத்தகைய தேவைகளை நிறைவு செய்யும் வழக்கமான பழைய புத்தகக் கடைகளை புத்தகக் காட்சி நடக்கும் பள்ளிக்கு வெளியே வீதியில் கூடப் போடவிடாமல் பழைய புத்தகங்களை (அக்கடைக்காரர்களின் வாழ்க்கையையும் சேர்த்து) அகற்றியதன் மூலம் தனது நோக்கத்தையும், வர்க்கத்தையும் அடையாளம் காட்டிக் கொண்டது ""பபாசி''.

 

இனிவரும் காலங்களில் உண்மையான மக்கள் இலக்கியங்களுக்கும், சமூக அக்கறை கொண்ட பதிப்பகங்களுக்கும் கூட வீதியைத் தான் காட்டுவார்கள் போலும்!

 

· தளபதி