Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

தமிழ் கைதிகள் தமிழ் தேசிய பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படாதவர்களாகிவிட்டனர். தங்கள் விறுவிறுப்பு அரசியலுக்கு உதவாதவராகவே இருக்கின்றனர். தமிழ் கைதிகள் சிறையில் கொல்லப்பட்டால், தற்கொலை செய்து கொண்டால், போராட்டம் நடத்தினால் மட்டும் தான், தமிழ்தேசிய ஊடக வியாபாரிகளின் கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாக மாறுகின்றது. இதைத் தாண்டிய சமூக அக்கறை எதுவும், தமிழ் அரசியல் கைதிகள் பால் கிடையாது. தமிழ் கைதிகள் பரபரப்பாக ஏதாவது செய்தால் தான், தமிழ் தேசியம் அதைப் பேசும் என்றளவுக்கு கைதிகளின் பொது அவலம் உள்ளது. இந்தச் சமூக அமைப்பில் புறக்கணிக்கப்பட்டவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, எந்தக் குற்றச்சாட்டும் நிறுவப்படாது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று இவர்களின் மீட்சிக்காக எந்த அரசியல் இயக்கமும், மக்கள் விழிப்புணர்ச்சியும் கிடையாது. பேரினவாதிகள் தாங்களாகவே இரங்கி விடுவித்தால் மட்டும் தான் வாழ்வு என்றளவுக்கு, சமூகம் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.

இவர்கள் பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும், சமூகரீதியான ஒடுக்குமுறைக்குள்ளானவர்களின் பின்னணியைக் கொண்டவர்களுமாவர். தங்களைத் தாங்கள் மீட்டுக்கொள்ள முடியாத வண்ணம், பொருளாதார ரீதியாக ஏழைகள். இவர்களின் குடும்பங்கள் கூட தமக்குள் ஒன்றிணைந்து போராடமுடியாத அளவுக்கு, சமூகத்தின் பொது அக்கறையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையில் சமூக மட்டத்தில் சிறைக்கைதிகளின் நலன் சார்ந்த, சமூக அமைப்புகள் கிடையாது. அவர்களுக்கு உதவும் பொது அமைப்புகள் கிடையாது. சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தங்கள் குடும்ப உறவுகளில் இருந்து விலக்கியும் வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் சொந்த வாழ்விடங்களில் இருந்து, தூர இடங்களில் அடைக்கப்பட்டு கவனிக்கப்படதவராகவே தமிழ் கைதிகள் உள்ளனர்.

தமிழ் தேசியத்தின் பெயரில் உருவான கைதிகளின பொது அவலங்களுக்கு மறுபக்கத்தில், தேசியத்தின் பெயரில் சொத்துக் குவிப்புகள் முதல் பிழைப்புவாத தேர்தல் அரசியல் வரை தொடருகின்றது. சிறைகளில் அனுபவிக்கின்ற தொடர் வதைகளுக்கு நிகரானது, தமிழ் தேசியவாதிகளால் புறக்கணிப்புக்குள்ளாகின்ற கொடுமைகள். எதை நம்பி இந்த அவல நிலைக்குள் பலியானார்களோ, அவர்களின் பயன்பாட்டு பொருளாக்கப்பட்டு வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்துக்காக போராடி அவர்கள், தாங்கள் சிறையில் இருப்பதைப் போராடி சொன்னால் மட்டும் தான், குறைந்தது செய்தித்தாளில் கூட இடம்பிடிக்க முடிகின்றது. அரசியல்வாதிகள் இந்த போராட்டத்தைக் கூட தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதைத் தாண்டி, தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் தீண்டப்படாதவர்கள் தான்.

கைதிகளில் சிலர் தமிழ் தேசிய அரசியலுடன் தொடர்பற்றவர்கள். பலர் அவர்களே அறியாமல் பயன்படுத்தப்பட்டதன் மூலம் பலயிடப்பட்டவர்கள். கைதிகளில் பலர் அப்பாவிகள். எதையும் செய்யாது, பேரினவாதத்தினால் குற்றவாளியாக்கப்பட்டனர். பலர் எந்தக் குற்றமும் இழைக்காதவர்கள். சித்திரவதைகள் மூலம் பொய்யான திட்டமிட்ட ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர்கள். வெள்ளைப் பேப்பரில் கையெழுத்தை வாங்கி, குற்ற வாக்குமூலத்தை எழுதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பலர்.  இப்படி இட்டுக்கட்டிய குற்றப் பத்திரிகை மூலம், தண்டனைகள் திணிக்கப்பட்டு விசாரணை இன்றி அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

விசித்திரம் என்னவென்றால் அண்மையில் 30 வருட தண்டனை பெற்ற இலங்கேஸ்வரனை குற்றம் செய்யத் தூண்டியவர், தண்டனை வழங்கும் அரசின் மந்திரியாகவும், அரசின் எடு பிடியாகவும் இருக்கின்றார் என்பது தான்.

இன்று செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டால், குறுகிய கால தண்டனை பெற்று விடுதலை பெற முடியும் என்று கருதுமளவுக்கு கைதிகள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி, தண்டனை பெறுகின்ற அவலம். இலங்கையின் சட்டம், நீதி, தண்டனை அனைத்தும் பேரினவாதத்தின் வக்கிரங்களுக்குள் உட்படுத்தப்பட்டு இருப்பதைத் தாண்டி, இது எதையும் விளக்கவில்லை. அண்மையில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட கைதியின் மரணச்சான்றிதழில், பொலிசாரினால் இருதய நோய் காரணமாக மரணித்தாக அறிக்கையிடப்பட்டு இருந்தது. அந்த கொல்லப்பட்ட கைதியின் தாய், மரண சான்றிதழ் அறிக்கையை நீதிபதியிடம் கோரிய போது, ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு துணை போகும் துரோகிகளாக சித்தரித்து திட்டிய நீதிமன்றங்களில் இருந்து அனைவருக்குமான நீதி சட்டம் எதையும் காணமுடியாது. தனிப்பட நீதிபதியிடம் வழங்கும் சாட்சியம் கூட, புலனாய்வாளர் கைகளில் இருக்கும் அளவுக்கு நீதிமன்றங்கள் அனைத்தும் சட்டவிரோதமாகவே இயங்குகின்றது.

இலங்கையில் வெலிக்கடைப் படுகொலை முதல் தொடர்ச்சியான சிறைப் படுகொலைகளுக்கு எதிராக எந்த நீதிவிசாரணையும் நடந்தது கிடையாது. இதில் யாரும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டது கிடையாது. பேரினவாதமே நாட்டின் மொழியாகவும் நடத்தையுமான பின்பு, தமிழ் கைதிகளைக் கொல்லுதல் குற்றமல்ல. சிறைக்குள் படைகள் பாய்ந்து குதறிக் கொன்றது வரை, எத்தனையோ கடந்தகால தொடர் நிகழ்வுகள்.

இந்தப் பின்புலத்தில் சித்திரவதை மூலம் பொய் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அதை குற்றப்பத்திரிகையாகக் கூட தாக்கல் செய்யாது, நீதிமன்றத்தின் துணையுடன் காலவரையறையின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கும் சட்டவிரோத செயற்பாட்டை காணமுடிகின்றது. இப்படி சட்டவிரோதமாக சிறைவைத்திருக்கும் நாட்டில், நீதிமன்றங்கள் கூட இனவாதம் கொண்டதாகவே இருக்கின்றது என்பதையே எடுத்துக் காட்கின்றது.

இன்று சிறைகளில் உள்ளவர்களில், சிலர் சட்டபூர்வமான அமைப்பு வடிவுக்குள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள பலர், தொடர்ந்து காணாமல் போகின்றனர். இலங்கையில் சட்டவிரோத கைதுகளும், வதைமுகாம்களும், கொலைக்கூடங்களும் இயங்குகின்றது. இவைதான் இன்று ஆட்சி அமைப்பின் ஊன்றுகோலாக இருக்கின்றது. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவது தொடருகின்றது. இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவது இந்தச் சிறைக்கூடங்கள் தான். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை இணைந்த, பேரினவாத அரசின் சட்டவிரோத கொலைக்கூடங்கள் இவை.  நாட்டில் காணாமல் போன பலரினதும், இனந்தெரியாத ஆயிரக்கணக்கான கொலைகளுக்கும் பொறுப்பாகும்.

இலங்கையில் காணாமல் போனவர்கள், இனந்தெரியாத கொலைகள் தொடர்பாக எந்த விசாரணைகளும், தண்டனைகளும் வழங்கப்படாது, குற்றவாளிகள் ஆளுகின்ற நாடாக இருக்கின்றது.   இவர்களின் கீழ் சட்டப்படியான சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கும் சிறைகளும் இயங்குகின்றது. இன்று சட்டரீதியான தரவுகளை எடுத்தால்

சிறைச்சாலை

தொகை

ஆண்

பெண்

தண்டனை

மேன் முறையீடு

தமிழ்

சிங்களம்

மசீன்

155

155

-

30

06

155

-

சீ.ஆர்.பி

13

13

-

-

-

10

03

வெலிக்கடை

16

07

09

03 (பெ)

-

16

07

முகர

04

-

-

01

-

04

-

போகம்பரை

21

-

-

09

-

21

-

அனுராதபுரம்

65

62

03

-

-

65

-

பொலநறுவ

03

-

-

-

-

03

-

தங்காலை

05

-

-

-

-

05

-

மொனராகல

02

-

-

-

-

02

-

பதுளை

07

-

-

-

-

07

-

மட்டக்களப்பு

17

-

-

-

-

17

-

யாழ்ப்பாணம்

17

15

02

-

-

17

-

நீர்கொழும்பு

05

-

-

-

-

05

-

பூந்தோட்டம்

70

54

16

-

-

70

-

கந்தக்காடு

174

-

-

-

-

174

-

சேனகபுர

130

-

-

-

-

130

-

பூசா

250

-

-

-

-

250

-

மொத்தம்

954

306

30

40

06

951

10

1983 இல் வெலிக்கடை படுகொலை நினைவுகள் நினைவுகூரப்படுகின்ற போது அதன் பொது சம்பிரதாயங்கள் கடந்து, இன்று சிறையில் உயிருடன் வாழும் கைதிகளை இட்டு சமூகத்தின் பொது அக்கறை என்ன? இது இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வி. தரவுகளின் படி பலர் எந்தக் குற்றச்சாட்டுமின்றி, விசாரணைகளுமின்றி, விசாரணைக் கைதிகளாக பல வருடமாக சிறைகளில் வாழ்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் சிதைந்து போய் இருக்கின்றது. இந்த வகையில் இன்று 954 கைதிகள் 17 சிறைகளில் வாழ்கின்றனர். இதில் கிடைத்த தரவுகளில் அடிப்படையில் குறைந்த 30 பெண் கைதிகளும், 10 சிங்களக் சிறைக்கைதிகளும் உள்ளனர். 40 பேர் தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில், 6 பேர் தங்கள் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.

இக் கைதிகள் பிணையில் கூட செல்ல அனுமதிக்காது, தங்கள் குற்றங்கள் என்ன என்று கூட  தெரியாது சிறையில் உள்ள நிலையில், இலங்கையில் பாரிய மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். அவர்களே சட்டம் நீதி அனைத்தினதும் காவலர்களாக இருப்பதே இலங்கையின் முரண் நகையாகும்.
கைதிகளை இட்டு அக்கறைப்படுவதும், சமூகரீதியாக குரல் கொடுப்பதுமே இன்று எம்முன் விடப்பட்டு இருக்கும் முக்கிய சவால்கள் பலவற்றில் ஒன்றாகும். பேரினவாதமும் அதற்கு முரணான தமிழ் தேசியமும் இதற்குத் தடையாக இருக்கின்றது என்ற உண்மையில் இருந்தே, இதை எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றது.

பி.இரயாகரன்