Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிந்த தலைமையிலான அரசால் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படும் உலக மயமாதலுக்கும், இராணுவ பாசிசமயமாதலுக்கும் தடையாக, மாகணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கின்ற 13வது திருத்தச்சட்டம் இருக்கின்றது. அரசு தனது பாசிசமாக்கல் கொள்கையை மூடிமறைத்து செயற்படுத்த, பேரினவாதத்தின் துணை கொண்டு அதிகார பகிர்வை இல்லாதாக்க முனைகின்றது. இதற்காக 13வது திருத்தச்சட்டத்தை, தமிழ் மக்களின் பிரிவினையை அடிப்படையாக கொண்டதாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது.

13வது திருத்தச்சட்டம் பற்றிய இன்றைய இனவாத அரசியல் முன்னெடுப்புக்களின் பின்னால் இருப்பது உலகமயமாக்காலும், பாசிசமயமாக்காலும் தான். அரசு பேரினவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்த உண்மையை மூடிமறைக்கின்றது. மறுபுறத்தில் இதே இனவாதத்திற்குள் நின்றுதான் இதை எதிர்க்கும் செயற்பாடுகளும் முன்னெக்கப்படுகின்றன. 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறையாக கூட்டிக்கழித்து காட்டி விடுகின்றனர். இந்த எதிர்ப்பானது இனவாதமாகவே மீள முன்தள்ளப்படுகின்றது. அரசின் நோக்கமும் இதுதான்.

மறுபுறத்தில் அரசானது தமிழ் மக்களை மேலும் மேலும் ஒடுக்க, இந்த 13வது திருத்தச்சட்டம் தடையாக இருப்பதாக சிங்கள மக்கள் மத்தியில் காட்ட முனைகின்றது. இதன் மூலம் 13வது திருத்தச்சட்டத்தை வெட்டிக் குறைக்க பல புதிய திருத்தச்சட்டங்களை இயற்றுகின்றது. கடந்த காலங்களில் 13வது திருத்தச்சட்டத்துக்கு கீழான வடக்குக்கான தேர்தலை மறுத்து பேரினவாதத்தினை முன்னெடுத்து வடக்கு மக்கள் மீது தனது ஜனநாயக விரோத பாசிசமாக்கலை முன்னிறுத்தியது. இன்று அதே தேர்தலை நடத்தி, வடக்கு மாகாணசபையினை வெல்வதற்காக எல்லா சட்டவிரோதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது. அது மட்டுமின்றி மக்களை இன, மத ரீதியாக பிளந்து தொடர்ச்சியான மோதல்களை தனது எடுபிடிகளின் ஊடாக முன்னெடுக்கின்றது.

இன்று வடக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், அரசு தோற்கடிக்கப்படும் என்பதை அரசின் எதிர்வினைகள் நன்கு தெளிவாக்கின்றன. மக்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் பொது எதிர்வினையின் அரசியல் விளைவு இதுவாகவே இருக்கும் என்பது எதார்த்தம்.

இந்த எதார்த்தம் சார்ந்த தன்னியல்பான எதிர்வினைகள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைத் தாரது. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மக்களை வாக்குபோட வைத்து தேர்தல்களில் மூலம், இனப்பிரச்சனைக்கு தீர்வு எதனையும் கண்டது கிடையாது. மக்களை பார்வையாளராக்கிய ஆயுதப் போராட்டம் எப்படி மக்களைத் தோற்கடித்து தோற்றுப்போனதோ, அது தான் தேர்தல் மூலமான வாக்களிப்பிற்கும் கூட நடந்து வருகின்றது.

ஆனால் காலத்துக் காலம் இதை புதுப்பித்துக் கொண்டு, மக்களை வாக்குப்போடும் மந்தைகளாக மாற்றுவது மட்டுமே தொடருகின்றது. 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கான ஆரம்பம் என்று வித்தை காட்டுவதும் தொடருகின்றது.

இந்தியா, டக்கிளஸ், கூட்டமைப்பு தொடங்கி மக்களை சார்ந்த செயற்பாட்டை அரசியல் நடைமுறையாக கோராத புத்திஜீவிகள் வரை, 13வது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பதே மக்கள் நலன் சார்ந்தாக காட்டமுனைகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தாத செயற்பாடுகள், கருத்துகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. இன்று இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடு என்பது, அனைத்து இன ஒடுக்கப்பட்ட மக்களையும் ஜக்கியப்படுத்தி போரடுவதன் மூலம் தான் முன்னெக்கப்பட முடியும். இதை முன் மொழியாத, இதன் அடிப்படையில் செயற்பாடத அனைத்துமே மக்கள் விரோதமானவை.

இலங்கையில் இனப்பிரச்சனை என்பது, இன்று தமிழ், சிங்கள தேசங்களின் பிரச்சனையல்ல. கடந்த காலம் போல் அல்லாது, இலங்கையில் உள்ள அனைத்து தேசிய இனங்களினதும் பிரச்சனையாகி இருக்கின்றது. தமிழ் - சிங்கள தேசங்களின் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதன் மூலம், மற்றைய தேசிய இனங்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

தேசங்களினதும், தேசிய இனங்களினதும் முரணற்ற ஐக்கியம் மூலமான ஒன்றுபட்ட மக்களின் போராட்டங்கள் மூலம் தான், இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்க்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இதுவாக மட்டும்தான் இன்று இருக்க முடியும்.

இப்படி இருக்க இந்தியாவினதும் இலங்கை அரசினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எற்ப "பொம்மலாட்ட" அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்த முடியாது. இவை அனைத்ததையும் எதிர்த்து போராட்டத்தை நடத்த வேண்டும்.

13வது திருத்தச்சட்டம் இந்திய நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை மீது திணிக்கபட்ட ஒன்று. இது இலங்கையின் இனப்பிரச்சனைகான தீர்வுக்கு பதில், நாட்டின் அதிகாரத்தை பங்கிட வைத்தது. இது நாட்டின் அதிகாரத்தில் சிலவற்றை மாகாணங்களுக்கு வழங்கியதன் மூலம் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை மறுத்தது. இதைதான் அன்று இந்தியா செய்தது. இன்று இதைத்தான் மீண்டும் செய்ய முனைகின்றது.

இதன் அடிப்படையில் இலங்கையில் பல பாகங்களின் 1987 முதல் இயங்கும் இந்த மாகாண அதிகார உறுப்புகள், இனப்பிரச்னைகான தீர்வு எதையும் வழங்கவில்லை என்பது எதார்த்தமாக்கியுள்ளது. இன்று அரசு முன்னெடுக்கும் உலகமயமாக்குதல் நிகழ்சிக்கும், இராணுவ பாசிச மயமாக்குதலுக்கும் மாகாண அதிகார பகிர்வு தடையாக இருக்கின்றது. இடையில் உள்ள அதிகார உறுப்புகளின் அனுமதியின்றி, உலகமயமாதல் செயற்பாடுகளை நேரடியாக முன்னெடுக்க முடியாதுள்ளது. உதாரணமாக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் முதல் நிலங்களை கையகப்படுத்தல் வரை பல தடைகள் உண்டு. இதை மூடிமறைக்க இந்த அதிகாரப் பகிர்வு தனது பேரினவாத செயற்பாடுகளுக்கு தடையாக இருப்தாக கூறி, உலகமாதலுக்கு எற்ப அதிகாரத்தை வெட்டிக் குறைப்பதற்கு முனைந்து இருக்கின்றது. இதை தமிழ் மக்களின் உரிமையாகவும், தமிழ் மக்களின் பிரிவினைக்கான ஒன்றாக திரித்துக் காட்டிவிடுவதன் மூலமே செய்ய முனைகின்றது. இன்று இலங்கையில் நடந்து கொண்டு இருப்பது இது தான்.

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருப்பதாக காட்ட முற்படுகின்ற இனவாதிகளும், இந்தியா நலனை முன்னிறுத்திய மீண்டும் களமிறங்கியுள்ள இந்திய அருவடிகளும், தமிழ் மக்களின் தீர்வுக்கான ஒன்றாக 13வது திருத்தச்சட்டத்தை முன்தள்ளுகின்றனர். பேரினவாதிகளோ இதை பிரிவினைவாதமாக காட்ட, இந்திய அருவடிகள் இதை இனப்பிரச்சனைக்கான தீர்வாகக் காட்டுகின்றனர். இரண்டும் மக்கள் விரோதமான செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இரு நேர் எதிரான போக்குகள், ஒன்றையொன்று சார்ந்து தம்மை நேராக்கி காட்ட முனைகின்றனர். மக்களின் மீதான பொது ஒடுக்குமுறையையும், பொது அவலத்தையும் தமக்கு எற்ப திரித்து, 13வது திருத்தச்சட்டத்தக்குள் புதைத்து பாசிசமாக்கி விட முனைகின்றனர்.

இந்த பின்னனியில் வடக்கு கிழக்கில் திணிக்கப்பட்டு இருக்கும் பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இனவொடுக்குமுறை திணிக்கப்படுகின்றது. இந்த இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெக்கப்பட வேண்டும். இதைவிட வேறு மாற்று வழி கிடையாது.

இந்த வகையில் 13வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களுக்கு சாதகமானதாக காட்டி முன்தள்ளும் பேரினவாத செற்பாடுகளை எதிர்த்தும், வடக்கு மாகாணசபையினை மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும், போராடுவது அவசியமானது.

அதே நேரம் பேரினவாத இனவொடுக்குமுறை மற்றும் அதன் ஜனநாயக விரோத செயலை முன்னிறுத்தி, மக்களை பிளக்கும் குறுந்தேசியவாத செயற்பாடுகள் தொடங்கி மக்களை ஏமாற்றி பிழைக்கும் தேர்தல் அரசியல் வரை அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.

அரசினது ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள், மற்றொரு மக்கள் விரோத அரசியலாக இல்லாது இருக்கும் வரை, அவற்றை ஆதாரிக்க முடியும். மக்களை இன ரீதியாக பிரிக்கின்ற, அரசுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டும் காணமல் இருக்க முடியாது.

இன்று 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்களும், மாற்றங்களும் இனவாதத்தை கூவி விற்கின்றன. வடக்கு தேர்தல் தொடர்பான நிலைப்படுகளும், செயற்பாடுகளும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றன. இதற்குள் அரசியலை முன்னெடுக்கின்ற அனைவரும் மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் உருவாகி வந்த ஐக்கியத்தை பிரித்து விடுகின்ற இனவாதமும், கைக் கூலித்தனமும் நாட்டின் பொது அரசியலாக்கப்படுகின்றது. மக்களின் ஐக்கியமும், ஜனநாயக உரிமைகளும் சிதறடிக்கப்படுகின்றன.

இலங்கை அரசுக்கு எதிராக மேற்கு ஏகாதிபத்தியங்களை சார்ந்த தமிழ் தேசியம் போல், இந்திய கைக் கூலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியம் மீண்டும் ஒரு அரசியல் அணியாக முன்னிறுத்துவது, முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றது. இதை பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக முறியடிக்க வேணடும்.

* 13வது திருத்தச்சட்டம் மூலம் பேரினவாதம் முன்தள்ளும் இனவாதத்தை முறியடிப்போம்!

* 13வது திருத்தச்சட்டத்தை முன்னிறுத்தும் இந்தியக் கைக் கூலித்தனத்தையும், இந்தியா மேலாதிக்கத்தை இனம் காண்டு போராடுவோம்!

* வடக்கு மக்களுக்கு மறுக்கப்படும் மாகாணசபைக்காவும், தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகவும் போராடுவோம்!

* வாக்கு போடுவதன் மூலம் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ற அரசியல் மோசடியை அம்பலப்படுத்துவோம்!

* அனைத்து விதமான இனவாதத்தையும் எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தைக் கோருவோம்!

* மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலம் தீர்வைக் காணமுடியும் என்ற உண்மையை முன்னிறுத்தி போராடுவோம்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

03.07.2013