Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தெருவில் போகும் ஒரு மனிதனை கொன்று விட்டு அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்படும் முஸ்லீம் மக்களிற்காக பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என வெட்டிய கத்தியை இறுக்கிப் பிடித்தபடி குருதி வழிந்தோடும் கைகளை உயர்த்தியபடி குழந்தைகள் பள்ளி விட்டு வரும் தெருவில் நின்று கொண்டு வெறியாட்டம் ஆடியவர்கள் நிச்சயமாக போராளிகளாக இருக்க முடியாது. அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள். உலகெங்கும் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களை இவர்களைப் போன்றவர்கள் இத்தகைய வெறிச்செயல்களின் மூலம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்குள் தள்ளி விடுகிறார்கள். ஒடுக்குகின்ற ஆதிக்கசக்திகளிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற எதிரியை தொடர்ந்து கட்டமைத்து கொள்ள துணை போகிறார்கள்.

லீ ரிக்பியின் படுகொலை குறித்து முழுச்சமுதாயமே அதிர்ச்சியும், கவலையும் கொண்ட போது அன்ஜம் செளத்திரி என்கிற முஸ்லீம் மதபோதகர் ரிக்பி நரகத்தின் தீச்சுவாலைகளில் எரிக்கப்படுவார், ஏனென்றால் அவர் ஒரு முஸ்லீம் அல்ல, நாங்கள் எல்லோரையும் இஸ்லாத்தில் சேருமாறு அழைக்கிறோம் அந்த அழைப்பை ஏற்காதவர்கள் நரகத்திற்கே போவார்கள். லீ ரிக்பியை இஸ்லாத்திற்காக கொலை செய்தவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உளறியிருக்கிறார். இத்தகைய பைத்தியக்காரத்தனமான, பொறுப்பற்ற பேச்சுக்கள் பொதுமக்களின் மனதில் இஸ்லாமிய வெறுப்பை எளிதாக தூண்டி விடக்கூடியவை. லீ ரிக்பியின் கொலைக்குப் பின்பு English Defence League என்கிற வெள்ளை இனவாத அமைப்பின் பேஸ்புக் அங்கத்தவர் எண்ணிக்கை இருபதினாயிரத்திலிருந்து அறுபதினாயிரமாக ஒரே நாளில் கூடியிருக்கிறது. பிரித்தானியாவில் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைகள், வாய்மொழி அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.மனிதரை, நாடுகளை மதவெறியுடன் பிரித்துப் பார்க்கும் இவர்களைப் போன்றவர்கள் வேலை எதுவும் செய்வதில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் சமுக உதவி பணத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா மதத்தையும் சேர்ந்தவர்கள், மதமற்றவர்கள் என சமுதாயத்தின் பணத்தை உதவியாக பெறும் போது யாரின் பணம் என்று பார்க்காமல் பெற்றுக் கொள்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஏகாதிபத்தியங்கள் இராணுவத்தினரை போர்க்களங்களிற்கு அனுப்பி விட்டு தாம் மாளிகைகளில் சுகபோகம் அனுபவிப்பது போல் மதத்தைக் காப்பதற்கான போர் என்று மற்றவர்களை மூளைச்சலவை செய்து விட்டு இவர்கள் பேச்சுடன் மட்டும் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் மக்களை முஸ்லீம், முஸ்லீம் அல்லாதவர்கள் என்று பிரித்து முஸ்லீம்களை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துகிறார்கள். மாறாக பிரித்தானிய தேசியக் கட்சி (British National Party ) போன்ற வலதுசாரி நிறவெறி, இனவெறிக்கட்சிகள் பிரித்தானியாவில் வாழும் யூதர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் பிரித்தானிய சமுதாயத்துடன் ஒத்து வாழ்கிறார்கள். பிரித்தானிய சட்டதிட்டங்களிற்கு கீழ்ப்படிந்து வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் சேர்ந்து வாழ முடியாதவர்கள், மதவெறி பிடித்தவர்கள் என்று சிறுபான்மை இனங்களை பிரித்து நிறவெறிக்கு எதிரான ஒற்றுமையை குலைக்க முயல்கின்றன. இஸ்லாமிய ஷரியா சட்டம் வேண்டும் போன்ற யதார்த்தமற்ற கோரிக்கைகள் இனவாதிகளின் பிரச்சாரங்களிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.


ஈழவிடுதலை இயக்கங்கள் சிங்கள, முஸ்லீம் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டமாக்கி தமிழ்மக்களின் பேரழிவிற்கு வழிவகுத்தன. அனுராதபுரத்து பொதுமக்களின் கொலைகள் ஆதிக்கசக்திகள், வெளிநாட்டு உளவுநிறுவனங்கள் என்பவற்றின் தூண்டுதலிலேயே நடைபெற்றன. ஜரிஸ் போராளிகள் ஆங்கில பொதுமக்களை குண்டு வைத்து கொன்றதை பிரித்தானிய அரசு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் எனப் பிரச்சாரம் செய்து அயர்லாந்து மீதான தனது மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் நியாயப்படுத்திக் கொண்டது.

இனவெறி, மதவெறி கொண்ட அமைப்புக்களினால் போராட்டம் கடத்தப்பட்டு திசை மாறிச் செல்லும் போது போராட்டம் கொலைகளாக, பயங்கரவாதமாக எதிர்நிலைக்கு சென்று விடுகிறது. ஆதிக்கசக்திகள் அதை தமக்கு சாதகமாக அறுவடை செய்கின்றன. இரு பக்கத்திலும் பலியாவது ஏழை மக்கள் தான். கொன்றவனும் ஏழை. கொல்லப்பட்டவனும் ஏழை. ஆனால் இந்த பொம்மலாட்டத்தின் சூத்திரதாரிகளின் மீது தூசு கூடப் படிவதில்லை. முஸ்லீம் மக்களின் பாதுகாவலன் என்று பீற்றிக் கொள்ளும் அல்-ஹைடா அமைப்பை முஸ்லீம் பயங்கரவாதத்தை அழிக்க சபதம் பூண்டிருக்கும் அமெரிக்காவும், ஏழைச்சிறுமி ரிசானாவை கொன்று இஸ்லாமிய நீதியை நிலை நாட்டிய சவுதி அரேபியாவும், மேற்கு நாடுகளின் அடியாள் பாகிஸ்தானும் கூடி கலவி செய்து அப்கானிஸ்தானத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் என்ற கம்யுனிச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதாக கிலாரி கிளின்டன் பெருமை கொள்கிறார்.

பின் லாடனை வளர்த்து விட்ட அமெரிக்கா பின் அதே பின் லாடனின் பயங்கரவாதத்தை காரணங்காட்டி முஸ்லீம் தேசங்கள் முழுக்க தன் ராணுவ, பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. சவுதி அரேபியா அமெரிக்காவிலும், மேற்கு நாடுகளிலும் பெரும் மூலதனத்தை முதலீடு செய்கிறது. பாகிஸ்தானின் வளர்ப்புப்பிள்ளைகளான தலிபானை பாகிஸ்தானே அமெரிக்காவுடன் சேர்ந்து தேடித்தெடி அழிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியும், அரபு சேக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டு மர்மப்புன்னகை செய்கிறார்கள்.