கம்யுனிஸ்ட்டு போராளியான Chris Hani
மட்டக்களப்பு தொகுதி ஒரு தமிழர், ஒரு முஸ்லீம் என இரட்டை அங்கத்துவர் தொகுதியாக கட்சிகளால் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி. எழுபத்தேழு தேர்தலில் கூட்டணி சார்பில் ராசதுரையும் மற்றொரு முஸ்லீம் வேட்பாளரும் போட்டியிடுவது என்ற முடிவை எதிர்த்து முஸ்லீம் வேட்பாளரின் இடத்தில் நான் தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்து போட்டியிட்டு தேர்தலில் தோற்றவர். அதன் மூலம் மட்டக்களப்பு முஸ்லீம் மக்களின் வாக்குகள் பேரினவாதக்கட்சிகளிற்கு போக காரணமாக இருந்தவர். இன்று சென்னையில் இருந்து கொண்டு “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று இந்திய அரசிற்கு அடிமை உணர்ச்சி பொங்க வாழ்த்துப்பா பாடுகிறார்.
"இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தன் அண்ணன் கதை சொல்வதை கூட ஒரு கணம் விட்டு விடுவோம். ராஜிவ் காந்தியின் ஆக்கிரமிப்பு ராணுவம் ஈழத்தில் நடத்திய கொலைகள், பாலியல் வன்முறைகள், கொள்ளைகள் என்பன இவர்களிற்கு எப்படி மறந்து போகும். இறந்தது அடுத்த மனிதன் தானே, பாலியல் கொடுமைக்குள்ளாகியது மற்றவன் மனைவி தானே, மகள் தானே என்று சுயநலமாக சிந்திக்க கூடிய ஒரு இழிபிறவியால் தான் இப்படி ஆக்கிரமிப்பாளர்களை நியாயப்படுத்த முடியும். கொலைகாரர்களின் காலை கழுவ முடியும். அடித்தவனின் கையை நக்க முடியும்.
கிழக்கு தைமூர், சூடான், கொசாவோ போன்ற நாடுகள் சர்வதேசத்தினால் சுதந்திரம் பெற்ற நாடுகள். இந்த நாடுகளைப் போல ஈழதேசமும் விடுதலை பெற வேண்டுமாயின் ஜக்கியநாடுகள் சபை, அமெரிக்கா, மேற்கு நாடுகள், இந்தியா என்று எல்லோரினதும் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று இவரைப் போன்றவர்கள் அரசியல் ஆய்வுகளை அள்ளி வீசுகிறார்கள். எல்லாவற்றையும் இழந்து நிராதராவாக நிற்கும் மக்களை வல்லரசுகள் கொள்ளையடிப்பதற்கு மறுபடியும் தரகுவேலை பார்க்கும், மாமாவேலை பார்க்கும் அரசியல் இது. பிணத்தை விற்றும் பணம் சேர்க்கும் மரண வியாபாரிகளின் கூட்டம் இது.
இந்த நாடுகளிற்கு "சுதந்திரத்தை" இவர்கள் மக்களின் நலன்களிற்காக கொடுக்கவில்லை. தங்களின் நலன்களிற்காக, வியாபாரங்களிற்காக, பிராந்திய அரசியல் நோக்கங்களிற்காகவே கொடுத்தார்கள். யூகோஸ்லாவியாவை உடைக்க வேண்டும். ரஸ்சியாவிற்கு அருகில் தங்களிற்கு ஆதரவான தளம் வேண்டும் என்பதற்காகவே கொசாவோவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அந்த நாடுகளில் இருந்த முற்போக்கான, ஏகாதிபத்தியங்களிற்கு எதிரான சக்திகளை அழித்து விட்டு தங்களது தலையாட்டி பொம்மைகளிற்கு அதிகாரத்தை கொடுப்பதற்கே இந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் இறந்த சூனியக்காரி மார்க்கிரட் தச்சர் மரணமடைந்த போது முன்னாள் தெற்கு ஆபிரிக்க ஜனாதிபதி F.W. de Klerk எழுதிய கட்டுரை ஒன்றில் என்ன காரணத்திற்காக பெரும்பான்மையான தெற்கு ஆபிரிக்காவின் சொந்த மக்களான கறுப்பினமக்களிற்கு, குடியேறிய காலனித்துவவாதிகளின் பரம்பரையினரான சிறுபான்மை நிறவெறி வெள்ளையர்களால் உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை எந்தவித கூச்சமும் வெட்கமும் இன்றி எழுதுகிறார். P.W போத்தா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசில் (A.N.C) இருந்த கம்யுனிஸ்டுக்களின் வளர்ச்சியை கண்டு பயந்தே அவர்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். தீவிர கம்யுனிஸ்ட் எதிர்ப்பாளர்களும், யுத்த வெறியர்களுமான மார்க்கிரட் தச்சர், டொனால்ட் ரீகன் போன்றோர் கம்யுனிச அபாயத்தை கண்டு கொண்டனர். உறுதியான கம்யுனிஸ்ட்டு போராளியான Chris Hani உட்பட பல கம்யுனிஸ்ட்டுக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தங்களது சொத்துக்களிற்கும் நலன்களிற்கும் பாதுகாப்பை தரக்கூடிய மிதவாதிகளின் கைகளில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று வரை தெற்கு ஆபிரிக்காவின் பொருளாதாரத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்கும் கம்யுனிஸ்ட்டுக்களால் ஆபத்து வராமல் பாதுகாத்ததில் மார்க்கிறட் தச்சரின் பங்கு அளப்பரியது என்று கிளார்க் உருகுகிறார். இன்று அன்னை சோனியா, அண்ணன் கமரோன், அகில உலக நாயகன் ஒபாமா என்று காசி ஆனந்தன், உருத்திரகுமாரன் உருகுவதும் உண்மையான விடுதலை காட்டிக் கொடுப்பதற்கே. தேசத்தை விற்றாவது, தேச மக்களை கொன்றாவது பதவி நாற்காலியை பங்கு போட்டுக் கொள்ளுவதற்கே. ஆனால் இழப்பதற்கு எதுவுமே இல்லாத மக்கள் இவர்களின் பச்சோந்தித்தனங்களை சரியாகவே அடையாளம் கண்டு கொள்ளுவார்கள்.
சண்முகம் சிவலிங்கத்தின் "வெளியார் வருகை" என்ற இந்த கவிதை காசி அண்ணா போன்ற வியாபாரக் கவிஞர்களிற்கு சமர்ப்பணம்.
என்ன இவையெல்லாம்
என்கிறேன் இங்கிலீசில்
எல்லாம் வெளியாரை ஏற்பதனால்
என்றவரும் இங்கிலீசில் சொன்னார்
இனி என்ன செய்வது என்றேன்
பெண்டு
பிள்ளை யாவரையும்
பொலிசில் ஒப்படைத்து
வந்து நீர் வீட்டுக்கு காவல் இரும் என்றார்.
சிந்தித்தேன்
நாங்களே ஒருவனைத் தீர்த்து விட்டோம்
நாங்களே தான்
இந்த நமனை பலி கொண்டோம்
வந்தால்,
இனியும் அவர்களை மாய்ப்போம் நாம்
இந்த வழியே
இனி மரணத்துள் வாழ்வோம்.