பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்
பிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.
அந்தவீட்டுக்கார மனுசியும் ஆ... கயனண்ணை இந்தாங்கோ… பலகாரம் சாப்பிடுங்கோ தேத்தண்ணி குடியுங்கோ எண்டு ஒரு பலகாரத் தட்டையும் தேத்தண்ணியையும் முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.
எனக்குஅவரைப் பார்க்கும் போது எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தாலும் உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அண்ணை நீங்களும் பலகாரம் சாப்பிடுங்கோவன் என்று என்னைப்பார்த்துக் கேட்க, நானும் இப்பதான் சாப்பிட்டனான் எனச் சொல்லி மறுத்துவிட்டேன். அவர் கொஞ்சம் குனிந்து, தட்டிலிருந்த பலகாரத்தை எடுக்கஅவர் பட்ட கஸ்ரத்தை என்னால் பார்க்க முடியாமல் இருந்தது.
கைவிரல்கள் நடுங்கியபடியே அதை எடுத்து வாயில் போடும்போது அவர் பட்ட அவஸ்தையும் அதற்கெடுத்த நேரமும் அவர் வெறியில் இல்லை. அவர் ஒரு சுகமில்லாதவர் என்பதை என்னால் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருந்தது.
நான் பார்த்த பேப்பரை வைத்துவிட்டு உங்களுக்கு என்னn பயர் எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க, ஒருகொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறன், தன்ரை பெயர் கயேந்திரன் என்றும், கயன் எண்டு கூப்பிடுவினம் எண்டு சொல்லிப் போட்டு. என்னையும் விசாரித்தார்.
அவர் கதைக்கும்போது தலையும் சேர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. நான் இங்கே படமெடுக்கவந்தனான் என, நான் இருந்து வந்த சிற்றியின் பெயரையும் சொன்னபோது, அப்ப என்னைத் தெரிந்திருக்க வேண்டுமே..? நான் அப்போது உங்கட இடத்துக்குப் பக்கத்திலுள்ள சிற்றியிலேதானே புட்போல் விளையாடினனான் எண்டும், கயன் எண்டால் என்னைக் கனபேருக்குத் தெரியும் எண்டும், ஒருபெருமிதச் சிரிப்போடு அவர் சொன்னபோது எனக்கு வியப்பாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அந்தக் கயனா.., நீங்கள்..! ஆம் என்று ஒருகுழந்தைபோலச் சிரித்தார். என்ரை மனம் ஒருகணம் ஆடி அடங்கி நின்றது.
அந்தக் கயனா..? அவனா இவன்..!? அவன் எங்கே..!இவன் எங்கே..!? அவனின் அந்த அழகுத் தோற்றம், கம்பீரம், விளையாட்டு வீரனுக்கான அந்த ஸ்ரையில் எங்கேயெல்லாம் மறைந்து போனது?
ஆனால் இவனோ.., முகமெல்லாம் அதைச்சு கண்களெல்லாம் உள்ளேபோய் முதுகும் வளைந்து கூனிக்குறுகிப் போய்..
கயன் அப்ப என்னையும் தெரிந்திருக்கவேணுமே..? அப்போ எங்களுடைய சிற்றிக்காக நானுந்தானே விளையாடியவன். ஞாபகம் இருக்கா என்று கேட்டபோது கண்களைக் கசக்கியபடியே, என்ன பெயர் சொன்னீங்கள் என்று திரும்பக் கேட்டு யோசித்தபடி.., அப்போ பாட்டெல்லாம் பாடுறவன் நீதானே என்று கேட்க நானும் தலையாட்ட, அவன் முகத்திலே அளவில்லா ஆனந்தத்தைக் காணக்கூடியதாய் இருந்தது.