பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்
மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களும் கஸ்ரத்தில் கஞ்சி குடிக்கின்ற நிலையில் இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஸ்ரப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். நகுலன் என்னுடன் ஏ.ஏல் படித்தவர். நிரஞ்சன் எனது ஊரைச் சேர்ந்த மாணவர். ரகு கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தவர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு தந்தார்கள். தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள். உதாரணமாக, சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான நங்கநல்லூர், பழவந்தாங்கல் பிரதேசங்களுக்கு நாம் போகும்போது என்னுடன் படித்தவர்களோ ஊரவரோ என்னைக் கண்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே அவ்வாறு சாப்பாட்டிற்காக அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.
பயந்தவனைப் பயந்தவன் துரத்தும் கதை
புலிகளிலிருந்து பிரிந்த தோழர்களுக்கு எமது சமையல்முறை, சாப்பாட்டின் வகை ஆரம்பத்தில் பெரிய பிரச்சினையாக இருந்தது. அவர்கள் அதுவரை இவ்வாறான கஸ்டங்களை அனுபவித்திருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். நாம் அவர்களை ஒரு சில வாரங்களுக்குள் எம்மைப் போலச் சமைப்பதற்குப் பழக்கி விட்டோம். அந்தக் காலகட்டத்தில் ஒருநாள் நான் தி.நகர் பகுதியில் மரக்கறி வாங்கிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கி ஒரு ரெலோ உறுப்பினர் வந்தார். அந்த நபருடன் தான் ரெலோவில் இருக்கும்போது அவருக்குக் கண்ணாடி வாங்கச் சென்று பின்னர் படம் பார்த்தேன். என் சைக்கிளைப் பிடித்து நிறுத்தும் போது தான் அவரைக் கண்டேன்.
அந்த ரெலோ உறுப்பினருக்கு நான் ரெலோவை விட்டுப் பிரிந்தது தெரியும். அவர் சைக்கிளைப் பிடித்தவுடன் அன்றைக்கு எனக்குப் பிரச்சினைதான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரோ என்னுடன் தனியாகக் கதைக்க வேண்டும் என்றும் தேநீர் கடைக்குப் போய் கதைப்போம் என்றும் சொன்னார். நான் எதுவாக இருந்தாலும் இப்ப வரமுடியாது, நாளை இதே நேரம் சந்திப்போம் எனக் கூறிவிட்டு ஒருவாறு தப்பிவிட்டேன். அடுத்த நாளிலிருந்து தி.நகர் சந்தைக்குச் செல்லுவதைத் தவிர்த்து விட்டேன். பின்னர் ஒருநாள் மீண்டும் அவரைத் தற்செயலாகச் சந்திக்கவேண்டி நேர்ந்தது. நான் அவரைக் கண்டதும் ஓடவும் அவர் என்னைத் துரத்தவும் ஒருவாறாகத் தப்பிவிட்டேன்.
அதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால் அவர் ரெலோவை விட்டுத் தப்பியோடி தலைமறைவாக வாழ்பவர் என்பதும் அவர் என்னுடன் கதைக்க முற்பட்டது தனக்கு ஏதாவது உதவிகளை நாம் செய்வோம் என்று எதிர்பார்த்துமே. தன்னை ரெலோவிடமிருந்து பாதுகாக்க வழியில்லாமல் கஸ்டப்பட்ட நிலையில் தான் என்னைத் துரத்தியதாகச் சில மாதங்களின் பின்பு தான் நான் அறிந்தேன்.
மீண்டும் மிரட்டல்
ஒரு சில மாதங்களின் பின்பு கடைசி இரவுப் படக்காட்சிக்கு ஒரு நண்பர் எம் எல்லோரையும் கூப்பிட்டார். நானும் மற்றும் புலிகளிடமிருந்து பிரிந்தவர்களுமாக பத்துப் பேரளவில் லிபேட்டித் திரையரங்கத்திற்கு படத்திற்குச் சென்றோம். ரெலோவைச் சேர்ந்த எனது ஊரவர் ஒருவர் இடைவேளையின் போது என்னை அடையாளம் கண்டு கதைத்தார். அவருக்கு நான் ரெலோவை விட்டுப் பிரிந்தது தெரியும். அரசியலைத் தவிர்த்து மற்ற எனது ஊரவர்களையும் ரெலோவினுள் இருந்தவர்களைப் பற்றியும் விசாரித்து விட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றேன்.
படம் முடிந்தபின் நானும் மற்றவர்களும் வெளியேறும் போது எனது பெயரைச் சொல்லி என்னை ரெலோவினர் கூப்பிட்டனர். என்னுடன் வந்த புலியிலிருந்த உறுப்பினர்களை உசார்ப்படுத்தி விட்டு நான் அவர்களை நோக்கிச் சென்றேன். அந்தநேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உறுப்பினர்கள் சிலரும் அந்தத் தியேட்டரை விட்டு வந்தனர். அவர்களை எனக்குத் தெரியும். அவர்களும் நான் ரெலோ உறுப்பினர்களை நோக்கிச் செல்வதைக் கண்டு நிலைமைகளை அவதானித்தனர். காந்தி என அழைக்கப்பட்ட ரெலோவின் உறுப்பினர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அவரின் கேள்விகள் எதுவும் சரியானதாக எனக்குப் படவில்லையாதலால் எனக்குள் பயம் ஏற்பட்டது. எனினும் எனக்குத் துணையாக புலிகளிடமிருந்து வெளியேறியவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் சில உறுப்பினர்களும் இருப்பதைக் கண்டு எனக்கு ஒரு துணிவு வந்தது. எனினும் நாளைக்கு நான் இதே பக்கபலத்துடன் செல்ல முடியாது. எனவே அவர்களுடன் முரண்படுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
அவரின் கேள்விகள் முதலாவது ரெலோ பிழை என்று சொல்லிப் புறப்பட்டீர்கள். பிறகு ஏன் ரெலோவுக்கு எதிராக வேலை செய்யலாம் தானே என்றிருந்தன. அதற்கு எனது பதில் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என்பதாகும். இரண்டாவது எச்சரிக்கை என்னவென்றால் தனது அக்காவை வேண்டுமானால் கற்பழிக்கலாம். அதைத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் சிறி சபாரத்தினம் அண்ணாச்சியைப் பற்றி எதுவும் கதைக்கக் கூடாது என்பது. கதைத்தால் நான் உயிருடன் இருக்க முடியாது என்பதாகும்.
அவற்றைக் கேட்டவுடன் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவ்வாறு பெரிய விலாசமாக (முட்டாள்தனமாகக் கதைப்பதையும்) எச்சரிக்கை செய்வதையும் கண்டு பயப்படுவது போல் நடக்க வேணும் போல் அவரின் எச்சரிக்கைகள் இருந்தன. நான் எதுவும் கூறாமல் திரும்பும் போது மீண்டும் காந்தி சொன்னார், இப்ப வேணுமென்றாலும் தாம் விரும்பினால் என்னைப் பிடித்துக் கொண்டு போக முடியும் என்றும் பாவம் என்று விட்டுவிட்டுப் போவதாகவும் சொன்னார். அதில் கவனிக்க வேண்டியது, அன்று என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும் அவர்கள் விரும்பினால் இன்னுமொரு நாள் என்னைப் பிடிக்கலாம் என்பதே.
அன்றிலிருந்து எனது உயிருக்கு மீண்டும் உத்தரவாதம் இல்லாத நிலைமை வந்தது. நான் அவர்களின் கடைசி வார்த்தைக்குப் பதில் எதுவும் சொல்லாமலும் அவர்களைத் திரும்பிப் பாராமலும் என்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து வந்து விட்டேன். அன்று நான் வீடு திரும்பும் போது எம்மை நோக்கி வரும் வாகனங்கள் எல்லாம் ரெலோவின் வாகனங்கள் போல எனக்குத் தெரிந்தது. அன்றிரவு முழுவதும் தூக்கமில்லாமலே கழிந்தது. ஒரு பக்கம் அவர்களின் எச்சரிக்கையும் மறுபக்கம் அவர்களின் முட்டாள்தனமான தலைமை விசுவாசத்தினையும் யோசித்து பயத்தினால் சிரிக்கவும் முடியாமல் தவித்தேன்.
புலிகளிடமிருந்து பிரிந்தவர்களுக்குப் புலிகள் கொடுத்த தண்டனை
புலிகளிடமிருந்து வெளியேறியவர்களைப் பற்றிச் சிலவற்றைக் கூறவேண்டும். வெளியேறியவர்களில் ஒருசிலரே எம்முடன் அரசியல் வேலைகள், அரசியல் நிலைமைகள், இயக்கங்களில் உள்ள நிலைமைகள் என்பவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவார்கள். ஒரு சிலர் எதைப் பற்றியுமே கதைப்பதில்லை. அவர்களை நோக்கிய "நீங்கள் ஏன் வெளியேறினீர்கள், உங்களுக்கும் தலைமைக்கும் உள்ள பிரச்சினைகள் என்ன " என்ற கேள்விகளுக்கு பிரபாவின் கலியாணம் பிரச்சினை என்றும், தாம் ஹோர்லிக்ஸ் கேட்டதாகவும் அவர்கள் பூஸ்ற் தந்ததாகவும் சொல்லியும் அரசியல் கதைப்பதை தவிர்த்தார்கள்.
அதற்குக் காரணம் ஒன்று அவர்களுக்கு அரசியல் தெரியாது. மற்றது பிரச்சினைகளைக் கதைத்தால் தமக்கு ஏதாவது நடக்கலாம் என்ற பயமுமாக இருக்கலாம். அதில் பலர் வெளிநாடுகளுக்கு போவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். இன்னும் சிலர் புதிய ஸ்தாபனம் அமைப்பது பற்றியும் வேலை செய்வது பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் அரசியல் வேலைசெய்ய முற்பட்டவர்கள் ஒரு பகுதியாகவும் வெளிநாடு செல்வதற்கு இருந்தவர்கள் மறுபகுதியாகவும் வேறு இடங்களுக்கு மாறி விட்டனர்.
அவ்வாறு வேலைசெய்ய முடிவு செய்தவர்களில் ஒருவர் ( இவர் நெல்லியடியை சேர்ந்தவர்) வேதாரண்யத்தில் புலிகளினால் பிடிக்கப்பட்டு பொட்டம்மானால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டார். அதாவது உழண்டி ஒன்றில் அவரைக் கட்டிப் பாறைகளின் மேல் அடிபட விடுவதும் எடுப்பதுமாகவும் சித்திரவதை செய்யும்போதே அவர் உயிரை விட்டார். அந்த நிகழ்ச்சியானது எமக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஒன்று, அந்தத் தோழருடன் நாம் குறுகியகாலம் பழகியிருந்தோம். அதானல் அவரின் மீது எமக்குத் தனிப்பட்ட பாசம் ஏற்பட்டிருந்தது. உண்மையில் அரசியல் பிரச்சினைகளைக் கதைத்த ஒரு சிலரில் அவரும் ஒருவர். இரண்டு, அவரின் வேதாரண்யத்திற்கான பயணம் மிகவும் ரகசியமானதாகக் கருதப்பட்டிருந்தது.
அவரின் பயணத்தைப் புலிகள் எவ்வாறு அறிந்தார்கள்? யார் தகவல் கொடுத்தது? அதனால் பலரும் குழப்பமடைந்தனர். புலிகளிலிருந்து பிரிந்து எம்மிடம் வந்தவர்களில் ஒருவர் புலியின் உளவாளியாக அனுப்பப்பட்டிருப்பதற்குரிய சாதகங்கள் உள்ளதனால் அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. எம்மிடம் முன்பு தங்கி இருந்தவர்கள் இடவசதியும் தேவையும் கருதி தற்போது வேறு இடங்களில் இருந்தனர் என்றபடியால் தான் நான் "அவர்களுக்கு" என்று குறிப்பிட்டேன்.
அவர்களுடன் வாழ்ந்த ஒருவர்தான் உளவாளி என்று சில மாதங்களின் பின் அறியப்பட்டார். அவர் தான், பயணம் பற்றிய தகவல்கள் மற்றும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிப் புலிகளுக்குத் தகவல் கொடுத்து வந்தார் என்றும், அவர் பிரபாவினால் பிரிபவர்களுடன் பிரிந்து விடுவது போல் நடிக்க ஏற்பாடாகி அனுப்பப்பட்ட உளவாளி என்றும் பின்பு ஒப்புக்கொண்டார். இவர் இப்பொழுது ஜரோப்பிய நாடு ஒன்றில் இருப்பதாக அறிகிறேன்
அதைக் கேள்விப்பட்ட நாம் மிகவும் பதட்டம் அடைந்தோம். அவர் எம்மைப் பற்றி என்ன தகவல்கள் சொன்னார், அதன் விளைவுகள் என்ன என்பதாக இருக்கும் என்பவையே பதட்டத்திற்கு காரணங்களாகும். எவரும் புலிகளிலிருந்து பிரிந்தாலும் புலிகளைப் பற்றி விமர்சனங்களை வைப்பதில்லை. வைக்க அனுமதியுமில்லை. அதற்கு சிலர் கூறிய காரணம், தமக்கு அரசியல் வகுப்புக்கள் எதுவும் இல்லாததால் தமக்கு விமர்சனங்களை வைக்கத் தெரியாது என்பதாகும். ஆனால் அவர்களில் பலர் புலிகளிலிருந்து வெளியேறினாலும் புலிகளில் இருந்ததைப் போன்ற நடவடிக்கைகளிலே பின்பும் இருந்தனர். அவர்கள் ஏன் புலிகளை விட்டு வெளியேறினார்கள் என்று கூடச் சொல்வதில்லை. அதனால் அவர்களைப்பற்றி எனக்குப் பல கேள்விகள் இருந்தன.
இருப்பினும் அன்று புலிகளிலிருந்து வெளியேறியவர்களில் சிலர் பின்னர் வேறு அரசியல் ஸ்தாபனங்களில் வேலை செய்தார்கள். மக்களின் விடுதலைக்காக போராடினார்கள். அவர்கள் பகிரங்கமாகவே விமர்சனங்களை வைத்தவர்கள். பொதுவாக எம்மவர் பலரிடம் ஒரு கருத்து உண்டு. ஒருவர் ரெலோவில் இருந்து விலகி இருந்தால் அவர் அந்த தலைமையிடம் இருந்தும் ஸ்தாபனத்தில் இருந்தும் விலகி விட்டவராகவே கருதுகின்றோம். ஆனால் புலிகளிடமிருந்து விலகியவர் என்று கூறினால் பலருக்கும் அவரில் சந்தேகம் உள்ளது. அதற்குக் காரணம், மேல் சொல்லப்பட்ட சம்பவங்கள் போல நடந்துள்ளமையே. அந்த நம்பிக்கையீனத்தினைப் போக்குவதற்கு புலிகளிடமிருந்து பிரிந்தவர்கள் ஒழுங்கான விமர்சனங்களை முன்வைக்காதபோது அது தொடர்ந்ததற்கு வாய்ப்புக்கள் இருந்தன. இன்றும் உள்ளன.
தமிழ்நாடு அரசும் நாமும்
தமிழ்நாட்டு அரசு எம்மைக் கையாண்ட விதத்தினைப் பற்றிக் கூறவேண்டும். முதலில் சுதன், ரமேஸ் விவகாரத்தில் அவர்களின் விடுதலையில் ஈடுபட்ட அதிகாரிகள் அன்றிலிருந்து அவர்களின் கண்காணிப்புக்குள் எம்மையும் மற்றைய இயக்கங்கள் போல் வைத்திருந்தனர். அதாவது, ஒரு அதிகாரி காலையில் ஒவ்வொரு இயக்கத்தின் அலுவலகங்களுக்கும் சைக்கிளில் போய் நிலைமைகளைக் கேட்டும் அவதானித்தும் மேலதிகாரிகளுக்குத் தகவல் சமர்ப்பிப்பார். அவ்வாறு தான் நாம் இருக்கும் வீட்டிற்கும் வருவார். அங்கு என்ன நடக்கின்றது? யார் யார் வந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வீட்டில் இல்லை? எங்கு போயிருக்கிறார்கள்? போன்ற பல விசயங்களையும் அறிய முயற்சிப்பார்.
ஆரம்பத்தில் அதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தினாலும் பின்னர் எமது நடவடிக்கைகள் எதுவும் அவர்களுக்கு புதிய தகவல்களைக் கொடுப்பது போன்று இல்லாத நிலையில் தினமும் வருவதை நிறுத்திக்கொண்டு வாரத்திற்கு இரு தடவை பின்னர் வாரத்திற்கு ஒரு தடவையாக மாற்றிக் கொண்டனர். அந்த மாற்றம் எமது வீட்டிற்கு வரும் அதிகாரிக்குத் தேவையாகவாகவும் இருந்தது. ஏனென்றால், சைக்கிளில் ஒவ்வொரு நாளும் எமது வீட்டிற்கு வருவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. அவரின் உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் மேலதிகாரிகள் எம்மைக் கேட்டால் அவர் ஒவ்வொரு நாளும் வருவதாக எம்மைச் சொல்லச் சொன்னார்.
அதிகாரிகள் எம் வீட்டிற்கு வருவது எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு உடன்பாடானதாகவே இருந்தது. முன்பு கூறியது போல ஒரு வீட்டினை வாடகைக்கு எடுப்பதற்கும், வீடு மாறும்போது உரிமையாளர் நாம் கொடுத்த முன் பணத்தினை தராத பட்சத்தில் அவர்களின் உதவி எமக்குத் தேவையாக இருந்தது. எமது பாதுகாப்பு விடயத்திலும், மனோ மாஸ்ரரைக் கடத்த எடுத்த முயற்சிக்கு எதிராகவும் அவர்களின் உதவி எங்களுக்குப் பெரிதும் உதவியது.
கடைசிகாலங்களில் சும்மா இருப்பதை விட ஏதாவது கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவு செய்தபோது எமக்குப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அனுமதி எடுத்தும் தந்தனர். அத்தகைய அனுமதியை இந்தியப்பிரஜை எடுப்பது என்றாலே பல காலமாகும். பல இலட்சங்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டும். எம்மிடம் எதுவித சட்டரீதியான பத்திரங்களும் இல்லாமலே அவர்கள் எடுத்துத் தந்தனர். ஆனால் எமது பொருளாதார நிலைகளின் நிமித்தம் கிடைத்த அனுமதியை விட்டுவிட்டு பின்னர் நாட்டுக்குச் சென்று விட்டோம்.
அவ்வாறு எமது பாதுகாப்பிற்காகவும் எமது தேவைகள் பலவற்றுக்காகவும் உயர் அதிகாரிகள் எமக்கு உதவிகள் செய்தனர். அவர்கள் ஏன் உதவி செய்தனர் என்பதற்குப் பல காரணங்கள் கூறலாம். நாம் இந்திய விசுவாசிகளாக இல்லாமல் இருந்தும் ஏன் எமக்கு உதவினார்கள்? அதற்குப் எனக்குத் தெரிந்த பல விசயங்களை எழுத விரும்புகிறேன். அந்த அதிகாரிகளுக்கும் எமக்கும் இடையிலான உறவுகளையும் கூற விரும்புகிறேன்.
இந்திய அதிகாரிகள் நாம் ரெலோவை விட்டுப் பிரிந்து இன்னுமொரு ஸ்தாபனமாக வேலை செய்கின்ற முடிவில் இருந்ததினால் எமது நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிக்கத் தொடங்கினர். பின்னர் இந்த நிலை மாறி தற்காலிக அன்றாட வாழ்வுப் போராட்டமாக மாறியபோதும் எமது தொடர்புகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். உதாரணமாக, எமக்கும் யார் யாருக்கும் தொடர்பு? நாட்டிற்குப் போய் வர யார் உதவி செய்கின்றார்கள்? பணத்திற்கு நாம் என்ன செய்கின்றோம்? நாம் எங்கு போவதென்றாலும் நாம் அவர்களுக்குச் சொல்லி விட்டுப் போக வேண்டும் எனவும் எதிர்பார்த்தனர்.
ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் எமது நாட்டின் பயணங்களுக்கு உதவி செய்தாலும் பின்னர் அவர்களுக்கு பொருளாதார மற்றும் பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் நாம் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் உதவியுடன் போய் வந்தோம். தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை, என்.எல்.எஃவ்.ரி போன்றவை இந்திய அரசின் ஊடுருவலைப் பகிரங்கமாக எதிர்த்து வேலை செய்தனர். எனவே ரி.எம்.எம்.பி, என்.எல்.எஃவ்.ரி போன்றவை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக இந்திய அதிகாரிகளினால் கையாளப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் நாம் தொடர்பு வைத்திருந்தது அதிகாரிகளுக்குத் தெரியாது.
நான் வேதாரண்யப் பகுதிக்கு ஒருமுறை போயிருந்தபோது என்.எல்.எஃவ்.ரி தோழர் ஒருவரைக் கண்டு கதைத்தேன். அவர்களின் வீட்டிற்குப் போகாமல் நான் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் அவரும் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் எமது சந்திப்பு நடைபெற்றது. அவர்களின் வீட்டைத் தவிர்த்ததற்கு காரணம் அவர்களின் வீட்டிற்கு முன்னால் எப்பவும் ஒரு அதிகாரி ஏதாவது வேடத்தில் நின்று நடப்பதைக் கவனிப்பார். அதனால் எமக்கு விளைவுகள் மோசமாகி விடும் என்பதினால் அவர்களின் வீட்டில் சந்திப்பதைத் தவிர்த்தேன்.
அந்த நிலையில் பஸ் நிலையத்தில் நாம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு அதிகாரி வந்தார். அவர் நான் எந்த இயக்கத்தினைச் சேர்ந்தவன் என்றும் மற்றவருக்கும் எனக்கும் என்ன வகையான உறவு உள்ளது பற்றியும் விசாரித்தார். நான் அதிகாரிக்குச் சென்னை போவதற்காக பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும், அவரிடம் பஸ் எப்ப வரும் போன்ற விடயங்களைக் கேட்டதாகவும் கூறி, நான் ரெலோவில் இருந்து பிரிந்த குழுவினைச் சேர்ந்தவன் என்றும் சென்னையில் எம்மைக் கையாளும் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டேன். உடனே அந்த அதிகாரி தானும் சென்னை போக வேண்டும் என்றும் சென்னைக்குப் போனவுடன் என்னை அதிகாரியிடம் கூட்டிச்சென்று விசாரித்த பின்பு தான் நான் வீட்டிற்குப் போகலாம் என்றும் கூறினார். உண்மையில் நான் சென்னை போக நிற்காததால் பணத்தை என்னிடம் நின்ற மற்றத் தோழரிடம் வாங்கிக் கொண்டு சென்னை போகப் புறப்பட்டேன்.
எனது பயணம் நேரடியாகச் சென்னை போகும் பஸ்ஸில் போகாமல் நாகப்பட்டினம் போய் அங்கிருந்து சென்னை செல்வதாக அதிகாரிக்குக் கூறினேன். அவரும் தானும் அந்த வழியால் போவதாகக் கூறி எனக்கருகே ஏறி அமர்ந்து கொண்டார். வேறு வழியின்றி சென்னை செல்லத்தான் வேண்டும் என்கிற நிலை எனக்கேற்பட்டது. நாகப்பட்டினத்திலிருந்து பஸ் புறப்பட்டவுடன் அவர் என்னைக் காலையில் சென்னை சென்றதும் அதிகாரிகளை சந்திக்கச் சொல்லி விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார்.
சென்னை வந்தடைந்ததும் இரவு நேரப்பயணம் என்பதால் வீட்டில் தூங்கி விட்டேன். காலை 10 மணியளவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரு அதிகாரி வந்து மேலதிகாரிகள் உடனடியாக என்னை வரட்டுமாம் என்று சொன்னார். அவருடன் புறப்பட்டுச் சென்றேன். அங்கு அந்த மேலதிகாரிகள் முன்பு போல இல்லாமல் மிகவும் அதிகாரத்துடன் நான் ஏன் வேதாரண்யம் சென்றேன்? எங்கு தங்கியிருந்தேன்? பஸ் நிலையத்தில் என்னுடன் கதைத்தவர் யார்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? போன்ற பல கேள்விகளைக் கேட்டனர். அதற்குப் பதில் கூறிய பின் தினமும் தம்மை வந்து சந்தித்துப் போகச் சொன்னார்கள்.
என்.எல்.எஃவ்.ரி.யின் படு முட்டாள்தனம்
அவ்வாறு அவர்களைச் சந்திக்கச் செல்லும் சமயத்தில் தான் ஒரு நாள் என்.எல்.எஃவ்.ரி யைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அங்கு வந்திருந்தனர். அவர்கள் கைதுசெய்யப்பட்ட விபரம் எவருக்குமே தெரியாது. பலமாகத் தாக்கப்பட்டிருந்த அவர்கள் என்னைக் கண்டதும் தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும் தங்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை தமது தோழர்கள் மூலம் எடுக்கச் சொல்லியும் என்னிடம் சொன்னார்கள்.
அவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான உறவுகளும் இல்லாதது போல அதிகாரிகளுக்கு முன் நடந்து கொண்டேன். அவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் எமது போராட்டத்தில் மிகவும் முட்டாள்தனமான சம்பவங்களில் ஒன்றாகும். என்.எல்.எஃவ்.ரி ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய அரசிற்கு வேண்டப்படாதவர்களாகவே இருந்தார்கள். நாம் பகிரங்கமாக நடமாடுவோம். ஆனால் அவர்கள் பகிரங்கமாக நடமாட முடியாது. அது தான் என்.எல்.எஃவ்.ரியின் நிலைமையாகும்.
அந்தவேளையில் கிரேனைட்டுக்களைத் தயாரித்து நாட்டிற்கு கொண்டு போவதற்காக சென்னையிலிருந்து பஸ்ஸின் மூலமாக வேதாரண்யம் கொண்டு போயிருந்தனர். ஒரு பாடசாலை மாணவன் (அவர்களின் ஆதரவாளர்) மற்றும் ஒரு உறுப்பினர் பஸ்ஸினுள் கிறேனைட்டுக்களைச் சர்வசாதாரணமாக கொண்டு சென்றனர். அப்போது பஸ் ஓரிடத்தில் சில நிமிடங்கள் நிற்கவும் அவர்கள் இருவரும் சாப்பாட்டிற்காக பஸ் நிற்பாட்டி இருப்பதாக நினைத்துக் கடைக்குள் சென்று உணவைச் சாப்பிடுவதற்கு குந்தியிருக்கின்றனர். அதனால் அவர்கள் பஸ் புறப்பட்டதைக் கவனிக்காமல் இருந்து விட்டனர்.
பல நிமிடங்களின் பின் பஸ் புறப்பட்டு விட்டதை உணர்ந்த அவர்கள் பஸ்ஸைப் பிடிக்க ரக்ஸி ஒன்றினுள் ஏறிக் கலைத்துச் சென்றனர். பஸ்ஸில் பயணிகள் இருவர் இல்லாததை உணர்ந்த கொண்டக்ரர் அவர்கள் சூட்கேசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் பஸ் பொலிஸ் நிலையத்தில் நிற்பதைக் கண்டதும் அங்கு சென்று அந்தப் பொருட்கள் தங்களுடையவை என்று உரிமை கோரியிருக்கிறார்கள். அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று பொலிசார் திறந்து பார்த்தபோது இருப்பது கிறேனைட்டுக்கள் என்றவுடன் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அந்த இருவரும் கைது செய்யப்பட்ட அரை மணித்தியாலத்தின் பின் சென்னையிலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அது என்.எல்.எஃப்.ரி சம்பந்தப்பட்ட விசயம் என்பதால் மிகவும் ரகசியமாகப் பொலிசார் அதை வைத்திருந்தனர். பத்திரிகைகளில் செய்திகள் உடனே வெளிவரவில்லை. பஸ்ஸில் கைது செய்யப்பட்ட விபரமும் சென்னையில் இருவர் கைது செய்யப்பட்ட விபரமும் பல என்.எல்.எஃவ்.ரி தோழர்களுக்கே தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் நான் அங்கு அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றதால் தான் எனக்குத் தெரிந்தது.
உடனடியாக என்.எல்.எஃவ்.ரி தோழர்களுக்கு தகவல் அனுப்பி மேலும் பலர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்தேன். உதாரணமாக, சென்னையில் கைது செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகில் எல்லாம் அதிகாரிகள் பலர் பல வேடங்களில் நின்றிருந்தனர். அதிகாரிகள் சிலரை நான் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்ததாலும் அதிகாரிகளுக்கும் என்னைத் தெரியும் என்பதாலும் நான் நிலவரங்களை அறிந்து என்.எல்.எஃவ்.ரி.யின் தலைவர் விசு மற்றும் இரு தோழர்களை காப்பாற்றக் கூடியதாக இருந்தது. அவர்களின் பாதுகாப்பிற்கு தற்காலிக ஒழுங்குகள் செய்யும் வரையும் அவர்கள் எனது இருப்பிடத்தில் ஒருநாள் தங்கி இருந்தார்கள்.
என்.எல்.எஃவ்.ரி.யின் தலைவர் விசு
நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் பலரினால் முற்போக்கு அமைப்புக்கள் எனக் கூறப்பட்ட என்.எல்.எஃவ்.ரி இந்தியாவிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட இடத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குக் கூட முட்டாள்தனமான செயல்பட்டது. சாதாரண நடைமுறை வேலைகளைக் கூடச் செய்யமுடியாத அவர்கள் எப்படிப் பல அரிய செயற் திட்டங்களை செய்ய முடியும்;?
பின்னர் அவர்கள் என்.எல்.எஃவ்.ரி, பி.எல்.எஃவ்.ரி என உடைபட்டு எந்த ஒரு வேலையும் செய்யாதவர்களாக மாறி விட்டார்கள்.
1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1
2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2
3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3
4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4
5. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5
6. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6
7. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7
8. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8