07022022
Last updateபு, 02 மார் 2022 7pm

அரச ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டங்களும்

இலங்கை - மகிந்த பாசிச அரசின்  காடைத்தனமான தாக்குதல்கள், நாளாந்தம் நாட்டின் அனைத்துப் பக்கத்தில் வாழும் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இத்தாக்குதல்கள் இன மத பிரதேச வித்தியாசமின்றி மகிந்த அரசினால் இலங்கை மக்கள் அனைவர் மீதும் நிகழ்த்தப்படுகிறது.

யுத்தம் நடந்த காலத்தில் இனவாத அரச ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட போது, எந்தவித எதிர்ப்பும் காட்டாமலிருந்த ஏனைய சமூகங்கள் மீதும் இன்று  இனவாத, மதவாத, பொருளாதார ஒடுக்குமுறை திட்டமிட்ட முறையில்  மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமையில் நடாத்தப்பட்ட சிவில் உரிமைகளுக்கான போராட்டம், இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் வன்முறையை  உபயோகித்து  குழப்பப்பட்டது. அங்கு  குழப்பத்தை ஏற்படுத்திய இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்ட  நாடகம் அரங்கேறி, அவர்கள் பின்பு ராஜமரியாதையுடன் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டாலும், எதிர்கட்சியால் கூட எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதே அரச புலனாய்வு படையினால் இந்த மாதத்தில் இரண்டு தடவைகள் உதயன் பத்திரிகைக் காரியாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இன்று (13.04.13) அதிகாலை உதயன் பத்திரிகையின் அச்சு இயந்திரம் தீ வைக்கப்பட்டதுடன், அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தெற்கில் "பொதுபல சேனா" என்ற புத்தபிக்குகளால் தலைமை தாங்கப்படும் அமைப்பு, முஸ்லீம் மக்களின் உரிமைகளைக் குறிவைத்து போராட்டத்தை முன்னெடுக்கிறது. ஹலால் எதிர்ப்புப்  போராட்டம், மசூதிகள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய சகோதரர்களின் சிறுகடைகள், நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய சகோதரிகளின்  கலாச்சார ஆடை அணிகலனுக்கு எதிரான பிரச்சாரம் எனப்  பல முனைகளிலும் பொதுபல சேனா தனது இனவாதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது .

ஒருபக்கம்  அனைத்து அதிகாரமும் படைத்த  சனாதிபதி மஹிந்த ராஜபக்ச  இனங்களுக்கு இடையிலான உறவு வளர வேண்டுமென முதலைக் கண்ணீர் வடிக்க, மறுபக்கம்  பொதுபல சேனா போன்ற அமைப்புகள் அரசின் தயவுடன் உருவாக்கம் பெறுகின்றன. மஹிந்த பாசிச அரசின் பாதுகாப்புச்செயலாளர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொதுபல சேனாவுக்குத் தனது ஆதரவை நல்கி வருகிறார். கடந்த மாதம் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்ட பொதுபல சேனாவின்  தலைமைக் காரியாலயத் திறப்புவிழா பாதுகாப்பு செயலாளரின் தலைமையிலேயே நடைபெற்றது. அவரே தனது கைகளால் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, நேற்று (12.04.13) முன்னிரவில் அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும்  உறுப்பினர்களை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.

யுத்தத்துக்குப் பின்னான இன்றைய காலத்தில் இலங்கையின் அனைத்து மக்களும் பல நெருக்கடிகளை நேரடியாக அனுபவிக்கின்றனர். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. நகர அபிவிருத்தி செய்வதென்ற பெயரில் பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் காணி அபகரிப்புகள் வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பெருமெடுப்பில் நடைபெறுகிறது. நகர அபிவிருத்தி என்ற பெயரில் எங்கும் குப்பை கொட்டலாம், எந்த கட்டிடத்தையும் இடிக்கலாம் என அதிகாரம் பிரயோகிக்கப்படுகிறது. இதற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக மிக கீழ்த்தரமான தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது.

கடந்தவாரம்  கொலான்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு எதிராக, அதை அகற்றக்கோரி சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திய மக்கள் மீது போலீஸ் அதிரடிப்படை தாக்குதலை நடாத்தியது. பல்லின மக்களும் இணைந்து மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான  மக்கள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போராடத்தை முன்னின்று நடாத்திய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாள் தோறும் நடைபெறும் ஒடுக்குமுறைக்கு மேற்கூறப்பட்டுள்ளவை சில  உதாரணங்கள் மட்டுமே. இந்நிலையில் இன்று இலங்கையில் அரசியல் ஒளிக்கீற்றுகளாக தெரிவது ஆங்காங்கே நாடு முழுவதும் சிறுவளவிலேனும் நடைபெறத் தொடங்கியுள்ள வெகுசனப் போராட்டங்களாகும். அதுவும் இன, மத பேதமின்றி மக்கள் இணைந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது வரலாறில் ஏற்பட்டுள்ள சிறுமாற்றமென்றாலும், இதன் வளர்ச்சி இலங்கை அரசியலின் சமூதாயத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்த்தெடுப்பது மக்கள் நலம் சார் அரசியற் சக்திகளின் மிக முக்கிய கடைமையாகும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

13.04.2013