05172022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7

மனோ மாஸ்ரர் கொலை

நாட்டிற்குச் சென்ற மனோ மாஸ்ரர் இரு தினங்களுக்குள் கொல்லப்படவே எமது நிலைமை மோசமாகி விட்டது. ரெலோ தான் கொன்றார்கள் எனச் சென்னையில் புலிகளின் தயவில் இருந்த ரெலோவின் முன்னாள் இராணுவப் பொறுப்பாளர் ரமேஸ் குழுவினரும் பலரும் கூறினர். எமக்கு அந்தக் கொலையைச் செய்தவர் சம்பந்தமான தகவல்கள் கிடைத்திருந்தன. அதாவது அந்தக் கொலையைச் செய்தவர்கள் புலிகள் எனவும் அந்தக் கொலையைச் செய்த நபர்களின் தகவல்களும் கிடைத்திருந்தன.

மனோ மாஸ்ரர் நாட்டிற்குச் சென்றவுடன் புலிகளினால் பின்தொடரப்பட்ட அவர் பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள திக்கம் தும்பளைப் பகுதியில் சனநெருக்கடியற்ற குடியிருப்புப் பகுதியில் கிட்டு மற்றும் ரவி என்ற இரு புலிகளினால் நிறுத்தப்பட்டதாகவும் அங்கே முப்பது நிமிடம் அளவில் அவர்கள் வாக்குவாதப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் பிரச்சினைப்பட்ட விடயம் என்னவென்றால் ரெலோவில் இருந்து பிரிந்த எம்மைப் புலிகளுடன் சேர்த்து விட வேண்டும் என்பதே.

அதற்கு உடன்படாத நிலையில் தப்பியோட மனோ மாஸ்ரர் முயற்சித்தார் எனவும் அருகில் இருந்த மதில் மேலாக தப்பியோட வெளிக்கிட்டவரை அவர்கள் இருவரும் சுட்டுக் கொன்றார்கள் எனவும் மதிலில் ஒட்டியிருந்த புலிகளின் போஸ்ரர் ஒன்றை ( விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை சாவதுமில்லை ) மனோ மாஸ்ரர் கிழித்து தனது மடியில் செருகினார் எனவும் நேரில் பார்த்த மக்களின் வாக்குமூலமாகும். அந்த முழுமையான செய்திகள் உடனடியாக எமக்குத் தெரியாவிட்டாலும் புலிகள் கொன்றார்கள் என்ற செய்தி சென்னையிலிருந்த எமக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.

புலிகள் அந்தக் கொலையை உரிமை கோருவதைத் தவிர்த்திருந்தனர். முக்கியமாக அதன் பழி ரெலோவில் விழும் எனவும் மனோ மாஸ்ரரின் செல்வாக்கு புலிகளின் கோட்டையான வல்வெட்டித்துறையில (விவிரி) இல் அதிகம் என்பதாலும் விவிரி மக்களிடம் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்வதை அப்போது புலிகள் தவிர்த்திருந்ததாலும் அக்கொலைக்கு உரிமை கோரவில்லை.

அவ்வேளையில் புலிகளுடன் உள்ள ரமேஸ் குழுவினர் மனோ மாஸ்ரரின் கொலைக்கு ரெலோவைப் பழிவாங்கப் போவதாகவும் எமக்குப் பாதுகாப்புத் தருவதாகவும் சொன்னார்கள். ஆனால் எமக்கு உடன்பாடில்லாத ஒருவர் எம் தோழரின் கொலைக்குப் பிழையான இடத்தில் பழிவாங்குவது என்பதும் நாம் அவர்களை எமக்கு பாதுகாப்பு தருமாறு கேட்காமலேயே எமக்கு பாதுகாப்பு தருவது என்பதும் பிரச்சினையாக இருந்தது.

அவர்களுக்கு அவர்களின் செயற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முரண்படாத வகையில் தெரியப்படுத்தினோம். ஆயுதம் உள்ள ரமேஸ் குழுவினருடனும் அவர்களின் பின்னால் உள்ள புலிகளுடனும் ஆயுதமற்ற நிராயுதபாணிகளாக நிற்கும் எமக்கும் உறவுகளே இல்லை என்று அவர்களுக்குச் சொல்வது இலகுவான காரியமல்ல. அவர்களை எமது இருப்பிடத்துக்கு வரவேண்டாம் என்று பல தடவை சொன்னாலும் அவர்கள் வந்தார்கள். கடைசிக் கட்டமாக அவர்கள் வந்தால் நாம் தேநீரோ உணவோ கொடுப்பதில்லை.

அந்த ரமேஸ் குழுவினரின் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரெலோ உறுப்பினர்களையும் தமது விசுவாசிகள் எனப்படுபவர்களையும் ரெலோ வீட்டுக்குள் போய் தம்முடன் அழைத்துக் கொண்டு போய் புலிகளுடன் சேர்த்தனர். அதன் பிறகு தமது பாதுகாப்பிற்காகவும் எம்மை ரெலோவுடன் முரண்பட வைப்பதற்காகவும் இரவு நேரங்களில் எமது பாதுகாப்பிற்கு வருபவர்கள் போல் வந்து தங்கினர். அவர்களின் நோக்கம், எமது இடத்துக்கு அவர்களைத் தேடி ரெலோ அங்கு வராது என்பதும் வந்தாலும் பெண்கள் உட்பட நாம் அங்கிருப்பதால் அது எம்மைப் புலிகளுடன் சேர்க்கப் பண்ணும் என்பதுமாகும்.

வீடு மாறுதலும் கியூப் பிரிவினர் உதவியும்

முதல் கூறிய பொலிசினால் ஏற்பட்ட பிரச்சினையாலும் ரமேஸ் குழுவினரின் பிரச்சினையைத் தவிர்க்குமுகமாகவும் வேறு இடத்துக்கு வீடு மாறினோம். அந்த வீட்டினை எடுப்பதற்கு கியூப் பிரிவினர் நிறைய உதவி செய்தனர். அதாவது எம்மால் வீட்டுக்காரருக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று வீட்டு உரிமையாளருக்கு கியூப் பிரிவு அதிகாரியின் உறுதிமொழியின் பின் தான் எமக்கு வீடு கிடைத்தது. அந்த அதிகாரி செய்த உதவி என்பது எமக்குப் பெரிய விடயமாக இருந்தது. நாம் ரெலோவின் பிரதேசத்தை விட்டு தூரமாகவும் லஸ கோணர் என்ற இடத்துக்கு ரமேஸ் குழுவினருக்குத் தெரியாமலும் அந்த வீட்டுக்கு மாறினோம்.

வீட்டுக்கு மாறி இரு வாரங்களில் ரமேஸ் குழுவினர் எமது இருப்பிடத்தினைக் கண்டு பிடித்து விட்டனர். ரமேஸ் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் வெளியில் வைத்தே அவரை அனுப்பி விட்டோம். அப்போது எமக்கிருந்த பிரச்சினை வீட்டிற்கு வாடகைக்காகவும் சாப்பிடுவதற்காகவும் பண வசதிகளை ஏற்படுத்துவது என்பதாகும். மனோ மாஸ்ரர் கொலையின் பின் எமது நிலை இந்தியாவில் சில காலம் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகும். வாடகை என்பதை விட ஒரு வருட முற்பணத்திற்காகவும் எமது நாளாந்த சாப்பாட்டுச் செலவுக்காகவும் பலரை அணுகினோம். சிலர் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் தரவில்லை. சிலர் சிறிய அளவு தொகை தந்தார்கள். எனவே நாட்டிற்குப் போய் ஏதாவது வழி பண்ணுவதற்காக நானும் ராஜன் என்ற தோழரும் நாட்டுக்குப் புறப்பட்டோம்.

நாட்டில் எம்முடன் இருந்த பலர் ஏற்கனவே நாட்டில் நாம் நிற்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டிற்கு புறப்படும் போது என்னுள் பல கேள்விகள் எழுந்தன. நாம் உயிருடன் திரும்பி வருவோமா? வராவிட்டால் இங்குள்ளவர்களின் நிலைமை என்ன? வீட்டில் என்னை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? நாட்டின் விடுதலைக்காக இயக்கத்தில் சேர்ந்து இயக்கத்திற்காகப் பலரையும் உள்வாங்கி இப்போது நாம் வளர்த்த இயக்கம் பிழை எனவும் வித்தியாசமான போராட்டத்தினை நாம் நடத்திக் கொண்டிருப்பதாகச் சொன்னால் அவர்கள் நம்புவார்களா? அது போன்ற பல கேள்விகள். எதுவாயிருந்தாலும் திரும்பி நாட்டிற்குச் சென்றேன்.

வீடு திரும்புதல்

எனது அம்மா சகோதரிகள் நண்பர்கள் ஊரவர்கள் எல்லோரையும் பார்க்கப் போகிறேன் என்ற சந்தோசத்தாலும் அதேநேரம் ஒருவிதப் பயத்துடனும் திருவள்ளுவர் பஸ்;ஸில் வேதாரண்யம் நோக்கிச் சென்றோம். நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் படகில் போவதற்கான ஏற்பாடுகளைச் சென்னையில் செய்திருந்தோம். எனவே ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் வீட்டில் இருந்து அடுத்த நாள் இரவு எமது பயணம் தொடங்கியது. மத்தியானம் சோறு சாப்பிடும் போது ராஜன் சாப்பிட மறுத்து விட்டார். அந்தப் படகில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் சொந்தத் தயாரிப்பான மோட்டர் துப்பாக்கியைப் பொருத்தினார்கள். நமது பாதுகாப்பிற்காகவும் நேவி தாக்கும் போது திருப்பித் தாக்குவதற்காகவும் என்று விளக்கமும் சொன்னார்கள். அப்போது எனக்குள் ஒரு சந்தோசம். இவர்கள் நேவியின் தாக்குதலுக்கு ஈடாக தாக்குதல் செய்வதற்கு தயாராகத் தற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். எனவே பயமில்லை என நினைத்துக் கொண்டேன்.

கடலில் பிரயாணம் செய்யும் போது தனக்கு வாந்தி வரும் என்றும் அதற்காகவே சாப்பிடவில்லை எனவும் சொன்னார். எனக்கு முதன் முறை வரும்போது வாந்தி ஒன்றும் வராதபடியால் நான் நன்றாக சோறு சாப்பிட்டேன். அவரோ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

படகுப் பயணம்

படகு புறப்பட்டு 10 நிமிட அளவில் எனக்கு வாந்தி வரும் போல இருக்கின்றது என அவருக்குச் சொன்னேன். அவர் அப்போதும் சிரித்து கொண்டிருந்தார். அரை மணித்தியாலத்திற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெளியில் வாந்தி எடுக்கத் தொடங்கினேன். படகின் வேகத்திற்கும் அலைகளுடன் படகு மோதும் போதும் காற்றின் வேகத்திற்கும் நான் எடுத்த வாந்தி வெளியில் விளாமல் திரும்பவும் படகுக்குள்ளேயே விழுந்தது. அலைகளுடன் மோதும்போது கடல் தண்ணீர் படகினுள் வந்து கொண்டிருந்தது. அதனால் கடல் தண்ணீர் பட வாந்தியும் படகில் விழுந்து கொண்டிருந்தது.

என்னுடன் வந்த தோழர் மாத்திரமல்ல ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தோழர்களும் வாந்தி எடுக்கத் தொடங்கினர். படகை ஓட்டி வந்தவர்களைத் தவிர இன்னும் இரண்டு பேர் மட்டுந்தான் படகு ஓடும்போது படகை நடுக்கடலில் நிறுத்தி விட்டு பாணும் தேநீரும் சாப்பிட்டனர். அவ்வாறான படகில் பயணம் செய்யும் போது அலையுடன் மோதும் போது படகு உயரத் தூக்கி எறியப்படும். ஆகவே, படகை எப்பவுமே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் படகிலிருந்து கடலுக்குள் விழுந்து விடுவோம். உப்புத் தண்ணீர் எங்கள் மீதும் ஒவ்வொரு விநாடியும் விழுந்து கொண்டிருந்தது. படகில் ஒரு பகுதியை ஒவ்வொருவரும் பிடித்துக் கொண்டு இருந்தனர். அந்த வேளையில் வாந்தியும் எடுத்துக் கொண்டிருந்தேன். படகில் பிடிப்பது என்பது ஒன்றும் சுலபமானதல்ல. கை பிடிப்பதற்கு என்று ஒன்றுமே கிடையாது. படகின் அமைப்பும் பயணிகள் பயணம் செய்வதற்கென்று அமைக்கப்பட்டதல்ல.

ஆரம்பத்தில் ஒவ்வொரு அலையுடன் படகு மோதும்போது நானாகவே தயார் நிலையில் எழும்பி எழும்பிக் குந்தினேன். ஒரு மணித்தியாலத்தின் பின் களைத்து விட்ட நிலையில் ஒவ்வொரு முறையும் படகு தூக்கிக் குத்தும் போது வருவது வரட்டும் என்ற நிலைக்கு மாறிவிட்டேன். அதற்குப் பிறகு சத்தி எடுப்பதையும் படகினுள் வைத்துக் கொண்டேன். ஒருவித மயக்க நிலையில் உடம்பிலுள்ள சக்தி எல்லாம் போய் விட்ட நிலையில் விடுதலைப் போராட்டத்தில் இப்படியும் ஒரு முக்கியமான ஒரு கட்டம் இருப்பதாக நினைத்து இருந்து விட்டேன்.

அந்த வேளையில் சிறிலங்கா நேவியின் மத்தாப்புத் தாக்குதல் ஆரம்பமாகியது. அதாவது வானத்தில் வாண வேடிக்கை போல் மத்தாப்பினை அடித்து அந்த வெளிச்சத்தில் படகு ஏதாவது வருகின்றதா என்பதைக் கண்டு பிடிப்பார்கள். அதன் பின் படகை நோக்கி தாக்குதலை ஆரம்பிப்பார்கள். படகில் இருந்த எல்லோரும் பரபரப்படைந்தார்கள். நான் மட்டும் ஒருக்கால் வானத்தைப் பார்த்து விட்டு நடக்கின்றது நடக்கட்டும் என்றிருந்து விட்டேன். நீந்தவும் தெரியாது. அத்துடன், உடல் சக்தியுமற்று இருந்த நான் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் மோட்டார் துப்பாக்கியைப் பார்த்து நீதான் காப்பாற்ற வேணும் என நினைத்துக் கொண்டேன்.

நேவியின் கப்பல்கள் இருக்கும் இரு திசைகளைத் தவிர்த்து வேறொரு பக்கமாக படகை ஓட்டுவதற்கான முடிவை ஓட்டிகள் எடுத்தனர். படகின் திசை மாறுபட்டதை உணர்ந்த நான் திடீரெனப் படகின் வேகம் குறைந்ததை அறிந்தேன். திடீரெனப் படகின் மோட்டார் நிறுத்தப்பட்டு கையால் படகை வலிக்கத் தொடங்கினர். ஏனென்று கேட்டதற்கு சத்தம் போட வேண்டாம் நேவி பக்கத்தில் நிற்பதாகக் கூறினார்கள்.

நானோ எல்லாமே முடிந்து விட்டதாக நினைத்தேன். நாட்டிலிருந்து இந்தியா வந்து ரெலோவிடம் இருந்து தப்பி கடைசியில் நடுக்கடலில் தான் எனது முடிவு முடியப் போகின்றது என நினைத்துக் கொண்டேன். அப்போது மற்றவர்களைப் பார்த்தேன். ஒரு சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். சிலரின் கண்கள் பெரிய முழி முழித்துக் கொண்டிருந்ததை நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் கண்டேன். என்னுடன் வந்த தோழரைப் பார்த்தேன். அவரும் பயங்கர முழி முழித்துக் கொண்டிருந்தார். எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

சில ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தோழர்கள் மட்டும் தான் மோட்டார் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர். அதாவது குண்டுகளை எடுத்துக் கொண்டனர். துப்பாக்கியில் பட்ட தண்ணீரையும் துடைத்தனர். சிறிது நேரத்தில் துப்பாக்கியைப் படகிலிருந்து கழற்றிக் கொண்டிருந்தனர். எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் கழற்றுகிறார்கள் எனக் கேட்டேன். தண்ணீர் உள்ளே போய் விட்டது எனவும் அதை அப்போது பயன்படுத்த முடியாது எனவும் கூறினர். எனக்குக் கடைசியாக இருந்த நம்பிக்கையும் போய் விட்டது. எனினும் படகை ஓட்டிக் கொண்டு வந்தவர்களில் நம்பிக்கை வைத்தேன். எந்தவிதமான தொழிற் நுட்பத்தையும் பயன்படுத்தாமல் வெறும் வானத்தையும் நட்சத்திரங்களையும் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து சரியாகக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் எம்மை அழைத்துச் செல்வார்கள் என்ற எனது நம்பிக்கை மட்டுந்தான் மிஞ்சி இருந்தது.

சுமார் அதிகாலை மூன்று மணி அளவில் மீண்டும் படகை நிறுத்தி விட்டு தாம் கொண்டு வந்த சோற்றுப் பிரட்டலைச் சாப்பிடத் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொருவரையும் சாப்பிடச் சொல்லிக் கேட்டனர். நானோ மற்றும் அரைவாசிப் பேருமோ எதுவும் சாப்பிடக்கூடிய மனநிலையில் இல்லை. எப்போ கரைக்குப் போவோம் எனக் கேட்ட போது கரைக்கு வந்து விட்டோம் எனவும் கரையில் இருந்து தமக்கு இன்னும் எந்தவிதமான சிக்னலும் வராதபடியால் தான் இப்போது இங்கு நிற்பதாகவும் கூறினார்கள். அதைக் கேட்ட எல்லாரும் உயிர் பெற்றவர்களாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபோது முழிக்கண்களில் மாறி மாறி ஒருவித சிரிப்பு மலர்ந்தது.

ஒவ்வொருவரும் கதைக்க ஆரம்பித்தோம். எம்மிருவரையும் தவிர மற்றவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள். நாம் இருவரும் யார் என்று அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதாலும் எம்மைப் பொறுத்தவரையில் அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இருந்ததினாலும் மனம் விட்டுக் கதைத்தோம். அந்தப் பயணம் முடிவுக்கு வருகின்றபடியால் இனி நாம் அவர்களை மீண்டும் சந்திப்போமா அல்லது அவர்கள் மீண்டும் எங்களைச் சந்திப்பார்களா? எதுவும் தெரியாத நிலையிலும் யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றாலும் நாட்டிற்குப் போகின்றோம் என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் அப்போது நாம் இருந்தோம்.

சுமார் காலை நாலு மணி மட்டும் எந்தவிதமான சிக்னலும் வராதபடியால் படகை ஓட்டி வந்தவர்களின் கருத்து கரையில் ஆமி நிற்கலாம் என்பதே. இன்னும் அரை மணித்தியாலம் பார்த்து விட்டு திரும்பிப் போக வேண்டும் என்றார்கள். ஏனெனில் வெளிச்சம் வந்தால் கடலில் நிற்க முடியாது. நேவியிடம் மாட்டுப்பட வேண்டும். எனக்கோ சீ என்று வெறுத்தே போய் விட்டது.

முதலாவது, அப்போது தான் மீண்டும் நாட்டின் பழைய நிலைமைகள் நினைவுக்கு வந்தன. இராணுவம் விமானப்படை போன்றவற்றின் சோதனைக்குள்ளால் முந்திப் போகும்போது வாங்கிய அடியும் சித்திரவதையும் நினைவுக்கு வந்தது. திரும்பவும் இராணுவம் கரையில் எம்மை வரவேற்க நிற்கிறார்கள் என்றவுடன் சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டிற்கு போகின்ற சந்தோசமான நிலையை முற்று முழுதாக மாற்றி விட்டது.

இரண்டாவது, திரும்பவும் சத்தி எடுத்த படகின் பயண அனுபவம் நினைவுக்கு வந்தது. இனி திரும்பவும் போவதில்லை என்ற கருத்து பலரின் மனதிலும் இருந்தது. எது நடந்தாலும் பரவாயில்லை கடலில் இனிமேலும் நிற்க முடியாது. ஆகவே கரையினை நோக்கிப் போவோம் என முடிவு செய்தனர். படகினை வலித்துக் கொண்டே கரையினை நோக்கிச் சென்றனர். என் கண்ணிலோ இன்னும் கரை தென்படவில்லை. ஒருவாறு கரையைக் கண்டபோது மரங்களும் பற்றைகளும் இராணுவ ஜீப்பும் ட்றக்கும் ராங்கிகளுமாகத்தான் எனக்குத் தெரிந்தன. எல்லோரின் கண்களிலும் அவ்வாறு தான் தெரிந்தது போல் இருந்தது. ஏனெனில் பலரும் கண்கள் பிதுங்கிய நிலையில் பயத்துடன் தான் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் படகை ஓட்டியவர் சொன்னார் சிக்னல் காட்டுகிறார்கள் பயப்பட வேண்டாம், நம்பிப் போகலாம் என்று. எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது. கரையில் இறங்கியவுடன் நாம் எவ்வாறு எமது வீடுகளுக்குச் செல்வது என்ற நினைவு வந்தது. அந்த நினைவுடன் இறங்கிய போது ஒவ்வொருவரையும் படகின் எஞ்சின்கள் படகு ஆகியவற்றை தூக்கிக் கொண்டு போகச் சொன்னார்கள்.

1984 ஆவணி கால கட்டமாகிய அந்தக் கால கட்டத்தில் இராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகள் இருந்தன. எனவே, படகு வந்ததற்குரிய எந்த அடையாளங்களும் கரையோரத்தில் இருக்கக் கூடாது. உடனடியாக மறைக்கப் படவேண்டும். அனைவரும் சக்தி இழந்த நிலையில் இருந்தோம். அந்த நிலையிலும் அந்த வேலையைச் செய்தாகவே வேண்டும். எனவே, படகினையும் படகின் எஞ்சினையும் ஒரு ட்ரக்ரில் ஏற்றி அனுப்பி விட்டு குளிப்பதற்காக ஒரு வீட்டிற்குச் சென்றோம். அந்த வீட்டிலுள்ளவர் சொன்னார் இரவு 2 மணியளவில் இராணுவ ரோந்திற்கு வந்ததாகவும் சுமார் மூன்று மணி வரை கடற்கரை ஓரத்தில் நின்றதாகவும் அதனால் தான் அவர்கள் போகுமட்டும் வீட்டிற்குள் இருந்ததாகவும் சொன்னார்.

குளித்து, தேனீரும் அருந்தி விட்டு நாம் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம். அப்போது எமது நிலைமையை அறிந்த ஈ.பி.ஆh.;எல்.எஃப் தோழர் ஒருவர் எவ்வாறு போகிறீர்கள், பஸ்ஸிற்கு பணம் இருக்கின்றதா எனக் கேட்டார். நாம் எம்மிடம் பணம் இல்லை, நடந்தாவது போய் விடுவோம் என்று கூறியபோது 10 ரூபா தந்து அதற்கு மேல் தருவதற்கு தன்னிடம் பணமில்லை என்றார். அந்த 10 ரூபாவில் போகக் கூடிய அளவு போய் அதன் பின்னர் நடக்கலாம் என்று சிரித்தபடியே கூறினார்.

நாம் வந்திறங்கிய இடம் மாதகல் பிரதேசம். அங்கிருந்து எனது கிராமத்திற்குப் போவதென்றால் யாழ்ப்பாணம் வந்து தான் போக வேண்டும். மற்றத் தோழரின் கிராமத்திற்குப் போவதென்றால் இடைவழியில் இறங்கி வேறு பஸ் எடுத்துப் போக வேண்டும். எது எவ்வாறாயினும் இருவரின் இடத்திற்கு இருவரும் போக 10 ரூபா போதாது. எனவே 5 ரூபா ஒருவருக்கு எனவும் 5 ரூபாவில் நாம் போகக் கூடிய தூரம் வரையில் போவதென்பதும் முடிவாகியது.

மாதகலில் இருந்து புறப்பட்ட முதல் மினிவானில் ஏறினோம். மினிவானில் ஏறிய மிச்சப் பயணிகளை நாங்கள் கவனித்தோம். எமது நோக்கம் மினிவானில் வேறு இயக்கக்காரர்கள் வருகிறார்களா என்பதாகும். உதாரணமாக, ரெலோ அல்லது புலியைப் பற்றிய பயம் தான். ஆனால் பஸ்ஸில் ஏறியவர்களுக்கோ எங்கள் இருவரைப் பார்த்துப் பயம். அவர்களின் பயம் ஒரு ஆமி அல்லது நேவி மினிவானை நிற்பாட்டி செக் பண்ணினால் எம் இருவராலும் தமக்குப் பிரச்சினைகள் வரும் என்பதாகும். அதை எம்மால் அவர்களின் பார்வையை வைத்தே புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. மினிவானில் இறங்கும் பயணிகள் கூட எம்மை ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் இறங்கினார்கள்.

மாதகலிலிருந்து வருகின்ற மினிவானில் மிகவும் களைப்படைந்து பயங்கர முழி முழித்துக் கொண்டிருந்த எங்களை எவருமே இலகுவாக அடையாளம் காண முடியும். நாமோ வானில் ஏறுகின்ற ஒவ்வொரு இளைஞனையும் சந்தேகத்துடன் பார்த்தோம். மற்றத் தோழர் நடுவில் இறங்கி அவரது கிராமத்திற்குச் செல்லும் பஸ்ஸிற்குப் போய் விட்டார். அவரைப் பொறுத்தவரையில் அவர் உயிருக்கு உள்ள ஆபத்து என்னை விட அதிகம். அந்த ராஜன் தோழர் மனோ மாஸ்ரரின் தம்பி. எனக்கு அவர் மீதுள்ள மிகுந்த மரியாதையின் காரணமாக, மீண்டும் சந்திப்போமா என்று தெரியாத நிலையில் கண்கள் கலங்கிய நிலையில் விடை பெற்றோம். மினி வான் யாழ்ப்பாணத்தை வந்தடையும் போது கண் என்னை அறியாமலேயே மூடி விட்டது.

யாழ்ப்பாணம் வந்தடைந்து மினி வான் பஸ் நிலையத்தில் வீதியில் கால் வைக்கும் போது ஒரு புதிய மனிதனாய் ஒரு புதிய இடத்தில் கால் வைப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு இருந்தது. கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் பஸ் நிலையத்தை பார்வையிட்டேன். சனம் ஏதுமில்லாமல் 5 அல்லது 6 மினி வான் வரையில் நின்றன. சில தேனீர் கடைகள் திறந்திருந்தன. காலை 7.30 மணியளவில் சனம் குறைவாகத் தான் இருப்பார்கள். ஆனால் ஏன் பஸ்கள் ஒன்றையுமே காணவில்லை என்பதுதான் எனக்குப் பிரச்சினையாக இருந்தது.

முதல் நாள் இரவு மண்டைதீவுப் பகுதியில் ஒரு பஸ் சாரதியை இராணுவம் தாக்கியதன் விளைவாக அன்று பஸ்கள் ஓடவில்லை எனவும், மினிவான்களின் ஓட்டமும் சிலவேளை நிற்கலாம் எனக் கூறினார்கள். எனவே, எனது ஊர் வழியாகச் செல்லும் எந்த மினிவான் வந்தாலும் ஏறுவது என்று முடிவெடுத்தேன். என்னிடமிருந்த 5 ரூபாவில் 3 ரூhப 50 சதம் யாழ்ப்பாணம் வருவதற்குக் கொடுத்து விட்டேன். எனது ஊருக்குப் போவதென்றால் இன்னும் 2 ரூபா 50 சதம் தேவை. ஆனால் என்னிடம் 1.50 சதம் மட்டுமே இருந்தது. எனவே, நிலைமையைப் பார்த்து கடன் சொல்லி ஏறுவோம். இல்லையேல் 1.50 சதத்திற்கு மட்டுக்கும் போகக்கூடிய இடத்திற்குப் போய் விட்டு மிகுதி நடந்து போவோம் என்று முடிவெடுத்தேன்.

எனது நிலைமையை நினைத்துப் பார்த்தேன். முன்பு யாழ்ப்பாணம் வருவதென்றால் கழிசான் போட்டு ரிப்ரொப்பாக வெளிக்கிட்டு வருவேன். இப்போ சேர்ட்டும் சாரமும். கால்களில் செருப்புக் கூட இல்லை. ஒரு பரதேசியைப் போல இருந்த எனது நிலையை எண்ணிப் பார்த்தேன். ஒருவகையில் சந்தோசமாகக் கூட இருந்தது. முன்பு குடும்பத்தின் தயவில் வாழும்போது பணத்திற்கோ உடுப்புக்கோ குறைவில்லை.

ஒரு மினி வான் புறப்படவே அதில் ஏறிக் கொண்டேன். அந்த நடத்துநருக்கு நான் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும் என்னிடம் பணமில்லை எனவும் இருந்த பணத்தைக் கொடுத்து நான் போக வேண்டிய இடத்தையும் கூறினேன். அவர் பயத்தினாலோ நல் உணர்வினாலோ என்னிடம் பணத்தை வாங்காமல் எனது கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். நான் குறிப்பிட்ட இடத்தில் இறங்காமல் அதற்கு முன் பஸ் தரிப்பில் இறங்கி எனது வீடு நோக்கிச் சென்றேன். வீட்டிற்குப் போவதற்கு முன் எனது நண்பரின் வீட்டிற்குப் போய் அவர் மூலம் எனது வீட்டின் நிலைமைகளை அறிய முயற்சித்தேன்.

எனது வருகையை வீட்டினர் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் நான் வந்துள்ளதை அறிந்தவுடன் அந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் எல்லாரும் என் வீட்டிற்கு வந்து விட்டனர். நான் வீட்டிற்குப் போவதை மிகவும் இரகசியமாக வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் அதற்கு எதிர்மாறாக சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களைப் பிழை சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களுக்கு நான் வந்துள்ளது மகிழ்ச்சியான விசயம். எனது நிலைமைகள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியப்படுத்த நான் விரும்பவும் இல்லை. ஏனெனில் எனது அம்மாவின் உடல்நலத்தையும் மற்றவர்களின் நலன்களையும் கருதி அதைச் சொல்ல விரும்பவில்லை. நிலைமைகளைச் சமாளித்து நான் இயக்க வேலை சம்பந்தமாக வந்ததாகவும் அதிக நேரம் நிற்க முடியாது எனக் கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு எனது உறவினர் வீட்டிற்குச் சென்று படுத்து விட்டேன்.

எனது கிராமத்தில் உள்ள மனிதர்களைப் பார்க்கும்போது முன்பு உறவினர்களாகவும் நண்பர்களாகவும் தெரிந்த மனிதர்கள் இப்போது புதியவர்களாக அறிமுகமில்லாத மனிதர்களாக என் கண்களில் தெரிந்தார்கள். என்னுடன் முன்பு ரெலோவில் வேலை செய்தவர்களில் சிவபாலசுந்தரம் என்பவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாக சித்திரவதை அனுபவித்து கொண்டிருப்பதாகவும் அவரின் சகோதரர் என்னைக் காண வந்துள்ளதாகவும் எனக்குத் தகவல் வந்தது. அவர்களின் எதிர்பார்ப்பு நான் ரெலோவில் இருப்பதனால், ரெலோவின் மூலம் அவரின் விடுதலைக்கு முயற்சி செய்வதாகும். ஆனால் என் நிலைமையை அவர்களுக்குச் சொல்ல முடியாது. எனவே, அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன்.

அந்த நிலைமையில் என்னைப் பார்க்க வந்த நண்பர்களும் உறவினர்களும் என் கால்களையும் கைகளையும் தடவிப் பார்த்தார்கள். அவர்களுக்கு நான் ஆயுதப் பயிற்சி எடுத்தவர் என்பதும் எவ்வகையான பயிற்சி என்பதைப் பற்றியும் தான் கேள்வி.

அவர்களின் எதிர்பார்ப்பையும் வாழ்க்கை முறையையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. முன்பு அதே வாழ்க்கை முறையில் வாழ்ந்த எனக்கு அதுவே இப்போது பிரச்சினையாக இருந்தது. அவர்கள் ஊரில் திரியும் போது கழிசானும் சேர்ட்டுமாக ரிப் ரொப்பாகத் திரிபவர்கள். வெளிநாட்டிற்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் எல்லாரும் அங்கேயே வெளிநாட்டு வாழ்க்கை வாழ்பவர்கள். உதாரணமாக வீட்டில் விவசாயப் பயிர்களுக்குப் பதிலாக குரோட்டன்களையும் பூக்கன்றுகளையும் வளர்த்து தண்ணீர் விடுவார்கள். எனது வீட்டில் தங்களுடன் ஒரு நாளாவது நிற்குமாறு அம்மாவும் சகோதரிகளும் கேட்டுக் கொண்டனர். எனவே, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒருநாள் இரவு தங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறதென முடிவெடுத்தேன்.

1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2

3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4

5. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5

6. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்