இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் என்பது எதிர்மறையானது. பாட்டாளி வர்க்க விரோதத்தன்மை கொண்ட எதிர்மறையான முதலாளித்துவ அரசியல் கூறாகத்தான் இன்று விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. சுயநிர்ணயத்தைப் பிரிவினையாகத்தான் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்து விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த வகையிலேயே தான் தான் சுயநிர்ணயத்தைக் கோருவதும், நிராகரிப்பதும் கூட பொதுவாகக் காணப்படுகின்றது.

கடந்தகாலத்தில் பாட்டாளி வர்க்கம் இன முரண்பாட்டின் மீது வர்க்கக் கண்ணோட்டத்தில் செயற்படாமை தான், இதற்கான முக்கிய காரணம். தேசிய இன முரண்பாட்டை பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகக் குறுக்கி, அதில் தான் ஆற்றவேண்டிய வர்க்க கடமையை மறுதளித்தது. ஒரு முரண்பாட்டில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையையும், அதற்காக போராட வேண்டிய வர்க்கக் கடமையையும் நிராகரித்து வந்தது கடந்தகால வரலாறு. எமக்கு வெளியில் இன்றுவரை சுயநிர்ணயத்தை மார்க்சிய உள்ளடக்கத்தில் முழுமையாக கொள்கையளவில் கூட எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சரியான உள்ளடக்கத்துக்கு அப்பால் "சுயநிர்ணயத்தை" இடது சார்ந்து ஏற்றுக் கொள்பவர்களை எடுத்தால்

1.இன்றைய சர்வதேச சூழலில் மற்றைய பாட்டாளிவர்க்கமல்லாத வர்க்கங்களுக்கு உதவும் எல்லைக்குள் தான் சுயநிர்ணயம் இருப்பதாகக் கூறி, அதை இன்னும் ஏற்றுக்கொள்ளாமலும் நிராகரிக்காமலும் இருக்கின்றனர்.

2.மேற்குறிப்பிட்ட காரணத்தை முன்வைத்து சுயநிர்ணயத்தின் முழுமையை மறுத்து, அதன் ஒரு பகுதியை சுயநிர்ணயமாக விளக்கி ஏற்றுக் கொள்கின்றனர்.

3.தேசியவாதம் சார்ந்த வலது சந்தர்ப்பவாதக் கண்ணோட்டத்தில், சுயநிர்ணயத்தை ஏற்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தான் சுயநிர்ணயம் பற்றிய இடதுசாரிய கண்ணோட்டம் பொதுவாக காணப்படுகின்றது. மறுதளத்தில் சுயநிர்ணயம் பற்றிய பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில், கடந்தகாலம் முதலாக சுயநிர்ணயம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு இருக்கவில்லை. மாறாக தேசியவாதிகளால் "சுயநிர்ணயம்" என்பது பிரிவினையாக காட்டப்பட்டும், அப்படி புரிந்து கொள்ளப்பட்டும், புரிய வைக்கப்பட்டும் காணப்படுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் சார்ந்த தேசியவாதிகளாலும், பாசிட்டுகளாலும் பிரிவினையாக்கப்பட்ட "சுயநிர்ணயம்", அதே போக்கில் ஒடுக்கும் இனவாதிகளால் பிரிவினையாகவே விளக்கப்பட்டும் காட்டப்பட்டும் இருக்கின்றது. இந்த வகையில் தான் இலங்கையில் "சுயநிர்ணயம்" இன்று இரு இனவாத தரப்புகளாலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கத்திடம் சுயநிர்ணயத்தைக் கோருகின்றவர்கள், பாட்டாளி வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் நின்று கோருவதில்லை. தேசியவாத, சந்தர்ப்பவாத நோக்கில் நின்று தான் கோருகின்றனர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் கோருகின்றபோது, பாட்டாளி வர்க்க கண்ணோட்டமல்லாத அனைத்தையும் எதிர்த்துப் போராடியபடி கோர வேண்டும். இன்று இதை பொதுவில் காணமுடியாது.

மறுதளத்தில் சமூகப் பொருளாதார காரணத்தால் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள், சுயநிர்ணயம் பற்றிய தவறான தேசியவாதக் கண்ணோட்டங்களை மறுத்து போராடியபடி, இன்றைய சர்வதேச நிலைக்கு ஏற்ப இலங்கைக்கு ஏன் பொருத்தமற்று இருக்கின்றது என்பதை நிறுவ வேண்டும்.

மார்க்சிய அடிப்படையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்பவர்களும், அது இலங்கைக்கு இன்று பொருத்தமற்றதாக கருதுகின்றவர்களும், பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் சுயநிர்ணயத்தை விளக்கி புரிந்து கொள்ளும் போராட்டம் அடிப்படையானது. இது இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதிப் போராட்டமாகின்றது. சுயநிர்ணயம் இன்னமும் அரசியல்ரீதியாக ஒரு விவாதப்பொருளாகவே தொடர்ந்து இருக்கின்றது. இன்று சுயநிர்ணயத்தை கொள்கைரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் ஏற்றுக் கொள்வதல்ல, மாறாக சுயநிர்ணயம் பற்றி தவறான புரிதலை மறுக்கின்ற போராட்டம் முதன்மையானதும் அவசியமானதுமாகும்.

இதை செய்யாத வரை சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வது என்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகும். சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி முரண்படும் அரசியல், அர்த்தமற்ற மூடிமறைத்த தேசியவாத அரசியல் நடத்தையாகும். இலங்கையில் இனமுரண்பாட்டுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை முன்வைத்து போராடுவது என்பது,

1.இனவாதம் மற்றும் இனவொக்குமுறைக்கு எதிராக முரணற்ற வகையில் போராடுவதன் மூலம் வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்காகவும் தான்

2.இதற்கு அரசியல் அடிப்படையாக விளங்கும் சுயநிர்ணயக் கோட்பாட்டை பற்றி, தவறாக புரிந்து கொண்டுள்ள அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைக்கப் போராடுதல்

இன்று இலங்கையில் சுயநிர்ணயத்தை வெறும் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது, பிரிவினையை ஏற்றுக்கொள்வதான அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ளப்படுகின்றது. இந்த எதார்த்தம் அரசியல்ரீதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

1.சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இதை மாற்றி அமைக்க, பிரிவினைக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்து பாட்டாளிவர்க்க ஐக்கியத்துக்காக போராட வேண்டும்.

2.இன்றைய சர்வதேச அரசியல் சமூக பொருளாதார காரணத்தால் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட, பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை முன்வைத்து சுயநிர்ணயத்தின் சரியான மார்க்சிய உள்ளடக்கத்துக்காகப் போராட வேண்டும்.

சுயநிர்ணயம் அரசியல்ரீதியாக சிதைக்கப்பட்டு, விளக்கம் கொள்ளப்பட்டு இருப்பதை பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. இதற்கான வர்க்கப்போராட்டத்தின் ஊடாகத்தான் சுயநிர்ணயத்தை முன்வைத்தலும் சரி வைக்கப்படாமையும் சரி, வர்க்க அரசியல் மயமாகும்;

தொடரும்

 

பி.இரயாகரன்

04.04.2013

 

 

1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)

2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)

3. லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)

4.முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)

5. இலங்கையின் வர்க்கக் கூறுகள் சுயநிர்ணயத்தைக் கோருகின்றதா? மறுக்கின்றதா! (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 5)