காலங்காலமாக அரசியல் பிழைப்புவாதிகளை நம்பி வாக்குப் போட்டதன் விளைவுகள் தான், இலங்கையின் தொடரும் இன்றைய நிகழ்வுகள். இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. இதற்கு மாற்றும் இல்லை. தமிழ் மக்கள் விட்ட அதே அரசியல் தவறு. இன்று இனரீதியாக பிரிந்து கிடக்கும் மக்களின் நிலை இதுதான்.
முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயல்களை முஸ்லீம் மக்கள் இன்று அனுபவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இலங்கையில் பேரினவாதத்துக்கு செங்கம்பளம் விரித்தவர்களில், முஸ்லீம் அரசியல்வாதிகளின் பங்கு தனித்துவமானது. பேரினவாதத்தைக் காட்டி முஸ்லீம் மக்களை இனரீதியாக மதரீதியாக பிரித்து வாக்குப் பெற்றவர்கள், இனவாதிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்துவது எப்படி சாத்தியமானது? இதன் மூலம் தங்கள் தனிப்பட்ட சொத்துகளை பெருக்குவதையே அரசியல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதும், செயல்படுவதும் மட்டும் தான் உண்மை. இதை வாக்குப்போடுவதன் மூலம் மாற்றிவிட முடியாது.
இந்த அரசியல் பின்புலத்தில் தான் கிறிஸ் மனிதன் தொடங்கி ஹலால் ஒழிப்பு வரை தொடர்ந்து ஏதோ ஒன்று அரங்கேறுகின்றது. மத அடையாளங்கள் அழிப்பு, புனித பிரதேச பாதுகாப்பு, முக்காடு ஒழிப்பு, முஸ்லீம் வியாபார நிலையங்களை ஒழித்தல் என்று தொடரும் வன்முறைகள், மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இனக் குடியேற்றங்கள், மத அடையாளங்களை திணித்தல், இதன் அடிப்படையில் திட்டமிட்ட இராணுவ மயமாக்கல். நாட்டின் பொது அரசியல் போக்காக உள்ளது. இந்தப் பின்புலத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஒடுக்க உதவுகின்றனர்.
முஸ்லீம் மக்கள் பேரினவாதத்தால், குறுந்தேசியவாதத்தால் ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்ட நிலையில், முஸ்லீம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வந்தனர். இந்தவகையில் இலங்கையில் அனைத்து சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மேலான ஒடுக்குமுறைக்கும் துணை நின்றவர்கள் தான், முஸ்லீம் மக்களின் இன்றைய நிலைக்கு பொறுப்பாளிகளே ஒழிய பேரினவாதிகள் மட்டும் அல்ல.
இலங்கை வரலாற்றில் சுதேசிய காலனித்துவவாதிகள் ஆட்சியேறியது முதல், இனவாதத்தைக் கொண்டு மக்களை பிரித்தும் பிளந்தும் ஆட்சி செய்து வருகின்றனர். மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு எதிராக செயற்பட்ட ஆட்சியாளர்கள், மக்களை ஒடுக்கியதன் மூலம் இனரீதியாக பிரித்து அணிதிரட்டினர்.
இப்படி இனரீதியான அரசியல் செய்தவர்கள், அந்த மக்களுக்காக உண்மையில் போராடவில்லை. மாறாக சொந்தநலன் சார்ந்து இனத்தையும் மதத்தையும் பயன்படுத்தினர்.
இன்று முஸ்லீம் மக்கள் மேலான அடுத்தடுத்த தொடர் பேரினவாத தாக்குதல்கள் முன்னம், தமிழினத்தை ஒடுக்க அரசுக்கு பக்கபலமாக நின்ற அரசியல்வாதிகளின் பங்கு தனித்துவமானது. இதற்கு எதிராக முஸ்லீம் சமூகம் சார்ந்து எழுந்த குரல்கள் புறக்கணிக்கப்பட்டு, பேரினவாத செயல்களுக்கு உதவியது தான் இவர்களின் கடந்தகால நிகழ்கால வரலாறு.
இன்னும் சொந்த மக்களை நம்பி போராட முன்வராதவர்கள், பேரினவாத தலைவர்கள் நம்பிக்கை வைத்துக்கொண்டு கோரிக்கைகளையும், அறிக்கைகளையும், வேண்டுகோள்களையும் தொடர்ந்து வெளியிடுகின்றனர்.
இந்த அரசியல் மீதான மக்களின் அதிருப்திகளை பூசிமெழுக வார்த்தை ஜாலங்கள். பதவியைக் கூட துறப்போம் என்று பேசும் இந்தக் கூட்டம், இதன் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்தை என்ற துறக்;கப் போவதில்லை. ஊழலும், இலஞ்சமும், முறைகெட்ட வாழ்க்கையும் என்ற கட்டமைத்துள்ள தங்கள் இனவாத அரசியல் வாழ்க்கையைக் கடந்து, மக்களை சார்ந்து ஒருநாளும் போராடப் போவது கிடையாது.
இன்று செய்ய வேண்டியது என்ன என்பது மிகத் தெளிவானது. மக்கள் தமக்காகத் தாம் போராடுவது தான். வாக்குப்போடுவதன் மூலம், மற்றவனை நம்புவதன் மூலம், இந்த ஒடுக்குமுறையை எதிர்கொண்டு போராடவும், ஒழிக்கவும் முடியாது. மாறாக இலங்கையில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதன் அவசியத்தையே, அண்மைய பேரினவாத நிகழ்வுகள் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது.
இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிராக அனைத்து இன மக்களை ஒன்றிணைக்கும் சமவுரிமைக்கான இன்றைய நடைமுறைரீதியான செயல்திட்டம் மட்டும் தான், இன்று அரசியல் மாறாக எம்முன் உள்ளது. இனவாதத்தை, மதவாதத்தை எதிர்த்து போராட, சமவுரிமைக்கான அனைத்து இன மத மக்கள் உள்ளடக்கிய போராட்டம் ஒன்று அவசியம். இன்று எம்முன் நடைமுறைச் சாத்தியமான அரசியல் செயல்திட்டமாக இது உள்ளது. மக்கள் தாங்களே தீர்மானிக்கூடிய வகையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று முன்னெடுப்பது, இன்று அவசியமானது. இதைத்தான் சமவுரிமை கோருகின்றது.
பி.இரயாகரன்
30.03.2013