வந்தாரை வாழ வைக்கும் என்று சொல்லப்படும் தமிழகத்திற்கு பயணம் வந்த ஒரு மனிதன் தாக்கப்படுகின்றான். வெறிநாயை அடிப்பது போல ஒரு மனிதனை,வேறு நாட்டிற்கு வந்தவனை, ஆதரவற்றவனை, துரத்தி துரத்தி அடிப்பதை என்னவென்று சொல்வது. காட்டுமிராண்டித்தனம், கோழைத்தனம், தெருச்சண்டித்தனம், மனிதத்தை காலில் போட்டு மிதிக்கும் கொடூரம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. இதை இலங்கைத்தமிழ் மக்களிற்காக, இனப்படுகொலையின் போது மரணித்தவர்களிற்காக செய்கிறோம் என்பது இறந்தவர்களை அவமதிக்கும் செயல். இருப்பவர்களை இன்னொரு அழிவிற்கு தள்ளிவிடும் செயல்.

சீமானும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரும் செய்யும் தமிழ் இனவாத அரசியல் இலங்கைத் தமிழருக்கு எதிரானதும், ஆபத்தானதும் ஆகும். மிகவும் மெலிதாக முளை விட்டு எழும் தமிழ்-சிங்கள ஒற்றுமையை வேரோடு அழிக்கும் அரசியல் இது. தமிழ் குறுந்தேசிய அரசியலை தூக்கிப்பிடித்து, இலங்கையின் மற்றைய தேசிய இனங்களுடன் பகமை கொண்டு இலங்கைத்தமிழரது வாழ்வையும்,வளத்தையும் சிங்களபேரினவாதிகளிடம் பலி கொடுத்த தமிழீழ இயக்கங்களின் வலதுசாரி அரசியலை ஒத்தது இது. வெறியோடு காத்திருக்கும் சிங்கள பேரினவாத சக்திகளிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து மறுபடி ஒரு இனக்கலவரத்தையோ, இனப்படுகொலையையோ தமிழ்மக்கள் மீது கட்டவித்து விடுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கக் கூடிய முட்டாள்தனமான அரசியல் இது.

இலங்கைத்தமிழ் அகதிகளை குற்றவாளிகளைப் போல சிறப்புமுகாம்களில் அடைத்த எம்.ஜி.ஆர் தலைவன், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதா ஈழத்தாய், இனப்படுகொலை செய்த மத்திய அரசுடன் பதவி சுகம் கண்ட கருணாநிதி தமிழினத்தலைவர். இவர்களை மாறி, மாறி ஆதரித்துக் கொண்டு இந்த கள்ளர்கள் ஈழமக்களிற்கு தீர்வை பெற்று தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து கொண்டிருக்கும் இந்த தமிழினவெறியர்கள் அப்பாவிமக்களிடம் தங்களது வீரத்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு தமிழர்களிற்கும், இலங்கை தமிழர்களிற்கும் எதிராக பேசும், செயற்படும் இளங்கோவன், இந்து ராம், சுப்பிரமணியசாமி, சோ ராமசாமி, அழித்தவளை அன்னை என்று சேலைக்குள் பதுங்கும் காங்கிசுக்கயவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரிகையில் இந்த அப்பாவிகளை அடிக்கிறீர்களே வெட்கமாயில்லை.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்தை உருவாக்கி அதை ஒரு கருத்தாக, பிரச்சாரமாக பொதுமக்களிடையே பரப்பியதில் சிங்கள அரசியல்வாதிகளிற்கு இணையான சமபங்கு புத்தபிக்குகளிற்கு உண்டு. அவர்கள் தமிழ்மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியபோது பலவீனமான, எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழ்மக்கள் பரந்துபட்ட சிங்கள பொதுமக்களிடம் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். ஏனைய சிறுபான்மை இனங்களை இணைத்து இனவாதத்திற்கு எதிராக போராடியிருக்க வேண்டும். ஆனால் சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் இனவாதத்தை தமிழ்கட்சிகளும், தமிழீழ இயக்கங்களும் தூக்கிப்பிடித்தனர். மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் சிங்களவரின் தோலில் செருப்பு தைப்போம் என்ற பேச்சுக்கள், அனுராதபுரத்தில் சிங்களபொதுமக்கள் மீதான கொலைகள் போன்றவை தமிழ்மக்களிற்கு அழிவை தேடித்தந்ததே அன்றி எந்தவித விடிவையும் தமிழ்மக்களிற்கு தரவில்லை.

அண்மையில் சமவுரிமை இயக்கம் கண்டி தலதாமாளிகைக்கு அருகாமையில் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று கவன ஈர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது பொதுபலசேனையை சேர்ந்தவர்கள் சமவுரிமை இயக்கத்தினரை எதிர்த்து இலங்கை சிங்களநாடு, இலங்கை ராணுவம் இலங்கை முழுக்க நிற்கும் என்று விவாதம் செய்து அடிக்கப்போனார்கள். சமவுரிமை இயக்கத்தினருக்கு பாதுகாப்பாக சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து நின்றார்கள். கடுமையான இனவாதசூழலில், பாறை பிளந்து மெதுவாக முளைவிடும் இத்தகைய நிகழ்வுகளை பெருவிருட்சமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

நாட்டின் வடக்கு,கிழக்கு தவிர்ந்த மற்றைய பகுதிகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சிங்களமக்கள் மத்தியிலேயே வாழ்கிறார்கள். மலையக தமிழர்கள் சிங்களக்கிராமங்கள் சூழ்ந்து இருக்கும் தேயிலைத் தோட்டங்களிலேயே வாழ்கிறார்கள். தூரத்து சிங்களத்து கிராமங்களிலும் முஸ்லீம் மக்கள் ஓரிரு குடும்பங்களாக வாழ்கிறார்கள். ஒரு சிறுதீப்பொறி ஒரு பெரும் இனக்கலவரத்தை மூட்டி விடக்கூடிய சூழலிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். அந்த அபாயத்தை உணர்ந்து தான் முதலில் இது போன்று நடந்த ஒரு தாக்குதலை எதித்து ஒரு ஊர்வலம் தமிழர்களால் நடாத்தப்பட்டது. இப்போது நடந்ததை எதித்து மனோகணேசன் விடுத்துள்ள அறிக்கையும் அதையே காட்டி நிற்கிறது. இந்த யதார்த்த நிலைமையை தமிழ் மக்களின் அவலநிலையை உணர்ந்து இது போன்ற செயல்களை, இனவெறி அரசியலை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும். தமிழ்மக்களின் மேல் உண்மையான அக்கறை இவர்களிற்கு இருக்குமாயின் இனங்களைப் பிரிப்பது அல்ல, இனங்களை ஒன்று சேர்த்து இனவெறி, சர்வாதிகார இலங்கை அரசை தூக்கி எறிவது தான் இலங்கை தீவின் அனத்து மக்களிற்கும் விடிவை தரும் என்பதை உணர்ந்து கொண்டு உழைக்கும் சக்திகளிற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.