இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தடையாக, தொடர்ந்து இனமுரண்பாடும் காணப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் இனமுரண்பாட்டை தூண்டுவதன் மூலம் தான், ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரித்தாளுகின்றது. இந்த வகையில் இனங்களுக்கு இடையில் இனவொற்றுமையை ஏற்படுத்துவதை, தன் சொந்த வர்க்கநலனில் இருந்து ஆளும் வர்க்கங்கள் செய்யப் போவதில்லை. இனவொற்றுமையை தடுத்து நிறுத்தும். இது தான் இன்றைய அரசியல் எதார்த்தம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த இன ஐக்கியம் அவசியமானது. இந்த ஐக்கியம் என்பது கூட, முன்கூட்டியே ஐக்கியமும் அதன் பின் வர்க்கப்போராட்டமும் என்பதல்ல. மாறாக இரண்டும் பிரிக்க முடியாததும், ஒருங்கிணைந்ததுமான அரசியல் கூறாகும். ஒருங்கிணைந்தபடி முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு தான் சுயநிர்ணயம். இதற்கு வேறு அரசியல் விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கமல்லாத (ஆளும்) வர்க்கங்கள் இந்தக் கோட்பாடு தொடர்பாக கொண்டுள்ள எந்த முரணான நிலைப்பாட்டுக்கும், அதன் திரிபுக்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை சரியாக முன்னிறுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறன்றி வேறுவழியில் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இனவொடுக்குமுறைக்கு எதிரான இன ஐக்கியம் என்பது, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போராட்டம். சுயநிர்ணயம் அதற்கு வழிகாட்டுகின்றது.

1924 ஆண்டு லெனின் மரணத்தின் பின் கட்சியில் சேர்ந்த இரண்டு இலட்சம் புதிய உறுப்பினர்களை வழிகாட்டிய போது, ஸ்ராலின் கூறியது இன்றும் இங்கு பொருந்தும். "..தேசிய(இன)ப் பிரச்சனையானது, ஒரு சீர்திருத்தவாதக் கண்ணோட்டமுடைய பிரச்சனையாகவே கருதப்பட்டது. மூலதனத்தின் வல்லமை என்ற பொதுப் பிரச்சனையுடன் தொடர்பற்ற தனியொரு பிரச்சனையாகவே கருதப்பட்டது. ஏகாதிபத்தியத்தை தூக்கியெறியும் பிரச்சனையுடன், பாட்டாளி வர்க்க புரட்சி என்ற பிரச்சனையுடன் தொடர்பற்றதாக கருதப்பட்டது. .. அமைதியாக 'தானாகவே தன்போக்கில்" தீர்த்துவிடக் கூடிய ஒரு விசயம் என்று கருதப்பட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பெரும்பாதையில் குறுக்கிடாத ஒரு விசயமாகவே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிப் போராட்டமின்றியே தீர்க்கப்படக் கூடிய பிரச்சனையாகவே கருதப்பட்டது. இப்போது இந்த எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ... பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையதாகவும், அதனுடைய வெற்றியின் அடிப்படையிலுமே காலனிகளின் தேசிய (இன) பிரச்சனை தீர்க்கப்பட முடியும் .... தேசிய(இன)ப் பிரச்சனை என்பது, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பொதுப் பிரச்சனையின் ஒரு பகுதியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பொது பிரச்சனையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது" என்றார். இந்த வகையில் சுயநிர்ணயத்தின் நோக்கம் மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஸ்ராலினால் முன்வைக்கப்படுகின்றது. இது ஏகாதிபத்தியத்துக்கு உதவும் ஒரு கோட்பாடு அல்ல.

ஸ்ராலின் மேலும் கூறினார் ".. தேசவிடுதலை இயக்கங்களில் புரட்சிகர ஆற்றல்கள் பொதிந்திருக்கின்றது என்றும், பொது ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிய இந்த ஆற்றல்களை பயன்படுத்திக் கொள்ளும் சாத்தியம் உள்ளது என்றும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கின்றது லெனினியம்." என்றார். பாட்டாளி வர்க்க நலன் சார்ந்து அங்கீகரிக்கும் அதேநேரம், பாட்டாளி வாக்க நலனுக்கு விரோதமான அனைத்தையும் இது எதிர்க்கின்றது என்பதையும் கூட ஸ்ராலின் தெளிவுபடுத்தி விடுகின்றார். சுயநிர்ணயத்தை ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம் மிகத் தவறானது. இது மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி விடுகின்றது. சுயநிர்ணயம் என்பது, தேசிய இன முரண்பாட்டை தன் வர்க்கப் போராட்ட அரசியலுக்கு உட்படுத்தி, தனது பொதுப் பிரச்சனையில் பகுதி பிரச்சனையாக்கிவிடுகின்றது. தேசிய இன முரண்பாட்டை பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்க பிரிவுகள் கையில் இருந்து மீட்டு, தனது வர்க்கப் பிரச்சனைக்கு கீழ்ப்படுத்திவிடுகின்றது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு இவ்வாறு முன்மொழிவதுடன், அதனை நிறைவேற்றுகின்றது.

இந்த வர்க்க அரசியல் சாரத்தை மறுப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் கையில் இனமுரண்பாட்டை எடுக்க பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. தனிமனிதன் முதல் ஒரு இயக்கம் வரை இனவொடுக்குமுறையை செய்யாமல் இருக்கலாம். அதைத் தன்னளவில் எதிர்க்கலாம். இதற்கு எதிராக போராடலாம். ஆனால் இது பாட்டாளி வர்க்கம் கோருகின்ற அதிகாரத்துக்கான, வர்க்கப் போராட்டமல்ல. பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்துக்கான போராட்டம் என்பது, வெறுமனே இனவொடுக்குமுறையை எதிர்த்தல் மட்டுமல்ல. பாட்டாளி அதிகாரத்தை பெறுவதற்கான ஒருங்கிணைந்த அரசியல் செயல்தந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றைய வர்க்கங்கள் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறை மூலம் அதிகாரத்தை தக்கவைக்கவும் பெறவும் போராடுகின்ற போது, பாட்டாளிவர்க்கம் இனவொடுக்குமுறையை எதிர்ப்பதால் மட்டும் இதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கான வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்படவேண்டும். இதைத்தான் சுயநிர்ணயம் வரையறுக்கின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது, சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதை சுயநிர்ணயத்திற்கு உட்படாத போராட்டமாக

1. விளங்கிக் கொள்வது எப்படித் தவறோ, அப்படி

2. விளக்குவதும் கூட தவறாகும்.

இப்படி இரு தவறான போக்குகளும் காணப்படுகின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், சுயநிர்ணயத்தின் மையமான அரசியல் கூறல்ல. மாறாக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கான ஒருங்கிணைந்த செயல்தந்திர கூறுதான் மையமானது.

அதேநேரம் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கங்கள் பயன்படுத்தும் அளவுக்கு, சுய முரண்பாடு கொண்ட முரணான கோட்பாடு அல்ல. மாறாக சுயமுரண்பாடு அற்ற, முரணற்ற கோட்பாடு. மற்றைய வர்க்கங்கள பயன்படுத்திவிடும் என்பதும், ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் என்றும் இந்தக் கோட்பாட்டை விளக்கும் தர்க்கங்கள் வாதங்கள் அர்த்தமற்றவை.

 

தொடரும்

 

பி.இரயரகரன்

09.03.2013