அந்தப் பெண்ணைக் கேளுங்கள் அவள் அறிவாள். ஆனால் அவள் பதில் சொல்வாளா, தெரியவில்லை. கண்கள்கூட அவளது உணர்ச்சிக் குவியல் உறைந்து போய்விட்டதையே சொல்கின்றன. கருப்புச் சிறுவனின் கரம் கூட அவனது கூட்டுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய புரதம் தாமிரப் பழுப்பு நிற மெழுகாய் வெளியே உருகிவிட்டது.
அந்த ஆப்பிரிக்கப் பெண்ணின் நிழற்படம் எடுத்தவர் கனடா நாட்டுக் கலைஞர் ஃபின்பார் ஓ' ரெய்லி. இவர் ராய்ட்டர் உலகச் செய்தி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இப்படத்துக்காக "உலகச் செய்தியாளர்' தரப்பில் முதல் பரிசு கொடுத்தார்கள். இந்த நிழற்படம் ஓர் உறைந்த படிமம். நேற்றைய, இன்றைய, நாளைய ஆப்பிரிக்காவின் தோராயமான செய்தி. ஒரே தொடரில் அதைச் சொல்வதானால் சுரண்டலின் விளைவான பசி.
இந்த நிழற்படத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த தலைமை நடுவர் சொன்னார்: ""இந்தப் படத்தின் படிமம் எல்லா அம்சங்களையும் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. அழகு, பயங்கரம், அவலம், எளிமை, கம்பீரம் அத்தனையும் அதில் இருக்கிறது. உங்கள் மனத்தை அசைக்கவும் வல்லது.'' கவனமாக இச்சொற்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்யுங்கள்.
உங்கள் மனதில் நியாயமாகவே சில கேள்விகள் எழும். பயங்கரத்தை எப்படி அழகாகப் பார்க்க முடியும்? அவலச் சித்தரிப்பு எப்படி கம்பீரமாக, சுவைநயமாக இருக்க முடியும்? மனிதனை பண்டங்களாக அடிமைகளாக ஆக்கி, பயன்படுத்தியதும் தூக்கி எறிந்து அழித்துவிடும் முதலாளித்துவ உலகம் அப்படித்தான் நினைக்கும். அங்கே நீரோ பிடில் வாசிப்பான். அவர்களின் வாதப்படி உள்ளடக்கத்திலிருந்து பிரித்துவிட்டால், இசைநயத்தில் பிடில் அழகு. அப்படியானால், எது அழகு? மனிதத்துக்கு எதிரான உள்ளடக்கத்தை மறைக்கும் வடிவம் அழகாகுமா?
கலையின் உள்ளடக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் வடிவத்தைப் பாருங்கள் என்று வடிவம் முக்கியமென்று கற்றுத்தரும் முதலாளித்துவம் உள்ளடக்க முக்கியத்துவத்தை அதன் சமூக சாராம்சத்தை ஒப்புக் கொள்ளக்கூடக் கூசுகிறது. அதாவது, ஆப்பிரிக்க அவலத்தையே "அழகாக' எடுத்ததால்தான் ஓ' ரெய்லிக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள், பரிசு கொடுத்த நிபுணர்கள்.
மனத்தைத் தைக்கின்ற வலிதரும் அந்நிழற்படம் வெறும் அழகான காகிதமா? அல்ல, அப்படம் நானூறாண்டு ஆப்பிரிக்க வரலாற்றின் கொந்தளிப்பைத் தனக்குள்ளே வைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் ஓர் எரிமலை. ஆப்பிரிக்க வரலாற்றை ஆழமாக அறிந்தவர்களுக்கு இது புரியும்.
ஆப்பிரிக்கக் கருப்பர் 12 லட்சம் பேர் இன்று அகதிகள் முகாமில் வாடுகிறார்கள். கஞ்சிக்காக, மருத்துவத்துக்காக அமைந்த அப்படிப்பட்ட நிகெர் என்ற ஆப்பிரிக்க நாட்டு முகாம் ஒன்றில்தான் ஓ' ரெய்லி அப்பெண்ணின் படத்தை எடுத்திருக்கிறார்.
அந்த நிகெர் நாட்டு வரலாற்றைப் புரட்டினால் இந்திய வரலாற்றைப் பார்ப்பது போலவே இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் — இந்தியாவில் சாதிக் கொடுங்கோன்மை, ஆப்பிரிக்காவில் இன யுத்தநிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை.
ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்திய ஏகாதிபத்தியங்கள் அதில் முக்கியமாக பிரான்ஸ், பாரம்பரிய நிகெரின் விவசாயத்தை அழித்து ஏற்றுமதிப் பணப் பயிருக்கு மாற்றியது; இயற்கைச் சூழலை அழித்தது; உணவுப் பயிர் உற்பத்தியைத் திட்டமிட்டு நசுக்கியது; இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க உலக வங்கிக் கடன்திட்டங்கள் ஆப்பிரிக்காவுக்குப் படையெடுத்தன. 1960ன் பிற்பகுதியிலிருந்து 1998 ரசியச் சமூக ஏகாதிபத்தியத்தின் நிலைகுலைவு வரை 40 ஆண்டுகள் அமெரிக்க ரசியமோதல் ஆப்பிரிக்க மண்ணிலும் நடந்தது. இரண்டு தரப்பிலிருந்தும் கலகக் கும்பல்களுக்குப் பணமும், ஆயுதமும் வாரிவழங்கப்பட்டன. சண்டைகள் பெருகின. நிகெர் உட்பட எத்தியோப்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளில் சகோதரப் படுகொலைகளில் ரத்தம் ஆறாய் ஓடியது.
ஆப்பிரிக்க மக்களின் இந்த வலிகள் யார் மனத்தைத் தொட்டனவோ அவர்கள் அம்மண்ணில் ஆப்பிரிக்கப் பசியின் நிறமென்ன என்று அறிந்து கொண்டு ரண வலியைக் கொடுத்த பிரெஞ்சு, ஆங்கிலேய, இத்தாலிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களை கென்சரோ விவா போன்ற தியாகிகள் தலைமையில் எதிர்த்தார்கள்; இன்னமும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எதிரிகள் மக்களிடையே அடிவேர்வரை சென்று எதிர்ப்புக்களை நீர்த்துப் போகச்செய்து அடக்கி எதிர்வேலை செய்யக்கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, அடிமட்ட அரசாங்கங்களாக, விதைத்து வளர்க்கிறார்கள்.
அண்மையில், அவற்றின் ஊழியர்கள் ஆப்பிரிக்காவின் வறுமை பற்றி உலக மக்களின் கவன ஈர்ப்புக்காக ""வறுமையை வரலாறாக்குவோம்!'' என்ற முழக்கத்தோடு, பல அய்ரோப்பிய இசை நிகழ்ச்சிகளை அமைத்தார்கள்; ஆப்பிரிக்க வரலாற்றையே வறுமையாக்கிப் புலம்பச் செய்துவிட்டார்கள்.
கருணை கூடச் சுரண்டும் என்றால் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். மேலே ஆப்பிரிக்கச் சூழலில் நடந்த பன்னாட்டுக் கம்பெனிகளது கருணையின் அரசியல்பற்றிச் சேர்த்துப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள். அதற்கொரு கலை இலக்கணம் வகுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ""அவலம் அழகாகுமெ''ன்ற நடுவரின் சொற்கள்.
அந்த நிழற்படத்தில் எது முக்கியம்? மனித அவலம், துன்பம்தான் படத்தின் உள்ளடக்கம், கருப்பொருள். அது முக்கியம் என்று அவர் சொல்லவில்லை, சொல்லமாட்டார். நாகரீக மனிதர்களின் மனதை உறுத்தாமல், மேட்டுக்குடி நன்கொடையைத் திரட்டுவதற்காக ஆப்பிரிக்க வறுமையைச் சொல்ல வேண்டுமானால் சுற்றிவளைத்து மென்மையான சரக்காக்கி "அழகோ'டு சம்பந்தப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். அதனால்தான் அதை "அழகு' என்றார் அவர்.
இப்போது மறுபடி நிழற்படப் பெண்ணைப் பாருங்கள். அவள் பார்வை உங்களை ஆயிரம் கேள்விகளால் துளைக்கவில்லையா? ""எனது வரலாறு மட்டுமல்ல, உங்கள் தமிழகத்திலேயே தாதுவருஷத்துப் பஞ்சத்தில் சுமார் 40 லட்சம் மக்கள் மடிந்ததையும், பிறகு வந்த பல ஆயிரம் பஞ்சங்களில் பல லட்சம் மக்கள் மடிந்ததையும் மறந்துவிட்டீர்களே!'' என்று கேட்கவில்லையா?
அந்த ஆப்பிரிக்கப் பெண் ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறது; அவள் மகன் சிறு கரத்தால் தொட்டு, ""சொல் அம்மா, உன் வரலாற்றை உரக்கச் சொல்'' என்பது போலல்லவா இருக்கிறது!
ஒரு வரியில் அதை மொழிபெயர்த்துப் பாடினான், கறுப்புக் கவி லாங்ஸ்டன் ஹியூஸ்: ""மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கறுப்பு முகம்.''
அதனாலேயே அது வலியது, நம் எல்லோருக்கும் நெருக்கமானதும் கூட.
மு புதூர் இராசவேல்
(நிழற்படமும் செய்தி ஆதாரமும்:
"இந்து' நாளேடு, 11.2.2006)
இந்து வாலா!
ஆப்பிரிக்காவில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் நெடிய வரலாறும் பலவிதமான வலிகளும் வேதனைகளும் உண்டு. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து அருகில் உள்ள கட்டுரையில் குறிக்கப்படும் ஆப்பிரிக்கப் பெண்ணோடு பொருத்திப் பார்க்க சமூகப் பார்வையும் சமூகச் சுரணையும் வேண்டும்.
இந்நிழற்படத்தையும் செய்திக் குறிப்பையும் வெளியிட்ட "இந்து'ப் பத்திரிக்கையின் சமூகச் சுரணையைப் பாருங்கள். இதனை "உலகச் செய்தி'ப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டு அதே பக்கத்தில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது. அது, மும்பை நாய்களுக்குச் சோறு கொண்டுபோகும் வியாபாரம் சக் கைப் போடு போடுவதைப் பற்றி.
மும்பையில் அலுவலக வேலைக்குச் செல்லும் நடுத்தர மக்களுக்குக் கூடையில் சோறு எடுத்துச் செல்பவரை "டப்பாவாலாக்கள்' என்று அழைப்பார்கள். இனி, அவர்கள் பங்களா நாய்களுக்கும் வகைவகையான தரம் உயர்ந்த சோறு எடுப்பார்கள். இப்போதே இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொத்தம் ஒன்னேகால் கோடி வளர்ப்பு நாய்கள் இருக்கின்றன, இனிவரும் மூன்றாண்டுகளில் எண்ணிக்கை இருமடங்காகிவிடும் என்று "இந்து' சொல்கிறது. உலகமயமாக்கத்தால் செல்வம் பெருகியிருப்பதும், மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதும் காரணமாம்.
உலகின் ஒரு பெரும் கண்டமான ஆப்பிரிக்காவில் மக்கள் பசியால் துடிக்கிறார்கள்; இந்தியாவிலும் ஒரிசா, ராஜஸ்தான், ஆந்திர விவசாயிகள் சோறில்லாமல் பச்சிலை தின்கிறார்கள், பட்டினியால் மடிகிறார்கள், வாழ வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நேரத்தில் இப்படி இரு செய்திகளை ஒரே பக்கத்தில் வடிவமைப்பு ((lay-out) செய்திருக்கிறது "இந்து' ஏடு. இது வக்கிரத்தின் உச்சம். வருணாசிரமச் சாதி இதயம் எந்த அளவு வக்கிரமானதோ அதே அளவு இப்படி உலகமயத்தால் பெருகிய பணக்கொழுப்பு வழிவதும் வக்கிரமே.
அறச்சீற்றத்தை "இந்து' இதயத்திலிருந்து எதிர்பார்க்க முடியுமா, முடியாதுதான்.