இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை "சுயநிர்ணயத்தை" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக "இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது

இதன் மூலம் தமிழ்-சிங்கள மக்கள் இணைவதையும், இணைந்து போராடுவதையும் எதிர்ப்பது இதன் அரசியல் சாரமாக உள்ளது. தமிழ் சிங்கள மக்கள் இணைந்து இனவாதத்தையும், இனவொடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடுவது என்பது "கருத்தியல் கத்தி"யாக இருப்பதாகவும், இதை "தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாகவும் கூறி, ஒரு எதிர்ப்பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். இதன் மூலம்

1. தமிழ்-சிங்கள மக்கள் இணைவதையும், இணைந்து போராடுவதையும், தமிழ் மக்களிடம் மட்டும் கூறுவதாக திரித்துக் காட்டுகின்றனர். இது தவறானது. மாறாக தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை சிங்கள மக்கள் எதிர்த்துப் போராடுவதன் மூலம் தான், தமிழ்மக்கள் ஒன்றிணைந்து போராட முடியும். இந்த அடிப்படையில் தான் சமவுரிமை இயக்கம் செயற்படுகின்றது. இங்கு தமிழ் மக்கள் தங்கள் சொந்த இனவாதத்தைக் கைவிட்டு, போராடும் சிங்கள மக்களுக்கு ஆதரவாக நிற்பதையும், அவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதையுமே சமவுரிமை இயக்கம் கோருகின்றது.

2. பேரினவாதம் முன்வைக்கும் சிங்கள-தமிழ் பிளவுவாதத்தையே, தமிழ்மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறி அதை அப்படியே முன்வைப்பதை இங்கு நாம் காணமுடியும். பேரினவாத பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, அந்த அலவடிக் "கருத்தியல் கத்தி"யைக் கொண்டு தமிழ் மக்களின் நெஞ்சை பிளக்குமாறு தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் முன்வைப்பதுடன், அதை தொடர்ந்து பாதுகாக்குமாறும் கோருகின்றது.

ஆக இங்கு இரண்டு கருத்தியல் இருக்கின்றது.

1. தமிழ் சிங்கள பிளவுவாதத்தை பாதுகாத்தல். இதை பேரினவாதம் முன்வைக்க தமிழ்த்தேசியம் அதன் அரசியல் எடுபிடியாக மாறி அதைப் பாதுகாக்கின்ற மக்கள் விரோத அரசியல்.

2. தமிழ் சிங்கள ஓற்றுமை. இது பேரினவாதத்துக்கு எதிரான மக்கள் அரசியல்

இப்படி இரண்டு நேர் எதிரான அரசியல்.

பேரினவாத இனப்பிளவுவாத அரசியலின் எடுபிடியாக செயற்படுவர்கள் கூறுவதை மேலும் பார்ப்போம்.

"அண்மைக் காலமாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயருடன் புலம்பெயர் நாடுகளில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி.யின் ஒரு அணியின் செயற்பாடுகள் இதனையே உறுதி செய்கின்றது. சிங்கள இனவாதத்திற்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின் தற்போதைய நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்தக் குழு, சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படுகின்றது."

இதன் மூலம் அவர்கள் மிகத் தெளிவாக, ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக மக்களை இருக்கக் கோருகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல, முள்ளிவாய்க்காலில் தங்கள் தலைவர்களைக் கூட பலியிட்ட போது சொன்ன அதே அரசியல், அதே பாதை. 2009 இல் முள்ளிவாய்க்காலில் புலிகளினதும் மக்களினதும் கதையை முடித்த போது, இவர்கள் எதைக் கூறினரோ அதையே இங்கு அப்படியே காணமுடியும். அன்று மேற்கை நம்பக் கோரி புலித்தலைவர்களின் கழுத்தையே அறுத்தவர்கள் இவர்கள்.

மீண்டும் ஒருமுறை அறுக்க "சிங்கள இனவாதத்திற்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின் தற்போதைய நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்தக் குழு" என்று கூறி அந்த மேற்குலகையும் ஜ.நா வையும் நம்பக் கோருகின்றனர்.

மேற்கு ஏகாதித்தியம் தன் சொந்த நலனில் நின்று தான், அனைத்தையும் செய்கின்றது. தமிழ் மக்களின் நலனில் இருந்தல்ல. முள்ளிவாய்க்காலின் முன்பும் இதைத்தான் அது செய்தது. இன்றும் இதைத்தான் செய்கின்றது. இதற்கு துணை நின்றவர்கள் தான், புலித்தலைவர்களையும், புலியையும், மக்களையும் பலியிட்டவர்கள். இவர்களைத் தவிர வேறு யாருமல்ல.

இவர்கள் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.

"அதாவது, கடந்த அறுபத்தைந்து வருடங்களாகத் தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார இருப்பிற்கான போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்ளாத சிங்கள மக்களை அணுகி, அவர்களுடன் உறவாடி, அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி, அவர்களைத் தம்முடன் இணைத்துக்கொண்டு, அதன் பின்னரான நாட்களில் இரு இனத்தின் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்து புரட்சி செய்து, சிங்கள இனவாதத்தைத் தோற்கடித்து, அந்த வெற்றிக்குப் பின்னர் இரு இனமும் இணைந்து சிறிலங்காவில் வாழ்வது..."

என்று இதற்கு சுயவிளக்கம் கொடுத்து கேட்கின்றனர். சரி நீங்கள் "தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார இருப்பிற்கான போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்ளாத சிங்கள மக்களை" கேட்பது இருக்கட்டும், தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை நீங்கள் புரிந்து தான் உள்ளீர்களா? இல்லை, இந்த நிலையில் மற்றவர்கள் பற்றி நீங்கள் பேச என்னதான் இருக்கின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை மறுத்து, தமிழ்மக்களை தோற்கடித்த தமிழ்தேசியம் தான் இறுதியில் முள்ளிவாய்க்காலில் பொது அவலமாகியது. ஆக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை மறுத்து மக்களை தோற்கடித்த தமிழ் தேசியத்தை, தமிழ்மக்கள் தோற்கடித்தனர். இதற்கு வெளியில் முள்ளிவாய்க்கால் முடிவுகள் நடந்தேறவில்லை.

தமிழ் மக்களையே அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார கூறுகளை முன்வைத்து அணிதிரட்ட வக்கற்றது தான் தமிழ்தேசியம். மக்களை துப்பாக்கி முனையில் மந்தையாக மட்டும் மேய்த்தவர்களால், மக்கள் போராட்டத்தையும் சரி தமிழ் மக்களின் சொந்த போராட்டத்தையும் சரி கற்பனை கூட பண்ண முடியாது. மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் விரோதிகள், "மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின்" தலையீட்டையும் ஆதரிக்கும் இவர்கள், அவர்களின் கைக்கூலிகள் தான். சிங்கள தமிழ் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்குவதும், பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்த புரட்சியை எதிராகப் பார்ப்பதும், காட்டுவதும் இயல்பு. இப்படி இருக்க "அறுபத்தைந்து வருடங்களாக" என்று தங்கள் தோல்வி பெற்ற அரசியல் வழியை கொண்டு, மீளவும் தங்கள் இந்த 64 வருட அரசியல் பாதை சரியென்று கூறுவது நகைப்புக்குரியது.

65 வருடமாக தோற்ற அவர்களின் சொந்தப் பாதையை பாதுகாக்க முனையும் இவர்கள், அதையே அடுத்த 65 ம் வருடம் தொடர முனைகின்றனர் இந்த நிலையில் இதற்கு எதிராக "கத்தியைச் சொருகுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ முடியாத காரியம் என்பதால், தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது." என்று கூறுகின்றனர். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய போராட்டத்தை முற்றாகக் காயடித்தவர்கள், அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை காயடிப்பதாக கூறுகின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதும், அதற்காக மற்றைய இன மக்களுடன் இணைந்து போராடக் கோருவதும் காயடிப்பா! சொல்லுங்கள். இப்படி மக்களை முட்டாளாக்கி எதை காயடிக்க முனைகின்றனர் என்பதை, சுயமாக கண்டு கொள்வது மக்கள் அரசியல். மக்கள் தாம் ஒன்றிணைந்து போராடுவது தான் போராட்டம். மாறாக "மேற்குலகின் அழுத்தங்களையும், ஜ.நா.வின்" கைக் கூலித்தனத்தையும் ஆதரிப்பதல்ல.

 

பி.இரயாகரன்

20.02.2013