கடந்த சில மாதங்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய எம் மீதும், எமது அரசியல் முன்னெடுப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பல மட்டங்களிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விமர்சனங்கள் ஒவ்வொன்றும், அதை முன்வைப்பவர்களின் அரசியற் கோட்பாடு, வர்க்கநிலை, அவர் சார்ந்த அமைப்பின் அரசியல் கண்ணோட்டம், சுயவிருப்புகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. தமிழ்தேசிய விடுதலை மற்றும் வர்க்கவிடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் கோட்பாட்டு முரண்பாடுகளும், கருத்து வித்தியாசங்களும் இவ் விமர்சனங்களின் பிரதான உள்ளடக்கமாக, பேசுபொருளாக இருக்கின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள் எம்மிடம் நேரடியாக எழுத்து மூலமும், தோழர்களுடனான விவாதங்கள் மூலமும் முன்வைக்கப்படுகிறது. வெகு சில விமர்சனங்களே இணையத் தளங்கள் மூலமும், மற்றும் பத்திரிகையூடாகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விமர்சனங்களில் பெரும்பான்மையானவை எம் அமைப்பையும், எமது தோழமை அமைப்புக்களையும் அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் புடம்போடும் நோக்கத்திலேயே முன்வைக்கப்படுகின்றது.

மக்கள் நலன் சார்ந்து இயங்கும் எந்தவொரு அமைப்பிற்கும், அவ்வமைப்புகள் மீது வைக்கப்படும் சரியான அரசியல் விமர்சனங்களும், அவற்றின் நடைமுறைரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுவதும், இஸ்தாபனத்தை பலப்படுத்திப் போராட்ட ஆற்றலைப் பெருக்க வழிவகுக்கும். இந்த வகையில் தலைவர் மாவோ கூறுவதுபோல,

"எம்மிடம் குறைபாடுகள் இருந்தால், அவை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்படுவதற்கு நாம் அஞ்சவில்லை. குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம் .அவை சரியாயிருந்தால், நாம் அவற்றைத் திருத்திக் கொள்வோம். அவை பிரேரிப்பது மக்களுக்கு நன்னமை பயப்பதாய் இருந்தால், நாம் அவற்றைச் செயல்படுத்துவோம்."

நாம் அமைப்பாக இயங்கத் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை எமது அமைப்பைக் கவனிக்கும் அனைத்து அரசியற் சக்திகளும் தோழர்களும் மேற்கூறியபடி நடைமுறையிலும் நாம் இயங்குவதை கவனித்திருக்க முடியும்.

ஆரம்பகாலத்திலும், தொடர்ச்சியாக எமது நாளாந்த அரசியல் வேலைகளில் ஏற்படும் கோட்பாட்டு- நடைமுறைத் தவறுகளை சுயவிமர்சனம் - விமர்சனமூடாக திருத்திக் கொண்டதனாலேயே இன்று நாம் புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகர அரசியல் இயங்குசக்தியாக முன்னேற முடிந்தது.

இவ்வாறு எமது அமைப்பு முன்னேறி வரும் நிலையில், ஒரு சில தனிநபர்களாலும், அவர்கள் இயக்கும் சில இணையத்தளங்களாலும் எம் அமைப்பு மீதும், தோழர்கள் மீதும் பாரிய சேறடிப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எம்மிடம் உறவிலுள்ள தோழமை அரசியற் சக்திகளுக்கு எதிராக பொய்ப்பிரசாரங்களை மேற்படி நபர்கள் முன்னெடுப்பதுடன், அவ்வமைப்புகள் மீது அவதூறுகளும் கூறப்படுகிறது.

மேற்படி இணையங்களும், அவற்றில் எழுதுவோரும், எம்முடனும் எம் தோழமைகளுடனும் அரசியல்ரீதியாக முரண்பட்டால் அவர்கள் எம்மை விமர்சிப்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் எம் மீது சரியான அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தி விமர்சனம் முன்வைத்தால் நாம் கருத்திலெடுக்க தயாராகவுள்ளோம். அதேவேளை அவர்கள், முன்வைக்கும் விமர்சனங்கள் சரியானவையாகவிருந்து, நாம் தவறுகளை திருத்தவில்லையானால், அவர்கள் ,தமது விமர்சனத்தை அரசியல்ரீதியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் எம்மை அரசியற்தளத்திலிருந்து அகற்ற முடியும். இது தான் சரியான மக்கள் நலன் சார்ந்த அரசியல் விமர்சன நடைமுறையாகவிருக்கும்.

அதை விடுத்து எம் மீது அப்பட்டமான பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வதன் மூலம், அவர்கள் மக்கள் நலம் சார்ந்து எதையும் சாதிக்க முடியாது.

நிறைவாக, மேற்படி புலம்பெயர் இணையங்களில் பிரச்சாரப்படுத்தப்படும் எம் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளையும் நாம் மறுப்பதுடன், அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இப் பொய்ப்பிரச்சாரங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
17.02.2013