இலங்கை பற்றி மேற்கு ஏகாதிபத்திய அக்கறையும், அது சார்ந்து இன்று வெளிப்படும் மக்கள் விரோத அரசியல், தன்னை மாற்று அரசியலாக முன்னிறுத்தி வருகின்றது. இன்று இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் திரள் போராட்ட அமைப்பை உருவாக்குவதற்குப் பதில், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதன் அரசியலை முன்தள்ளுகின்றனர். இன்று அன்றாட செய்திகள் முதல் கட்டுரைகள் வரை ஏகாதிபத்தியம் நலன் சார்ந்த விடையங்களை தங்கள் மையச் செய்தியாக்குவதுடன், அதன் நோக்கம் மக்களுக்கானதாக காட்டுகின்றனர். அதன் மக்கள் விரோதத்தைக் கண்டுகொள்ளாத கள்ள மௌனம் மூலம், இதை நம்பும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இதற்கமைவாக இலங்கை ஆளும் தரப்பு தொடர்ந்து செய்த செய்து கொண்டு இருக்கின்ற மனிதவிரோத குற்றங்களில் இருந்து, தன்னை தற்காத்துக்கொள்ள நாட்டை ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் மேலும் மேலும் அடகுவைத்து வருகின்றனர். ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கொண்டும், பிராந்திய நாடுகளின் முரண்பாட்டைக் கொண்டும், நாட்டை அன்னியருக்கு அடிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் உள்நாட்டு விவகாரங்கள், இன்று சர்வதேச விவகாரங்களாக மாறி வருகின்றது.

இலங்கை வாழ் முழு மக்களையும் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய நாடுகளின் முரண்பாட்டுக்குள், அதன் நலனுக்குள் பிரிப்பதுடன், அது சார்ந்து மக்களுக்கு இடையிலான மோதல் போக்கை கட்டமைத்து வருகின்றனர். இந்த வகையில் அரசியலே ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய நாடுகள் சார்ந்த அரசியலாக இலங்கையில் பரிணமித்து வருகின்றது. இந்த வகையில் இன்று இனரீதியான முரண்பாடும் கூட, இதற்குள்ளாக அணிதிரண்டு அணிபிரிந்து வருகின்றது.

மக்களைச் சார்ந்தும், மக்கள் ஐக்கியப்பட்டும் போராடக் கோரும் அரசியலுக்கு எதிரான அரசியலாக, இதுதான் இன்று தன்னை முன்னிறுத்துகின்றது. இதற்கேற்ற வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், மனிதவுரிமை மீறல் தொடர்பாகவும் மேற்கு ஏகாதிபத்தியங்களிள் அக்கறை அதிகரித்து வருகின்றது. இந்த அக்கறை என்பது மக்களின் நலன் சார்ந்ததல்ல. உலக ஒழுங்குக்கு உட்பட்ட, அவர்களின் சொந்த நலன் சார்ந்தது. இந்த வகையில், இதன் பின் நக்கிப் பிழைக்கும் அரசியலை உருவாக்கி வருகின்றது. மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்ற அடிப்படையில் எந்த அரசியலையும், எந்த நோக்கத்தையும் கொண்டிராததுமான ஊடகவியல் தொடங்கி அரசியல் வரை இதற்குள் நின்று தான் அனைத்தையும் முன்வைக்கின்றனர், முன்தள்ளுகின்றனர்.

இந்த வகையில் யுத்தத்தின் பின்னான குறுந்தேசிய அரசியல் வெற்றிடத்தை, ஏகாதிபத்திய முரண்பாடு மூலம் நிரப்ப முற்படுகின்றது. இலங்கை குடும்ப சர்வாதிகார பாசிச ஆட்சியை எதிர்த்து நிற்க முடியாத எதிர்க்கட்சிகள் இடத்தையும், இந்த மேற்கு ஏகாதிபத்திய அரசியல் நிரப்ப முனைகின்றது. இந்த வகையில் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் இங்கும் அங்குமாக வெளிப்படுகின்றது.

போர்க்குற்றம் தொடர்பான மேற்கு ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல் முதன்மையாக்கப்பட்டு, அதை அரசியல் தளத்தில் முன்தள்ளுகின்றனர். இந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வகையில், போர்க்குற்றம் தொடர்பாக சமவுரிமை இயக்கம் என்ன கருதுகின்றது என்று, பாரிஸ் சமவுரிமை கூட்டத்தில் கேள்வி எழுப்பபட்டது.

இதுபற்றி முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் கூறுகின்ற போது, போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை தாங்கள் குறுக்கிப் பார்க்கவில்லை. அத்துடன் மேற்கு நலன் மற்றும் ஐநா சார்ந்த விசாரணையையும் நிராகரித்தார்.

அவர் மேலும் இதுபற்றிக் கூறுகையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் 1971, 1989-1990, 30 வருட தமிழ் தேசிய யுத்தம் மட்டுமின்றி, புலிகள் முதல் ஜே.வி.பி வரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டன என்றார். இந்த வகையில் போர்க்குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றதுடன், ஏகாதிபத்தியம் சார்ந்த ஜ.நா போன்றவை விசாரிப்பதை தாம் ஏற்கவில்லை என்றார். மாறாக இலங்கை மக்கள் தான், இதை விசாரிக்க முடியும் என்றார்.

இந்த வகையில் போர்க்குற்றம் தொடர்பான ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலை நிராகரித்ததுடன் ஜே.வி.பி வரையான போர்க்குற்றத்தை அரசியல்ரீதியாக முன்வைத்தார். மக்கள் நலன் சார்ந்தவர்கள் இதைத்தான் தங்கள் அரசியலாக தேர்ந்து கொள்ள முடியும்.

ஐ.நா போன்ற விசாரணை, அரசின் விசாரணை போன்று அவையும் பக்கச் சார்பானவை தான். அவை தங்கள் நலன் சார்ந்தவை ஒழிய, மக்கள் நலன் சார்ந்தவையல்ல. மாறாக அவை மக்கள் விரோதமானவை. உலக வரலாறு மட்டுமின்றி இதன் பின்னான மக்கள் விரோத அரசியலும், இதைத்தான் வரலாறு முழுவதும் எடுத்துக்காட்டி வருகின்றது.

இன்று இந்த ஏகாதிபத்திய அரசியல் நிகழ்ச்சிநிரல், நேரடியாக இலங்கை அரசியலில் எங்கும் குறுக்கிட்டு வருகின்றது. இந்த வகையில் சமவுரிமை இயக்கத்தை எதிர்த்த பிரச்சாரத்தில் கூட, ஏகாதிபத்திய சார்பு எதிர்ப்பிரச்சாரமும் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது.

இதற்கு இன்று தலைமை தாங்குபவர்கள் புலம்பெயர்ந்த முன்னாள் ஊடகவியலாளர்கள் தான். இவர்கள் இதை முன்னின்று முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் தேசிய அரசியல் மேற்கு ஏகாதிபத்தியத்திடம் சார்ந்து ஏதோ மாற்றம் நடக்கும் என்று தமிழ் மக்களுக்கு வித்தை காட்ட முனையும் பாதையில், இந்த ஊடகவியலர்கள் அதைச் சார்ந்து பயணிக்கின்றனர்.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் துணையுடன் மேற்கு நோக்கி புலம்பெயர்ந்த இவர்கள், விசேட நிதி ஆதாரங்கள் முதல் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக் கொண்டதுடன், மேற்கு நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவான பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வகையில் மக்களைச் சார்ந்து போராடுவதை எதிர்ப்பதும், மக்கள் ஐக்கியப்படுவதை எதிர்ப்பதும், மக்களைச் சார்ந்து நிற்காத தமது போக்கு சார்ந்த எதிர்புரட்சிக் கருத்தை முன்தள்ளுகின்றனர். ஏகாதிபத்தியம் தன் சொந்த நலன் சார்ந்து முன்தள்ளும் போர்க்குற்ற அரசியல் முதல் அதன் தலையீடு சார்ந்த அரசியல் வரை எதிர்க்காது, அதை முன்தள்ளுவதே இந்த ஊடகவியலாளர்களின் செய்திக் கட்டமைப்பு மற்றும் மைய அரசியலாகும்.

மக்கள் அணிதிரள்வதையும், இனம் மதம் கடந்து மக்கள் ஐக்கியப்படுவதையும், எதிர்க்கின்ற அரசியல் என்பது, இலங்கை அரசுக்குமட்டுமல்ல இந்தியா முதல் இலங்கையுடன் முரண்பட்டு நிற்கும் ஏகாதிபத்திய நாடுகளின் சொந்த அரசியல் கூட. இந்த வகையில் இன்று இனம் மதம் கடந்து இனவொடுக்குமுறையையும் இனவாதத்தையும் எதிர்க்கும் சமவுரிமைக்கான போராட்டத்தை, இலங்கை அரசும், இந்தியாவும், ஏகாதிபத்தியமும் தங்கள் தங்கள் அரசியல் முகவர்கள் மூலம் எதிர்க்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கின்றது.

மக்களைச் சார்ந்து நிற்காத, மக்களுக்கான அரசியலை முன்வைக்காத அனைத்து ஊடக மற்றும் அரசியல் தளத்தில், இது நேரடியாகவும் ஊடுருவியும் காணப்படுகின்றது. இவை அனைத்தும் ஓரே அரசியல் தளத்தில் நிற்பதுடன், இதில் தமக்கு இடையில் முரண்படாது ஒன்றுபட்டு நிற்கின்றனர். இனவொடுக்குமுறை மற்றும் இனவாதத்துக்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்துக்கான அரசியல் முயற்சியை எதிர்க்கும் பொது அரசியல் தளத்தில், நாம் இதை சுயமாக இனம் காணமுடியும்.

 

பி.இரயாகரன்

15.02.2013