"சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை" மார்க்ஸ்சின் இந்தக் கூற்று இன்று சமூகம் செயலைக் கோரும் எங்கும் எதிலும் பிரதிபலிக்கின்றது. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை மறுத்து, பேஸ்புக்கில் கொசிப்பும், நடைமுறையில் பயந்தாங்கொள்ளிகளையும் உருவாக்குகின்றது. செயற்படாமல் இருக்க, கோட்பாட்டுத் தூய்மை பற்றி பேசப்படுகின்றது. நம்பிக்கையீனங்கள், அவநம்பிக்கைகள், கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம் … என்பன அவரவர் நடைமுறைக்குரிய ஒன்றாக தற்காப்பு அரசியலாக மாறுகின்றது. மக்களுக்காக போராடுவது பற்றி மார்க்ஸ் "இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள், எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்" என்றார். செயலுக்குத் தடையாக இருப்பதை, அதை சிதைப்பது சுயநலம். இந்தச் சுயநலம் தான் அவநம்பிக்கையாக வெளிப்படுகின்றது.

2009 ஆண்டு வரை போராடுவதற்கு புலிகள் தான் தடை என்றவர்கள், அதன் பின்பும் மக்களுடன் இணைந்து செயற்படவேயில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலுக்கான தெளிவான குறைந்தபட்சத் திட்டத்தை வைத்தவுடன், செயலை மறுப்பதற்கான அரசியல் எதிர்வினைகள் அரசியல் அரங்கில் வருகின்றது.

இந்தவகையில் சமூக விவகாரங்கள் பேஸ்புக்கில் கொசிப்பும் கொசுறுமாக்கப்படுகின்றது. நுனிப்புல் மேய்ந்து சமூகத்தைப் பற்றி கருத்துச் சொல்லும் அரைவேட்காட்டுப் பொழுதுபோக்கு "அறிவாளிகளை" உருவாக்குகின்றது. சமூகத்தில் பொழுதுபோக்காக இருந்த திண்ணை அரசியல் தான், பேஸ்புக் அரசியலாக மாற்றப்பட்டு இருக்கின்றது. சமூக அவலங்கள் என்பது தங்கள் பொழுதுபோக்குக்கு உரிய ஒன்றாகவும், தங்களை விளம்பரம் செய்வதற்கான ஒரு விடையமாகவும் மாற்றிவிடுகின்றனர். இன்று சமூக அவலங்கள் ஊடகங்களில் தங்கள் வியாபாரத்துக்குரிய ஒரு விடையமாக்கப்படுவது போல், பேஸ்புக்கில் தம்மை விளம்பரம் செய்ய இதைப் பயன்படுத்துகின்றனர்.

அரசியலை உள்ளடக்கமற்ற ஒன்றாக பேஸ்புக் மூலம் மாற்றுகின்றனர். அரசியலை வைத்து கொசிப்படிக்கவும், எந்தச் சமூகப் பொறுப்புமற்று வாழ்வதற்கும், எந்தச் சமூக நடைமுறையுமற்று பொழுதுபோக்கவுமே பேஸ்புக்கை பயன்;படுத்துகின்றனர். இது தான் சமூக அக்கறை, இது தான் சமூக நடைமுறை என்று காட்டிக்கொண்டு, சமூகத்தை கொசிப்படித்தபடி அதை எள்ளிநகையாடுகின்றனர். தங்கள் இந்த இருப்பை பாதுகாக்க, சமூக நடைமுறையை எதிர்த்து செயற்படுகின்றனர். இதையே சமூகத்துக்கான அரசியல் நடைமுறையாகக் காட்டிவிட முனைகின்றனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கம் போல், தம்மைத் தாம் விளம்பரப்படுத்தும் வண்ணம் அரசியலைக் குறுக்கி அதை செயல்;படுத்துகின்றனர். மொட்டையாகவும், மலிவாகவும், அரசியலை தமக்கு ஏற்ப விளம்பரம் செய்கின்றனர். இதைப் படித்துவிட்டு விவாதம் செய்யவும், சமூகம் பற்றி புலம்பவும், சமூக மாற்றம் பற்றி அலட்டவும் தான் முடிகின்றது. தங்களை சமூக அறிவாளிகள் போல், அரசியல் வழிகாட்டிகள் போல் பாசாங்கு வேறு செய்கின்றனர்.

சமூகத்தை அதன் வாழ்வியல் ஊடாகத்தான் அணிதிரட்ட முடியும். இந்த வாழ்வியல் போராட்டத்துடன் இணைந்து கொள்ளாத எந்தச் செயற்பாடும் மக்களுடன் முரண்பட்டது. மக்களின் வாழ்வுடன் தொடர்பற்ற கருத்துகள், உருத்திரிந்த வடிவில் மேல் இருந்து கீழாகத் திரிப்பதாகும். கருத்துகள் கீழ் இருந்து மேலாக ஒருங்கிணைந்து, மீண்டும் கீழ் செல்ல வேண்டும். ஆக நடைமுறையில் இருந்து கோட்பாடுகளும் தத்துவங்களும் உருவாகுவதன் மூலம், நடைமுறை வழிகாட்டப்பட வேண்டும். இதுதான் மக்களுக்கானது. கீழ் இருந்து மேலாக, மேல் இருந்து கீழாக ஒரு சுழல் பாதையில் மீளமீள நடைமுறையில் முன்னெடுப்பது தான் சமூக இயக்கம். இதுவல்லாத கருத்துகள், மக்களுக்கும், நடைமுறைக்கும் எதிரானது. கோட்பாடுகள், தத்துவங்கள் என்பன மக்களின் வாழ்வுடன் இணைக்கப்பட்டு, அவை நடைமுறையில் பரிசோதிக்கப்பட வேண்டும்.

வெறும் கருத்துகளை மேல் இருந்து உற்பத்தி செய்வதன் மூலம், சமூக மாற்றம் நடந்துவிடாது. சமூகம் கருத்தைப் பெறுவதன் மூலம், புரட்சி செய்து விடாது. தன்னை மக்களுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துகள், நடைமுறையை மறுக்கும் கருத்துக் காவிகளையும், கருத்தை பாதுகாக்கும் சமூக பொறுப்பற்ற லும்பன்களையும் உருவாக்கி விடுகின்றது. கருத்துக்காக வக்காளத்து வாங்கும், நடைமுறை கண்டு அஞ்சும், பயந்தாங் கொள்ளிகளை உருவாக்கிவிடுகின்றது. முரண்பட்ட நபர்களுடன், முரண்பட்ட சூழலைக் கண்டு அஞ்சவும், சமூக எதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயங்கும் போக்கும், எதிர்ப்பு அரசியலை உருவாக்குகின்றது. இது நடைமுறையை மறுக்கும் வெறும் கருத்துக் காவிகளை உருவாக்குகின்றது. கருத்தைப் பாதுகாக்கும், நடைமுறைக்குப் பயந்த பயந்தாங் கொள்ளிகளை உருவாக்குகின்றது.

எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும் நடைமுறைக்குத் தான். மார்க்ஸ் 1837 இல் தனது பள்ளிக்காலத்தில் எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன் அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். எவ்வளவு பெரிய உண்மை. அந்த உண்மையைச் சொன்ன மார்க்ஸ் போராடும் போது "சுதந்திரத்துக்காக என்றால் கூட – அடிமை வேலை செய்வது மோசமானதே.." என்றார். சுய ஆற்றல் உள்ள, சுய பொறுப்பு கொண்ட ஒரு மனிதனாக, மக்களை அந்த நிலைக்கு உயர்த்தும் நடைமுறையுடன் கூடிய வாழ்வை முன்னோக்காக கொண்டு வாழ்வது தான் சுயவிமர்சனத்துடன் கூடிய அரசியல் நடைமுறை.

மக்களின் வாழ்வியல் நடைமுறையுடன் எம் கருத்தை இணைத்து சரியா என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். கருத்துகளை எழுதும் "எழுத்தாளன் தன்னுடைய எழுத்தை ஒரு சாதனமாக நினைப்பதில்லை. அது ஒரு குறிக்கோளாக இருக்கின்றது. அது அவனுக்கு மற்றவர்களுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே ஒரு சாதனமாக இருப்பதால், அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவன் அதன் இருத்தலுக்காகத் தன்னுடைய இருத்தலை தியாகம் செய்கின்றான்" என்றார் மார்க்ஸ். இதை நாம் வாழ்வாக கொள்ள வேண்டும். இந்த வகையில் "சரியான தத்துவம் ஸ்தூலமான நிலைமைகளுக்குள் மற்றும் இருக்கின்ற நிலைமைகளில் மற்றும் இருக்கின்ற நிலைமைகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்" இதைத்தான் மார்க்ஸ் எமக்கு கூறிச்சென்றுள்ளார்.

 

பி.இரயாகரன்

09.02.2013