1977இல் வெளியேற்றப்பட்டு 1993இல் நரசிம்மராவ் அரசியல் புத்தம்புது காப்பியாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கோக், பெப்சி பானங்கள் இன்று இந்தியச் சந்தை முழுவதையும் அநேகமாகக் கைப்பற்றி விட்டன.
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்குளிர்பானங்களின் ஆண்டு விற்பனை 400 கோடி லிட்டர்கள். அதாவது, 2000 கோடி பாட்டில்கள்.
எனினும் உலகத்தரத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாம். ஆண்டொன்றுக்கு ஒரு அமெரிக்க குடிமகன் சராசரியாக 800 கோலா பாட்டில்களைக் காலி செய்வதாகவும் இந்தியர்கள் இவ்விசயத்தில் மிகவும் தங்கியிருப்பதாகவும் வருந்துகிறார்கள் கோக் அதிகாரிகள்.
இந்த இலட்சியத்தை எட்டும் பொருட்டுத்தான் தாமிரவருணியை கோக்கிற்கு தாரை வார்த்திருப்பதுடன், நெல்லை மாவட்டம் முழுவதிலும் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடையும் விதித்திருக்கிறது போலீசு. இந்தியாவைக் கோலா குடியரசாக்கும் இந்த இலட்சியத்தில் அதிமுக., காங். உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இந்நிலை திடீரெனத் தோன்றவில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தைக் கீழே தருகிறோம்.
அரிஜன் நவம்பர் 4, 1950 இதழில் கே.ஜி. மஷ்ருவாலா என்பவர் ""கோகோ கோலா எச்சரிக்கை'' என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
""அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோகோ கோலா என்ற குளிர்பானத்தின் முழுப்பக்க விளம்பரத்தை சமீபத்தில் பார்த்தேன். இதனைப் பயன்படுத்த வேண்டாமென மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்'' என்ற முன்னுரையுடன் தொடங்கி கோக்கில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை அவர் பட்டியலிடுகிறார்.
""வீட்டு உபயோகத்திற்கு சர்க்கரை கிடைப்பதில்லை; கேட்டால் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் அதே சர்க்கரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, மக்களின் சுவையுணர்வையும் சீரண உறுப்புகளையும் நாசமாக்கும் பானமாக அதை மாற்றி அதற்கு மக்களிடமிருந்து கூடுதல் காசையும் பிடுங்குகிறது கோகோ கோலா. அவர்களுக்கு மட்டும் வேண்டிய அளவுக்கு சர்க்கரை கிடைப்பது எப்படி?'' என்று அரசுக்குக் கேள்வியும் எழுப்புகிறார்.
டிசம்பர் 9ஆம் தேதியிட்ட இதழில் ரூப்நாராயண் என்பவர் கோகோ கோலாவைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகிறார்.
1951 மார்ச் 17 மற்றும் 24 தேதியிட்ட இதழ்களில் ஆக்டோபஸ் என்ற புனைபெயரில் ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ள தொடர்கட்டுரை கோகோ கோலாவை உடனே வெளியேற்ற வேண்டுமென்பதைத் தீவிரமாக வலியுறுத்துகிறது. அதன் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:
"இந்தியாவை ஆக்கிரமிக்கிறது கோகோ கோலா!
கோகோ கோலா என்ற அமெரிக்க பானம் இந்தியாவில் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு ஆலை துவங்கப்பட்டது. அடுத்து பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் போன்ற நகரங்களிலும் ஆலை தொடங்கப் போகிறார்களாம். பெரு நகரங்களிலிருந்து அதன் அருகாமைப் பகுதிகளுக்கு இவர்கள் ஊடுருவ முயற்சிப்பார்கள்.
கனடா, இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடுகளின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
பிரான்சில் பொது சுகாதாரத்திற்கான உயர்மட்டக் குழு மற்றும் தேசிய மருத்துவ அகாதமி ஆகிய நிறுவனங்கள் தெரிவித்த கருத்தின் பேரிலும் பிற ஆதாரங்களின் அடிப்படையிலும் கோகோ கோலாவைத் தடை செய்வதற்கான மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஜூலை 22, 1950 அன்று விசாரணைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது. அக்குழுவின்ஒருமனதான பேரில் இந்தப் பானம் பிரான்சில் தடை செய்யப்பட்டு விட்டது.
நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு கோகோ கோலா விளைவிக்கும் கேடு பற்றி (அரசு) சிறிதும் கவலைப்படாமலிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்தப் பானத்தில் இருப்பது என்ன? தண்ணீர், சர்க்கரை, காரமல், பாஸ்பாரிக் அமிலம், வனிலா, காஃபின், கோகோ இலை மற்றும் கொட்டையின் சாறு. 6 அவுன்சுகள் கொண்ட ஒரு பாட்டிலில் 54 மில்லி கிராம் காஃபின் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காஃபின் கலக்கப்பட்ட பானங்கள் இதய அழுத்தத்தையும் நரம்பு மண்டலப் பாதிப்பையும் ஏற்படுத்துவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் கல்லூரியின் டீன் டாக்டர் ரஸ்பி கூறுவதாவது ""காஃபின் ஒரு நஞ்சு என்பதில் ஐயமேயில்லை. இதனைப் பானமாக அருந்துபவர்கள் போதைப் பழக்கம் போல இதற்கு அடிமையாகிறார்கள். இதயத்தின் இயக்கம் மற்றும் மூளைக்கான ரத்த ஒட்டம் ஆகியவற்றில் இது நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.'' மேலும், ""குழந்தைகளுக்கு இது நஞ்சு என்றும் மூளையில் பதட்டத்தை அதிகரிப்பதன் மூலம் அதன் இயல்பான இயக்கத்தையே பாதித்து விடுகிறது'' என்றும் கூறுகிறார் டாக்டர் லெசின்ஸ்கி.
கோகோ கோலாவைத் தடை செய்வது தொடர்பாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் சில பகுதிகளையும் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ""உலகில் பல இலட்சம் மக்கள் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு பானத்தை எப்படித் தடை செய்ய முடியுமென்று கேட்கிறீர்கள். இதுவெல்லாம் ஒரு வாதமா? கோடிக்கணக்கான சீன மக்கள் பல நூற்றாண்டுகளாக கஞ்சா அடிக்கும் பழக்கத்திலிருந்திருக்கிறார்கள். அதன் காரணமாக நம் நாட்டிலும் இதனைக் கட்டுப்பாடின்றி அனுமதித்து விட்டீர்களா என்ன?''
உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைப் போலவே கோகோ கோலா இந்தியப் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. பம்பாயில் உள்நாட்டு சோடா கலர் தொழிற்சாலைகளில் சுமார் 2000 பேர் வேலை செய்கிறார்கள். டெல்லியிலோ முறையாக லைசன்ஸ் பெற்ற 150 சோடா கம்பெனிகள் உள்ளன. அவை நாளொன்றுக்கு 2000 டஜன் பாட்டில்களை உற்பத்தி செய்கின்றன.
டெல்லியிலுள்ள கோகோ கோலா கம்பெனியின் உற்பத்தித் திறனோ 8 மணி நேரத்திற்கு 6000 டஜன் பாட்டில்கள். துவக்கத்தில் இதன் விற்பனை மந்தமாக இருந்தபோதிலும் இப்போது நாளொன்றுக்கு 500 டஜன் பாட்டில்கள் விற்பனையாகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு பஞ்சாபில் புதிய ஆலை தொடங்கப்படவிருக்கிறது. பம்பாயிலோ கட்டுமானப் பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கவிருக்கிறது. டெல்லியில் உள்நாட்டு பானங்களின் விற்பனை ஏற்கெனவே 50% வீழ்ச்சியடைந்து விட்டது. அவை முற்றிலுமாக அழியும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உலகப் போரைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோகோ கோலா கம்பெனியோ 45 எந்திரங்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. உள்நாட்டுக் கம்பெனிகள் பாட்டில்களை இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் கோகோ கோலா பாட்டில் இறக்குமதி செய்கிறது. அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கே அந்நியச் செலாவணி இல்லை. ஆனால் அத்தியாவசியத் தேவை என்று எந்த வகையிலும் கருத முடியாத ஒரு பொருளுக்கு அந்நியச் செலாவணி தாராளமாக அனுமதிக்கப்படுகிறதே, இது எந்த அடிப்படையில் என்பதுதான் புரியவில்லை.
டெல்லியிலுள்ள 150 உள்நாட்டுக் கம்பெனிகளுக்கும் சேர்த்து மாதமொன்றுக்கு மொத்தம் 160 மூட்டை சர்க்கரையைத்தான் அரசு வழங்குகிறது. ஆனால் கோகோ கோலாவுக்கு மட்டும் மாதம் 170 மூட்டை சர்க்கரை வழங்கப்படுகிறது. எந்திரம், பாட்டில், சர்க்கரை என ஒவ்வொன்றுக்கும் லைசென்ஸ் வாங்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அரசிடம் படாத பாடு படுகிறார்கள். கோகோ கோலாவுக்கோ எல்லாம் கேட்ட மறுகணமே கையில் வந்து விழுகிறது. உள்நாட்டுத் தொழில்களுக்கு எதிராகவும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கம் காட்டி வரும் இந்தப் பாரபட்சம்தான் சகிக்கவொண்ணாத அநீதியாகத் தெரிகிறது.''
****
காந்தி செத்த ஒரே வருடத்தில், இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட அதே வருடத்தில், காந்தியால் துவங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை காங்கிரசு அரசு கண்டுகொள்ளவேயில்லை. கதர், சுதேசி, சுயசார்பு போன்ற சவடால்களெல்லாம் உச்சத்தில் இருந்த பண்டித நேருவின் காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால், ப.சிதம்பரத்தின் காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கோக்கிற்கு எதிராக அரிஜன் பத்திரிகை எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் இன்று பூதாகாரமாக வடிவெடுத்து விட்டன. கோகோ கோலா டெல்லியில் மட்டும் 150 உள்நாட்டுக் கம்பெனிகளை அழித்து விடுமென்றும், சுமார் 2000 தொழிலாளர்களின் வேலையைப் பறித்து விடுமென்றும் அன்று எச்சரிக்கை செய்திருக்கிறது அரிஜன். இன்றோ, பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள். இதனால் வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனை இலட்சம் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை.
பணபலம், விளம்பர பலத்தினால் மட்டுமல்ல; சிறு கம்பெனிகளின் பாட்டில்களை வாங்கி உடைப்பது, தங்களது பானத்தைத் தவிர வேறெதையும் விற்கக் கூடாதென சிறு வணிகர்களை நிர்ப்பந்திப்பது போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும்தான் இந்தியச் சந்தையைக் கைப்பற்றியிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.
கோகோ கோலாவில் கலந்திருகும் நச்சுப் பொருட்கள் பற்றி 1950இல் அரிஜன் இதழ் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை அரசிடமிருந்து பதில் இல்லை. 2003இல் கோக் பெப்சியில் கலந்துள்ள நஞ்சுகள் மற்றும் வேதிப் பொருட்களை சோதனைச் சாலையில் ஆராய்ந்து ஆதாரபூர்வமாக வெளியிட்டது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஆய்வு மையம். கோக் ஆலையின் கழிவுகளில் காட்மியம் எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பதையறிந்து, ""குளிர்பான உற்பத்தியில் இந்த நச்சுப் பொருளுக்கு என்ன வேலை?'' என்று 2004இல் கேள்வி எழுப்பியது கேரள அரசின் மாசு கட்டுப்பாட்டுத் துறை. ""கோக்கில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பற்றிய விவரங்களை பாட்டிலின் மீது அச்சிடவேண்டும்'' என்று 2005இல் உத்தரவிட்டது ராஜஸ்தான் உயர்நீதி மன்றம். இவைஎதையும் கோக் மதிக்கவில்லை.
ராஜஸ்தான் உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தவில்லையென கோக்கின் மீது உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கோக்கின் சார்பில் ஆஜரான பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லி ""இப்பிரச்சினை தொடர்பாக அரசு சட்டமியற்றவுள்ளதால் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' எனக் கோரினார். காங்கிரசு அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரும் இதனை வழிமொழிந்தார். கோக்கிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோக்கில் பாஸ்பாரிக் அமிலம் போன்ற மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அதனைத் தடை செய்ய வேண்டுமென சமீபத்தில் "பொதுநல வழக்குகளுக்கான மையம்' என்ற அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்குமாறு பிப்.28, 2006 அன்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம். கோக்கில் பாஸ்பாரிக் அமிலம் இருக்கிறதென்று 1951இல் அரிஜன் பத்திரிகை எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க 2006இல் விசாரணைக் குழுவாம்!
"நாட்டில் கடுமையான சர்க்கரைப் பஞ்சம் நிலவும்போது, கோக்கிற்கு மட்டும் வேண்டிய அளவுக்கு சர்க்கரையை வாரிக் கொடுக்கிறதே அரசு, இது என்ன நீதி?'' என்று 1951இல் கேள்வி எழுப்பியிருக்கிறது அரிஜன் இதழ். இன்றோ, நாடெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் போதும் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கோக்கிற்கு வாரிக் கொடுக்கிறது அரசு.
கோக் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகபட்சமாக முதலீடு செய்திருக்கிறது. இன்று இந்தியாவில் கோக் ஆலைகளின் எண்ணிக்கை 58. பெப்சி ஆலைகளின் எண்ணிக்கை 39. இந்நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.
குடிநீரையும் விவசாயத்தையும் இழந்த மக்கள் அதனை எதிர்த்துக் குரலெழுப்பவும் கூடாதென மென்னியைப் பிடிக்கிறது அரசு. ""அந்நியக் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் காட்டி வரும் பாரபட்சம் சகிக்கவொண்ணாத அநீதியாக இருக்கிறது'' என்று தனது கட்டுரையை முடித்திருக்கிறார் அரிஜன் கட்டுரையாளர். அந்த அநீதிதான் இனி இந்த நாட்டின் நீதி என்று அறிவித்திருக்கிறது அரசாங்கம்.
அரிஜன் கட்டுரை எழுப்பும் கேள்விகளையும் அதற்கு இன்றைய காங்கிரசு அரசும் பிற ஓட்டுக் கட்சிகளும் அளித்து வரும் பதிலையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள், இந்த நாடே ஒரு கோலா குடியரசாகிவிட்ட உண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மு முருகேசன்