ஒரு சிறு பெண்ணை, வறுமையினால் வாழ வழி தேடி சின்ன வயதில் தாயைப் பிரிந்து பாலைவனத்திற்கு போனவளை கொலை செய்து, இஸ்லாமிய ஷரியா சட்டம் நீதியை நிலை நாட்டி கொண்டதாம் சொல்கிறார்கள் மதவாதிகள். எல்லாம் வல்ல அருளாளர்களின் சட்டங்கள், கருணை மிகுந்தவர்களின் திருமறைகள் ஒரு குழந்தையை கொலை செய்திருக்கின்றன. சாதாரண சட்டங்களின் படி பதினெட்டு வயது வராதவர்கள் தனியான இளம் வயதினருக்கான சட்ட விதிகளின் படி விசாரிக்கப்படுவார்கள். சிறுவயதினரின் பெயர்கள் கூட பெரும்பாலும் வெளிவிடப்படுவதில்லை. ஆனால் இறைவனாலும், இறைத்தூதுவர்களாலும் தரப்பட்டது என்று சொல்லப்படும் இந்த மதச்சட்டங்களினால் ஒரு சிறு குழந்தையைக் கொல்லலாம். கையை வெட்டலாம்.கல்லால் அடித்து கதையை முடிக்கலாம்.
பதினேழு வயதான ஒரு சிறுபெண் தனது பராமரிப்பில் இருந்த நாலுமாத குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்? ரிசானா மனநிலை பாதிக்கப்பட்டவள் அல்ல. இதற்கு முதல் குழந்தையை துன்புறுத்தினாள், காயப்படுத்தினாள் என்ற எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் எழுந்ததில்லை. மொழி தெரியாத அன்னிய நாட்டில் ஆதரவு இன்றி, அனாதையாக வாழ்ந்தவள் தனக்கு இருக்கும் வேலை ஒன்றே தனக்கும், தன் குடும்பத்திற்கும் வயிற்றைக் கழுவ உதவும் என்ற நடைமுறை வாழ்வின் கொடூரமான யதார்த்தம் உணர்ந்தவள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தான் வாழும் நாட்டின் கொடுமையான, காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் அவளிற்குத் தெரியாதா? நெருப்பாலே சூடு வைப்பதும், ஊசியாலே உடம்பிலே குத்துவதும் வேலை தரும் எஜமானர்களின் சர்வசாதாரணமான தண்டனைகள் என்பதும் அவளிற்கு தெரிந்திருக்காதா?
மருத்துவ ஆராய்ச்சிகள் வசதிகள், சுகாதார வசதிகள் மிகுந்த நாடுகளிலேயே குழந்தை மரணங்கள் சாதாரணமாக நடக்கின்றன. தொட்டில் மரணங்கள், மூச்சுத்திணறி மரணித்தல் போன்றவை எல்லா இடங்களிலும் உண்டு. என்ன நடந்தது என்பது குறித்து எந்த விதமான விசாரணையும் இன்றி அந்த நாட்டவர்களான வேலை கொடுத்தவர்களின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு, காவல்துறையினர் மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒரு வெளிநாட்டு ஏழைப் பெண்ணை கொலை செய்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் ஏழைத் தொழிலாளர்களே மதச்சட்டங்களின்படி இதுவரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க, அய்ரோப்பிய நாட்டவர்கள் எவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது கிடையாது. ஆம் மதங்கள் நிறம் பார்த்து, இனம் பார்த்து, சாதி பார்த்து தான் தண்டனை வழங்கும்.
இது குறித்து மகிந்து கவலை தெரிவித்திருக்குதாம். நாட்டு மக்களினது உழைப்பையும், வரிகள் மூலம் சுரண்டும் பணத்தையும் ஊழல் செய்து நாட்டை வறுமையின் விளிம்பிற்கு தள்ளும் இந்த இரத்தம் குடிக்கும் பேய்களினால் தான் மக்கள் இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாடுகளிற்கு வேலைகளிற்கு செல்கிறார்கள். கொட்டும் பனியில் உடல் முழுதும் விறைத்தபடி அய்ரோபிய நாடுகளில் வேலை செய்கிறார்கள். அரபுநாட்டு பாலைவனங்களில் வெய்யிலில் கருகியபடி அற்ப சம்பளத்திற்கு உடல் வேக வேலை செய்கிறார்கள். கிழட்டு எஜமானர்களின் பாலியல் வன்முறைகளை மெளனமாக சகித்துக் கொண்டு வீட்டு வேலைகள் என்னும் சித்திரவதை கூடங்களில் உயிரைக் கரைக்கிறார்கள்.
முஸ்லீம் மதம், முஸ்லீம் மக்கள் என்று கூச்சல் போட்டபடி வாக்கு வேட்டையாடி பதவி சுகம் அனுபவிக்கும் முஸ்லீம் தலைவர்கள், மதம் என்ற அபினை மக்கள் மனதில் விதைத்து மயக்கத்தில் வைத்திருக்கும் மதவாதிகள் எவரும் ரிசானா உயிரோடு இருந்த போதும் எதுவும் செய்யவில்லை. இறந்த போதும் கொலைத் தண்டனைக்காக கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்கள் மதச்சட்டங்களை மதிக்கிறார்களாம். அதற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்களாம். பணிப்பெண்ணாக வேலைக்கு செல்பவர்களை எத்தனையோ அரபிக்கள் சித்திரவதை செய்தார்களே அப்போது உங்களது மதச்சட்டங்கள் எதுவுமே செய்ததில்லையே.
ஈராக்கிலும், அப்கானிஸ்தாலும், அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் கொல்கிறார்கள், பாலியல் வன்முறை செய்கிறார்கள். குழந்தைகள் குடிக்கும் பால்மாவிற்கு கூட பொருளாதாரதடை விரித்து குழந்தைகளை கொல்கிறார்கள். அவர்களுடன் தான் சவுதி அரச குடும்பம் முதல் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வரை கூட்டுக்கலவி செய்கிறார்கள். முஸ்லீம் மக்களை கொலை செய்யும் கொலையாளிகளின் கூட்டாளிகளை தண்டிக்க உங்களது மதச்சட்டத்தில் இடமில்லையா? அரபு ஷேக்குகள் எண்ணெய் பணத்தை மேற்கு நாடுகளின் இரவு விடுதிகளின் களியாட்டத்தில் கொட்டும் போது மதச்சட்டங்கள் ஏன் மெளனமாகின்றன. ஏழைகள் காதலித்தால் தான் அவை கல்லெறிந்து கொல்லும். ஏழை மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டால் கூட பாய்ந்து விழுந்து விசாரணை இன்றி அவை கொலை செய்யும்.
-11/01/2013