சென்றுவா ரிசானா

ரிசானாக்களின் வியர்வையும்

இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு

மன்னர்களும்,

ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும்

யமன்களின் தர்ப்பாரில்

வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து

தீர்ப்பெழுதியிருக்கிறார்கள

சென்றுவா ரிசானா,

கொள்ளையிடும் அன்னியப்பேய்களிடம்

அடகுவைக்கப்பட்டிருக்கும்

தேசத்தில் பிறந்தவர்கள் நாம்

இயற்கையின் கொடைகளால் செழித்திருக்கும்

இலங்கைத்தீவின்

வளங்கள் எங்களிற்குச் சொந்தமில்லை

குடும்பச்சுமையை தாங்குவதற்காய்

அலைந்துதிரியும்

அவலவாழ்வை எமக்கு வழங்கியவர்கள்

பாராளுமன்றச்சுகத்தில் திழைத்துப்போயிருக்கிறார்கள்

அன்னியச்செலாவணியில் கொழுத்துப்போயிருக்கிறார்கள்

 

இடித்து நொருக்கப்படும் மசூதிகளும்

விரட்டியடிக்கப்படும் மக்கள் குடியிருப்புக்களும்,

ராஜபக்சகுடும்ப சர்வாதிகாரத்தில்

ஒட்டிக்கிடக்கும்

அரசியல்வாதிகட்கு உறைக்காதபோது

உன்னை விடுவிக்கமட்டும் அக்கறையாயிருக்கப்போகிறது

சென்றுவா ரிசானா அஞ்சலிக்கிறோம்

உழைப்பவர் கைகளில் அதிகாரம் இல்லாதவரை

இதுதான் எம் அவலவாழ்வு

சென்றுவா ரிசானா அஞ்சலிக்கிறோம்.

-09/01/2013