பாவம் இராணுவத்தில் இணைந்த பெண்களும், மருத்துவம் செய்த மருத்துவரும்

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

அந்தப் பெண்களை பலாத்காரமாக தாங்கள் ஊடகங்களில் அந்தப் பெண்கள் அறியாமலே "இராணுவம் புணர்ந்ததென" கதை பரப்பி விட்டதை மூடிமறைக்க, இன்று மனநல மருத்துவரின் கடந்தகால மருத்துவ செயற்பாடுகள் பற்றியும், தனிப்பட்ட அவரின் நடத்தை பற்றிய விவாதமாகவும் மாற்றுகின்றனர். இப்படி கேவலமாக ஊடகம் நடத்தும் இவர்களுக்கு தான், இது பொருந்தும் என்பது தான் இதில் உள்ள உண்மை. குறித்த அந்தப் பெண்களை இராணுவம் "பாலியல்ரீதியாக" பயன்படுத்தியதாக எழுதியவர்கள் இவர்கள். மறுதலையான உண்மையை மூடிமறைக்க, மனநல மருத்துவர் இன்று இவர்களால் பலியிடப்படுகின்றார்.

பெண்களுக்கு மனநோய் தானே ஓழிய, இது பாலியல் வல்லுறவு நோயல்ல என்று சொன்ன மருத்துவர், இன்று இராணுவத்தின் ஆளாகக் காட்டப்படுகின்றார். இதை மனநோய் என்று சொன்னது, மருத்துவரின் குற்றம் என்பது இவர்களின் தீர்ப்பு. இதனால் தான் இன்று மருத்துவரை தூக்கில் போட முனைகின்றனர்.

அந்தப் பெண்கள் "பாலியல் வல்லுறவுக்கு" உள்ளானதாக கூறுவதை நாம் கேள்விக்குள்ளாக்கிய போது, அதனை இராணுவத்துக்கு ஆதரவான செயற்பாடாக வேறு காட்ட முற்படுகின்றனர். இதையே மருத்துவருக்கும் சூட்டுகின்றனர்.

இராணுவ பாசிசப் பயங்கரவாத கட்டமைப்புக்குள் சிக்கிய பெண்கள் எப்படி அரச பயங்கரவாத வன்முறைக்குள் பாதிக்கப்பட்டனரோ, அதேபோல் தான் அவர்கள் ஊடகம் மூலம் பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளானர்கள். இப்படி அந்தப் பெண்கள் இரண்டு வன்முறைக்குள்ளாகினார்கள். ஒரு வன்முறைக்குள்ளல்ல.

இந்தநிலையில் மனநோயை பாலியல் வல்லுறவாக சித்தரிக்கின்ற தொடர்ச்சியான ஊடக வன்முறை மூலம், சமூகத்தை தலைமைதாங்கி அழைத்துச் செல்லப்போவதாக கூறுவது தான் வேடிக்கை.

தங்களின் இந்த வன்முறையை மூடிமறைக்க, நாட்டில் இருந்து இனவாதிகளுக்கு எதிராக எழும் எந்தக் குரல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று தீர்ப்பை எழுதிவிடுகின்றனர். இதுதான் தமிழினவாதத்தின் தீர்ப்பு. இலங்கையில் மனிதன் சுயாதீனமாக இருக்கவும், கருத்து சொல்லவும், செயற்படவும் முடியாது என்று கூறுவதன் மூலம், அங்கிருந்து வரக்கூடிய உண்மைகளை சேறடிக்கின்றனர். நேர்மையானவர்களின் சமூகச் செயற்பாட்டை, அரசு சார்பானதாக முத்திரை குத்தி முடக்கி விடுகின்றனர். இதுதான் இனவாதத்தின் பொது அரசியல் அளவுகோல். புலத்து தமிழினவாதிகளின் இந்த அரசியல் அளவுகோல் கொண்டு, நாட்டில் சுயாதீனமான எந்தச் செயற்பாட்டையும் முடக்குகின்றனர். இனவாதமல்லாத எல்லாவற்றையும் அரசு சார்பானதாக கட்டமைத்துக் காட்டுகின்றனர்.

அரசு என்ன செய்ய விரும்புகின்றதோ அதையே புலம்பெயர் இனவாதம் செய்கின்றது. முன்பு புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டியது போல், இன்று இடதுசாரிய வேஷம் போட்ட இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர். அந்தப் பெண்களை போதாதற்கு தாங்களும் ஊடகம் மூலம் “வன்புணர்ந்ததை” மூடிமறைக்க தத்துவவாதங்கள், தர்க்கங்கள்.

எந்த உண்மையையும், எந்தச் சரியான கருத்தையும், இனவாதத்துக்குள் தேடமுடியாது. மறுதளத்தில் எந்த உண்மையும் மண்ணில் இருந்து சுதந்திரமாக வரமுடியாது என்பதன் மூலம், புலம்பெயர் இனவாதத்தை மண்ணில் திணிக்க முனைகின்றனர்.

இராணுவத்திற்கு ஏமாற்றி இணைத்த பெண்களை "பாலியல் வல்லுறவுக்கு" உள்ளானதாக தங்கள் சொந்தக் கற்பனையில் கதை எழுதியவர்கள் தொடர்ந்து அதை நாடகமாக போட விரும்புகின்றனர். இதை மறுத்தவர்களை இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இட்டுக்கட்டும் அவதூறில் இறங்கியிருக்கின்றனர். “அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள் தான், இதை மறுப்பவர்கள் அனைவரும் இராணுவத்துக்கு பின்னால் செயற்படுவதாக” அவர்கள் கூறுகின்ற இனவாதக் கேலிக்கூத்தைக் காண்கின்றோம்.

இலங்கையில் உள்ளவர்கள் முன்வைக்கும் உண்மை என்பது கையறுதனமானதாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் காட்டி அதை மறுக்கின்றதும், அதை முன்னிறுத்திப் போராடுவது அரசு சார்பான பிரச்சாரமானதாகவும் சித்தரிக்கின்ற இனவாத பித்தலாட்ட அரசியலைத் தாண்டி, எந்த உண்மையையும் இங்கு நாம் எதிர்பார்க்க முடியாது.

அந்தப் பெண்கள் தீ மிதித்தாலும், இந்த அரசியல் கனவான்கள் எழுதிய தீர்ப்பை மாற்ற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களது பிரச்சாரம் இதைத்தான் தொடர்ந்து அறைந்து எழுதுகின்றது.

அந்தப் பெண்கள் மட்டுமல்ல, அந்தப் பெண்களை "பாலியல் பலாத்காரத்துக்கு" உள்ளானதாக கூறி செய்த பிரச்சாரத்தை மறுத்த மருத்துவரையே, அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியது போல், மருத்துவரை ஊடகம் மூலம் வன்புணர்வுக்கு உள்ளாக்கி விடுகின்றனர். மருத்துவருக்கும் இராணுவத்துக்கும் கள்ள உறவு இருப்பதாக கூறி, அவரின் மருத்துவ சேவையையும் கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்" என்று செய்தி வெளியிட்டவர்கள், தங்கள் ஆதாரத்தை முன்வைத்து இதை இன்றுவரை வாதிடவில்லை. அதைத் தவறு என்று சொல்லவில்லை. அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கோரவில்லை. மாறாக மருத்துவரை இராணுவத்தின் ஆளாக காட்டுவதன் மூலம், தாங்கள் கம்யூட்டர் மூலம் புனைந்த கற்பனைகளை உண்மையாக்க முனைகின்றனர். வவுனியாவில் 5000 இராணுவ மனநோயாளிகள் தான் இதை செய்ததாக எழுதியவர்கள், அப்படி ஒரு மருத்துவமனையே கிடையாது என்ற உண்மையை புதைக்க, மருத்துவம் செய்த மருத்துவரை குற்றவாளியாக்க மாற்றிவிடுகின்றனர்.

இங்கு அந்தப் பெண்களுக்கு மருத்துவம் செய்த மருத்துவரை நோக்கி கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும்; …. முன்வைத்து தொடருகின்றனர். ஆனால் எவரும் “பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்” என்ற செய்தியின் மூலம் என்ன, அதற்கான அடிப்படை என்ன?, என்றதில் இருந்து கேள்விகளையோ, குற்றச்சாட்டுகளையோ எழுப்பவில்லை. கேள்வி எழுப்பும் அறிவும், குற்றஞ்சாட்டும் அறமும், இதற்குள் ஊடக விபச்சாரம் செய்யும் சுதந்திரமும், தாங்கள் அந்த பெண்கள் மேல் “பாலியல் வல்லுறவு” செய்த உண்மையை மூடிமறைக்க நடத்தும் போலியான நாடகங்கள் தான்.

இனவாதம் இதற்கான வரம்பை போட்டு இருப்பதுடன், இந்த அரசியல் பின்புலத்தில் செயல்படுவர்கள் பலர் முன்னாள் இடதுசாரிகள் என்பது தான் இதில் உள்ள வேடிக்கையான செய்தி. பலவழியில் சீரழிந்தவர்கள் என்பது தான், இவர்களின் கடந்தகால வரலாறும் கூட.

 

பி.இரயாகரன்

03.01.2012