இந்தப் புத்தாண்டில் புதிதாகச் சிந்திப்போம். புதிய மனிதனாக வாழ முனைவோம். எம்மைச் சுற்றிய குறுகிய வட்டங்கள், சிந்தனைகள் இந்தப் புத்தாண்டில் தகரட்டும். எமது அறிவு வளரட்டும். வாழ்க்கை நடைமுறைகள் மனிதத்தன்மை கொண்ட ஒன்றாக வளரட்டும்.
என்னைப் போன்று ஒடுக்கப்பட்ட சக மனிதனை எதிரியாகப் பார்க்கும் எம் குறுகிய மனபாங்கையும், அது சார்ந்த நடத்தையை இந்தப் புத்தாண்டில் கைவிடுவதன் மூலம், மனித தன்மையை மீட்டு எடுப்போம். சக மனிதன் எம்மை எதிரியாகப் பார்த்தால், நாம் எதிரியல்ல என்பதை அவனுக்கு புரியவைப்போம். இது தான் புத்தாண்டு செய்தியாகட்டும்.
இனவாதம் கடந்த, மனிதனை மனிதன் நேசிக்கும் ஆண்டு ஆகட்டும். எம்மை ஒடுக்குகின்ற எதிரி எந்த முகத்தில் வந்தாலும், அவன் எம் அனைவரதும் பொது எதிரி. அவன் மக்களின் எதிரி. தன்னை மூடிமறைக்கவே, அவன் இனவாத வேஷம் போட்டுக் கொண்டு எம்மை ஒடுக்குகின்றான். அவனை எதிர்த்து நாமும் இனவாத வேஷம் போடுவது, எதிரியின் நோக்கத்துக்கு துணை போனதாகிவிடும்.
நாம் எதிரி போல் இனவாதியானால், எதிரிக்கு எதிரான நாம் அல்லாத மற்ற இன மக்களை நாம் எமது எதிரியாக்கிவிடுகின்றோம். இந்த உண்மை தான், எதிரியை எமக்கு எதிராக இயங்க வைக்கின்றது, எம்மை வெல்ல வைக்கின்றது. இது பற்றிய எமது தெளிவின்மை தான், எம்மை நாம் குறுக்கிக் கொள்ளவும், தோற்கடிக்கவும் வைக்கின்றது.
எம் மீதான இனவாதத்தை ஒழித்துக்கட்ட, எம் இனம் மீதான இனவாதத்துக்கு எதிராக மற்ற இன மக்களை வென்று எடுக்கும் முதல் காலடியை இந்த புத்தாண்டில் நாம் தொடங்குவோம். இனவொடுக்குமுறைக்கு எதிராக உணர்வு கொள்ளவும், மற்ற இன மக்களுடன் தோழமை பூர்வமான உணர்வை வளர்த்துக் கொள்ளவும் முனைவோம்.
இந்த ஆண்டு அனைத்துவிதமான இனவாதத்துக்கும் எதிராக, சமவுரிமைக்கான கலாச்சாரப் புரட்சியை நடத்துவோம். எல்லாவிதமான குறுகிய சிந்தனைகளையும், மனித நடத்தைகளையும் கடந்து, நாம் சிந்திக்கவும் செயலாற்றும் வண்ணமும் இந்தப் புத்தாண்டு புரட்சிகரமாகவே விடியட்டும்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
01.01.2013