Language Selection

கனகமணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொலீசாரின் விசாரணைப் பிரிவிலிருந்து கொழும்பு நீதவான் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றேன். இவ்வளவு காலமும் விசாரணை கைதியாக இருந்த நான் அந்த நிமிடத்திலிருந்து நீதி மன்ற பொறுப்புக்கு மாற்றப்படுகின்றேன். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை நிருவாகம் என்னை பொறுபெடுக்கும் வரை நீதிமன்ற வளாகத்திலுள்ள செல்லில் அடைத்து வைக்கப்படுகின்றேன்.

சிறைச்சாலையிலிருந்தோ அல்லது பொலிஸ் விசாரணையின் நிமித்தம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படும் கைதிகளை, நீதிமன்றில் அவர்களது பெயர் அழைக்கப்படும்வரை நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறைக் கூண்டில் அடைத்து வைப்பது வழக்கம்.

எனது சிறைச்சாலை வாழ்வின் ஆரம்பமும் அங்குதான்.

பெண்களை அடைத்து வைப்பதற்கு தனியான ஒரு செல்லும் ஆண்களுக்கென்று இரண்டு மூன்று செல்களும் இந்த வளாகத்துள் இருந்தது.

ஆண்களின் செல் வாசலில் நின்ற காவலாளி செல்லைத் திறந்து என்னை உள்ளே விட்டு கதவைப் பூட்டினான். நாள் பட்ட மூத்திர வாடை என்னை வரவேற்றது. என்னைக் கொண்டு விடப்பட்ட செல்லில் கிட்டத்தட்ட ஆறு, ஏழு அடி நீட்டமான ஒரு சீமெந்து இருக்கை சுவரோடு சேர்த்துப் பொருத்தப்பட்டிருந்தது. அதில் ஆளையாள் இடிபட்டுக் கொண்டு இருந்தனர். கொஞ்சப்பேர் நிலத்தில் குந்திக் கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்சப் பேர் சேட்டை கழற்றி கயில் வைத்துக் கொண்டு முகத்தை செல்லின் கம்பிகளுக்கூடாக எட்டி வெளியே உள்ள உறவினர்களிடம் எதையெதையோ வேண்டிக் கொண்டிருந்தனர். ஒருவருடைய உடம்பு மற்றவரை உரசிக்கொண்டிருக்குமளவுக்கு நெருக்கடி. செல்லின் மூலையில் மூன்றடி உயரத்தில் ஒரு சுவர். எல்லோரும் அதற்குள்தான் மூத்திரம் விட்டுக்கொண்டார்கள். மூத்திர வேசன் இருப்பதற்கான எந்த அடையாளத்தையும் அங்கு காணவில்லை. சேறாகத்தான் இருந்தது. தண்ணிரில்லை. நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது.

செல் முழுக்க புகை சூழ்ந்திருந்தது. அநேகமானவர்களுடைய கைகளிலும் வாய்களிலும் புகைப்பான்கள். சிலர் பேப்பரை சுருட்டி அதற்குள்ளும் எதையோ வைத்து புகைத்துக் கொண்டார்கள். சிலர் குந்தியிருந்து ஈயபேப்பரில் வைத்து உறிஞ்சிக் கொண்டார்கள். வாயிற் காவலர் இவற்றை கண்டும் காணாதவர்போல் நின்றுகொண்டார். வீட்டாரிடம் வேண்டும் பணத்தில் அவருக்கும் கொடுக்கப்பட்டது. சிலர் முழுவதையுமே கொடுத்து வைத்தனர்.

திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரும் சேட்டுக்களைப் போட்டு, புகைப்பான்களை தூக்கி எறிந்து ஆயத்தமானர்கள். ஒருவர் சுவர் ஓரமாக குந்தியிருந்து பொலீத்தினால் சுற்றப்பட்ட ஒன்றை தனது மல வாசலுக்குள் திணித்துக் கொண்டார். ஒருசிலர் அவரை மறைத்துக் கொண்டனர்.

எல்லோரும் செல் கதவினூடாக எட்டிப் பார்த்தனர். என்னவென்று தெரியாததால் நானும் நெருக்குப் பட்டு குனிந்து பார்த்தேன். பக்கத்திலிருந்த செல்லிலிருந்த கைதிகளை சங்கிலியில் பிணைத்து பஸ்ஸில் ஏற்றுவதற்கு சிறை காவலர்கள் கூட்டிச் சென்றார்கள்.

அடுத்தது நாங்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவலுக்கு நின்ற சிறையதிகாரி 'ஹட்டிய லாஸ்தி வெண்ட' எனக் குரல் கொடுத்தார். எல்லோரும் செல் கதைவை நோக்கி வரிசையாக நின்று கொண்டனர். எல்லோருக்கும் கொழுக்கி வைத்த வெள்ளிக் காப்புக்கள் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் அவரவருக்கு வளமான கைகளில் மாட்டிக் கொண்டனர்.

சங்லியுடன் வந்த சிறையதிகாரி கதவைத்திறந்து பெயரையும் இலக்கத்தையும் கூப்பிட்டார். ஒருவரின் வலது கை வெள்ளிக் காப்பையும் மற்றவரின் இடது கை வெள்ளிக் காப்பையையும் சேர்த்து சங்கிலியில் கோர்த்துக் கொண்டனர். பத்தடி நீளமான சங்கிலியில் பதினைந்து சோடிக்குமேல் கோர்க்கப்பட்டனர். கட்டப்பட்ட சங்கிலியுடன் முன்னால் போகிறவரின் காலில் முட்டாத படி நடக்கவேண்டும்.

நடக்க முடியவில்லை. எறும்பு ஊர்வதைப் போலவே செல்ல வேண்டியிருந்தது. சிலர் செருப்புக்களை களற்றி கைகளில் எடுத்துக் கொண்டனர். முன்னால் செல்பவரின் காலில் பின்னால் செல்வரின் கால் பட்டால் 'புண்ட மோனே பார்த்து நடக்க தெரியாதா' எனக் கேட்பார். முதல் நாளே எனக்கு அந்த அனுபவம் கிடைத்து விட்டது. பஸ்ஸுக்குள் மிகவும் கஷ்டப்பட்டே ஏற வேண்டியிருந்தது. பஸ் பறப்படத்தயாரானபோது முன்னுக்குள்ளவரில் மோதிவிழவேண்டி ஏற்பட்டது. பஸ் மருதானை சந்தியை தாண்டி தெமட்டக் கொடவைக் கடந்து பொரள்ளையில் சந்தியில் திரும்பி மகசீன் சிறைச்சாலை முன் நின்றது. 'மகசீன் கட்டிய பகிண்ட' என்று சிறைக் காவலாளி கத்த, குறிப்பிட்ட சிலர் இறங்கிய பின் பஸ் மீண்டும் புறப்பட்டது. அடுத்து வெலிக்கடை சிறை முன்கதவை தாண்டி பஸ் நின்று அங்கேயும் இன்னும் சிலரை இறக்கிவிட்டு, வெலிக்கடை முதல் கதவுக்கும் இரண்டாவது கதவுக்கும் இடைப்பட்ட பாதையில்  நகர்ந்து கடைசில் ஓரிடத்தில் தரித்து நின்றது.

'கட்டிய ஒக்கமே பகிண்ட' என சிறை அதிகாரி கத்த சங்கிலியில் முன்னால் பிணைக்கப்பட்டிருந்தவன் நகர மற்றவர்கள் பின்னால் இழுபட்டுக் கொண்டு சென்றோம். பெரிய கதவுக்கு மேல் 'கொழும்பு றிமாண்ட் சிறை' என கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கதவில் நின்ற சிறைக் காவலாளி 'எக்ஹாய்...' என ஒவ்வொரு தலையாக எண்ணி 'திஹாய்' என கணக்கெடுத்து முடித்துக் கொண்டார்.

சங்கிலியின் கடைசியில் போடப்பட்டிருந்த பெரிய பூட்டை திறந்து விட, ஒவ்வொருத்தராக சங்கிலியிலிருந்து வெள்ளிக் காப்புக் கைகளை விடுவித்துக் கொண்டோம். வெள்ளிக் காப்புக்களை கழட்டி சங்கிலியில் கோர்த்து பூட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்ட சிறைகாவலாளி ஒருவர் 'ஹட்டி ஒக்கமே அத்துளட்ட எண்ட' என்று சொல்லிக் கொண்டு அறை ஒன்றுக்கு சென்றான். அந்த அறையைத் தாண்டியிருந்து செல் அமைப்பிலான அறை ஒன்றுக்குள் எல்லோரையும் போட்டு பூட்டிவிட்டான். அறையின் எல்லாப் பக்கங்களிலும் எச்சில் துப்பல்களும் துர்நாற்றமுமாக இருந்தது.

அந்த செல்லிலிருந்து ஒவ்வொருத்தராக பெயர்களைக் கூப்பிட்டு வெளியிலிருந்து உள்ளே வந்தமைக்கான பதிவுகளை அதிகாரியொருவர் செய்து கொண்டிருந்தார். பதிவுகள் செய்து முடிந்தவுடன் இரண்டாவது கதவு திறக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் செல்களுக்கு அனுப்பப்பட்டனர். பதிவை மேற்கொள்ள என்னை கூப்பிட்டு வைத்துக் கொண்டு சிறையதிகாரிகள் தங்களுடைய சொந்த பிரச்சினைகளையும் கதைத்து கொண்டிருந்தனர். இடையிடையெ வெளியேயும் போய் வந்தனர். இவ்வளவுக்கும் மத்தியிலும் அந்த சிறைக்கு நான் புதுசானபடியாலும் என்னுடைய பதிவுகளை நிறைவு செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

பதிவுகளை முடித்துக் கொண்ட என்னை அதிகாரியொருவர் இரண்டாவது கதவை திறந்து இன்னுமொரு இடத்துக்கு கூட்டிச் சென்றார். மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த அறையில் இரண்டு சிறையதிகாரிகள் கோவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னொருவர் பலத்த சத்தத்தோடு யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் 12-15 வயது வயதொத்த சிறுவனொருவன் அழுத முகத்தோடு கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டியபடி நின்று கொண்டிருந்தான். அவரை பார்க்க இவர்களுக்கெல்லாம் பொறுப்பதிகாரி என்பது தெரிந்தது. என்னைக் கூட்டிக் கொண்டு சென்றவர் என்னை வெளியில் விட்டு விட்டு அந்த தலமை அதிகாரியிடம் ஏதோ போய்ச் சொன்னார். என்னை ஒருதரம் அவர் தலையை சாய்த்து பார்த்துக் கொண்டார். என்னைக் கூட்டிச் சென்றவர் திரும்பி வந்து 'மெத்தன வாடிவெண்ட' என்று பக்கத்திலிருந்த உடைந்த வாங்கை காட்டிவிட்டு சென்றார்.

என்னை போல் இன்னும் சிலர் அந்த அறையின் முன் அங்குமிங்குமாக நின்று கொண்டிருந்தனர். எல்லோருடைய முகத்திலும் பயம் தெரிந்தது. அந்த அறையின் வாசல் கதவின் மேல் R:C என்று எழுதப்பட்டிருந்தது. அறைக்கு பக்கத்தில் இன்னுமெரு சிறிய அறையும் அதனைத் தொடர்ந்து 30 அடி நீளம் மதிக்கத்தக்க அறையொன்றுமிருந்தது. நான் நின்ற இடத்திலிருந்து அந்த அறையை பார்க்ககூடியதாக இருந்தது. பொலீத்தீன் பைகள் சுவர் ஓரமாக இருந்தது. அநேகமான பைகளுக்குப் பக்கத்தில் ஒவ்வொருத்தர் இருந்தனர். இன்னும் சிலர் அந்த அறைக்குள் அங்குமிங்குமாக நடந்து திரிந்தனர். இன்னும் சிலர் நெற் யன்னலில் தொங்கிக்கொண்டு வெளியில் நடப்பவற்றை புதினம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

யன்னலில் நின்றவர் என்னைப் பார்த்து 'புதுசா' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்கிடையில் எனக்கு பக்கத்தில் நின்றவன் 'மாத்தையா இப்பத்தான் கூட்டியந்து விட்டுட்டு போறார். இரவைக்கு உங்களோடதான்' என்று அவனுக்கு பதில் சொன்னான். 'இரவுக்கு உங்களை இங்கதான் விடுவாங்க, புதுசா வாறக்கள் இந்த வாட்டுல விட்டுத்தான் பிறகு வாட்டு பிரிப்பாங்க' என்று எனக்கும் சொல்லி வைத்தான். 'யார் சத்தம் போடுறது' என்று உள்ளிருந்து வந்த குரலோடு எல்லோரும் அடங்கிவிட்டனர்.

அந்த அறைக்கு வந்த ஒருவன் வாசலில் நின்று 'மாத்தையா கூப்பிட்டீங்களா' என்று கேட்டு முடிப்பதற்கு முதலே 'ஹரி வேசிக்க புத்தா.....' என்ற வசையோடு பெட்டன் பொல் அவனுடயை தொடையில் வந்து விழுந்தது. 'ஐயோ.. மகே அம்மே' என்று கத்திக் கொண்டு அவன் நிமிர்வதற்கிடையில் அறைக்குள்ளிருந்து வந்த இருவர் அவனை நொருக்கித் தள்ளிவிட்டார்கள்.

எனக்கு நடுக்கம் பிடித்து விட்டது. நான் பயந்து முழிப்பதைப் பார்த்து பக்கத்திலிருந்தவன் 'பயப்பிடாதிங்க. இப்ப அடிவேண்டினவன் அங்க நிக்கிற சின்னவனை இரவு 'கல் வெட்டிவிட்டான்'. அதுதான் அடிக்கிறாங்க' என்று சொன்னான்.

சிறிது நேரத்தில் 'ஹாமப் போளின்...ஹாமப் போளின்...' ஒருவன் கத்த, அந்த வராந்தாப் பகுதியான கிரவல் நிலப் பகுதியில் அலுமினிய சாப்பாட்டுத் தட்டுக்களுடன் ஆளையாள் முண்டியடித்து தள்ளுப்பட்டு வரிசையாக நின்று கொண்டார்கள். அது ஒரு நீண்ட வரிசையாக இருந்தது.  இரவு நேரச் சாப்பாட்டுக்கான நேரம் அது.

வெகு நேரமாகியியும் சாப்பாடு கொடுப்பதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. சலசலப்புக் கேட்க திரும்பிப் பார்த்தேன். மூன்று பெரிய அலுமினிய அண்டாக்களை சுமந்து கொண்டு ஆறு பேர் முன்னால் வர இரண்டு சிறையதிகாரிகள் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அண்டாக்களை சுமந்து வந்தவர்கள் மேலங்கி எதுவுமில்லாமல் பழுப்பேறிய வெள்ளைக் காற்சட்டை அணிந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் கால்களுக்கு சம்பந்தமில்லாத செருப்புக்களை அணிந்திருந்தார்கள். மழை தூற்றலில் நிலம் ஈரமாக இருந்தது. நடக்கும் போது செருப்பிலிருந்து கிளம்பிய மணல் துளிகள் வஞ்சகமில்லாமல் சோற்றுச் சட்டிக்குள்ளும் கறிச் சட்டிக்குள்ளும் எட்டி விழுந்ததன.

வரிசையாக குந்தியிருந்தவர்கள் மெல்ல மெல்ல எழும்பி நிற்கத் தொடங்கினார்கள்.  இந்தச் சாப்பாட்டையா சாப்பிடுவது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்தவன் தட்டி அண்ணை மாத்தையா கூப்பிடுறார் என்றான். தட்டுத்தடுமாறி பொலித்தீன் பையிலிருந்த உடுப்பையும் தூக்கிகொண்டு அறைக்குள் சென்றேன்.

'நம மொக்கத்த' என்று தொடங்கி சிறைக்கு வந்த காரணம் வரையும் கேட்டுக் குறித்துக் கொண்டார். என்னிடமும் ஒரு பத்திரத்தை நிரப்பத் தந்து நிரப்பச் சொன்னார். எல்லாம் முடிந்த பின் எல்லாவற்றையும் அங்கு பொறுப்பாக இருந்தவரிடம் கொடுத்தார். அவர் அந்த பத்திரத்திலுள்ளவற்றை வாசித்துக் கொண்டு என்னையும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பார்வையால் அளந்து கொண்டார். அதிகாரி அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டபின் என்னை குறிப்பிட்ட வாட்டுக்கு அனுப்பும்படி பணித்தார்.

என்னை வெளியில் நிக்கும்படி பணித்தார் அந்த சிறை காவலாளி. பழைய இடத்தில் என்னுடைய பையுடன் வந்து நின்று கொண்டேன். வெளியில் சாப்பாட்டு வரிசையில் 'பத் மதி மாத்தயா...', 'ஹொதி மாத்தையா...', 'அள மாத்தையா..' என்ற சத்தங்களே வந்து கொண்டிருந்தது. அடிக்கடி சிறைக்காவலாளியின் 'அத்தி... அத்தி.. பளயங்' என்ற தடித்த குரலே மேலோங்கி இருந்தது. முண்டியடித்த ஒரு சிலரின் முதுகை சிறைக் காவலாளியின் பட்டன் பொல் பதம் பார்த்து ஓய்ந்து நின்றது. சிலர் சாப்பாட்டை வேண்டி இருப்பிடத்துக்கே கொண்டு செல்ல நேரமில்லாமல் அந்த இடத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு இன்னும் ஏதும் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தார்கள்.

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் என்ன நடக்குறது என்றே அறிந்திராத எனக்கு எல்லாம் புதுமையாகத்தான் இருந்தது. அவர்களுக்கு இந்த வாழ்க்கை நீண்ட நாட்களாகிவிட்டதால் பழகிப் போயிருக்க வேண்டும்.

பருத்த தொந்தியுடன் வேகமாக மூச்சிரைக்க வந்த சிறைக்காவலாளி, வந்த வேகத்தில் 'எண்ட' என்று என்னை அழைத்தார். சாப்பாட்டு நிலைமையில் மூழ்கியிருந்த நான் திடுக்கிட்டு பையையும் தூக்கிக் கொண்டு அவருக்குப் பின்னால் சென்றேன்.

செங்கற் சுவரால் பிரிக்கப்பட்ட பிரதேசத்துக்குள் செல்வதற்கு கதவைத்திறந்து உள்ளே சென்றார். நானும் அவருக்குப் பின்னால் சென்றேன். கைதிகள் அங்குமிங்குமாக சிறு சிறு குழுக்களாக நின்றும், குந்தியிருந்தும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். 'காம்பிராப்பாட்டி இவரை உங்கட செல்லிலதான் போட்டிருக்கு' என்று சொல்லிவிட்டு சிறைக் காவலாளி தன்னுடைய வேலையை சரியாக முடித்த திருப்தியுடன் திரும்பிவிட்டார்.

அத்தனை மனிதர்கள் அங்கிருந்தும் நடுக்காட்டினில் தனிமையில் விடப்பட்ட மனநிலையே வந்தது.

தொடரும்...