மாவீரச் செல்வங்களை
மடியிருத்திக் காக்கின்ற ஈழமண்ணே
நீ வருந்தி
வெடிக்கும் விம்மல்
பாரொலிக்கக் கேட்கிறது
யார் வந்தார் எமைக் காக்க..?
எமை மீட்க..?

நின் வேர் பிளந்து,
விருட்சமெலாம் வீழ்ந்தழியக்
காத்திருந்த கூட்டம்
புலத்திருந்து, 
கார்த்திகைப் பூப்போடுமென்றா
மாவீரர் துயிலுகிறார்..?

 

காரிருளுள் கானகத்தில்
ஊடுருவி
எதிரிக்கோட்டையுள் களமாடி,
நேர் நின்று 
மோதிய நெஞ்சுரமும்,
எதிரியிடம்
ஏன் வீழ்ந்துபோனது தாய்நிலமே!

மாவீரர் நினைவாக 
மாற்ரொன்றைத் தேடுவோம்!!
ஒற்றரும்
உடனிருந்து குழிபறிக்கும் அற்பரும்
இன்னம்
இனங்களைப் பிளக்கும் சொற்செருக்கும்
மக்களை மறந்து போய்,
மாவீரர் கனவுகட்கு 
மகிந்தவொடு மண்அள்ளிப்போட்டது

மாவீரர் நினைவாக
மாற்றொன்று காண்போம்!!
இந்தியக் கனவை 
எங்கள் மனங்களில் ஒழிப்போம்
இலங்கைத் தீவின் எல்லாத் திசைக்கும்
எங்கள் இடரினைச் சொல்லுவோம்
வறுமை நீங்கக் குரலெழுப்பும்
மானுடநேசரின் கரமொடு நடப்போம்
அருகிருக்கும்
மக்களை இணைத்தே
அரச இயந்திரத்தை நொருக்கலாம்

கொள்ளையிட்டுக்
கொலு வீற்றிருக்கும் 
அந்நியக் கூட்டுக்கு,
தியாகத்தின் வீச்சம் செந்தணலாய்
வீறுகொண்டெரிவதை 
மாவீரர் நினைவாக மாற்றொன்றாய் படைப்போம்!

-27/11/2012