06_2006.jpg"அசையும் மலைகள், நகராத ஆறுகள், பூச்சொரியும் நறுமணமுள்ள முள்காடுகள்'' பூமியில் இப்படியும் இடம் உண்டோ? உண்டு. சென்னை ஐ.ஐ.டி.க்கு வந்தால் பார்க்கலாம்.

 

சாதித் திமிர் நிரம்பி வழிய அசையும் மலைகளாக இயக்குனரும், பார்ப்பனப் பேராசிரியர் குழுவும், மேல்சாதிக் கூஜாக்களும், எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் கனவுகளுடன் மாணவ "அவாள்'களும்; அசையாத ஆறுகளாக காங்க்ரீட் கட்டிடங்கள் அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என்றும் ஓடும் ஆறுகளின் நாமகரணங்கள் உண்டு;. மிச்சமீதி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை முள் கம்பி வேலிக்குள் முள்காடுகள் உண்டு.

 ஒவ்வோர் ஆண்டும் மைய அரசு விரிவான வளாக நிர்வாகத்துகுகாகவே 20 கோடி சிறப்பு நிதி தருகிறது. என்ன அபாரமான சாணக்கிய மூளை! முள்காட்டுப் பராமரிப்புக்கு 20 கோடி!

 

இதுதான் ஐ.ஐ.டி. சென்னை. ஒவ்வோராண்டும் 100 கோடி வரை மைய அரசு நிதி கொட்டுகிறது. அத்தனையும் மக்கள் வரிப்பணம். இந்த ஐ.ஐ.டி. உயர்கல்வி மையங்களை மைக்ரோ சாஃப்ட் முதலாளி பில்கேட்ஸ் ""மிகச் சிறந்த மனிதவள மூலதனத்தின் புதையல் மாளிகை'' என்று பாராட்டினார். பாராட்டிய இடம் அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடந்த ஐ.ஐ.டி. 50ஆம் ஆண்டு மாநாடு. பில்கேட்ஸ் வாயால் தங்களுக்கு "மூலதனம்' என்ற பட்டம் கிடைத்த பெருமையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறது, ஐ.ஐ.டி. அக்கிரகாரம்.

 

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். இரண்டின் பிறப்பும் வரலாறும் "பணக்கார சோஷலிஸ்டு' நேருவோடு சம்பந்தமுள்ளது. "இந்தியாவின் வருங்காலத்தை இங்கே பார்க்கிறேன்!' என்றார் நேரு, கரக்பூர் ஐ.ஐ.டி.யைத் திறந்து வைத்தபோது. 1946லேயே பிரிட்டிஷாரால் அமெரிக்க மாசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டதே ஐ.ஐ.டி. 1950களின் பின்பாதியில் அமெரிக்க நிர்வாகப் பள்ளியைப் பார்த்து வடிவமைத்ததுதான் ஐ.ஐ.எம்.

 

ஆரம்பத்தில் போலிச் "சுயசார்பு' சூரத்தனமாக விளம்பரம் செய்யப்பட்டுப் பிறகு பார்ப்பன உன்னதமும், கார்ப்பொரேட் கம்பெனி உன்னதமும் கலந்து இவை வளர்க்கப்பட்டன. ஐ.ஐ.டி. கரக்பூர், மும்பை, சென்னை போன்று மொத்தம் 7 இடங்களில்; ஐ.ஐ.எம். அகமதாபாத், பெங்களூர் போன்று மொத்தம் 7 இடங்களில்,ஒவ்வொரு ஐ.ஐ.டி. கிளையும் பெறும் ஆண்டு நிதி : சுமார் 100 130 கோடிகள்.

 

ஐ.ஐ.டி. பட்டமுன்படிப்பு மாணவரின் கட்டணத்தில் அரசின் உதவித் தொகை : 80மூ

மேற்பட்டப்படிப்பு படிப்பவர்க்கு : உதவிச் சம்பளம்மாணவர் கட்டணம் (விடுதி, உணவு, கல்விச் செலவில் ஒரு பகுதி) : ஆண்டுக்கு ரூ. 50,000ஃ மட்டுமே. ஐ.ஐ.டி. மாணவர்கள் அனுபவிக்கும் வசதிகளை ஒரு பார்வை பார்க்கிறீர்களா? சலவை இயந்திரம், டி.வி. உட்பட வசதி நிறைந்த விடுதி, மிகப் பெரிய உணவுக்கூடங்கள், மையநூலகம் நெட் வசதிகள், கல்லூரிக்காக 10, 15 மைதானங்கள், தவிர விடுதிக்காக தனி மைதானங்கள், கோயில் (மசூதி கிடையாது என்பது தனி விசயம்), சர்ச் வசதிகள், திறந்தவெளி நாடகஃசினிமா அரங்கு, இலக்கிச் சங்கங்கள், தொழில்நுட்ப விழா (ஷாஸ்த்ரா), கலாச்சார விழா (சாரங்), இசைக்காக அக்கிரகார மாடலில் "ஸங்கீத ஸபா', வானியல் சங்கம், விவேகானந்தர் விவாத மன்றம் "பிரகிருதி' எனப்படும் "வனவிலங்குகள் கழகம்' — இவ்வளவும் ஐ.ஐ.டி.யில் உற்பத்தி செய்யப்படும் தரத்துக்கு நாம் நமது வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் விலை.

 

ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெறுவதற்கே தடுமாறும் அரசுப் பொறியியல் கல்லூரிகளையோ, அல்லது ""இடிந்து காரை விழும் கட்டிடம், ஒரேயொரு குண்டு பல்பு, மொத்த விடுதிக்கும் ஒரே கழிப்பறை, ஓடாத மோட்டார், பக்கெட்டில் சாம்பார், வேகாத புழுத்தரிசி'' போன்ற வசதிகளுடன் இயங்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளையோ இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 50 லட்ச ரூபாய் செலவில் இந்து நாளிதழின் கோலாகலமான கவரேஜுடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐ.ஐ.டி.யின் "சாரங்' கலை விழாவையும், 500, 1000த்துக்கே அல்லாடும் அரசுக் கல்லூரிகளின் முத்தமிழ் விழாக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஐ.ஐ.டி தரத்தின் வக்கிரம் புரியும்.

 

ஐ.ஐ.டி. நேரடியாகக் குடியரசுத் தலைவரின் கீழ் வருகிறது. கல்வி அமைச்சர், சில எம்.பி.க்கள், அரசின் சில துறைத்தலைவர்கள் இடம் பெறும் போர்டு சும்மானாச்சும்தான். உண்மை அதிகாரம் படைத்தவர்கள் ஐ.ஐ.டி. கவர்னர்களும், இயக்குனர்களும்தான். டைரக்டர் நினைத்தால் புதுப்பதவிகளில், பதவி உயர்வுகளில் ஆட்களைப் போடலாம். டாக்டர் சுவாமி என்ற இயக்குனர் 200 வகையான புதிய பதவிகளை அவ்வாறு உருவாக்கினார். சென்னை ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் விகிதம் ஓர் எ.கா. தாழ்த்தப்பட்டவர்கள் 2 சதம்; பிற்படுத்தப்பட்டவர்கள் 2025 சதம்; பார்ப்பனர் சுமார் 73 சதம். இச்சுயேச்சை நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதியானவர்களுக்குக் கூட பரிசு பெயர் புகழ் செல்வதில்லை; தலித் மாணவர்கள் என்றால் வருவதோ, வளர்வதோ, ஆசிரியராக உயர்வதோ முயற்கொம்பு. டைரக்டர் ராச்சியம் பார்ப்பன ராச்சியம்.

 

சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை இருந்த, இருக்கிற இயக்குநர்கள் வரை அனைவர் மீதும் ஏராளமாய் ஊழல் வழக்குகள். கவுன்சில் சேர்மன் விதைநெல் திருடன் எம்.எஸ். சாமிநாதன் போன்றவர்கள் இருந்த இடம் இது என்பதைக் கவனம் கொள்ளவும். தவிர, பன்னாட்டுத் தொழிற்கழகங்களோடு சரச சல்லாபங்கள் வெகு தாராளம் தற்போதைய ஐ.ஐ.டி. சென்னை இயக்குனர் ஆனந்தின் உபயத்தில் ஐ.ஐ.டி. தளம் ஒன்றையே கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். தவிரவும், பிற்படுத்தப்பட்ட, தலித் ஆசிரியர்கள் அவரது பார்ப்பனக் கொடுமை சுரண்டலின் கீழ் அல்லப்படுவது சொல்லத்தரமல்ல.

 

முதல் வகுப்புப் பட்டப்படிப்பு, 158 ஆய்வு நூல்கள், 5 டாக்டர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி என்று எல்லாத் தகுதிகளும் இருந்தும் சென்னை ஐ.ஐ.டி.யின், டாக்டர் வசந்தா கந்தசாமி உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, எம்.எஸ்.ஸி இரண்டாம் வகுப்பில் தேறிய பார்ப்பனரே அந்த இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு ஒரு உதாரணம்.

 

2005 2006இல் மட்டும் 136 அந்நியக் கம்பெனிகள் ஐ.ஐ.டி. வளாகத் தேர்வுக்கு வந்தன. சீமென்ஸ், அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் (இந்தியக் கிளை), மன்ஹாட்டன், மெக்கின்ஸே, மோட்டோரோலா, மற்றும் அந்நியக் கூட்டு உள்ள இன்போசிஸ், இன்டெல், சி.டாட், ஐ.டி.சி. போன்றவை அவை.

 

இந்தியக் கல்வியின் எதிர்காலத் திட்டங்களையும் உலக வங்கியே வழிநடத்துகிறது. ""உயர் கல்வி என்பது சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம். பொறுப்புள்ள பதவிகளுக்கு தேவைப்படும் அறிவும் திறமையும் கொண்டவர்களை வளர்க்கும் பொறுப்பு உயர் கல்வி நிறுவனங்களுக்கே உண்டு. இதில் முதலீடு செய்தால் உழைப்பவரின் உற்பத்தித் திறன் கூடும். வறுமையின் கடுமையைத் தணிக்கக் கூடிய நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியம்'' என்கிறது உலகவங்கி அறிக்கை. அறிவு திறமை குறித்த பார்ப்பனியத்தின் வாதமும் பன்னாட்டு மூலதனத்தின் வாதமும் ஒன்றுபடும் புள்ளி இதுதான். கடந்த 40 ஆண்டுகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.இல் உலக வங்கியின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட 1,10,000 "திறமைசாலிகள்' அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் ஓடியிருக்கிறார்கள் நம்முயை வறுமையின் கடுமையைத் தணிப்பதற்கு!

 

உள்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இந்த தேசபக்தர்கள், வெளிநாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்த்துக் காசு பண்ணலாம், வெளிநாடுகளிலேயே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்களைத் தொடங்கி வியாபாரம் செய்யலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி. பிராண்டை காசாக்கும் இந்தத் திட்டம் பன்னாட்டு முதலாளிகளின் மூளையில் உதித்தது. அதைப் பார்ப்பன மூளைகள் வழிமொழிகின்றன.

 

காட்ஸ் ஒப்பந்தப்படி (வணிகம் சார்ந்த சேவைகள் தொடர்பான பொது ஒப்பந்தம்) கல்வியும் மருத்துவமும் தனியார்மயமாக்கப்பட வேண்டிய வணிகச் சரக்குகள். அந்த வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கடைபோடவும் நாம் அனுமதித்தாக வேண்டும்.

 

பின்னே, ""நாசாவிலேயும் பென்டகன்லேயும் நம்மவாளுக்கு அவன் வேலை கொடுக்கும்போது, அவாளுக்கு நாம படிப்பு சொல்லித்தரப் படாதா? பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன்ல நம்மவாதான் எண்ணிக்கையில நம்பர் ஒன். அந்த விசுவாசத்துக்கு அந்த நாட்டுக்காராளுக்கு நாம இங்கே வைத்தியம் பார்த்துப் பணம் பண்ணக் கூடாதா? போன வருஷம் மட்டும் ஒண்ணரை லட்சம் ஃபாரின் நோயாளிகள் இந்தியாவில வைத்தியம் பாத்து டாலரைக் கொட்டிருக்கான்னா அது தேசத்துக்குப் பெருமை இல்லையா? எய்ம்ஸ்லயும், ஜிப்மர்லயும் படிச்சுப்புட்டு பெரியாஸ்பத்திரில போய் குப்பை கொட்ட முடியுமா என்ன? இதுதான் தகுதி, திறமை, தரம் பேசுவோரின் வாதம்.

 

மருத்துவர்கள் ஏற்றுமதி, நோயாளி இறக்குமதி! அறிவாளிகள் ஏற்றுமதி, அறிவு இறக்குமதி இவர்களுக்கு நம் வரிப்பணத்தைக் கொட்டியழுவது இந்தியக் குடிமகனின் தலைவிதி!

 

(ஆதாரம்: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.

வலைத்தளங்கள்; ஹார்வர்டு

பல்கலைக் கழக ஆய்வறிக்கை, 2004;

சனத்கவுல், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்.,

டெல்லியின் ஆய்வுக் கட்டுiர்

மற்றும் ஐ.ஐ.டி. சென்னை

பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கம்.)