அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.

முஸ்லீம் மக்களின் புனித நாளான ஹஜ் 'ஈதுல் அழ்ஹா' பெருநாளில் திட்டமிட்டு இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாம் பௌத்த மத வெறியர்கள் பள்ளிவாசலை எரித்தமையினை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான சமபவங்களுக்கு எதிராக அனைத்து இன மக்களையும், இன-மத அடையாளங்களை கடந்து ஒன்றிணைந்து போராட  அறைகூவல் விடுக்கின்றோம்.

நாம் மதம், இனம், மொழி கடந்து ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே இவ்வாறான மதவாத வெறிகளையும், இனவாதத்தினையும் இல்லாதொழிக்க முடியும்.

சிங்கள மக்கள் வசிக்காத இடங்களில் இராணுவத்தின் உதவியுடன் புத்த விகாரையை அமைத்துவரும் பௌத்த பேரினவாத அரசு, தனது இனவாத அரசியலை மதம் சார்ந்து முன்னெடுகின்றது. மக்களுக்கு தாம் வாழ்கின்ற சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் என்ன என்பதையும், அவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக ஆளும் வர்க்கம் திட்டமிட்டு இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை மக்கள் மத்தியில் மேலும் மேலும் தூண்டுகின்றது. ஆனால் மொழி, இனம், பிரதேசம், நிறம் கடந்து அரசியல்வாதிகள் தமக்குள் உறவாடிக்கொள்வார்கள்.

தமது சொந்த நலன்களிற்க்காக, மக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து மோதவிட்டு அந்த நெருப்பில் குளிர் காய்கின்ற இந்த பராளுமன்ற அரசியல்வாதிகளை நம்புவதை விடுத்து, மக்கள் தமக்குள் ஒருங்கிணைந்து போராடுவதன் மூலமே, பிரித்தாளும் அரசியலை தடுத்து நிறுத்த முடியும். இது இன்றைய காலத்தின் தேவையும் கூட.

மக்களே!

இந்த ஜனநயாக விரோத செயலை கண்டிப்போம்!

அரசின் இனம், மதம், பிரதேச சார்ந்த பிளவுவாதத்தை எதிர்த்து, ஐக்கியப்பட்டு போராடுவோம்!

ஜனநாயக விரோத பாசிசமயமாக்கலை இனம்கண்டு, அதற்கு எதிராக ஒரு அணியில் அணிதிரள்வோம்!

மக்கள் விரோத, சட்ட விரோதச் செயற்பாடுகளை முறியடிக்க ஒன்று திரண்டு போராடுவோம்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

29.10.2012