எரிக் சொல்ஹேம் இன்றைய அருள்வாக்கையும், புலிப் பினாமிகளின் காவடியாட்டத்தையும் மீறிய உண்மைகள் பல உண்டு. இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்தால் இந்த யுத்தமே நடந்திருக்காது அல்லவா! எரிக் சொல்ஹேம் தங்கள் முடிவை நடைமுறைப்படுத்த முன்னிறுத்திய "சர்வதேச சமூகம்" இதை செய்யமுடிவில்லையே ஏன்? யுத்தத்தின் பின் இதை ஏன் செய்ய முடியவில்லை? இப்படி இருக்க எரிக் சொல்ஹேம் கண்காணிப்பில் சரணைடைந்து இருந்தால் மட்டும் சரியாக நடந்திருக்கும் என்பது மோசடி. ஏன் புலிகள் சரணடையவில்லை. நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைக்கொடியுடன் புலிகள் சரணடையவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது? காலம் யுத்தசூழல் சார்ந்த படுகொலைகளை இல்லாதாகி இருக்கலாம். ஆனால் அரசின் திட்டமிட்ட இனவொடுக்குமுறை தொடங்கி இனப்படுகொலை இன்றுவரை தொடருகின்றது. இதுதான் உண்மை எதார்த்தம்.

இப்படி உண்மை இருக்க தாங்கள் சொன்னபடி நடந்;திருந்தால் எல்லாம் நல்லாகவே நடந்திருக்கும் என்று எரிக் சொல்ஹேம் சொல்லுகின்றார். நீங்கள் சொன்னபடி புலிகள் சரணடையவில்லையா? சரணடைய முன் கொல்லப்பட்டவர் போக, சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் எனத் தனிக்கணக்கு உண்டு. "சர்வதேச சமூகத்தின் முன்னிலையில்" இது நடந்திருக்காது என்று நீங்கள் சொல்லும் முன், நோர்வே உள்ளிட்ட சர்வதேசம் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொன்றுகுவித்த எண்ணிக்கையை விடவா முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு "சர்வதேச சமூகம்" மக்களை ஒடுக்கும் மூகமுடிதான். ஆக இந்த இனவழிப்பின் பின் அரசு மட்டுமல்ல புலிகளும் மேற்குநாடுகளும் கூடவே தான் இருந்தனர். புலிகள் பலிகொடுக்க, அரசு பலியெடுத்தது. பலியெடுப்புக்கான நிதி முதல் ஆயுதம் வரை இந்தியா சீனா மட்டுமல்ல மேற்கும் தான் கொடுத்தது. தேசிய இனப் போராட்டம் தொடங்கியது முதல் ஆயுதம், பணம், பயிற்சி மட்டுமல்ல யுத்தத்தை நடத்தியது வரையான அதன் பின்புலத்தில் இருந்தவர்கள் இவர்கள் தான். போராட்டம் மக்களுக்கு எதிரான நிலையில் நடத்தப்பட்டு, அது அழிவுக்குள்ளாக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் புலிகள் வழிநடத்தப்பட்டனர். இப்படித் தான் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டனர்.

தங்கள் குற்றத்தை மூடிமறைக்க எரிக் சொல்ஹேம் 08.10.2012 பிபிசிக்கு வழங்கிய பேட்டியில்

"இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பி வைப்பது என்றும், அதில் ஐநாமன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை."

என்கின்றார்.

உண்மையில் வேடிக்கையான கூற்று. வேடிக்கை என்னவென்றால் புலிகள் சரணடைந்தது உண்மையாகியது. சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதும் உண்மையாகியது. இப்படி இருக்க இங்கு இந்த விடையம் திசைதிருப்பப்படுகின்றது. புலிகளின் சரணடைவு தனித்து சுயாதீனமாக நடக்கவில்லை. இந்தத் திட்டத்தின் நீட்சியாகவே நடந்தேறியது. இதில் எரிக் சொல்ஹேம் சம்மந்தப்பட்டார். அமெரிக்கக் கப்பல் கூட சம்மந்தப்பட்டது.

இப்படி இருக்க "இந்த பெப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது" என உருத்திரகுமாரன் காவடியாடுகின்றார். இவை எழுத்து மூலமாக இல்லை என்று கதை சொல்ல முனைகின்றார்.

புலிகள் சரணடைந்த போது எரிக் சொல்ஹேம் சொன்னபடி கப்பல் கூட வந்தது. இதை நாங்கள் மட்டும் அன்று அம்பலப்படுத்தி இருந்தோம். இன்று எரிக் சொல்ஹேம் கப்பல் பற்றி தகவல் தருகின்றார். அன்றைய நிகழ்வுகள் பற்றி 'இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளது." என்று அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் 15.05.2009 அறிவிக்கின்றார். அத்துடன் 'போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்கக் குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வழியாக வெளியுறவுத்துறைக்கு வழங்கியுள்ளது" என்றார்.

மேலும் அதில் "போர்ப் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்க கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்." என்றார். இப்படி அந்த அறிக்கை, இந்தப் படுகொலை நடக்க முன் வெளிவருகின்றது. புலியை மீட்பது போன்று, அமெரிக்க கடற்படை தரையிறங்கியதா!? தெரியாது. ஆனால் மூன்றாம் தரப்பு அங்கு நிச்சயமாக பிரசன்னமாகி இருந்துள்ளது. இந்தப் பின்புலத்தில் தான் எரிக் சொல்ஹேம் முன்பு வைத்த சரணடைவு கூட நடந்தேறியது.

அன்று அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்த பின், 15.05.2009 இல் வெளியிட்ட அறிக்கைப்படி இந்த சரணடைவு சதி நாடகம் வெளிப்படையாக நடந்தேறியது. இது தான் நடந்து முடிந்தது.

அத்துடன் புலிக்கு 'பொது மன்னிப்பு இலங்கை வழங்க வேண்டும்" என்ற அமெரிக்காவின் அன்றைய கோரிக்கை, புலிகளை நம்பவைத்து கழுத்தறுக்கும் பொதுச் சதிடன் கூடிய ஒன்றாக இருந்துள்ளது. மக்கள் 'மீட்பு" என்பது, புலிச் சரணடைவுடன், புலியினை முடிவாக்கும் சதியின் அடிப்படையில் இருந்துள்ளது. எரிக் சொல்ஹேம் தங்கள் சொந்தச் சதிகளை மூடிமறைகின்றார்.

இந்த நிலையில் புலியைச் சேர்ந்த வழுதி தனது கட்டுரையில் "போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை "மௌனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது." என்கின்றார். ஆக இவை நடந்ததை உறுதி செய்கின்றது. எரிக் சொல்ஹேம் இதை மூடிமறைக்க, தங்கள் திட்டத்தை புலிகள் எற்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது.

சரணடைவு நடக்க முன் "அவர்கள் சரணடைந்தால் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது தானே என நோர்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பாலித கொஹண அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்." என்ற செய்தி இதை மேலும் உறுதி செய்கின்றது.

இந்த நிலையில் புலியைச் சேர்ந்த வழுதி கூறுகின்றார் "என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்கின்றார்.

சரி அந்த "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றால், அவர்கள் யார்?  "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்றது பொய்யல்ல, அது "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றதைத்தான் குறிக்கின்றது. "எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்றால், யாருடன் சேர்ந்து என்றால், இங்கு எரிக் சொல்ஹேம் போன்றவர்களுடன் சேர்ந்துதான்.

உருத்திரகுமாரின் இன்றைய பித்தலாட்டத்தை மறுக்கும் வண்ணம் வழுதி கூறிய கூற்றுக்கள் கூட உண்டு. "ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" என்றார்.

இப்படி உண்மைகள் இருக்க சரணடைந்த பின் அன்று புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி 17.05.2009 அன்று வெளியிட்ட தன் முதல் அறிக்கையில் ".. நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. ……. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி சரணடைந்தனர். இப்படி எரிக் சொல்ஹேம் வழிகாட்டலின் கீழ் சரணடைந்தவர்கள் தான் கொல்லப்பட்டனர்.

இப்படி உண்மைகள் இருக்க இந்த இனவழிப்பு யுத்தத்தில் முன்கூட்டியே சரணடைந்திருந்தால், மனித இழப்பை தடுத்திருக்க முடியும் என்பது ஒரு பக்கம் தான் உண்மை தான். யுத்தத்தின் முன் பின் இந்த இனவாத அரசு மக்களை எப்படி நடத்துகின்றது என்பதைக் கொண்டு, இதை புரிந்து கொள்ள முடியும். ஏன் இந்த யுத்தத்தின் பின் சரணடைந்தவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பதை கொண்டு, இலங்கை அரச கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் எரிக் சொல்ஹேம் ஈராக், ஆப்கானிஸ்தானில் தங்கள் யுத்த நடவடிக்கையை நிறுத்தி, அங்குள்ள மக்களின் உயிரைப் பாதுகாக்கலாமே. இலங்கையில் கொல்லப்பட்ட மக்களை விட பல இலட்சம் மடங்கு மக்கள் அங்கு கொல்லப்பட்டு இருக்கின்றனர். கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதைப்பற்றி பேசலாமே.

இலங்கை அரசு பாசிச பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச மூலதனத்தை பாதுகாத்தபடி, மக்களை ஒடுக்க தொடர்ந்து இராணுவக் கட்டமைப்பை விரிவாக்கி வருகின்றது. இங்கு போராட்டங்கள் சரணடைவுடன் முடிவுக்கு வந்துவிடாது. "சர்வதேச சமூகம்" இதற்குத் தீர்வு கண்டுவிட முடியாது. மக்கள் தான், தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

இங்கு புலிகள் போன்ற வலதுசாரிய பாசிசக் குழுக்கள் அழிவுக்குரிய தங்கள் பாதையை அவர்களாகவே தெரிவு செய்தவர்கள். இதில் தப்பிப் பிழைக்க மாற்று வழிகள் இருந்தன. அதை புலிகளின் அரசியல் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் சரணடைவு என்பது, மாற்று வழியல்ல.

இருந்த போதும் உங்கள் வழியில் தான் அவர்கள் இறுதியில் சரணடைந்தார்கள். உங்கள் திட்டத்துக்கு அமைவாகத்தான் அனைத்தும் நடந்தேறியது. உங்கள் அனுசரணையுடன், உங்கள் ஏற்பாட்டில் தான் சரணடைவு கூட நடந்தேறியது. ஆனால் மக்கள் மட்டுமல்ல புலிகளும் வகைதொகையின்றி கொல்லப்பட்டனர். ஈராக், ஆப்கானிஸ்தானில் உங்கள் அனுசரணையுடன் என்ன நடக்கின்றதோ, அது தான் இலங்கையில் நடந்தது. நடக்கின்றது.

பி.இரயாகரன்

11.10.2012