இந்தப் பகிரங்க அழைப்பு என்பது, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுதல். பரஸ்பரம் எதிர்த்தரப்பு இனவாதத்தைக் காட்டி அரசியல் செய்வதற்கு முரணாக, சொந்த இனத்தின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டம். 1948 க்குப் பின், முதன்முதலாக இனவாதத்தை முறியடிக்கும் அறைகூவல் விடப்பட்டு இருக்கின்றது. பிரதான முரண்பாடு சார்ந்து புரட்சிகரமான அரசியல் வரலாற்றுக்கு, முதல் காலடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் இந்த முயற்சியுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த சவால்மிக்க பாதையில் இணைந்து கொண்டுள்ளோம். அரச இனவாதத்தை மட்டுமல்ல சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்தை முறியடிக்கும் இந்த சவால்மிக்க பணியில், அனைவரையும் ஒன்று திரளுமாறு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இதன் மூலம் பகிரங்க அழைப்பை விடுகின்றது.
இதுவரை கோட்பாட்டு ரீதியாக மட்டும் இருந்த இந்த அரசியல் பாதை, இன்று முதன் முதலாக நடைமுறையுடன் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது. இனவாதத்துக்கு எதிரான மக்கள் திரள் பாதைக்கு வித்திடப்பட்டு இருக்கின்றது. பெரும்பான்மை இனம் சார்ந்த அரசின் இனவாதம் மற்றும் மதவாதத்தை முறியடிப்பதன் மூலம் தான், சிறுபான்மை இனத்தின் இனவாதத்தையும் முறியடிக்கமுடியும். முதன் முதலாக இலங்கை மக்களை இந்தப் பாதைக்குள் அழைத்துச்செல்ல உறுதியேற்று இருக்கின்றோம்.
இந்த வகையில் பெரும்பான்மை இனம் சார்ந்து அரசின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டத்துக்கான அழைப்பை "சம உரிமை இயக்கம்" பிரகடனம் செய்து இருக்கின்றது. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த வரலாற்றுப் போக்கில் ஒரு அங்கமாக பயணிப்பதன் மூலம், சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்துக்கு பகிரங்க சவால் விட உள்ளோம். அனுபவங்களைக் கற்றுக்கொள்வதும், மேலும் எம்மை வளப்படுத்திக்கொண்டு, இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்பதும் என்பது சவால்மிக்க ஒரு வரலாற்று அரசியல் பணியாகும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சொந்த விடுதலையுடன் தொடர்புடைய இந்தப் பணி, இனவாதத்தையும் மதவாதத்தையும் முறியடிப்பதில் இருந்துதான் தொடங்குகின்றது. இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது, இனவாதத்துக்கு வெளியில் தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக என்ற இனவேறுபாடின்றி தமக்குள் ஒன்றிணைவதன் மூலம் தான் கண்டறிய முடியும். இனவாதத் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதன் மூலமோ, பிராந்திய வல்லரசுகள் தம் நலனுடன் மூக்கை நுழைப்பதாலோ, ஏகாதிபத்தியங்கள் உலக மேலாதிக்கக் கனவுடன் மிரட்டுவதாலோ, இனப்பிரச்னைக்கான தீர்வைக் காணமுடியாது.
இதன் பின் நின்று கனவு காண்பதைவிட்டு, மக்கள் மத்தியில் சொந்த இனவாதத்தை களைவதன் மூலம் நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் காண்பதை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக மக்கள் என அனைவரும், தத்தம் சொந்த இனத்தின் இனவாதத்தைக் களையும் போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்று இருக்கின்றனர்.
உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க, சொந்த நடைமுறை மூலம் மக்களுக்கு வழிகாட்டும் இந்தப் போராட்டத்தில், சமூகத்தில் அக்கறையுள்ள அனைவரையும் தோளோடு தோள் நின்று கரங்கோர்க்குமாறு அழைப்புவிடுகின்றோம்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
28.09.2012