எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப் பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.

இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காண்பதென்பது சாத்தியமற்றது என்று கூறுகின்ற இனவாதமும், இனவாத சிந்தனையும் தான் இன்று சமூகத்தில் புரையோடி நிற்கின்றது. இனவாதிக்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தும், பரீட்சிக்கப்படாத நடைமுறை இன்னமும் எம்முன் இருக்கின்றது.

யுத்தத்தின் பின் இனவொடுக்குமுறைக்கான தீர்வு என்பது, இன ஐக்கியத்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்ற எதார்த்தத்தை தாண்டி, மற்ற அனைத்தும் கற்பனையானதாகியுள்ளது. இனவாதிகள் தமக்குள் பேசித் தீர்க்கின்ற அல்லது ஏகாதிபத்திய நலன் சார்ந்த அழுத்தத்துக்குள் தீர்வுகாண்கின்ற வழிகள் அனைத்தும், இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட கானல் நீர் தான்.

இன ஐக்கியம் என்பது தான், நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு அரசியல் தீர்வுக்கான வழிமுறையாகும்.


எம்மை ஒடுக்குகின்றவனுக்கு எதிராக ஒருங்கிணைவது என்பது, ஒடுக்குகின்றவனின் இனத்துக்கு எதிராக அல்ல. மாறாக எம் மீதான, எம்மைச் சுற்றிய அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஐக்கியத்தை ஒற்றுமையையே நாம் கோரவேண்டும்.

ஒடுக்குகின்றவனுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் உண்மையாக இருக்க வேண்டும் என்றால், அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தையும் முன்வைக்கவேண்டும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியமும், ஒற்றுமையும் சாத்தியமானதே.

இந்தவகையில் முதன்மை முரண்பாடாக எமது தேசத்தில் இருக்கும் இனமுரண்பாட்டைக் களையும் வகையில், அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது மிக மிக முக்கியமானதும், சவாலானதுமான அரசியல் வேலையாகும். இந்த அரசியல் வேலையை இன்று முன்னிலை சோசலிசக் கட்சி, சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிப்பதன் மூலம் முன்னெடுக்கவுள்ளது.

நிறைவாக,

இந்த பாரிய மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேலையை செவ்வனே நிறைவேற்ற, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோளோடு தோள் நின்று உழைக்கும் என உறுதி கூறுவதுடன், முன்னிலை சோசலிச கட்சித் தோழர்களுக்கு வாழ்த்துகளை தோழமையுடன் பகிர்கின்றது

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

27.09.2012