புலி பாய்ந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் இருந்திருந்தால் இப்படி ஒரு செய்தி ஈழமுரசிலோ அல்லது உறுமலிலோ, இருமலிலோ வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனென்றால் அவர் தனிமனித பயங்கரவாத.சாகச விளையாட்டுக்களை எதித்தவர். மக்களை அணி திரட்டாமல் போராட்டங்கள் இல்லை என்பதில் உறுதியாக நின்றவர்.(இதன் காரணமாகவே ரோகண விஜயவீரா போன்றவர்கள் அவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு விலகினர்). இப்படிப்பட்ட மனிதர் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவர்களை, தம்மை தவிர்ந்த மற்றவரை எல்லாம் கொன்று குவித்தவர்களை எப்படி எதிர்க்காமல் இருந்திருப்பார். எதிர்ப்பவன், கேள்வி கேட்பவன் துரோகி. துரோகிகளிற்கு தலைவரின் தண்டனை மரணம். இக்கொலைகள் கட்டம் கட்டி சிறப்புசெய்திகளாக,அரசியல் ஆய்வுகளாக ஈழமுரசில் வெளிவரும். துரோகி ஒழிந்தான், இன்னும் கொஞ்சப்பேர் தான் அவங்களையும் போட்டுத் தள்ளினால் தமிழீழத்திற்கு நாங்கள் எல்லைக்கதியால் போட்டு விடுவோம் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூட்டிக் கழித்துப் பார்த்து சாத்திரம் சொல்லுவார்.
இப்படிப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர், ஈழமுரசின் ஆசிரியர், சண்முகதாசனை புலி கடித்திருந்தால் துரோகி கொல்லப்பட்டார் என்று செய்தி எழுதியிருக்கக் கூடிய ஒருவர், தோழர் சண்முகதாசனைப் பற்றி மலரும் நினைவுகள் எழுதுகிறார். தோழமை,மார்க்கசியம்,இடதுசாரிகள் என்றெல்லாம் எழுத உங்களிற்கு கை கூசவில்லையா? உங்கள் பேனாக்களில் இருந்து வருவது கொல்லப்பட்டவர்களினதும்,புலி பலி கொடுத்த மக்களினதும் இரத்தம். இலங்கை தமிழ்ச்சமுதாயத்தின் இறுகிப்போன சாதிய அமைப்புக்கு எதிராகப் போராடியவனை, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவனை, மாவோ சே துங்கின் தோழனை பற்றி இவர்களைப் போன்றவர்கள் எழுதுவது மகிந்து அன்ட் கொம்பனி மிருகபலிக்கு எதிராக குரல் கொடுப்பதைப் போன்றது. அந்த பன்னாடைகள் புத்ததத்துவங்களை அவமதிப்பது போல இவர் சண்முகதாசனின் நினைவுகளை அவமதிக்கிறார்.
நீ ஒரு நளவன், குலத்தொழிலை போய் செய், நீயெல்லாம் எழுதுவதா என்று ஒருவர் தனக்கு பின்னூட்டம் விட்டாராம். அது மாதிரி தான் இருக்கிறது நீர் ஒரு புலிப்பாசிஸ்ட்டு எப்படி தோழரைப் பற்றி எழுதலாம் என்று கேட்பதும் என்று இரண்டையும் சமப்படுத்துகிறார். ஒரு சாதிவெறியனின் பின்னூட்டமும் உங்களது கொலை அரசியலை,மக்கள்விரோத போக்குகளை கேள்வி கேட்பதும் ஒன்றா?. இது கருணாநிதி, பிரேமதாசா போன்றவர்கள் தங்களது ஊழல்களை கேள்வி கேட்பவர்களை பார்த்து சூத்திரன் என்பதால் தான் என்னை அவமதிக்கிறார்கள் என்று பாடும் தேய்ந்து போன பாட்டு. எதோ கேட்க வேண்டும் என்ற கடமைக்காக, தங்களின் நலன்களின் அடிப்படையில் இலங்கையின் இனப்படுகொலைகள் பற்றி கேட்ட மேற்குநாடுகளை, காலனித்துவ நினைப்பில் இருக்கிறார்கள், நாங்கள் அடிமைகள் இல்லை, யாருக்கும் மறுமொழி சொல்ல மாட்டோம் என்று காலனிய எதிர்ப்பு வேசம் கட்டி மகிந்துவும், அவனது கோமாளி மந்திரிகளும் ஆடிய அதே கூத்து.
சாதியைப் பற்றிக் கதைக்கும் இவர், தனது ஈழமுரசு பத்திரிகையில் சாதியத்தை கட்டிக் காக்கும் இந்துக்கோவில்களின் விளம்பரங்களையும்,ஆசாமிகளின் அருள் கொடுக்கும் அறிவிப்புகளையும் தமிழ்மக்களிற்கு அள்ளி வழங்கியவர். ஈழமுரசின் ஆசிரியராக இருந்து கொலை செய்யப்பட்ட கஜேந்திரன் வெளியிட்ட ஈழமுரசு இதழ்களில் புலிகளின் பாசிச அரசியலும்,சகல பிற்போக்குத்தனங்களும் இருந்த போதிலும் இப்படியான விளம்பரங்கள் வந்ததில்லை.சாதியத்தினால் பாதிக்கப்பட்டேன் என்று அனுதாபம் தேடும் இவரின் காலத்தில் தான் இதை மட்டும் விட்டு வைப்பானேன் என்று இந்த குப்பைகளும் வெளிவரத்தொடங்கின. பணத்திற்காக இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டதன் மூலம் புலம்பெயர்சமுதாயத்திலும் இந்துமதபிற்போக்குகளை பரப்புவதில் பங்கு வகித்தவர் இன்றைக்கு சாதிக்கொடுமைகளைப் பற்றி கதை சொல்கிறார்.
பெரியப்பா வந்திருக்காக,சின்னமாமா வந்திருக்காக,அத்தை வந்திருக்காக, மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக என்பது போல; நான் மட்டுமா போனேன், புதுவை ரத்தினதுரை போனார், பாலகுமார் போனார் என்று சண்முகதானின் கட்சியில் இருந்த மற்றவர்களும் போனார்கள் என்கிறார். நித்தியின் விளையாட்டுக்களைப் பற்றிக் கேட்டால் நான் மட்டுமா அப்படி மற்றச் சாமியார்கள் எல்லாம் யோக்கியமா என்று மற்றச் சாமியார்களையும் மண்டை காயவைத்தது போல மற்றவர்களை பார்த்து கையை காட்டி விடுகிறார். இலங்கையில், புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் இருந்த இடதுசாரிகள்,முற்போக்குவாதிகள்,சமுதாய தொண்டர்களில் சிலர் புலிகள் கொடுத்த நெருக்கடிகள்,மிரட்டல்கள் காரணமாகவே அவர்களுடன் இணைந்தனர். ஈரோஸ் இயக்கத்தினரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தம்முடன் சேர்த்து விட்டு, ஈரோசினர் தமது தலைமையை ஏற்று சேர்ந்ததாக விட்ட கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. வெளிநாடுகளில் வாழ்ந்த இவர் போன்றவர்கள் சேர்ந்ததை நாட்டில் வாழ்ந்தவர்களுடன் ஒப்பிடுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.
சண்முகதாசனைப் பற்றி ஒருவர் எழுதச் சொன்னதாலேயே தான் எழுதியதாக ஒரு விளக்கம் கொடுக்கிறார்.ஒரு காலத்தில் மகிந்து காணாமல் போனவர்களிற்காகவும்,அரசியல் கைதிகளிற்காகவும் குரல் கொடுத்தது. அந்த தோழர் மகிந்துவிடமும் ஒரு கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்கலாம். மகிந்துவின் போராட்ட அனுபவங்களை படிப்பதன் மூலம் லலித், குகன், மற்றும் ஆயிரம்,ஆயிரம் அரசியல் கைதிகள்,காணாமல் போனவர்களின் விடுதலைக்கு ஒரு வழியை நாம் கண்டு கொள்ளலாம்.