10282021வி
Last updateச, 09 அக் 2021 9am

நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள் ஒரு முன்னுதாரணமே

கருமையம் அமைப்பு சார்பாக அனைவருக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்கள்

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறோம். கருமையம் ஒரு நாடகம் சார்ந்த அமைப்பாக வெளியில் தெரிந்த போதிலும் உண்மையில் நாம் அரசியல் சார்ந்த கலை இலக்கியம் அமைப்பு, சமுக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்குரலாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எமக்கு ஏற்கனவே நாடகத்துறையுடன் இருந்த அனுபவம் காரணமாக நாடகத்துறைக்கூடக சற்றுகூடுதலாக செயற்பட முனைந்தமை தான் இந்தப் பெயர் வருவதற்குக் காரணம்.

இன்று இதற்கான அதாவது இந்த கூட்டத்திற்கான அவசியம் என்ன?

மீண்டும் செயற்பட வேண்டிய தேவை என்ன? என்ற கேள்விகள் பலரிடத்திலும் ஏற்படலாம்.

ஆயிரம் புக்கள் மலரட்டும் என்று மாவோ கூறினார்

மாறும் என்பதில் மாற்றம் இல்லை என்றார் சமதர்மத்தின் தந்தை கார்ல் மாக்ஸ்

ஆனால் இலங்கை தமிழர் அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் மாத்திரம் “ புலி” இல்லை “அரசாங்கம் “ என்கின்ற இருமையப்போக்குகள்தான் இன்றைய அரசியலில் இருக்கமுடியும் என்பதில் இறுக்கமாக இருக்கிறார்கள்.

புலிகளின் தவறுகளை விமர்சிக்கும்பொழுது “நீ இலங்கை அரசின் ஆள்” என்று முத்திரை குத்துகிறாகள். இலங்கை அரசாங்கத்தை விமர்சித்தால் “நீ புலியிடம் காசு வாங்கிவிட்டாய்” என்கிறார்கள்.

கருமையம் மீண்டும் செயற்பட வேண்டும் என்பதற்கு பிரதான காரணம் இதுதான். மக்கள் சார்ந்து முற்போக்கான சிந்தனையுடன் அரசியல்ரீதியாக தவறை தவறு என்று சுட்டிக்காட்டி இந்த புலி - அரசு என்ற இருமையப்போக்குகளை தவிர்த்து ஒடுக்குமுறைகளிற்கு எதிராக கருமையம் செயற்படவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது..

ஓன்றை எமது அறிவியல் புரிதல் முறையில் ஏற்றுகொள்ள வேண்டும். இலங்கையில் அரசு சார்பாக செயற்பட்டவர்கள் எல்லோருமே புலிகளால் அப்படி செயற்படவேண்டிய கட்டாயத்தை நோக்கி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அதே போன்று தமிழ் தேசியம் என்ற பொய்மைக்குள் அப்பாவிமக்கள் அமிழ்ந்து விடுவதற்கு இலங்கையில் இனங்களிடையேயான பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வானது பின்தள்ளப்படுவதும் முக்கியமான காரணமாகும்.

இதைவிடவும் முக்கியமான ஒரு சுயநலப்போக்கொன்றையும் இனம் காணக்கூடியதாகவுள்ளது.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற புலிகளின் அரசியல் பொறுப்பாளர்கள் தமக்கு தாமே எதிரிகளை உருவாக்கினார்கள். அதனால் தாமே அழிந்தார்கள். புலிகளின் அரசியலை மூர்க்கமாக விமர்சித்த பல கலைஞர்கள் கவிஞர்கள் இன்னமும் பல புலம்பெயர் பிரமுகர்கள் பின்னாளில் புலிகள் அழிக்கப்படமுடியாத சக்தியாக வளந்துவிட்டதாக எண்ணி “எதற்கு தேவையில்லாத வேலை புலிகளின் அரசாட்சியில் நாங்கள் பிழைக்கமுடியாதே” என்று எண்ணி தடாலென ஒரு குத்துக்கரணம் அடித்து புலிகளின் தேசியத்தை நியாயப்படுத்த வெளிக்கிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுற்று மூன்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது .

ரஜினி,கோவிந்தன், செல்வி இவர்களின் படுகொலை புலிகளால் நடத்தப்பட்டு இருபத்தைந்து வருடங்களாகிவிட்டன.

இப்பொழுது என்ன தேவை வந்துவிட்டது ?

இது ஒரு கேள்விதான்.

இதற்கு விடையாக நாம் கூறப்போவது ஒன்றுதான். ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்த கிட்லரால் முழு உலகமும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான யூதர்களை கொலை செய்த கிட்லரை பற்றிய விவரணப்படங்கள் ஆவணங்கள் நாடகங்கள் திரைப்படங்கள் இப்பொழுதும் ஏன் வெளியிடுகிறார்கள்?

அதாவது இனிமேல் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் சக்தி ஒன்று உருவாகவே கூடாது என்பததான் எமது நோக்கம்.

ஆறுமுகநாவலர் தொடங்கி சேர் பொன் இராமநாதன், செல்வநாயகம,; அமிர்தலிங்கம் கடைசியாக பிரபாகரன் தொடர்ச்சியாக புலம் பெயர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக நாடுகடந்த தமிழீழம் ஆகியோர் மக்களுக்கு தெரிவித்த கருத்து என்ன?

யாழ்ப்பாணிய மேல்தட்டுவர்க்கத்தின் அபிலாசைகள்தான் ஆண்ட பரம்பரைக்கான தமிழ்தேசியம் என்பதை மட்டுமே!

இந்த யாழ்ப்பாணிய மேல்தட்டு வர்க்கம் எக்காலத்திலும் மலையக மக்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, ஜீ ஜீ பொன்னம்பலம் போன்றோர் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க சிங்கள இனவாத சக்திகளுடன் சேர்ந்து சதி செய்தார்கள்.

இந்த யாழ்ப்பாணிய மேல்தட்டுவர்க்கம்; முஸ்லிம் மக்களின் வாழ்வியலை இருப்பை மறுத்தது மட்டுமல்ல காத்தான்குடி பள்ளிவாசலில் கொத்து கொத்தாக கொலையும் செய்தார்கள்.

இந்த யாழ்ப்பாணிய மேல்தட்டுவர்க்கம் சார்ந்தவர்கள்; சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் சங்கங்களை வன்முறையாக அழித்தார்கள்.

இதையும் விட இடதுசாரிகள் ஜனநாயகவாதிகள் தொழிற்சங்கவாதிகள் மாற்றுக்கருத்தாளர்கள் முற்போக்காளர்கள் கவிஞர்கள் பெண்ணியவாதிகள் எல்லோரையும் கொன்றொழித்தார்கள்.

இந்த யாழ்ப்பாணிய மேல்தட்டு வர்க்கமானது உலகிலுள்ள பல நாடுகளிலும் இருக்கும் பழமைவாதக்கட்சிகளின் அரசியலின் தீவிரத்தன்மைகொண்டது.

இந்தியாவில் நிலவுகின்ற பார்ப்பனீயத்திற்கு ஒப்பான கொடுமையானது.

இந்த யாழ்ப்பாணிய மேல்தட்டு வர்க்கமானது என்ன என்னவற்றை நடாத்தி முடித்தது?

ஆறுமுகநாவலர் போன்றோரால் ஆரம்பகாலங்களில் கிறிஸ்தவ மக்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்டி மக்களை பிளவுபடுத்தியது.

சிங்கள தமிழ் மக்களிடையே ஒற்றுமைக்கு ஆதரவாக இருந்த இடதுசாரித்துவ சிந்தனை போன்றவற்றிக்கு ஆப்புவைத்தது.

தமிழ் இடதுசாரிகளின் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை கேவலப்படுத்தியதுடன் தமிழ் தேசியம் என்ற பொய்மையை கொண்டு சராசரி மக்களை உணர்ச்சிமயமாக்கி வர்க்க உணர்வை பின்தள்ள வைத்தது.

மலைய மக்களின் வாக்குரிமையை பறிக்க சிங்கள இனவாதத்துடன் கைகோர்த்து மலையக மக்களை நிர்க்கதியாக்கியது.

முஸ்லிம் மக்களை தமிழ் பேசும் மக்களிடையே இரண்டாம் தரமாக்கி அவர்களின் அரசியல் முக்கியத்துவத்தை நிராகரித்தமை.

வடகிழக்கு என்ற பாரம்பரிய தமிழ்பேசும் பிரதேசத்தை வடக்கு – கிழக்கு என்று நிரந்தரப் பிரிவாக்கியது.

சர்வதேச நிலமைகளை கணக்கிலெடுக்காமல் நடத்திய போராட்டங்கள் மூலம் மக்களை எருமைகள் போல மேய்த்து சென்று முள்ளிவாய்க்காலில் பலியிட்டமை..

இங்கே மேலே குறிப்பிட்ட பிற்போக்கு பழமைவாத சிந்தனைக்கும் அதற்கான செயற்பாடுகளுக்கும் எதிரானவர்கள் யாழ் மேல்தட்டு வர்க்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இங்கே நாங்கள் நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள்

ஒரு முன்னுதாரணமே. இப்படி பல ஆயிரம்.

இந்த மரணங்களை இல்லை படுகொலைகளை நினைவு கூர்தல் இவற்றின் அடிப்படைகளை ஆய்வு செய்தால் எமக்கு கிடைக்கும் விடை என்ன?

தவறான அரசியல் போக்கினை சரியான நிலைப்பாட்டின் பால் நின்று நேர்மையான முறையில் விமர்சித்தமையே காரணம்.

எமது தேசத்தில் நடத்தப்பட வேண.;டிய சரியானதும் நேர்மையானதுமான அரசியல் சமூக தேவைகளையொட்டிய ஒரு செயற்பாட்டிற்காக உழைப்பதும் இதனையொட்டிய அரசியல் விவாதத்தை ஆரம்பிப்பதுமே இவர்களுக்கு நாம் செய்யவேண்ய உண்மையான அஞ்சலி

இப்படியாக நடந்த படுகொலைகளின் பின்னணியைக் கூர்ந்து பார்த்தால் ஒன்று புரியவரும். எங்கே ஒரு கேள்விக்கு பதில் இல்லையோ அங்கே வன்முறை ஆரம்பிக்கிறது. பின்னர் இதுவே வளர்சியடைந்து படுகொலைகளில் முடிவடைகிறது.