எரிக் ஹாரிஸ் - டைலான் லெபோல்ட்
படுகொலை நடத்திய எரிக் ஹாரிஸ் (18வயது) தைலான் லெபோல்டு(17வயது) இருவரும் பங்களா, ஆளுக்கொரு கார் என வசதியாக வாழும் மேட்டுக்கடி மாணவர்கள். ஏனைய அமெரிக்க மாணவனைப் போல தினசரி இன்டர்நெட், திரைப் படங்கள், வீடியோ விளையாட்டு, ராக் இசை இவற்றிலேயே பல மணி நேரம் மூழ்கிக் கிடந்தவர்கள்.
இவர்கள் படிக்கும் கொலம்பைன் பள்ளியில் மாணவர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவின் பெயர் டிரன்ஞ்ச் கோட் மாஃபியா (கோட் அணிந்த குண்டர் படை). வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் காலப்போக்கில் வெள்ளையின வெறியுடன் புதிய நாசிசக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. எரிக்கும், தைலானும் அதில் முன்னணி வகித்தனர்*.
வகுப்பு நடவடிக்கைகளிலும் அவை வெளிப்பட்டன. தாம் விரும்பாத மாணவர்களுடன் சில்லறைத் தகறாறுகளில் ஈடுபட்டனர். ஆங்கில மனப்பாடம், புதுமைத்திறன் வகுப்புகளில் சாத்தானின் நரகம் பற்றிய கவிதையைப் பாடினர். வீடியோ வகுப்பில் தமக்குப் பிடிக்காத விளையாட்டு மாணவர்களைக் கொல்வது போல் படம் பிடித்துச் சமர்ப்பித்தனர். இன்டர் நெட்டில் வெப்சைட் ஆரம்பித்து தமது கொள்கைகளை அறிவித்தனர். இணையத்திலேயே குண்டுகள் தயாரிப்பதையும், கள்ளத் துப்பாக்கிச் சந்தையையும் அறிந்து கொண்டனர்.
பல துப்பாக்கிகள் வாங்கினர். கார் நிறுத்தும அறையில் ‘பைப் குண்டுகள்’ தயாரித்தனர். பள்ளியைத் தகர்க்கும் திட்டத்தைக் கணிப்பொறி உதவியுடன் வடிவமைத்தனர். தம்மை தீவிரக் கலகக்காரர்களாகவும், அடிமைப் படுத்தும் சமூகத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமெனவும், அவமதிக்கும் எவரையும் அழிக்க வேண்டுமெனவும், மொத்த உலகின் (பள்ளியின்) வாழ்வும், சாவும் தங்கள் கையிலிருப்பதாகவும் அவர்கள் கருதிக் கொண்டனர்; உறுதி பூண்டனர்.
நெடுங்காலம் இதைச் சுற்றியே தீவிரமாக இயங்கிய அவர்களது சிந்தனையும் செயலும் ஏப்ரல் 20க்காகக் காத்திருந்தன. அந்த நாள் ஹிட்லரின் பிறந்த நாள்.
இருவரும் கருப்பு பனியன், முகமூடியுடன் கருப்புக்காரில் ஆயுதங்களுடன் புறப்பட்டனர். பள்ளியில் நுழைந்து மாணவர்களை விரட்டி, கேலி செய்து, கேள்வி கேட்டு நெற்றிப் பொட்டில் சுட்டனர். இறந்தவர்களில் வெள்ளையின மாணவர்கள்தான் அதிகம் என்றாலும், அவர்கள் கருப்பர்களைத் தேடினர். ‘ஏசையா ஷீல்ஸ்’ என்ற மாணவன் மட்டும் சிக்கினான். இம்மாணவனைச் சுட்டுக் கொன்று, ”ஒரு நீக்ரோவின் மூளை இப்படி சிதறிக் கிடப்பதைப் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா”, என்று குதூகலித்துக் கொண்டனர்.
முழுப் பள்ளியையே தகர்க்க வந்தவர்கள் அது இயலாதென்றதும், கையில் கிடைத்த 13 பேரை சுட்டுவிட்டு இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு அமெரிக்கச் சிப்பாய்கூடச் சாகாமல் ஈராக்கையும் செர்பியாவையும் உயர் தொழில்நுட்ப யுத்தத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே தரைமட்டமாக்கிவிட்டு, தங்களது இராணுவ நடவடிக்கையைப் பற்றி அறிவுபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அறிஞர்கள், சொந்த வீட்டில் இழவு விழுந்தவுடன் உணர்ச்சி வசப்பட்டுக் கதறுகிறார்கள்.
Turn off the lights
இத்தேசிய சோகத்தை தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்ட கிளிண்டன், ”பிரச்சினைகளைப் பேசித்தான் தீர்க்க வேண்டுமே ஒழிய துப்பாக்கியினால் அல்ல என்படை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
உண்மைதான். ஆனால் உலகப் பிரச்சினைகளுக்குப் பீரங்கியால் தீர்வுகாணும் கிளிண்டன், ”துப்பாக்கியால் தீர்வு காணக் கூடாது” என்ற அன்பு மார்க்கத்தைத் தன் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுக் கொடுக்க முடியும்?
அமெரிக்க வன்முறைப் பண்பாட்டை தீர்ப்பதற்கான அவர்களது தீர்வுகள் எல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுகின்றன என்பதைத்தான் அச்சமூக யதார்த்தம் சுட்டுகின்ற உண்மை.
80-களுக்கு முன் தமது அறிவுத்தேடலை நூலகத்தில் நடத்திய அமெரிக்க மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் சுற்றுகின்றனர். அப்படிச் சுற்றும் போதுதான் எரிக்கும், தைலானும் தமது ஆயுதச் சேகரிப்பை நெட்டின் உதவியால் செய்து முடித்தனர். கணினியிலும், நெட்டிலும் மூழ்கிக் கிடப்பது அங்கே ஒரு வாழ்க்கை முறையாக மாறிவிட்டது.
இன்டர்நெட் -20-ஆம் நூற்றாண்டின் ஒரு அறிவியல் புரட்சிதான். எல்லை கடந்த பண்பாட்டு உரையாடல்கள், அறிவுப் பரிமாற்றம், தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி என்பதெல்லாம் சரி. அதன் பயனையும், அளவுகோலையும் தீர்மானிப்பது யார்? அது வீட்டு அறைக்குள் உலகின் அழகையும், அறிவையும் மட்டும் கொண்டு வரவில்லை. அதன் அசிங்கத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே கொண்டு வருகிறது. உலகின் மேலாதிக்க சக்கிகள்தான் இன்டர்நெட்டையும் கட்டுப்படுத்துகின்றன. அதனால்தான் அது மொத்த உலக- மக்களின் வாழ்க்கையையும், நலனையும் பிரதிபலிப்பதில்லை.
தனிநபர் வாதம் அழுந்திப்போன மேற்கத்திய சமூகத்தை சிந்தனை, செயல் இரண்டையும் தீர்மானிக்கின்ற கணினிப் பண்பாடு, தனிநபர் வெறியாக மாற்றிவிட்டது. அதன்படி ‘நெட்’ மூலம் சீராட்டி வளர்க்கப்படும் அமெரிக்கக் குழந்தைகள், பல வகைகளில் வெம்பிப் போகின்றனர். நிறவெறி, பாலியல் வக்கிரம், தீவிர மூடநம்பிக்கை, திருடுவது- குண்டு தயாரிப்பது போன்றவற்றை யாருமறியாமல் தனியாகத் தெரிந்து கொள்கின்றனர். அதன் போக்கில் சரி, தவறு பேதம் மறைந்து, சமூக நோக்கம் குறைந்தும் போகிறது.
அதனால் குழந்தைகள் பார்க்கக் கூடாத விசயங்களைத் தடுக்க, சென்சார், ரோந்து, தடுப்பான் போன்ற முறைகளை கணினி நிறுவனங்கள் பெற்றோருக்கு உதவியாக அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு சராசரி கணினி அறிவு பெற்ற சிறுவன் இத்தகைய தடுப்பான்களைத் தகர்க்க முடியும் என்பது ஒருபுறமிருக்கட்டும். எதைப் பார்க்கலாம், கூடாது என்ற கொள்கையை யார் முடிவு செய்வது?
கம்யூனிச வெறுப்பில், வேண்டுமானால் பெற்றோர்- கணினி நிறுவனங்கள் ஒன்றுபடலாம். பாலியல் வெறி – ஒழுக்கம், மதம் – அறிவியல், பகுத்தறிவு – மூடநம்பிக்கை, தனிநபர் – சமூக உறவு, இவற்றில் அவர்கள் கொள்கை என்ன? வாழ்க்கையை சந்தை தீர்மானிக்கும்போது, அதன் மதிப்பீடுகளை பைபிளா தீர்மானிக்க முடியும்?
கணினியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் போலவே, வன்முறை வீடியோ விளையாட்டைத் தடை செய்வதிலும் உள்ளது. சதைகளைப் பிய்த்து, எலும்புகளை நொறுக்கி உன்னால் எத்தனை பேரைக் கொல்ல முடியும் என்று சவால்விடும் ‘டூம்’ (பேரழிவு) என்ற வீடியோ விளையாட்டு அங்கே இப்போது பிரபலமாகி வருகிறது. ,எரிக்கும், தைலானும் இதைத்தான் விரும்பி விளையாடினர்கள்.
அமெரிக்காவில் மரபு சார் விளையாட்டுக்களை விட, முழு சமூகமும் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டே காலங்கழிக்கிறது. நோக்கமின்றி விளையாடும் ஒருநபர் காலப்போக்கில் இயக்குநர் என்பதிலிருந்து வீடியோவால் இயக்கப்படுபவராக மாற்றப்படுகிறார். இதைத்தான் போதை என்கிறோம். தடைகளையெல்லாம் தகர்த்து, எதிரிகளைச் சின்னா பின்னமாக்கும் வித்தையை வீடியோ விளையாட்டில் கற்றுக் கொண்ட சிறுவன் தன்னை அதிஉயர் மனிதனாகக் கருதும் போலி மயக்க உணர்வில் ஆட்கொள்ளப்படுகிறான். அது, அவனது தினசரி வாழ்வின் சமநிலையைக் குலைக்கிறது. சிறு அளவு மனநிலைப் பிறழ்வும் ஏற்படுகிறது.
வன்முறை வீடியோவைத் தடை செய்யப் போராடும் டேவிட் கிராஸ்மென் கூறுகிறார், ”வன்முறை வீடியோ விளையாட்டுக்கள், கொலைக்கு எதிராக ஒரு மனிதனிடம் இயல்பாய் இருக்கும் மனித மதிப்பீடுகளை நொறுக்குகிறது. கொல்வதை ஒரு இன்பியல் அனுபவமாகவும் கற்றுக் கொடுக்கிறது.”
எனவே வீடியோ விளையாட்டைத் தடை செய்ய முடியுமா? குறைந்த பட்சம் அதிலுள்ள வன்முறையையாவது தணிக்கை செய்ய முடியுமா?
”திரைப்படத்தைப் போல வீடியோ விளையாட்டு ஒரு கலை உணர்வின் வெளிப்பாடு. அதன்படி அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் (First Amendment) வழங்கியிருக்கும் பேச்சு – கருத்துரிமை சுதந்திரத்தின் கீழ் அதைத் தடை செய்ய முடியாது. மேலும் வன்முறை அம்சங்களை வைத்திருக்கும் எதையும் தடை செய்ய வேண்டுமென்றால் முதலில் பைபிளைத் தடை செய்ய வேண்டுமே?”
நெற்றியடியாக அடிக்கிறார் லோவன்ஸடீன். இந்தக் ‘கருத்துரிமைப் போராளி’ யார் தெரியுமா? அமெரிக்க டிஜிட்டல் மென்பொருள் சங்கத்தின் தலைவர்.
எனவே வீடியோ விளையாட்டைத் தடுக்க முடியாது. துப்பாக்கியைத் தடை செய்ய முடியுமா என்று பார்ப்போம்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் தேவையில்லை என்றாலும் வசதி படைத்தோரே அதை வாங்கிப் பராமரிக்க முடியும். இருப்பினும் அமெரிக்காவில் பல ஆயிரம் துப்பாக்கிகள் வழக்கத்தில் உள்ளன. கொலம்பைன் படுகொலையை வைத்து துப்பாக்கியை தடை செய்வது தவறு எனக்கூறும் ஆயுத அதிபர்கள், ஒரு தனி நபர் தன்னைப் பாதுகாக்கும் உரிமையை மறுப்பது சட்டவிரோதம் என்பதையும் நினைவுபடுத்துகின்றனர்.
ஆனால் அமெரிக்காவிலிருக்கும் துப்பாக்கிகள் தனிநபரைப் பாதுகாக்கவோ, திருடர்கள், ரவுடிகளைச் சுடவோ அதிகம் பயன்படவில்லை. மாறாக தற்கொலைக்கும், உறவினர் நண்பர்களைச் சுடுவதற்கும்தான் பயன்படுகிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புக்கள் நிருபணமாக்கியிருக்கின்றன.
ஆயுத அதிபர்களின் நன்கொடையில் வாழ்வு பெறும் அரசியல் தலைவர்கள், துப்பாக்கி மற்றும் வன்முறை பிரச்சினைகள் பற்றி தேசிய விவாதம் நடத்தலாமே என்று வாஜ்பாயி பாணியில் நழுவுகின்றனர். துப்பாக்கிக்கு ஆதரவாக ‘தேசிய துப்பாக்கி சங்கம்’ (NRA) பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. ‘துப்பாக்கி வன்முறை அதிகமானால், சிறைகளைப் பெரிதாகக் கட்டலாமே’! என்பது இவர்களின் வாதங்களில் ஒன்று.
சில மாணவர்களின் வன்முறையில் பலியாகும் சில மனித உயிர்களைக் காட்டிலும் பல பில்லியன் கோடி டாலர் புரளும் பல்வேறு ஆயுத- தளவாடத் தொழில்கள் முக்கியமில்லையா?
சமூகத்தின் வன்முறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் இவ்வளவு சிக்கல்கள்; குறிப்பிட்ட கொலம்பைன் படுகொலைக்காவது சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் உண்டா? முதல் பிரச்சினை, குற்றவாளிகள் இருவரும் இறந்து விட்டார்கள். தனது மகன்களின் தவறான நடத்தையைப் பார்க்கத் தவறிய பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் போட முடியுமா? அது சரியல்ல. இம்மாணவர்களின் மிரட்டலைப் பற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசு மீது முடியுமா? அதிலும் பிரச்சினை. அம்மாணவர்களுக்கு வெப்சைட் ஒதுக்கிய ‘அமெரிக்கா ஆன்லைன்’ நிறுவனத்தின் மீது முடியுமா? நிச்சயம் முடியாது. கள்ளச் சந்தையில் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தரகர்களையாவது கைது செய்யலாமே? அங்கும் ஒரு சிக்கல். கொலம்பைன் பள்ளி இருக்கும் கொலராடோ மாநிலத்தில் 18 வயதடைந்த நபர் துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் தேவையில்லை. எரிக்கின் வயது 18. இங்கும் வழிகள் அடைபட்டுவிட்டன. இறுதியில் படுகாயமடைந்த சில மாணவர்களுக்கு நிவாரண நிதியாவது கிடைக்குமா என்று சட்ட வல்லுநரகள் மண்டையைக் குடைகின்றனர்.
இன்டர் நெட், வீடியோ, திரைப்படம், ராக் இசை, துப்பாக்கி- இவற்றிலிருக்கும் வன்முறை அம்சங்கள்தான் ஒரு அமெரிக்கச் சிறுவனின் கிரிமினல் நடவடிக்கைக்குக் காரணமா? ஆம், பெற்றோரின் அரவணைப்பு, பள்ளிகளின் வழிகாட்டல், மதத்தின் ஒழுக்கம், சமூக நிறுவனங்களின் அங்கீகாரம் போன்றவை முறையாக இருந்தால் வன்முறைப் பண்பாட்டை வேரறுக்க முடியும் என்பது அமெரிக்க அறிவாளிகளின் கருத்து. துளி அளவு கூட முடியாது என்பது என்பது நமது கருத்து. ஏன், எப்படி?
ஒரு மனிதனிடம் சகமனிதனைக கொல்லும் வெறி ஏற்படுவதற்கு உளவியலை விட சமூகவியல் காரணங்களே அடிப்படையாகும். எனினும் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் மனச் சமநிலைப் பிறழ்வு விசேடமான உளவியல் காரணங்களையும் கொண்டிருக்கும்.
அமெரிக்கா மற்றும் மேற்குலகின் வன்முறைகளில் முக்கியமானது, அந்தச் சமூகங்களின் இயங்கு தன்மையே வன்முறையின் வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான். பிறக்கும்போதே ஒரு குழந்தையின் மூளை வன்முறைப் பதிவுகளோடு தோன்றுவதில்லை. சுமார் 15 வயதுவரை, அதன் பதிவு நரம்புகள் சுற்றுப்புறச் சமூக வாழ்வின் அறிவை வேகமாகவும், துடிப்போடும் அறிந்து கொண்டு பதிவு செய்கின்றன. எதை, எப்படி, எங்கிருந்து கற்கிறது என்பதில்தான் வன்முறையின் கருவும் உருவாக முடியும்.
வன்முறை எண்ணம் தோன்றுவதற்கான மனவெறுமை, தனிமை விருப்பம், தன்னிரக்கம், தோல்வி மனப்பான்மை, பொறாமை, வஞ்சகம், பாலியல் வெறி, நிறவெறி போன்ற பண்புகள் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் தவிர்க்க முடியதது. அல்லது சந்தையை அச்சாணியாகக் கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவச் சமூகம் இப்படித்தான் இயங்க முடியும். வேறு வழியில்லை.
கம்யூனிச நாடுகளில் ஒரு தனிமனிதனின் திறமைகளை நசுக்கி, சுதந்திரம் மறுத்து விலங்காக நடத்துகிறார்கள் என்பது மார்க்சிய எதிர்ப்பாளர்களின் முக்கிய அவதூறுகளில் ஒன்று. ஆனால் இத்தகைய கொலைகாரர்களோ இதே குற்றச்சாட்டை அமெரிக்க சமூகத்தின் மீது வைக்கிறார்கள். தாங்கள் கொலைகாரர்களாக மாறக் காரணமே இதுதான் என்கிறார்கள். மிசிசிபியைச் சேர்ந்த 16 வயது வுட்ஹாம் (சொந்தத் தாயையும், சக மாணவர்கள் மூவரையும் கொன்றவன்) கூறும் வாக்குமூலத்தைப் பாருங்கள். ”நான் ஒரு பைத்தியமல்ல…. என்னைச் சோதிக்கும் இவ்வுலகை வெறுக்கிறேன்…. சமூகம் எங்களைத் தள்ளினால் நாங்களும் திருப்பித் தள்ளுவோம் என்பதை உணர்த்தவே இக்கொலைகளைச் செய்தேன்…. இது உங்கள் கவனத்தை ஈர்த்து, உதவி கோரி கெஞ்சுவதற்கு அல்ல. இது, தவிர்க்க முடியாத ஒரு வன்முறைப் போராட்டத்தின் அலறல். உங்கள் கண்களை என்னால் திறக்க முடியவில்லை என்றால் வன்முறை தவிர்த்த வழிகளில் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அறிவுப்பூர்மாகவும் அதைக் காண்பிக்க முடியவில்லை என்றால், பிறகு ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலம் அதைச் செய்து முடிப்பேன்.”
முதலாளித்துவ நாடுகளில் ஒரு தனிநபர் சமூகத்துடன் எவ்வளவு தீவிரமாக முரண்பட முடியும் என்பதற்கு இந்தக் கொலைகார மாணவனின் ‘கவிதை’ வரிகளே சான்று. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கிடையே சந்தைப் போராகவும், முதலாளித்துவ நாடுகளிடையே ஆக்கிரமிப்புப் போராகவும் வெளிப்படும் முரண்பாடு, தனிநபர்களுக்கிடையிலான உறவுகளையும் சீர் குலைக்கிறது.
ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் தன் சமூகத்திடம் கற்கும் முக்கிய நீதி ”வாழ்க்கையில் வேகமாய் ஓடு, இடையூறுகளை இரக்கமின்றி தாண்டு, வெற்றி பெற்றால் பணமும் ஆடம்பரமும் கொண்ட அமெரிக்க வாழ்க்கை நிச்சயம்; தோல்வியுற்றால் எதுவுமில்லை”- என்பதுதான்.
அதனால்தான் உதட்டிலே சிரிப்பும் உள்ளத்திலே வெறுப்பும், கைகுலுக்கலில் நட்பும் கால்வாருவதில் பகையும், தோற்றத்தில் கவர்ச்சியும் நடத்தையில் அசிங்கமும், பேச்சில் நளினமும் முடிவெடுப்பதில் இரக்கமின்மையும், தனி வாழ்க்கையில் ஆடம்பரமும் சமூக வாழ்க்கையில் அவலங்களும் – அங்கே ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அமெரிக்காவின் நிழலும் – நிஜமும் இதுதான்.
80-களுக்குப் பிறகு உற்பத்தியில் ஏற்பட்ட நவீன மாற்றம், உலக மயமாக்கத்தினால் பல்லாயிரம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். செல்வந்தர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கை வேறுபாடும் முன்பைவிட அதிகரித்திருக்கிறது.
92- லாஸ் ஏஞ்செல்ஸ் கருப்பர்- வெள்ளையர் கலவரம் இறுதியில் அரசு- வணிக நிறுவனங்களைச் சூறையாடுவதில் முடிந்தது இதற்கோர் சான்று. அதன்பின் கலிபோர்னியா மாநிலத்தில் இலட்சாதிபதிகள், கோடிசுவரர்களுக்கு பாதுகாப்புக் கோட்டையுடன் கூடிய ஒரு தனி நகரையே உருவாக்கிவிட்டார்கள்.
எங்கு சென்றாலும் வன்முறையின் பீதியிலிருந்து அவர்கள் தப்ப முடியுமா? உலக மயமாக்கத்தின் சுரண்டலைச் சுருட்டும் அமெரிக்கா, அதன் கேடுகளின் பெரும்பகுதியை மூன்றாம் உலக நாடுகளின் மீதும் , சிறுபகுதியைத் தன் நாட்டு மக்கள் மீதும் செலுத்தி வருகிறது. ஆடம்பரம், ஏழ்மை இரண்டுமே வன்முறையின் பிடியிலிருந்து நழுவ முடியாது.
கொலம்பைன் படுகொலை குறித்த அவர்களது கவலைகளும், வாதங்களும் இத்தகைய இருமைப் பண்புகளைக் கொண்டு இக்கட்டில் நிற்கின்றன. வன்முறைகளை அடக்குவதற்கான வழிகள் தெரிவது போல் தெரிந்து பின்னர் மறைகின்றன. அமெரிக்க ஏகாதிபத்திய சமூகம் என்ற மாபெரும் முடிச்சை அவிழ்க்காமல் இதற்கு வழி ஏதுமில்லை. வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். அழகின்மையை உணர வைத்தால்தான் அழகு சாதனங்கள் விற்பனையாகும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும். நுகர்பொருள் வெறியை அவிழ்த்து விட்டால்தான் வட்டி- வங்கித் தொழில் வளரும். ஆம். நோயைப் பரப்பினால்தான் மருந்துகள் விற்பனையாகும். அமெரிக்க வாழ்க்கைத்தரம் என்ற வசதியைப் பெறுவதற்கு, அமெரிக்க மக்கள் கொடுக்கும் காணிக்கைப் பலிகளே, இப்பள்ளிப் படுகொலைகள்.
______________________________________________
- புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 1999