அரசியலை அக்குவேறு ஆணிவேராகப் அலசிக் கொண்டிருப்பவரிடம் போய் நீங்கென்ன கட்சி சார்? என்றால், ”அட நீங்க வேற…. நான் சோத்துக் கட்சி சார்”, என்று நகைச்சுவையாக நழுவிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவெறும் நகைச்சுவை இல்லை. சாப்பிடுவதற்கென்றே ஒரு கட்சி கட்டியது போல சிலர் ‘சோத்துக்கட்சியாகவே’ களத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் ஊர் உயரதர உணவு விடுதிகளை ஒரு முறை வலம் வந்து பாருங்கள், அங்கு மேசையில் செங்கிஸ்கான் படையெடுப்பால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட பிரதேசம் போல, மிச்சம் மீதம் கிடக்கும் உணவுத் துண்டங்களையும், குவிந்து கிடக்கும் தட்டுக்களையும் பார்த்து உங்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பசிக்காகச் சாப்பிடுவது ஒரு வகை, ருசிக்காகச் சாப்பிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினரைக் குறி வைத்து உணவுத் தொழில் உற்பத்தியாளர்கள் ‘ஆவி’ பறக்கப் புதுப்புது அயிட்டங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சும்மாவா, ”பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும், இவை நாலும் கலந்து தருவதாகப்” பகவானுக்கே மெனுகார்டு போட்ட மண்ணாயிற்றே.

என்ன, சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உணவில் சுவை கூடாது என்பதல்ல; காய் கனிகளையும் கீரைகளையும் மேய்ந்து கொள்ளலாம் என்றோ, அவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும் பிராணிகள் மீது பாய்ந்து கொள்ளலாம் என்றோ நாம் சொல்ல வரவில்லை.

மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஊடாகச் சுவையுணர்வு வளர்கிறது; ஆனால் இந்தச் சுவையுணர்வு பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்துடன் ஒத்துச் செல்லாமல், குடிமக்களில் சிலருக்கு, உடம்பிலிருந்து நாக்கு மட்டும் தனியே நீண்டு வளர்ந்து செல்கிறதே, இந்த விகாரம்தான் கொஞ்சம் கவலையளிக்கிறது.

நாக்கு, மொழியைப் பழகுவதற்கு முன்பே சுவையைப் பழகிவிடுகிறது. ஆறு சுவைகளையும் சுவைப்பதற்குரிய சுவை நரம்புகள் நாவில் இருப்பதாய் ஆரம்ப வகுப்புகளிலேயே படம் போட்டுப் பாகங்களை விளக்கியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று உணவுப் பழக்கத்தில் அறுசுவை ஆயிரம் வகை சுவையாகி ‘யாகாவராயினும் நாகாக்க’ முடியாமல், மனமே ஒரு நாக்காக மாறி புதிய புதிய சுவைகளைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. ருசி வேட்டைக்காரக்கரர்களின் தட்டுத் தடுமாற்றங்களைப் போக்கி ‘தட்டு’ வரை கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையை தகவல் தொடர்புச் சாதனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன.

 

”சாப்பிட வாங்க” என்று அலை வரிசையின் வழியாக, உலை வைத்து செய்து காண்பிக்கிறது சென்னைத் தொலைக்காட்சி. சன்.டிவியில் ஸ்டார் சமையல். இப்படி ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும் தனது நிகழ்ச்சி நிரலில் உள்ள கரம் மசாலா போதாதென்று புதிய வகை சமையலுக்கென்றே நேரம் ஒதுக்கி பார்ப்போருக்கு ருசி காட்டி வருகிறார்கள்.

பத்திரிகைகளிலும் விதம் விதமான சமையல் குறிப்புகள். குங்குமத்தில் வி.ஐ.பி. கிச்சன் என்று ஒரு பகுதி ஒதுக்கி பிரபலங்களின் கைப்பக்குவத்திற்குச் செய்முறை விளக்கம் சொல்லி வாசகிகளின் ‘படைப்பாற்றலை” தூண்டி விடுகிறார்கள்.

டி.வி.யில் ஒரு விளம்பரம்; கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பையன் ஒருவன் ஒரு ரன் அடிக்கும் போது ஒரு பிஸ்கட்டை கடிக்கிறான். இரண்டு ரன்னுக்கு இரண்டு பிஸ்கட், நான்கு ரன்னுக்கு நான்கு என கடிப்பவன் கடைசியில் மொத்த பிஸ்கட்டையும் வெறிகொண்டு கடிக்கிறான். “உங்களால் ஒன்றோடு திருப்தி அடைய முடியாது” என்ற வசனத்தோடு விளம்பரம் முடிகிறது.

சின்னப்பிள்ளைகளிடம் வெறும் வாயை மூடிக்கொண்டு “ஆகா நல்லாயிருக்கு” என்று வாயை மென்று வேடிக்கை காட்டுவது போல இன்னொரு விளம்பரம்; தக்காளி சூப்பை கையில் வைத்துக் கொண்டு இது ஹாட்டா? இல்லை ஸ்வீட்டா? என்று கேள்வி கேட்டு விடையேதும் சொல்லாமல் “நீங்களே சுவைத்துப் பாருங்ளேன்” என்று உசுப்பிவிடுகிறது. என்ன சுவையென்று சொல்லிப்பார்ப்பவர்களை ஒரு முடிவுக்கு வரவழைப்பதை விட வாங்கி அனுபவிக்கவேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் வியாபார உத்திதான் இது. விதவிதமான திட, திர உணவு வகைகள் விளம்பரத்தின் வழியாக நாக்கைப்பிடித்து இழுக்க, செய்து பார்க்க வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் ” ஒரே ஒரு முறையாவது ருசி பார்த்து விடுவோமே” என்று உணவுவிடுதிகளுக்கு சென்று மேசையின் முன்பு ஒருவகைத் திகிலை அனுபவிக்கும் சுவையே தனியானது.

ஒரு நடுத்தரமான உணவுவிடுதி அது. அந்நிய நாட்டுக்குள் நுழையும் உளவாளி போலத் தயங்கித் தயங்கி வந்தவர் மேசைக்கு முன்பு அமர்ந்தார். அவர் கண்ணை முதலில் கவர்ந்தது பிளாஸ்டிக் பலகையில் தத்ரூபமாகத் தெரியும் உணவு வகைகள். பச்சை நரம்புகள் தெரிய தட்டு வடிவில் செதுக்கப்பட்டிருக்கும் வாழை இலை, அதற்கு மேல் பொன் நிறத்தில் ‘அடுக்குமாடி போல’ போண்டா. பக்கத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதினா சட்னி, கசாப்புக் கடைக்கு முன்பு கண்டுண்ட நாயைப் போல வெகுநேரம் அதையே வெறித்துப் பார்த்தவர், பின்பு சுற்றிலும் சாப்பிடுவர்களைப் பார்வையிட்டார்.

சர்வர் நெருங்க, பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தட்டைக் காண்பித்து ”அதுல ஒண்ணு கொண்டு வாங்க” என்று கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது போலத் துணிந்து அடித்தார். மேசைக்கு வந்த புதியவகை பூரியை வாராது வந்த மாமணிபோல வாஞ்சையாய் நோக்கினார். ஒரு சிக்கல், அதிலுள்ள எலுமிச்சம் பழத் துண்டைக் கடிப்பதா, பிழிவதா என்ன செய்வது என்று குழம்பிப் போனார். சுற்றிலும் செய்து காண்பிக்கும் நபர்களைத் தேடி ஏமாந்தார்.

மீள வழியில்லை. எடுத்து வாயிலேயே பிழிந்து கொண்டார். சர்வர் தூரத்திலிருந்து பார்த்த பார்வை இருக்கிறதே, ”உனக்கெல்லாம் ஏண்டா இந்த ஹோட்டல்?” என்று அதற்குப் பொழிப்புரை போடலாம். அப்படியொரு பார்வை அது.

மீண்டும் சோதனை. கைகழுவும் நவீன வகைக் குழாயை திருகி, இழுத்து, திருப்பி…. பிறகு அழுத்தித் தண்ணீர் வரவழைப்பதற்குள் கண்களில் தண்ணீர் வராத குறைதான். அடுத்து கை துடைக்கும் சவ்வுக் காகிதத்தை கண்டவருக்கு மீண்டும் குழப்பம். எடுக்கலாமா, விடலாமா என யோசித்தவர் அவ்வளவு வெளுப்பானதைத் தொடத் தயங்கி தன்வழியே ஒதுங்கினார். ஒரு வழியாக கல்லாப் பெட்டியை தாண்டி வரும் வரைக்கும் அவர்பட்ட பாடு ஒரு ‘ருசிகரமான’ அனுபவம். கடையை ஒருமுறை அவர் நிமிர்ந்து பார்க்கும் பார்வை இருக்கிறதே போதுமடா சாமி என்பது போல!

இன்னுமொருவரின் புலம்பலோ வேறுவிதம் ”மினி மீல்ஸாம், மினி மீல்ஸ், பேசாம ஒரு சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் வயிறும் ரொம்பல, வாயும் ரொம்பல போயி ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டாத்தான் பசி அடங்கும்.” என்று கொடுத்த காசு செரிக்காமல் ‘விபத்துக்குள்ளானதை’ நொந்து கொண்டார்.

இப்படி ருசி எனும் மாயமானுக்கு பின்னே ஓடிக்களைத்துப் போய் திரும்புபவர்கள் ஒரு புறம். இன்னொருபுறம் புதிய, புதிய உணவு வகைகளிடம் குடியுரிமை கேட்பவர்கள். வாழ்க்கையின் அசல் சுவையை அனுபவிக்கச் சொல்லும் ‘காட்பரீஸூடன்’ கை குலுக்கி ‘புதிய உலகத்தில்’ திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

உணவு விடுதிக்குள் புகுந்து சர்வரிடம் ‘என்னப்பா இதத்தவிர வேறு எதுவும் புதுசா இல்லையா?’ என்ற சலிப்போடு ”தந்தூரில புதுசா ஏதாவது கொண்டு வா” என்று ஆர்டர் தந்துவிட்டு மேசைக்கு வரப்போகிற உணவு என்னவாய் இருக்கும் என்ற த்ரில் கலந்த சுவைஞர்களின் நாக்கை கட்டிப் போட உணவுச் சங்கிலியும் நீண்டு கொண்டே போகிறது.

பாக்கர், எஸ்ட்ரா பாவு, மஷ்ரும் பீசா, புல்கா, அல்லூ பாலக், மட்டர் பான்னர், ஸ்டஃப்டு கேப்ஸிகம், – என்ன இது? வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கும் புதிய கிரகங்களா? வாடிக்கையாளர்களுக்காக உணவுத்துறை விற்பன்னர்கள் வாணலியில் கண்டு பிடித்திருக்கும் புதுப்புது ருசியான ரகங்கள்தான் இவை. இன்னும் பஞ்சவர்ண தோசை, நவரத்ன குருமா என்று பாரம்பரியத்தை இழைத்துக் கொடுக்கும் பலகார வகைகளும் உண்டு.

சாப்பாட்டு ‘ராமர்கள்’ ஒன்றை ருசி பார்த்த பிறகு இன்னொன்றுக்கு ”இரு உன்னை இன்னொரு நாள் வச்சிக்கிறேன்” என்று பொருமிக்கொள்கிறார்கள். இந்த ”ருசிகண்டேன், ருசியே கண்டேன்” என்று போகின்ற பேர்வழிகள் கடைசியில் ”தின்னுகெட்ட பரம்பரை சார்” என்று பெருமை பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ருசிகண்ட பூனைகளுக்கு நேரமேது, காலமேது? வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு நிறுத்தும் இடங்களில் பெப்சியும், கொக்கோகோலாவையும் விட்டுகட்டுபவர்களைப் பார்த்தால், வெகு தூரத்திலிருந்து வைக்கோல் வண்டியை இழுத்து வந்து இளைப்பாறும் மாட்டுக்குக்கூட மயக்கம் வரும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுச் செய்யும் சந்தை கலாச்சாரத்தின் நள்ளிரவுத் தாக்குதலை அங்கே பார்க்கலாம்.

இப்படி நேரம், காலம் இன்றி விதம்விதமாகச் சாப்பிடுவதையே லட்சியமாக, பொழுதுபோக்காக, பண்பாடாக ஆக்கிக் கொண்டவர்களின் தேடுதல் வேட்டையின் திசைகளில்தான் புட்டி உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவு விடுதிகள் எந்நேரமும் அனுபவிக்கச் சொல்லி அழைக்கின்றன.

இந்த ருசிகர உலகத்தில் நுழைபவர்களின் ‘மன அமைதியை’க் கெடுக்கும் வண்ணம் பசி எடுத்தவர்களின் கூட்டம் பார்வையிலும் பட்டுவிடாதபடி. கண்ணாடிச் சுவர்களுக்குள் கலகலப்பாக நடக்கிறது வியாபாரம். பின்னே பழைய சோறாய் இருந்தால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலாம், சில்லி சிக்கனாய் இருந்தால், காசில்லாதவனுக்குக் கதவைச் சாத்தடி கதைதான். திருப்தி இல்லாமல் ருசி தேடி அலைபவர்களை உலகத்தரத்திற்கு உயர்த்த கென்டகி போன்ற பன்னாட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் கோழிக்கறியின் நளபாகத்தைக் காட்டி உலகின் பெரும் பாகத்தை வளைத்துப் போடுகிறார்கள்.

போதை தலைக்கேற தலைக்கேற எவ்வளவுதான் சுவையான உணவு இருந்தாலும் ”என்னடி சாப்பாடு?” என்று எட்டி உதைக்கும் குடிகாரனைப் போல ”இன்னும் ருசி, இன்னும் ருசி” என்று எதிலும் அடங்காமல், காயசண்டிகையின் பசிநோய் போல ருசி நோய் கொள்பவர்களுக்கு மத்தியில்தான், உழைக்கக் கூடிய மக்களோ,

”தங்க உளுந்தலசி, தாம்பளம் போல் தோஜ சுட்டு” என்று தன்வீட்டில் தோசை சுட்டுச் சாப்பிடுவதையே இலக்கியமாக்கி வியக்கின்றனர். விதைத்து, நட்டு, அறுத்து உழைத்து வந்த அந்த நெல்மணியிலிருந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிட முடியாத அவர்களின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இந்த சோத்துக் கட்சிக்காரர்களின் நாக்கில் முளைத்திருக்கும் சுவைமொட்டுகள் தானாக மரத்துப் போய்விடும்.

_________________________________________

புதிய கலாச்சாரம், நவம்பர் 1997.